Monday, August 29, 2011

என்னை வெல்ல முடியாது



அன்பும், பண்பும், அறிவும் மிக்க மனிதர்களே
நான் உங்கள் கூடவே வருகிறேன்
என்னை கண்டுகொள்ள,
ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களே?

நீங்கள் எங்கு சென்றாலும் நான்
உங்கள் கூடவே வருகிறேன்.
உங்களைவிட நான் உங்களது மூச்சை
உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

வெளியே சென்ற மூச்சு திரும்பி
வந்தால்தான் நீங்கள் உங்களுக்குச் சொந்தம்
இல்லாவிட்டால் நீங்கள் எனக்குச் சொந்தம்
அந்த ஒரு வினாடி போதும் எனக்கு.

இன்பம் எய்தும் வாழ்க்கையில்
மனிதர்கள் சிற்றின்பம் எனும்
பேரின்பத்தையே பெரிதும் விரும்புகின்றனர்
நானும் அதை பார்த்து வருகிறேன்.

திருமணம் செய்து குழந்தை பெற்று
அவர்களை சீராட்டி, பாராட்டி வளர்த்து
ஆளாக்குகி அழகு பார்க்கிறார்கள்.
நான் கூடவே இருக்கிறேன்.

சிலர் பாசத்தால், காதலால், தோல்வியால்
என்னை அணைத்துக் கொள்கின்றனர்
சிலர் மானம், இனம், உரிமைக்காக போராடி
நாட்டிற்காக என்னை அணைத்துக் கொள்கின்றனர்.

சிலர் சாலையில் வாகனத்தில்
அடிபட்டு என்னிடம் வந்து சேருகின்றனர்
சிலர் ஆழியில் சுழலலையில் சிக்கி
என்னிடம் வந்து சேருகின்றனர்.

நான் யாரையும் விட்டு வைக்கமாட்டேன்
நான் உங்களது நிழலாக இருந்து
நீங்கள் போகும் பாதையில், வாகனத்தில்
அலுவலகத்தில் உங்களோடு காத்திருக்கிறேன்.

திட்டம் பல போட்டு காப்பீடு எடுத்து
இறுமாப்புடன் இருந்து விடாதீர்.
சாவே என்று என்னை இகழ்ந்து விடாதீர்
ஏனென்றால் நான் அழிவல்ல பிறப்பின் ஊற்று.

Sunday, August 28, 2011

அரசியலும் நிதி நிர்வாகமும் - 1



எந்தவொரு வேலைக்குமே நிதி என்பது மிகவும் அவசியம். அது அரசியலுக்கும் மிகமிக அத்தியாவசிய தேவையாக உள்ளது. அந்த தேவையை எவ்வாறு சமாளிப்பது என்று இந்த கட்டுரையில் காண்போம்.   

தனிநபர் நிதி ஆதாரம்

மாதத்தில் 26 நாட்கள் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் ஒருவர் அரசியலுக்காக நிதியை ஒதுக்க முடியாது. அந்த வருமானம் அவரது தேவைக்கு அதிகமான ஒன்றாக இருக்கும்போதே அதில் ஒரு சிறு பகுதியை அரசியலுக்காக செலவிட இயலும். அதேவேளையில் ஒருவர் தனது அரசியல் ஈடுபாட்டிற்காக தனது தரப்பில் செலவழிப்பதும் அவசியமே. ஒருவர் ஒரு கூட்டத்திற்காக பத்துப்பேரை அல்லது இருபது பேரை ஒன்று திரட்டும்போது, அவர்களுக்கு தேனீர் வாங்கி கொடுக்கவோ அல்லது அவர்களை பேரூந்தில் அழைத்துச் செல்லவோ வேண்டியுள்ளது.

இதற்கு அவர் நிதி வசதி பெற்றவராக இருக்க வேண்டும். இதுபோன்ற செலவுகளை ஒருவர் சுயமாக சமாளிக்க கூடியவராக இருக்க வேண்டும். ஒரு பயனும் கிடைக்காதபோது இது போன்ற முதலீடுகள் வீணான ஒன்றாக ஆகாதா? ஏன் இந்த செலவுகளை செய்ய வேண்டும்? என்ற கேள்வி தானாகவே எழும்.

அரசியல் நோக்கில் செலவுகளைச் செய்ய குறைந்த நபர்களே துணிகின்றனர். இதுபோன்ற சிறு செலவுகளால் நீங்கள் எந்தவித பலனையும் எதிர்பார்க்க இயலாது. ஆனால் இந்த செலவுகள் நீங்கள் உங்களது அதிகாரத்தை கையில் எடுப்பதற்கான முதலீடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த செலவுகளை செய்யும்போதுதான் ஒருவர் ஒரு கூட்டத்தை வழிநடத்த இயலும். நீங்கள் ஒரு கூட்டத்திற்கோ அல்லது இடத்திற்கோ மக்களை சுயமாக செலவு செய்து வாருங்கள் என்றால் வரமாட்டார்கள். வருவதே பெரிது, இதில் பணம் வேறு செலவழிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்புவர். ஆனால் இதே மக்கள்தான் நமக்கு அதிகாரத்தை தரப்போகிறார்கள்.

முடிந்தவரை சுய தொழில் செய்பவர்களே அரசியலுக்கு உகந்தவர்கள். ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது. நினைத்த நேரம் வெளியில் கிளம்ப இயலாது. அரசியலில் ஈடுபட நேரச் சுதந்திரம் தேவை என்பதால் சுய தொழில் செய்பவர்கள் இயற்கையாகவே அரசியலுக்கு தகுதி பெற்றவர்களாகின்றனர். இது போன்ற சிறு செலவுகளை நாம் சாதாரணமாக நமது நண்பர்களுக்காக அல்லது உறவினர்களுக்காக செய்துகொண்டுதான் இருக்கிறோம். உங்களது கருத்து, செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு வரும் நபரிடம் நீங்கள் நிதியை எதிர்பார்கக முடியாது. அப்படி எதிர்பார்த்தால், அது நீங்கள் அவரை உங்களிடமிருந்து துரத்துவது போன்றதாகும்.

நியாயமாக, நேர் வழியில் சம்பாதிப்பவர்களால் இதனை ஒரு உறுப்படியான செலவு என்று கருதி செய்ய இயலுவதில்லை. இங்கே அவர்கள் சுயமாகவே தங்களை அரசியலிலிருந்து வடிகட்டிக் கொள்கிறார்கள். அரசியலை சாக்கடையாக அனுமதிக்கின்றனர். ஆனால் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் சில ஆலய வழிபாடு, ஏழைகளுக்கு திருமணம் போன்ற விஷயங்களுக்காக செலவிடுவதை காணலாம். அரசியல் ஒரு பெரும் சேவையல்லவா? இவர்கள் இந்த சேவையை செய்வது பற்றியும் யோசிக்க வேண்டும். 

சில நேரங்களில் துண்டுப் பிரசுரம், போஸ்டர், பதாகை அடிக்க வேண்டியிருக்கும். இது நீங்கள் செய்யும் சேவைக்கானவையாகவோ அல்லது நீங்கள் செய்த சேவையை வெளிப்படுத்தவோ தேவையாக உள்ளது. பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது, மேடை அமைப்பது, ஒலிபெருக்கி, நாற்காலிகள் ஏற்படு செய்வது என்றால் பெருஞ்செலவுகள் ஏற்படும். இதனை நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள தொழிலதிபர்கள், தாராள குணம் உள்ளவர்களிடம் நன்கொடை பெற்று சமாளிக்க வேண்டும். முடிந்த ஒவ்வொரு பணியை ஒவ்வொருவரிடம் விட்டுவிட முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது நீங்கள் அவர்களின் நம்பிக்கையை பெற்றிருப்பதும் அவசியம். சில காலமாகவது சில சேவைகளை செய்து வரும்போதுதான் நீங்கள் அவர்களுக்கு அறிமுகமாவீர்கள், அவர்கள் உங்களை மதித்து நன்கொடை தருவர். அதேபோல கடைகளிலிருந்தும், தனிநபர்களிடமிருந்தும் சிறு சிறு தொகைகளை சேகரிக்கலாம். உங்களது முயற்சியில் உங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களிடமிருந்து நன்கொடைகளை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் சேவை செய்பவர்களிடம் பணத்தையும், பணத்தை அளிப்பவர்களிடம் சேவையையும் எதிர்பார்க்க முடியாது.

இது போன்ற திறமை கொண்டவர்களைத்தான் அரசியல் கட்சிகள் பதவி அளிக்கின்றன. பதவியை பெற்ற பின்னர். நிதி இல்லாத காரணத்தால் ஒரு வேலையை செய்ய முடியாமல் இருப்பதை கட்சிகள் விரும்புவதில்லை. இந்த திறமை இல்லாதவர்கள் அரசியலில் ஈடுபட தகுதியற்றவர்கள்.  

அதேபோல திரட்டப்படும் நிதியை வழிநடத்துபவர்கள் (தலைவர்கள்) தாங்களே கையாளாமல், அதனை நிர்வகிக்கும் பொறுப்பை சக தோழர்கள் ஓரிருவரிடம் ஒப்படைத்து அதனை அவர்கள் எவ்வாறு நிர்வகிக்கின்றனர் என்று கண்காணித்து வரவேண்டும். நிதியை அளவைப் பொறுத்து வங்கி கணக்கு வைத்து செயல்படுவது சிறந்தது. அவ்வாறு நிதியை ஒப்படைக்கும்போது அவர்கள் நிதியை சரியாக கையாளக் கூடியவர்கள்தானா என்பதை அறிந்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படி செய்யும்போது நிதி மோசடி செய்கிறார் என்ற பழிச் சொல் ஏற்படாது. மேலும் பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்ததாகவும் இருக்கும்.      

Friday, August 19, 2011

எடைக் குறைப்பு வைத்தியம்


எடைக் குறைப்பு வைத்தியம்


பேடி, பீர் குடித்து குடித்து மிகவும் பருமனாகிக் கொண்டிருந்தார். ஒருநாள் அவரது மனைவி மவுரீன், “நீங்க ஏன் ஹெல்த் க்ளினிக்-க்கு போகக் கூடாது? அங்கே போன உங்க உடம்பு குறையும்னு எல்லாரும் சொல்றாங்க”, என்று சொன்னார். 

பேடி அந்த க்ளினிக்-க்கு போனார். ஐந்து கிலோ எடையை குறைக்கும் சிகிச்சைக்காக 10 டாலர் கொடுக்கிறார்.

அவர் ஒரு சிறிய அறைக்குள் அனுப்பப்படுகிறார். அந்த அறைக்குள் ஒரு அழகிய பெண் இருக்கிறார். “என்னை பிடிச்சுட்டா நீங்க என் கூட ஜாலியா இருக்கலாம்“ என்று அந்தப் பெண் சொல்கிறார்.

அரைமணி நேரம் கழித்து பேடி ஐந்து கிலோ எடைக் குறைந்து முகமெல்லாம் புன்னகையாக வெளியே வருகிறார்.

கணவனின் எடைக் குறைந்ததை கண்டு மகிழ்ச்சியுற்ற மவுரீன், அடுத்தநாள் ஐம்பது டாலர் கொடுத்து 25 கிலோவை குறைக்கும் சிகிச்சைக்கு அனுப்புகிறார். பேடி பணம் கட்டியதும் அவருக்கு மற்றொரு அறை காட்டப்பட்டது. அவர் உள்ளே நுழைந்ததுமே கதவு தானகவே அறைந்து சாத்திக் கொள்கிறது.

அவர் ஆர்வமாக சுற்றுமுற்றும் பார்க்கிறார். ஒரு மூலையில் பெரிய கொரில்லா குரங்கு நிற்கிறது. அதைக் கண்டதும் பேடி குழப்பமடைகிறார். ஆனால் கொரில்லா அவரை நோக்கி வர ஆரம்பிக்கிறது. அந்த கொரில்லாவின் கழுத்தில் ஒரு அட்டை தொங்குகிறது.

அதில் “உன்னை நான் பிடித்தால் உன்னோடு ஜாலியாக இருப்பேன்“ என்று எழுதியிருந்தது.   

(ஓஷோவின் நகைச்சுவைகளிலிருந்து)

Thursday, August 18, 2011

அரசனும் ஆண்டியும்


ஒரு சிஷ்யன் ஒரு குருவிடம் சேர்ந்து நீண்ட காலம் ஆகியும் அந்த குரு எதையுமே அவனுக்கு கற்றுக் கொடுக்கவில்லை. இதனால் சலிப்படைந்த அந்த சிஷ்யன் தனக்கு ஆன்மீகம் பற்றி ஏதாவது கற்றுத் தருமாறு குருவிடம் கேட்டான்.

அவனது அவசரத்தை புரிந்துகொண்ட அந்த குரு அவனை பக்கத்து நகரத்தில் உள்ள தனது நண்பரிடம் செல்லுமாறு கூறினார். சிஷ்யனும் குருவின் பேச்சை நம்பி அந்த நண்பனிடம் சென்றான். ஆனால் அங்கு சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அவர் அந்த நாட்டின் அரசர்.

அரன்மனையின் வாயிலுக்கு சென்றான் சிஷ்யன். காவலர்கள் அரசனிடம் குரு அனுப்பிய ஒரு சிஷ்யன் வந்திருப்பதை கூறினர். உடனே அரசன் அந்த சிஷ்யனை அரன்மனைக்குள் அழைத்து வரச் சொன்னான்.

ஆனால் சிஷ்யனின் மனதில் வேறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. தான் தவறான இடத்திற்கு வந்துவிட்டோமா? அல்லது தனது குரு வேண்டுமென்றேதான் இங்கே அனுப்பி வைத்தாரா? என்று யோசித்தவாறு சென்றான். அரண்மனைக்குள் சென்ற சிஷ்யனை அரசன் வரவேற்றான். நலம் விசாரித்தான். அதற்குள் அந்தபுரத்திற்கு செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது.

அரசன் சிஷ்யனையும் உடன் அழைத்துச் சென்றான். அங்கே அழகிய நடன மாதுக்கள் கவர்ச்சியாக நடனமாடினர். அரசன் மதுவும் அருந்த ஆரம்பித்தான். சிஷ்யனால் இவற்றையெல்லாம் ஜீரணிக்க இயலவில்லை. இப்போதே ஓடிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால் குருவல்லவா அனுப்பி வைத்துள்ளார் என்று நினைத்துக் கொண்டே ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டான்.

நடனம் முடிந்ததும், அரசன் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் காலையில் சந்திப்போம் என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டான். காலையில் தர்பார், மதியம் ராஜபோக உணவு, மாலையில் அந்தப்புரம் என்று ஓரிரு நாட்கள் சென்றன. இருந்தாலும் சிஷ்யனால் அவற்றில் லயிக்க இயலவில்லை. ஆன்மீகத்தை அறியவந்தவனால் இவற்றை எப்படி சஹித்துக் கொள்ள முடியும்?

நான்காம் நாள் காலையில் அருகே ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் அரசனும், சிஷ்யனும் குளித்துக் கொண்டிருந்தனர். வேகமாக ஓடி வந்த ஒரு போர்வீரன் மன்னா அரண்மனையில் தீப்பற்றிக் கொண்டது என்று கூறினான். உடனே, சிஷ்யன் ஆற்றிலிருந்து கரைக்கு ஓடினான். அரசன் எந்தவித சலனமும் இல்லாமல் குளித்துக் கொண்டிருந்தான்.

ஏன் ஓடுகிறீர்கள் என்று அரசன் சிஷ்யனிடம் கேட்டான்? அதற்கு அந்த சிஷ்யன் எனது காவி வஸ்திரங்கள் அங்கேதான் இருக்கின்றன என்றான். பொன்னால் செய்யப்பட்ட எனது சிம்மாசனமும் இதர விலைமதிப்பில்லாத வைர வைடூரியங்களும் அங்கேதான் உள்ளன என்று அரசன் சொன்னான். மேலும் தீயை அனைக்கத்தான் போர்வீரர்கள் உள்ளனரே? நீர் எதுக்கு ஓடுகிறீர்?

இதுதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ற அரசன், பொருட்கள் வெளியே இருக்க வேண்டும் உள்ளே அல்ல என்று கூறினான். உடனே சிஷ்யன் அந்த அரசனின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.   

(ஓஷோவின் குட்டிக் கதைகளிலிருந்து)

Wednesday, August 17, 2011

தியேட்டரில் முல்லா நஸ்ருதீன்


தியேட்டரில் முல்லா நஸ்ருதீன்

ஒருநாள் முல்லா நஸ்ருதீனின் மனைவி அவரை வலுக்கட்டாயமாக சினிமாவுக்கு அழைத்துச் சென்றார். படத்தில் வந்த கதாநாயகன், கதாநாயகியை அன்போடு அரவணைத்து முத்தம் கொடுத்தார். காட்சி அருமையாக இருந்தது. இதைக்கண்ட நஸ்ருதீனின் மனைவி, “பார்த்தீர்களா, நீங்கள் எப்போதாவது என்னிடம் இப்படி நடந்திருக்கிறீர்களா?“ என்றார்

உடனே, “முல்லா, உனக்கு ஒண்ணும் தெரியாது, அவர் சம்பளம் வாங்கிக்கிட்டு நடிக்கிறார். எனக்கென்ன சம்பளமா கிடைக்குது?“

மனைவி அவரை விடுவதாக இல்லை. “சம்பளம் கிடைக்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, அவங்க நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவிதான்“ என்றார்.

“அப்படியா விஷயம், அவங்க நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவிதானா? அப்படினா கண்டிப்பா அவருக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கணும்“ என்றார் முல்லா நஸ்ருதீன்.

(ஓஷோவின் நகைச்சுவைகளிலிருந்து)





 



அரசியலுக்கான அடிப்படைத் தேவை - நேரம்


அரசியலுக்கான அடிப்படைத் தேவை - நேரம்

தோழர்களே, நாம் தினமும் நமது நண்பர்களை சந்தித்துப் பேசுகிறோம். திரைப்படங்களுக்கு செல்கிறோம். இன்னும் பிற தேவையில்லாத அல்லது குறைந்த தேவையுள்ள வேலைகளுக்காக நேரத்தை செலவழிக்கிறோம். இதையே நாம் நமது அரசியலுக்கு பயன்படுத்தினால் போதுமானது. இந்த நேரத்தை நாம் நமக்காக நம்மை சார்ந்திருப்பவர்களுக்காக செலவு செய்தால் போதும். இதுவே அரசியலும் கூட.

இதுவே அரசியலின் அடிப்படைத் தேவை. வேலைக்கு செல்பவர்கள் மாலை நேரங்களில் ஒரு மணிநேரமோ அரைமணிநேரமோ பொது காரியங்களுக்காக செலவழித்தால் போதும். இந்த நேரத்தில் நீங்கள் உங்களது நண்பர்களிடம், உங்கள் தெருவில் உள்ளவர்களுடன் நீங்கள் எப்போதும் பேசுவதைப் போலவே பல விஷயங்களை பேசலாம். இவர்கள் இரண்டுபேர், மூன்றுபேர் அல்லது நான்கு பேராக இருந்தாலும் போதுமானது. இந்த வட்டத்தை சிறிது சிறிதாக பெருக்கலாம். இந்த வட்டமே பொதுமக்களாக மாறுவர்.

பெரும்பாலும் இவ்வாறு பேசும்போது, சிலர் தங்களது மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அவர்களது தயக்கத்தைப் போக்கி கருத்தையும் தாராளமாக சொல்ல அனுமதிக்க வேண்டும். இதற்காக நீங்கள் தினமும் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாரத்திற்கு நான்கு நாள், மூன்று நாள் ஒதுக்கினால்க் கூட போதுமானது. இந்த உரையாடல்களில் நீங்கள், நலம் விசாரித்தல், பிரச்சனைகளைப் பற்றி விசாரித்தல் போன்றவை இடம் பெறலாம். ஆனால் ஒருவரது தனிப்பட்ட பிரச்சனையில் ஆழமாக செல்லக் கூடாது. அது அவரை நம்மிடமிருந்து துரத்துவதாக அமையும்.  

இது போன்ற உரையாடல்களின்போது நீங்கள் விவாதிக்கும் கருத்து எந்த விஷயத்தைப் பற்றியதாகவும் இருக்கலாம். அதைப்பற்றிய மற்றவர்களின் கருத்தை அறிவது முக்கியமானது. நீங்கள் சொல்லும் கருத்தை எத்தனைபேர் ஆமோதிக்கின்றனர், எதிர்க்கின்றனர், விரும்பவில்லை என்பதை அறிந்துகொள்வது முக்கியமானது. அதிகமானோர் எதிர்க்கும், விரும்பாத விஷயங்களை விட்டுவிடவேண்டும். இதெற்கெல்லாம் உங்களுக்குத் தேவை நேரம்.

எனவே நேரம் இல்லாத ஒருவரால் அரசியல் செய்ய முடியாது. அரசியல் செய்ய அத்தியாவசியத் தேவை நேரம். அரசியல் கடிதங்கள் தொடரும்...






 



Tuesday, August 16, 2011

மகாகஞ்சன் முல்லா நஸ்ருதீன்


மகாகஞ்சன் முல்லா நஸ்ருதீன்

முல்லா நஸ்ருதீன் அவரது கிராமத்தில் மகாகஞ்சன் என்று பெயர் பெற்றிருந்தார்.

எல்லோரும் முல்லா நஸ்ருதீன் மகாகஞ்சன் என்று சொல்லச் சொல்ல அவருக்கு கர்வமாக இருந்தது. அந்த மிதப்பிலேயே அவர் இருந்து வந்தார். நாளடைவில் மக்கள் பக்கத்து ஊர்க் கஞ்சனைப் பற்றி பேச ஆரம்பித்தனர். அவன்தான் மாபெரும் கஞ்சன் என்று பேச ஆரம்பித்தனர்.

இதைக் கேட்டதும் நஸ்ருதீனுக்கு பொறாமை ஏற்பட்டது. அவரும் அந்த கஞ்சனை பார்க்க விரும்பினார். அவன் எப்படி தன்னை விட பெரிய கஞ்சனாக இருப்பான் என்று தெரிந்துகொள்ள விரும்பினார். அவரை சந்திக்கச் செல்லும்போது வெறும் கையில் போகலாமா? ஒரு காகிதத்தில் ஆப்பிள் பழத்தை வரைந்து ஒரு பையினுள் போட்டு எடுத்துச் சென்றார்.

அந்த கஞ்சனின் வீட்டை அடைந்து கதவைத் தட்டினார். கஞ்சனின் மகனான சிறுவன் கதவைத் திறந்தான். யாரென்று கேட்டதும் தான் பக்கத்து ஊரில்தான் இருப்பதாகவும், அவனது தந்தையை பார்த்துச் செல்ல வந்ததாகவும் நஸ்ருதீன் கூறினார்.

உடனே வீட்டின் உள்ளே அழைத்துச் சென்ற அந்த சிறுவன், என் தந்தை வெளியில் சென்றுள்ளார், திரும்பி வர நேரமாகும். என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள் என்றான். ஒன்றுமில்லை, நான் இன்னொரு நாள் வந்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன நஸ்ருதீன் தான் கொண்டு வந்திருந்த பரிசான ஆப்பிள் பழத்தின் படத்தை எடுத்துக் கொடுத்தார்.

வந்துதான் வந்தீர்கள், வெறுங்கையில் அனுப்ப மாட்டேன், என் தந்தையின் சார்பில் இந்த பரிசை எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னான் அந்த சிறுவன். பையை திறங்கள் என்று சொன்ன அவன் கைகளால் காற்றில் மாம்பழ உருவத்தை செய்து அந்த பையினுள் போட்டான்.

வீட்டை விட்டு வெளியேறிய நஸ்ருதீன் சிந்தனையில் ஆழ்ந்தார். ஊர் மக்கள் சொன்னது சரிதான் போலிருக்கிறது. நாமாவது ஒரு காகிதம், வண்ணம் செலவு செய்து பரிசை எடுத்துச் சென்றோம். இந்த சிறுவன் வெறும் காற்றில் மாம்பழத்தை உருவாக்கித் தந்துவிட்டானே. இவனே இப்படி என்றால் இவனது தந்தை எப்படி இருப்பான். இவ்வாறு அவரது மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அங்கே, மாபெருங்கஞ்சன் வீட்டிற்கு திரும்பினான். நடந்தது என்ன என்று கேட்டறிந்தான். பின்னர் அந்த சிறுவனின் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்ட அவன் கோபத்தில் கத்தினான். “ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் நீ என் சொத்தையே அழிச்சிருவடா. கொடுத்துதான் கொடுத்த இவ்வளவு பெரிய மாம்பழத்தை யார் கொடுக்கச் சொன்னது? சின்னதாக கொடுத்திருக்கலாம் இல்லையா?“

(இந்த நகைச்சுவை ஓஷோவின் பதிவு சொற்பொழிவில் கேட்டது.)

Sunday, August 14, 2011

தமிழ் ஈழ சமநிலை இழப்பு – இந்தியாவின் புவிசார் அரசியல் அழிவு


இந்திய-இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் திரு வி.எஸ். சுப்ரமணியம் அவர்களது கருத்தாழம் மிக்க கட்டுரைகள் கிரவுண்ட் ரிப்போர்ட் மற்றும் விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி இணைய தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றை தமிழ் குழுமங்களுக்காக தமிழில் வழங்கியுள்ளேன்.
தமிழ் ஈழ சமநிலை இழப்பு இந்தியாவின் புவிசார் அரசியல் அழிவு
வி.எஸ். சுப்ரமணியம்
தமிழில் பெ.அ. தேவன்
தங்களது உரிமைக்காக ஈழ தமிழர்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு எதிராக சிங்கள இலங்கை நடத்திய இனப்படுகொலைக்கு இந்திய அரசு மறைமாக ஆதரவளித்தது. இந்த ஆதரவு சீனாவின் செல்வாக்கை தடுக்கவே அளிக்கப்பட்டது என்று நாராயணன் “மும்மூர்த்திகள்“ உண்மைக்கு மாறாக நியாயப்படுத்தி கூறியுள்ளனர். இந்தியாவை “தனிமைப்படுத்தவே“ யுக்திகளை மேற்கொண்டு வருகிறோம் என்று சீனா வெளிப்படையாக அறிவித்த பின்னரும், “சீனாவின் பக்கம் சாய்ந்து விட்ட“ இலங்கையை “மகிழ்விக்க“இந்தியா மிதமிஞ்சிய நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் அந்நாடு உலக அரசியலில் வகை தெரியாமல் மாட்டிக்கொண்டுள்ளது. நேரு சூ என் லாய் உடன் அணிசேரா ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால் சீனா இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பெரும்பகுதியை பிடித்தது. சீனா ஏற்படுத்திய இந்த அச்சத்தின் காரணமாகவே இந்தியா தனது வெளியுறவு கொள்கையை சீனாவை மையமாக கொண்டு வகுத்து வருகிறது என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது சீனா இந்தியாவை சுற்றியமுள்ள பர்மா, பங்காளதேசம், பாகிஸ்தான், சிங்கள இலங்கை ஆகிய நாடுகளை தனது கூட்டு நாடுகளாக ஆக்கிக் கொண்டுள்ளது. இலங்கையின் கட்டுப்பாட்டில் இல்லாத தமிழ் ஈழம் 2009 மே வரை சீனவிற்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது.
இலங்கையின் இனப்படுகொலையில் பங்கேற்றதன் மூலம் இந்தியா தமிழ் ஈழத்தை (எல்டிடியை) விட்டுக் கொடுத்து விட்டது என்றே அரசியல் நிபுணரான பத்ரகுமார் குறிப்பிடுகிறார். மற்ற புகழ் பெற்ற அரசியல் நிபுணர்களான நாடேறி அடிகள் மற்றும் அனில் அத்தாலே ஆகிய இருவரும் சீனாவின் அச்சுறுத்தல் சுற்றி வளைத்து இந்தியாவின் கழுத்தருகே வந்துவிட்டது என்று அடித்துச் சொல்கின்றனர். இது இந்தியா மீது நாட்டுப்பற்றுக் கொண்ட அனைவருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, டெல்லியில் உள்ள அதிகார தரகர்களைத் தவிர.
ஜான் கெர்ரி(அமெரிக்க வெளியுறவின் செனட் குழு) அமெரிக்க-இலங்கை உறவு பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழ் ஈழ (எல்டிடிஈ) சமநிலை இழப்பை வெல்வதை நோக்கமாக கொண்டே அமெரிக்க-இலங்கை உறவுகள் கொள்கை உருவாக்கப்படும் என்றும் சீனாவின் புவிசார் அரசியல் பற்றியும் அதில் தெளிவாக குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஈழத்தின் சமநிலை இழப்பு நேரடியாக அமெரிக்காவை பாதிக்காவிட்டாலும் கூட அமெரிக்கா ஒரு அவசரநிலை உணர்வுடன் இந்த பிரச்சனையை கையாள நினைக்கிறது. ஆனால் இந்த பிரச்சனையில் உண்மையில் ஆர்வம் காட்டவேண்டிய, உரிமைகொண்ட, பங்குகொண்ட இந்தியா பகல்கனவு கண்டவாறு கும்பகர்ணத் தூக்கத்தில் உள்ளது. டெல்லியை சேர்ந்த ‘மும்மூர்த்திகள்‘ தீவிரமாக முயன்று தங்களது அரசியல், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரத்தை பயன்படுத்தி இந்த அச்சுறுத்தலை தென்னாட்டு வாசலுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்தியாவின் இந்திய-இலங்கை கொள்கை, ஆழம் தெரியாத அபாயத்தை நோக்கி அர்த்தமில்லாமல் அலைபாய்ந்து வருகிறது. தற்கொலைக்கு சமமான நாராயணின் கொள்கைகள் சீனாவை இதுவரை இல்லாத நெருக்கமான தூரத்திற்கு, இந்தியாவின்/தமிழ்நாட்டு கடற்கரைப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. தமிழர்களுக்கு எதிரான தனது தவறான கருத்தை, குறுகிய நோக்க பிரிவினையை மறைக்கும் வகையில் செயல்பட்ட நாராயணன் தான் இட்டுக்கட்டிய புவிசார் அரசியலை ராஜபக்சேயை “மிதமிஞ்சி மகிழ்விக்கும்“ ராஜதந்திரத்திற்கு உதவும் வகையில் தீட்சித்தின் குறுக்கிடும் புவிசார் அரசியலுக்கு திருப்பினார். தீட்சித்தின் குறுக்கிடும் புவிசார் அரசியல் கொள்கைகளுக்கு 1983ம் ஆண்டு இனக்கலவரங்கள் வழிவகுத்து கொடுத்தன. இதுவே இந்தியா தெற்காசியாவின் வல்லரசு என்ற நிலையில் இருப்பதற்கு சவால் விடுக்கும் சக்திகளுடன் சிங்கள இலங்கை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகொள்ள உதவியது. மேலும் 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கும் வழிவகுத்தது. இப்போது தமிழ் ஈழம் என்ற தடை இல்லாத நிலையில் இலங்கையின் ஆதரவுடன் சீனா இந்தியாவின் தெற்காசிய வல்லரசு ஆதிக்கத்தை அடித்து நொறுக்க தயாராகிவிட்டது.
அதேபோல டெல்லி ‘மும்மூர்த்திகளின்‘ புவிசார் அரசியலும் தமிழீத்தின் தடையை தகர்த்து சீனாவின் அச்சுறுத்தலை வீட்டு வாசலுக்கு கொண்டுவர சுறுசுறுப்பாக வேலை செய்தது. சீனா இதனை இலங்கையின் வளர்ச்சிப்பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெறுகிறேன் என்ற போர்வையில் செய்தது. முக்கியத்துவம் இல்லாத சில ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டன. சிங்கள இலங்கையில் சீனாவின் திட்டங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவுக்கு ராணுவ அடிப்படை வசதிகளை செய்ய ஆகும் செலவுடன் ஒப்பிடுகையில் அங்கு கிடைக்கும் வர்த்தக ரீதியான லாபம் மிகச் சொற்பமே.
கெர்ரியின் அறிக்கையில், இலங்கை தனது லாபத்திற்காக தனது சர்வதேச போட்டியாளர்களிடம் ‘வலுவான பேரம்பேசும் அமைப்பை‘ பயன்படுத்தி தமிழ் ஈழ தடையை போக்குவதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்தது என்பதும் தெளிவுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. கெர்ரியின் அறிக்கையின்படி தனது கூட்டு நாடுகளுக்கு குறிப்பாக ஜப்பானுக்கு கடல்வழியாக வளங்களை (குறிப்பாக எண்ணெய்) எடுத்துச் செல்வது மற்றும் தேவைப்பட்டால் தலையிடும் ஆற்றல் கொண்டதாகவும் இருந்து தமிழ் ஈழம் இலங்கையில் மூன்றில் இரண்டு பங்கு கடற்பகுதியை கட்டுப்படுத்துவதாக இருந்தது...‘ அடுத்த பின்விளைவு என்னவென்றால் சீனா சிங்கள இலங்கையை கொண்டு இந்தியாவில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் அபாயமாகும். தமிழ் ஈழத்தை அழித்து அந்த நாடு சீனா பக்கம் சாய்ந்துள்ளது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதற்கு காரணம் ராஜபக்சே என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஆற்றல் அல்லது அச்சுறுத்தலை ஒப்பிட்டுப் பார்க்கையில் சிறிதும் சமநிலையில் இல்லாத இந்தியா, நாராயணன் ‘மும்மூர்த்திகளின்‘ திரைமறைவு வேலைகள் காரணமாக, இலங்கை சீனாவின் பக்கம் சாய்வதை தடுத்து வந்த முக்கிய சக்தியான ஈழத்தை அழித்ததுதான். நாராயணனின் இந்த வினோதமான ‘புவிசார் அரசியல்‘ சோனியா குடும்பத்தை திருப்திப் படுத்துவதாகவே அமைந்தது. உயர் புலனாய்வு திறன் கொண்ட நாராயணன் இலங்கை, இந்தியாவின் பாதுகாப்புக்கான முக்கிய இடமான ஹம்பந்தோட்டாவில் சீனா கால்பதிக்க இடம் கொடுத்ததை கண்கொள்ளாமல் விட்டுவிட்டார். டெல்லியின் ‘மும்மூர்த்திகள்‘ நாட்டு நலனை கருத்தில் கொண்டா அவ்வாறு செய்தார்கள் என்பதை வாசகர்களே புரிந்து கொள்ள வேண்டும். நாராயணன் தமிழர்களுக்கு எதிரானவர் என்பது நன்கு தெரிந்ததே என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அவருடைய பிரிவினை கருத்துக்ளின் காரணமாகவே மும்பை பாதுகாப்பு மற்றும் தெலுங்கானா தோல்விகள் ஏற்பட்டன.
சீனாவின் செல்வாக்கு தமிழ்நாட்டின் சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பயன்களையும் குறைப்பதாகவே அமையும். ராணுவம் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் மன்னார் மற்றும் கச்சத்தீவு உள்ளநிலையில், பாக் நீர்ச்சந்தி வழியாக கப்பல்களை ஹம்பந்தோட்டா கொண்டு செல்ல ஏதுவாக அது சில மணிநேர பயண தூரத்திலேயே உள்ளது. இதன் காரணமாகவே வடக்கு இலங்கையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதற்கு கூடுதலாக இங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுப்பதற்காகவே சிங்கள இலங்கை இவ்வாறு ராணுவத்தை குவித்து வைத்துள்ளது. இலங்கையை மகிழ்வித்துவரும் இந்தியா/தமிழ்நாடு இலங்கைக்கு எதிரியா என்ன? இலங்கையை மகிழ்விப்பதற்காகவே இந்தியா தனது குடிமக்களான தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாப்பதைக் கூட கைவிட்டு விட்டது.
புதுடெல்லியில் கொள்கை ஆராய்ச்சிக்கான மையத்தின் வெளியுறவு ஆய்வுகள் பிரிவில் பேராசிரியராக பணியாற்றும் பிரம்ம செலானி அண்மையில் ஒரு முன்னணி பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில், ராஜீவ் காலத்திலிருந்தே சோனியாவின் குடும்பம் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்ததற்கான காரணம் பற்றி அரிய கருத்துக்களை கூறுகிறார். தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக உருவாவதை தடுக்கவே டெல்லி ‘மும்மூர்த்திகள்‘ வினோதமான கூட்டணியான கொழும்பு/ டெல்லி/ பீஜிங் கூட்டணி மூலம் சீனாவிற்கு ஒரு கதாபாத்திரத்தை கொடுத்ததாக கூறுகிறார். இந்த டெல்லி மும்மூர்த்திகள் சீனா ஹம்பந்தோட்டா திட்டங்களுக்கு தனது தொழிலாளர்களை (இது தனது போர்வீரர்களை உள்ளே திணிப்பதற்கான மரியாதையான சொல், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்த சீனா போர் வீரர்களை அனுப்பியுள்ளது) மட்டுமே பயன்படுத்தும் என்ற விதிமுறைகளை கண்டுகொள்ளவில்லை. இந்த கொழும்பு/ டெல்லி/ பீஜிங் கூட்டணி தமிழ்நாட்டை எப்போதுமே கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக செய்யப்பட்டதா?

இந்த தவறான செயல்களால், ஹிமாச்சல பிரதேசத்தின் வழியே உள்ளே நுழைய முயற்சிக்கும் அதேவேளையில், இந்தியாவின் வயிற்றுப்பகுதியில் நுழைய இன்னொரு வாய்ப்பு கிடைப்பதன் மூலம் சீனா மதிப்பிட முடியாத பெரும் பலனை அடைந்துள்ளது. இப்போது தமிழ் ஈழம் என்ற தடை இல்லாத நிலையில், இலங்கை தனது கடற்படையின் மூலம் பாக் நீர்ச்சந்தியில் தமிழக மீனவர்களை அவமானப்படுத்தும் வகையில் தாக்கி வருகிறது. இதன் மூலம் தமிழகம்/ இந்தியாவை அது எச்சரித்து வருகிறது. முப்பது ஆண்டுகளாக தமிழ் ஈழ கடற்படை தமிழக மீனவர்களை பாதுகாத்து, இலங்கை கடற்படைக்கு தடையாக இருந்து வந்தது. இப்படி உருவாகி வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க தமிழகம்/ இந்தியா தமிழ் ஈழத்திற்கு ஆதரவான கொள்கையை பின்பற்ற வேண்டும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இலங்கை ராணுவ ஆற்றல் பெற்ற வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் உறவில் இந்தியாவுக்கு சில உரிமைகள் உள்ளன. சீனாவின் செல்வாக்கை மெதுவாக்க அல்லது ஊடுறுவலை திரும்ப பெறச் செய்ய இந்த உரிமைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் சிங்கள இலங்கையின் மூலம் இந்திய/தமிழக எல்லை ஒரு சிம்ம சொப்பனமாக அமையாமல் இருக்கும்.
2010 பிப்ரவரியில் சாக்(எஸ்ஏஏஜி)-ல் பேராசிரியர் சூர்யநாராயணனின் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் அவர், இந்தியாவின் இருதரப்பு உறவு ஒப்பந்தங்கள் மற்றும் மத்திய மாநில உறவுகள் தமிழகத்தை மையமாக கொண்டு அமையும் என்று கூறியிருந்தார். அவரது கூற்று சரியான தருணத்தில் கூறப்பட்டதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையுமே டெல்லி தனக்கு இழப்பு ஏற்படும் வகையில் சிங்கள இலங்கை அரசை மிதமிஞ்சி மகிழ்விக்க முயன்று வருகிறது. ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின்(1964) கீழாக, இலங்கை 5 லட்சம் தமிழர்களை வெளியேற்றியது என்பதை இந்தியா ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தம் இந்திய வம்சாவழியான தமிழர்களில் 64 சதவீதம்பேர் உரிமைகளை இழக்கும் வகையில் 11ல் 4 பேர் மட்டுமே இலங்கை குடியுரிமையை பெற வழி செய்தது.
டெல்லி பிரபாகரனை வெறுப்புடன் நடத்திய காரணமாக, இந்திய வம்சாவளி தமிழர்களின் ஒப்பற்ற தலைவரான எஸ். தொண்டமான் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார். இந்த ஒப்பந்தம் மலேசியா போன்ற நாடுகள் அங்குள்ள இந்தியர்களை திருப்பி அனுப்பி வைக்க வழி செய்யலாம். ஸ்ரீமாவோ-இந்திரா ஒப்பந்தம் (1974) மூலமாக இந்தியா ராமநாதபுரம் ராஜாவின் ஜாமீனுக்கு உட்பட்ட கச்சத்தீவையும், பாக் நீர்ச்சந்தியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமையையும் இலங்கைக்கு தாரை வார்த்தது. கிழக்கு பாகிஸ்தானுக்கு பெரு பாரு பகுதியை வழங்கும் முடிவை டா. பிசி ராய்(மேற்கு வங்க முதல்வர்) தடுத்து நிறுத்தினார். இதனை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு, கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு கொடுத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் சட்ட நிவாரணம் கோரலாம். சிங்கள இலங்கையுடன் கொண்டிருக்கும் சந்தேகத்திற்கிடமான நட்புக்காக, ‘தொலைவில்‘ இருக்கும் டெல்லி தமிழகத்தில் நிலவும் கசப்புணர்வை அலட்சியப்படுத்தி, அதன் நலன்களை தாராளமாக விட்டுக் கொடுத்து வருகிறது. இந்திய கூட்டாட்சியின் அரசியலமைப்பு அமெரிக்காவின் வெளியுறவு குழுவிற்கு இணையானதாக இல்லை. தான்தோன்றித்தனமான இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றி யாரும் சம்பந்தப்பட்ட மாநிலங்களை அழைத்து விவாதம் செய்வதும் இல்லை, அதனை சமநிலைப்படுத்துவதும் இல்லை. இதுவே அமெரிக்காவில் நடைபெறுவதாக இருந்தால், வெளியுறவு நியமனங்களை கட்டுப்படுத்தும் வெளியுறவுக் குழு, மத்திய-மாநில அரசியலை தங்கள் விருப்பத்திற்கு வளைத்து தமிழகத்தை புண்படுத்தி இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ள நாராயணன் ‘மும்மூர்த்திகளின்‘ தகிடுதத்த வேலைகள் அரங்கேற அனுமதித்திருக்காது.

Sunday, August 7, 2011

ஜூலை 26- க்யூபாவின் புரட்சி, தார்மீக நெறியும் உறுதியும்


ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேராவின் சீடரான திரு ரான் ரைடெனோர், ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவர் இலங்கை அரசாங்கத்தால் நயவஞ்சகமாக போருக்கு உதவச் செய்த அல்பா கூட்டணி நாடுகளான க்யூபா, வெனிசுவேலா பொலிவியா, பிரேஸில் நாடுகள் தங்களது நீதிநெறி தவறாமல் இந்த இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்பானிஷ் மொழிபேசும் இந்நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை பெற்றுள்ள அவரது கட்டுரையை தமிழில் வழங்குகிறேன். இந்த கட்டுரை விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://pflt.org/july-26-cuba%E2%80%99s-revolution-morality-and-solidarity

http://www.counterpunch.org/ridenour07262011.html

ஜூலை 26- க்யூபாவின் புரட்சி, தார்மீக நெறியும் உறுதியும்

ரான் ரைடெனோர்

மேற்கோள், “இந்த ஜூலை 26ம் நாள் கொண்டாட்டத்தின்போது, தமிழ் மக்களுக்கு சரியான ஒன்றை செய்வதன் மூலம் க்யூபா அரசாங்கத்திற்கும், அல்பா கூட்டணி நாடுகளுக்கும் (க்யூபா, வெனிசுவேலா பொலிவியா, பிரேஸில்) ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேராவால் தெரிவிக்கப்பட்ட தார்மீக நெறிமுறைகளுக்கு திரும்புமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறோன். இலங்கை அரசாங்கம் செய்த போர்க்குற்றங்கள் பற்றி நடுநிலையான சர்வதேச விசாரணை நடத்தவும் மற்றும் இந்த மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டுவரவும் நீங்கள் உங்களது நெறி முறைகள், உங்களது புரட்சி வரலாற்றை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, 1953-ம் ஆண்டு ஜூலை 26ம் தேதியன்று சான்டியாகோ டி க்யூபா அருகேயுள்ள மோன்காடா படைக்களம் மீது வெறும் 160 போராளிகள் தாக்குதல் நடத்தினர். 1000 வீரர்களை கொண்ட அந்த கோட்டையை அவர்கள் வீழ்த்திவிடும் சாத்தியம் இருந்தது. அவ்வாறு வீழ்த்தியிருந்தால் சர்வாதிகாரி ஃபுல்ஜென்சியோ படிஸ்டாவின் ஆட்சியை குறுகிய காலத்திற்குள்ளாகவே வீழ்த்தியிருக்கும் ஒரு புரட்சி ஆரம்பித்திருக்கும். ஆனால் அது முடியாமல் போனது.

அதற்கான முக்கிய காரணம் அவர்களது கனரக ஆயுதங்களை கொண்டு வரவேண்டிய வாகனம் வராமல் போனதே. இருந்தாலும் அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டதை விட மூன்று மடங்கு சேதத்தை எதிரிகளுக்கு ஏற்படுத்தினர். போராளிகளில் பாதிப்பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சித்ரவதை செய்யும்போது அல்லது செய்த பின்னர் கொல்லப்பட்டனர்.

வெளி உலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் 76 நாட்கள் தனிமை சிறையில் வைக்கப்பட்ட பின்னர், அப்போது 26 வயதான ஃபிடல் காஸ்ட்ரோ 100 போர் வீரர்கள் நிரம்பியுள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவர், “அனைவருக்கும் உணவு, கல்வி மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு அளிக்கப்பட வேண்டும், விவசாயிகளுக்கு நிலம் அளிக்கப்பட வேண்டும், அனைவருக்கும் உரிமை வேண்டும் என்ற காரணத்திற்காக, லஞ்ச ஊழல் மிக்க சர்வாதிகாரியின் ஆட்சியை கவிழ்க்கத் தேவையான ஒரு எழுச்சிமிக்க தற்காப்பு உரையை நிகழ்த்தினார்.

ஐந்து மணிநேரம் அவர் ஆற்றிய உரையில், ஃபிடல் காஸ்ட்ரோ, “பேராசை பிடித்த கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் கொண்ட சர்வாதிகாரத்திற்கு எதிராக புரட்சி செய்யும் உரிமையை மாண்புமிகு நிதிபதிகள் பண்டைக் காலம் முதல் இன்றுவரை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று பேசினார்.

அவர் தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுக்காமல், சிறையில் உள்ள தனது சகோதர சகோதரிகளுடன் இருக்க அனுமதிக்குமாறு வேண்டினார்.

நீங்கள் என்னை கண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்

புரட்சி செய்ய நெறிமுறைகளும் தார்மீக பொறுப்புகளும் அவசியம் என்று ஃபிடல் காஸ்ட்ரோ கருதுகிறார். 2006ம் ஆண்டு இக்னாசியோ ராமோனெட் பேட்டி கண்டு வெளியிட்ட எனது வாழ்க்கை புத்தகத்தில், “ஃபிடல் காஸ்ட்ரோ, பல்வேறு இடங்களில் இந்த கொள்கைகளைப் பற்றி பேசுகிறார். தேசிய விடுதலை வீரரான ஜோஸ் மார்ட்டியிடமிருந்து தான் கற்றுக்கொண்ட -விசேஷ நெறிமுறைகளை பற்றி அவர் உறுதியாக பேசுகிறார்.

க்யூபாவுக்கு விடுதலை பெற்று அரைநூற்றாண்டு ஆன நிலையில், 1956 டிசம்பர் 2 முதல் 1959 ஜனவரி 1 வரை எட்டு ஆண்டுகள் அங்கு வேலை செய்து வாழ்ந்த கொரில்லா போராட்ட காலத்தில், புரட்சியாளர்கள் தார்மீக பொறுப்புடன் நடந்துகொண்டனர் என்பதை கண்டேன். இந்த வகையில் க்யூபாவின் ஆயுதப் புரட்சி போராட்டம் தனிப்பட்ட ஒன்றாக இருந்தது. ராமோனெட்டிடம், “நாங்கள் எந்த கைதிகளையும் கொல்லவில்லை”, “அவர்களை அடித்தது கூட இல்லை ஃபிடல் கூறினார். அதுதான், “எங்களது கொள்கை”, “அனைத்து புரட்சி சிந்தனைகளுமே ஓரளவு நெறிமுறைகளுடன்தான் ஆரம்பிக்கின்றன.

அதனால்தான் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் சே குவேரா - அவரது தார்மீக பொறுப்பு, அவர் ஒரு புரட்சி தலைவர் என்ற முறையில் அவர் மீது அன்பு கொண்டுள்ளனர், மரியாதை வைத்துள்ளனர். இது “பொதுவுடமை மற்றும் மனிதன்என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

“கேலிக்குரியதாக பார்க்கப்படும் அபாயம் இருந்தபோதிலும், மாபெரும் அன்புணர்வுடன்தான் புரட்சி வழிநடத்தப்படுகிறது... நமது புரட்சியாளர்கள் கண்டிப்பாக மக்கள் மீது தாங்கள் கொண்டுள்ள அன்பை பெருக்கிக் கொள்ள வேண்டும். இதுவே மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதற்கான காரணம், அதனை பிரிக்க முடியாத ஒன்றாக்கவும். பொதுமக்களிடமிருந்து பிரிந்து விடாமல் இருக்க, தீவிரமான பழமைவாதம் மற்றும் ஏட்டுக் கொள்கைகளுக்கு ஆளாகாமல் இருக்க ஒவ்வொருவரும் மனிதாபிமானம் மற்றும் நீதி மற்றும் உண்மை மீது உறுதியான நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். இந்த வாழும் மனிதாபிமானம் உண்மையான நடவடிக்கையாக, ஒரு நடமாடும் சக்தியாக, சேவைசெய்யும் செயலுக்கு எடுத்துக்காட்டாக மாறவேண்டும் என்பதற்காக நாம் தினமும் போராட வேண்டும்.

நான் ஃபிடல் மற்றும் சே கூறுவதை ஒப்புக்கொள்கிறேன். வீட்டிலும் அடக்குமுறை நடக்கும் எல்லா இடங்களிலும் புரட்சியாளர்கள் லட்சியத்தில் நெறிமுறை தவறாதவர்களாக, நடைமுறையில் தார்மீகம் தவறாதவர்களாக இருக்க வேண்டும். காஸ்ட்ரோவின் க்யூபா, க்யூபாவின் ஃபிடல் புத்கத்திற்காக லீ லாக்வுடிடம் ஃபிடல் கீழ்க்கண்டவாறு கூறினார்-

“உலகத்தில் எந்த மூலையிலும் சுரண்டப்படுபவர்கள் நமது தேசாபிமானிகளே, சுரண்டுபவர்கள் நமது எதிரிகள்... உண்மையில் உலகமே நமது நாடு, உலகம் முழுவதும் உள்ள புரட்சியாளர்கள் நமது சகோதரர்கள்.

நான் நெறிமுறைகளை கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறேன். சஹிப்புத்தன்மையின் வரம்புகளை கடந்து தாக்கப்படாமல் அல்லது அடக்குமுறை செய்யப்படாமல் நமது உணர்வுமிக்க கைகளால் உயிர் தவறாக நடத்தப்படக் கூடாது அல்லது அழிக்கப்படக் கூடாது. தார்மீக பொறுப்புள்ள ஒருவர், அமைப்பு, அரசியல் கட்சி அல்லது அரசாங்கம் தினசரி வாழ்க்கையில் மற்றும் நீதிக்கான போராட்டத்தில் நெறிமுறைகளை மனதில் வைத்து செயல்பட வேண்டும். தார்மீக பொறுப்பு பற்றிய எனது சிந்தனைகள் இவையே-

1. யாரும், எந்த இனமும் அல்லது இனக்குழுவும் மற்றொரு இனத்திற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ இருக்கக் கூடாது.

2. அடக்குமுறையாளர்கள் மற்றும் அத்துமீறுபவர்களுக்கு எதிரான போராட்டத்தில், போராட்டத்தில் ஈடுபடாத பொதுமக்களை நாம் கொல்லக் கூடாது. அல்லது கட்டாயமாக அவர்களை படையில் சேர்க்கக் கூடாது. அல்லது அவர்களை பணயக் கைதிகளாக பிடிக்கக் கூடாது.

3. நாம் அனைவருக்கும் சமத்துவத்தை அளிக்க போராடுகிறோம்.

4. உழைப்பை சுரண்டி அல்லது எந்தவொரு நபர், குழுவினர், வகுப்பு அல்லது சாதியை அடக்கு முறைக்குள்ளாக்கி லாபம் சம்பாதிப்பதை நாம் ஒழிப்போம். அதற்கு மாறாக, நாம் யாரும் பட்டினியாக இல்லாத, நமது ஆதாரங்கள் மற்றும் உற்பத்தியை சமமாக பங்கிடும் நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவோம்.

5. நாம் பங்கேற்பது அடிப்படையிலான அரசியல் அமைப்பை உருவாக்க போராடுகிறோம். அதில் உள்ளூர், தேசியம் மற்றும் சர்வதேச கொள்கைகள் பற்றிய முக்கிய விஷயங்களில் முடிவெடுப்பதில் அனைவருக்கும் உரிமை இருக்கும்.

6. நாம் ஒவ்வொருவரிடமும் உள்ள தனிமையை அழிக்க போராடுகிறோம்.

நெறிமுறைகள் மற்றும் இலங்கை தமிழர்கள்

வேறு வாய்ப்பு கிடைக்காத உண்மையான உறுதிகொண்ட செயல்வீரர்கள் அவர்கள் (இலங்கை தமிழர்கள்). நாம் உலகின் எந்த மூலையிலும் நடைபெறும், அடக்குமுறையால் தாக்கப்படும் மக்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் தொடர்பான போர் எதிர்ப்பு செயல்வீரர்களை பொறுத்தவரை அதுவே நமது கடமையாக இருந்தது என்று நான் கருதுகிறேன்... வியட்நாம்-லாவோஸ்-கம்போடியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் நாம் செய்ததை போலவே..

நமக்கு உறுதிமிக்க செயல்வீரர்களாக தோன்றுபவர்களை அரசாங்கங்கள் முற்போக்கு, ஜனநாயக, பொதுவுடமை, புரட்சிக்காரர்களாக பார்க்கின்றன. இலங்கையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசாங்கங்கள் அடக்குமுறைக்குள்ளாக்கி வரும் தமிழ் மக்களின் உயிர் மற்றும் உரிமைகளுக்காக அழுத்தம் கொடுப்பது நமது கடமை என்று நான் நம்புகிறேன்.

எதிர்க்கும் உரிமைக்காக வாதாடக் கூடிய, அமைதியான முறையில் அடக்குமுறைக்குள்ளாக்கும் அரசாங்கங்களை மாற்ற தவறும்போது ஆயுதம் ஏந்துவதை வலியுறுத்தக் கூடிய உறுதிமிக்க செயல்வீரர் என்ற முறையில் நான் கட்சி அல்லது காரணத்தை பொருட்படுத்தாமல் அனைத்து தீவிரத்தையும் துறக்கிறேன். நீதி மற்றும் சமத்துவத்தை தழுவும் நமது கொள்கைகளின்படி தார்மீக அடிப்படையில் அவர்கள் தங்களது யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டுகிறேன்.

பெரும்பாலான ஆயுத இயக்கங்கள் கொடுமைகள் செய்கின்றன, நீண்ட போராட்ட காலத்தில் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றன என்பதை நான் காண்கிறேன். உதாரணத்திற்கு சிலசமயம் கொலம்பியாவின் எஃப்ஏஆர்சி மற்றும் பாலஸ்தீனத்தின் பிஎஃப்எல்பி-யின் நடவடிக்கைகளை கூறலாம். ஆனால் நான் அவர்களது உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறேன். அவர்கள் தொடர்ச்சியாக அரசாங்க பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் மாபெரும் ராணுவம் மற்றும் பொருளாதார சக்திகளுக்கு எதிராக போராடுகின்றனர். தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்காக போராடிய ஏஎன்சியும் பயங்கரமான தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது.

ஆயுதத்தை ஏந்திய டஜனுக்கும் அதிகமான தமிழ் குழுக்களில் பெரும்பாலானவை தங்களை மாக்ர்சிஸ்ட்கள் என்று கருதின, பல குழுக்கள் க்யூபாவின் விடுதலைக்காக போராடிய புரட்சித் தலைவன் சே குவேராவை தங்களது முன்மாதிரியாக கொண்டன. ஆனால் அவர்கள் அனைவருமே தங்களது பெரும்பாலான நடவடிக்கைகளில் தீவிரவாதிகளாகி விட்டனர். வன்முறை பற்றி சே குவேரா என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்.

“எப்போதுமே பின்தங்குபவர்கள் உள்ளனர், ஆனால் நமது இயக்கம் அவர்களை கணக்குத் தீர்ப்பதற்கானதோ, நசுக்குவதோ மற்றும் ஆயுதமேந்திய புரட்சிக்கு அடிபணிய வைப்பதோ அல்ல. ஆனால் அவர்களை முன்னேற்றிச் சென்று அவர்களுக்கு போதிப்பது மற்றும் நம்மை எடுத்துக் காட்டாக கொண்டு நம்மை பின்பற்றச் செய்வது, அல்லது ஃபிடல் சொல்வது போல ‘நெறிமுறைக் கட்டாயம்என்று சொல்லாம். ( “உலகத்தில் எங்கோ ஒரு மூலையிலிருந்து பேச்சிலிருந்து)

இலங்கை தமிழர்களின் ‘கதை தமிழர்களுக்கும் உலக மனித சமுதாயத்திற்கும் ஒரு கொடூரமான சோகக் கதை. பெரும்பாலான நாடுகள் நேரடியாக ஈடுபடவில்லை. ஆனாலும் தங்களால் என்ன செய்ய முடியும் என்று தெரியாத காரணத்தால் அவர்களுக்கு எவ்வாறு எதிர்வினை செய்வது என்று தெரியவில்லை. அங்கு ஒரேநேரத்தில் பல கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. வேண்டுமென்றே முக்கிய முதலாளித்துவ நாடுகளால் மற்றும் உலகின் ‘முதல்நிலை அரசாங்கங்கள், முந்தைய ‘இரண்டாம்நிலைஅரசாங்கங்கள் மற்றும் ‘மூன்றாம் நிலைமுதலாளித்துவ அரசாங்கங்களால் தொடர்ந்து காட்டுமிராண்டித் தனம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. நான் ‘நிரந்தரமான போர்க்காலம் என்றழைக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். காட்டுமிராண்டித்தனம் கண்காணிப்பு அல்லல் படுதல் ஆகியவையே இந்த உலகின் விதிமுறை.

ஒப்பிடுகையில் குறைந்த அளவு காட்டுமிராண்டித்தனம் உள்ள மற்றும் ஆக்கிரமிப்பு போர்களில் ஈடுபடாத (நான் இங்கே க்யூபா மற்றும் இதர அல்பா நாடுகளான நமது அமெரிக்க மக்கள் கூட்டணி பொலிவேரியன் நாடுகளைக் குறிப்பிடுகிறேன்) அந்த நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இலங்கை போன்ற போர்க்குற்றவாளி அரசாங்கங்களுடன் உறவுகள் வைத்திருப்பது தேவை என்று கருதுகின்றனர். இது அவர்களை தங்களது நெறிமுறை உறுதிகளை மறந்து அடக்குமுறைக்குள்ளான தமிழர்களை கைவிடச் செய்யும் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த ஜூலை 26ம் தேதி கொண்டாட்டத்தின்போது, தமிழ் மக்களுக்கு சரியான ஒன்றை செய்வதன் மூலம் க்யூபா அரசாங்கத்திற்கும், அல்பா கூட்டணி நாடுகளுக்கும் (க்யூபா, வெனிசுவேலா பொலிவியா, பிரேஸில்) ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேராவால் தெரிவிக்கப்பட்ட நன்னெறி கொள்கைகளுக்கு திரும்புமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறோன். இலங்கை அரசாங்கம் செய்த போர்க்குற்றங்கள் பற்றி நடுநிலையான சர்வதேச விசாரணை நடத்தவும் மற்றும் இந்த மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டுவர நீங்கள் உங்களது நெறிகள், உங்களது புரட்சி வரலாற்றை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

நமது போராட்டங்களில் தார்மீக பொறுப்பு இல்லாவிட்டால், நாம் உலகளாவிய தார்மீக பொறுப்பை இழப்பை நோக்கி செல்கிறோம் என்று கருதுகிறேன். இது ஏற்கனவே முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் காரணமாக ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களை தகர்த்து அழிப்பதன் மூலம் அரங்கேறி வருகிறது. மேலும் உலகம் முழுவதும் பாசிசம் எழுச்சி பெற்று வருகிறது.

அல்கய்தாவுக்கும் எல்டிடிஈக்கும் என்ன தொடர்பு?


அல்கய்தாவுக்கும் எல்டிடிஈக்கும் என்ன தொடர்பு?

நடராஜா பாலசுப்ரமணியம்

உண்மையில் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் பி. ராமன் என்று அழைக்கப்படும் பஹுகுடும்பி ராமனின் பிசாசுத் தனமான கற்பனையான இது மிக மோசமான மனித இனப்படுகொலையில் முடிந்தது. எந்தவொரு மனிதனுக்கும் ஏற்படக்கூடிய இது அதுவும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்டது. இது ஐக்கிய நாடுகள் சபையையும் உலக ஒழுக்கங்களையும் கேலி செய்வதாக அமைந்தது. மனித இனத்திற்கு நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்திய இது, மூத்தோரும், கற்றோரும் மற்றும் நோபல் பரிசு பெற்றோரும் கூட, சட்ட ஒழுங்கு என்று முணுமுணுத்துக்கொண்டு வெட்கி ஒதுக்கிய வல்லரசுகளின் கதைகளையும் நயவஞ்சக யுக்திகளையும் நாம் பரிசீலனை செய்வோம்.

2004ம் ஆண்டு நியூ டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்தியாவின் இலங்கை கொள்கையில் தனிநபர் விருப்ப அடிப்படையிலான மாற்றம் ஏற்பட்டது. அப்போது இந்திய அமைதிப்படைக்கு ஏற்பட்ட வரலாற்று மூக்கறுப்புக்கு எல்டிடிஈயின் தலைமைக்கு பாடம் புகட்டும் ஆசை தலைதூக்கியது. இதனை பாக் நீர்ச்சந்தியின் இருபுறமும் உள்ள தமிழ் மக்களின் தலைவர்கள் மீதான அவமரியாதை மற்றும் தவறான கருத்தும் வலுப்படுத்துவதாக அமைந்தது. இந்தியாவின் தலையிடாக் கொள்கை என்பது எல்டிடிஈக்கு கிடைக்கும் வெற்றிக்கு மேல் வெற்றி மற்றும் தமிழீழத்திற்கு கிடைக்கும் புகழை சஹித்துக்கொள்ள முடியாமல் தலைவலியின் வேதனையோடு ஒருவன் தூங்குவது போல நடித்து வந்ததாகும். இந்தியா தூக்கத்திலிருந்து எழ (வாய்ப்புக்காக) சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது.

இது இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவின் போர்க்குற்றத் தாக்குதல் கொள்கைக்கு மிகச்சரியாக துணைபோனது. எல்டிடிஈயின் ராணுவ பலத்தையும் மலரும் ஈழத்தையும் ஏற்றுக்கொண்ட, சந்தப்பவாத ஏகாதிபத்திய நாடுகளான யூகே, யுஎஸ்ஏ, இந்தியாவிற்கு ஒத்திசைப்பதாக பல்டி அடித்தன. என்ன ஒரு வெட்கக் கேடு. என்ன ஒரு கொடுமை.

2006ம் ஆண்டு மே 11ம் தேதி ஐஐஎஸ்எஸ்-ன் (இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ரேடஜிக் ஸ்டடீஸ்) விசேஷ வட்டமேஜை கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய இந்தியாவின் புலனாய்வுத்துறையின் (வெளியுறவு) தீவிரவாத எதிர்ப்பு பிரிவின் முன்னாள் தலைவரான திரு. பி.ராமன் தெற்காசியா மற்றும் அல் கய்தா எழும் போக்கு என்ற தலைப்பில் பேசினார். அவர் எல்டிடிஈயின் வெற்றிகரமான கடற்படை தாக்குதல்கள் தனக்கு 2000ம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க கப்பற்படை கப்பலான யுஎஸ்எஸ் கோல் ஆஃப் ஏடன் மீது அல் கய்தா நடத்திய தாக்குலை நினைவுபடுத்தியது என்று துடுக்காக பேசினார். மேலும், அல் கய்தாவின் தாக்குதல்கள் வெறுமனே எல்டிடிஈயிடமிருந்த காப்பி அடிப்பதே ஒழிய எல்டிடிஈ அல் கய்தாவிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்று பேசினார்.

இதற்கு முன்பு 2003ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி ஹாங்ஹாங்கில் புகழ்பெற்ற, முன்னாள் ஈயூ வெளியுறவுத்துளை கமிஷனர் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தின் சான்சலருமான திரு. கிரிஸ் பேட்டன் நமது தேசியத் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோதும் இந்த பாதகன் இதே போன்ற தந்திரத்தைத்தான் பின்பற்றினான். (பி. ராமனின் பேப்பர் எண் 845, www.southasiaanalysis.org). ஒரு இந்திய போலீஸ்காரராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த ஒருவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

பிரபாகரன் அல் கய்தாவைப் போலவே பல பயங்கரமான தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தியதாகவும், எல்டிடிஈயை பார்த்தே மேற்கு ஆசிய தீவிரவாதிகளும் நடந்துகொள்கின்றனர். 1999ம் ஆண்டுதான் ஒசாமா பின் லேடன் மனித வெடிகுண்டு தாக்குதலை ஆரம்பித்தான். ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பே எல்டிடிஈ மனித வெடிகுண்டு தாக்குதலை ஆரம்பித்து விட்டது என்று எழுதினான். அவனுடைய துஷ்பிரச்சார கட்டுரையின் தலைப்பு கிரிஸ் பேட்டன்-எல்டிடிஈயின் சுயாட்சியை நியாயப்படுத்துதல். ஆனால் அந்தநேரம், இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அல் கய்தாவின் தோற்றம்

1980ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஆஃப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் படையெடுப்புக்கு எதிராக போராட அராபியர்களை ஒன்று சேர்க்க ஒசாமா பின் லேடனால் அல் கய்தா ஆரம்பிக்கப்பட்டது. இது யுஎஸ்ஏ மற்றும் மற்ற ஏகாதியபத்திய சக்திகளின் ஆதரவில் ஆரம்பிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அல் கய்தாவின் ஒரே கொள்கை முஸ்லீம்களை ஒன்றுசேர்த்து காலிப்களின் விதிகளை பின்பற்றும் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதாகும். அவர்களது அரசாங்கத்தின் முதல் அமைப்பு இஸ்லாமை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது. மேலும் முஸ்லீம் உம்-மா (தேசம்) அரசியல் ஒற்றுமைக்கு பிரதிநிதியாக இருந்தது. கொள்கை அளவில், இது அரசியலமைப்பு அடிப்படையிலான குடியரசு, அதாவது அரசின் தலைமை (காலிப்). மற்ற அதிகாரிகள் குடிமக்கள் மீது அதிகாரம் செலுத்தும் இஸ்லாமிய சட்டப்படி மக்களை ஆட்சி செய்வர்.

எல்டிடிஈயின் நிரூபிக்கப்பட்ட ராணுவ பலம்

எல்டிடிஈ 2000ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி யானையிறவை பிடித்தது. அவர்கள் 1000க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவனத்தினரை கொன்று யானையிறவு ராணுவ முகாமை வெற்றி கொண்டனர். எஞ்சிய ராணுவத்தினர் சிதறி தப்பி ஓடிவிட்டனர். இந்த போரை பற்றி இங்கிலாந்து பத்திரிகைகள் விரிவாக செய்தி வெளியிட்டன. லூக் ஹார்டிங் தனது செய்தியில், யாழ்ப்பானம் எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்து விடலாம் என்று பெரும்பாலான அரசியல் அறிஞர்கள் கருதுகின்றனர் என்று எழுதினார். எல்டிடி ஒருபோதும் அனைத்து ராணுவத்தினரையும் கொல்ல விரும்ப வில்லை அவர்கள் தங்களது தாய்நாடான தமிழீழத்திலிருந்து ராணுவத்தினரை துரத்தி அடிக்கவே விரும்பினர்.

யானையிறவு படைக்களத்தை கைப்பற்றிய ஒரு ஆண்டுக்குள்ளாகவே, எல்டிடி இலங்கை ராணுவத்தை அக்னி கிலா (தீக்கம்பி) தாக்குதலில் விரட்டியடித்தது. எல்டிடிஈயின் இந்த ராணுவ பலத்திலான வெற்றிகள் தமிழர்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்கான திறமையாகவே கருதப்பட்டன.

தொடர்ச்சியான வெற்றி மற்றும் அதற்கு அப்பால்...

2001ம் ஆண்டு ஜீலை 24ம் தேதி சிறப்பாக திட்டமிடப்பட்டு சுருக்கமாக நிறைவேற்றப்பட்ட இலங்கை காட்டுநாயக்கே சர்வதேச விமான நிலையத் தாக்குதல் 450 மில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தியதாக மதிப்பிடப்பட்டது. இதனால் இலங்கை அரசு புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. உண்மையில் பிரபாகரனின் புத்திசாலித்தனமான தலைமையில் எல்டிடிஈ தமிழ் ஈழ விடுதலையை சாதித்து காட்டியது. அதோடு மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களான எல்டிடிஈ-யால் என்ன செய்ய இயலும் என்பதை உலகிற்கு காட்டியது.

தவறுகளின் துயரம்

இங்கிலாந்தின் அனைத்து போர்களுக்குமே இந்தியாதான் வீரர்களை அளிக்கும் முக்கிய நாடாக இருந்து வந்தது என்ற காரணத்தால் சாதாரணமாகவே ஒருவரால் யூகேவின் தவறை புரிந்துகொள்ள முடியும். ஆனால் மிகவும் வெளிப்படையான அமெரிக்காவிற்கு என்ன ஆச்சு? அமெரிக்க நீதித்துறையின் கௌரமிக்க அமைப்பான எஃப்பிஐ(ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்) 2008ம் ஆண்டு ஜனவரியில் எல்டிடிஈ அல் கய்தாவை விட மோசமான அமைப்பு என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதுவே இன அழிப்புக்கு கிடைத்த சிக்னலாக அமைந்தது. ஏன்?

தற்போது இலங்கையில் நடந்து வருவது வல்லரசுகளின் அமைதியான ஆதரவுடன் நடைபெறும் இன அழிப்பு ஆகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த இன அழிப்பு நடத்தப்படுகிறது என்பதை அறிந்துகொண்டே வல்லரசுகள் இந்த ஆதரவை அளித்து வருகின்றன. இது அந்நாட்டின் மக்களுக்கு எந்த நலனையும் அளிக்காது.

சர்வதேச சமுதாயம் இன அழிப்புக்கு அளிக்கும் ஆதரவை நிறுத்திவிட்டு தமிழ் ஈழத்தை நனவாக்க வேண்டிய தருணம் இதுவே.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழம் ஒன்று தெருக்கடை தேங்காய் கிடையாது.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...