Saturday, February 16, 2013

தமிழர்களுக்குத் தேவையான புரிதல்


தமிழர்களுக்குத் தேவையான புரிதல்

அன்புள்ள தலித், இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து சாதி மக்களே,

நாம் அனைவரும் பல நூற்றாண்டுகளாக எந்தவித வேறுபாடும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் சுதந்திரப் போராட்ட காலத்தில் நமது சமூக கேடுகளுக்கு சாதி, மதம்தான் காரணம் என்று சமூக விஞ்ஞானி ராமசாமி நாயக்கர் கண்டுபிடித்தார்.

அவர் அதையே பிரச்சாரம் செய்தார், பாவம் அரசியலுக்கு வராத காரணத்தால் அவரால் எதையும் செய்ய முடியவில்லை.

அவர் கம்பெனியில் இருந்தால் சல்லிக் காசும் பெயராது என்பதை அறிந்த அண்ணன் தம்பி கம்பெனி அந்த பிரச்சாரத்தில் தங்களுக்கேற்ப சில மாற்றங்களைச் செய்து தொடர்ந்தது.

அண்ணன் போய்ச் சேர்ந்ததும் தம்பி தன் வேலையைக் காட்டினார். அதைக் கண்டு பொங்கிய புரட்சித் தலைவர் நம்மை தம்பியிடமிருந்து மீட்டார்.

இந்த தம்பி அண்ட் கோவும், புரட்சித் தலைவரும் செய்த லீலைகள்தான் கடந்த 40 ஆண்டுகாலத்தில் தமிழகம் கண்ட பொற்காலம். அனைத்து வளர்ச்சிப் பணிகளும் இவர்கள் செய்ததே. அனைத்துக் கேடுகளும் இவர்கள் செய்ததே.

ஆனால் இவர்கள் இவர்களின் அரசியல் தோல்விகளுக்கு காரணம் காட்டுவது என்ன சாதி, மதமாம். ஆட்சி செய்தது இவர்களா, இல்லை சாதி மதமா?

சாதி, மத வேறுபாடுகளைக் களைய இந்த தம்பி அண்ட் கோவும், புரட்சித் தலைவரும், அவரின் தனி வாரிசு அம்மாவும் என்ன செய்தார்கள்? எனவே இவர்களது இயலாமைக்கு சாதி, மதத்தை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது. அது போன்ற சிந்தனைகளை நாம் அனைவரும் ஒதுக்க வேண்டும்.

தலித் மக்களே, தீண்டாமை என்பது வெறுக்கத் தக்க செயல். அதை முழுமையாக போக்காதது மேற்கண்ட தலைவர்களின் இயலாமையே. அதற்கு ஒட்டுமொத்த இந்து ஆதிக்க சாதிகள் காரணமல்ல. ஆனால் அந்த தீணடாமையை ஒழிக்க வேண்டுமானால் அதே ஆதிக்க சாதிகளின் ஒத்துழைப்போடுதான் ஒழிக்க முடியும்.

ஆனால் தீண்டாமையை ஒழிப்பதற்கு பதிலாக சாதி, ஒழிப்பு, மத ஒழிப்பு, அடையாள ஒழிப்பு என்பது மனிதனை மூளைச் சலவை செய்யும் வேலைகளாகும்.

இந்தியச் சட்டங்களின்படியும், சாதி அடிப்படையில் சலுகை பெற்றுக் கொண்டும் சாதியை, மதத்தை ஒருக்காலும் ஒழிக்க முடியாது. அவற்றை ஒழிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த வழக்கங்களை சில ஒழிக்க முடியும். உடனடியாக ஒழிக்க வேண்டியது தீண்டாமை வழக்க மட்டுமே.

மற்றபடி சமூக அந்தஸ்து, பொருளாதார முன்னேற்றம், சமூக உறவு என்பதெல்லாம் படிப்படியாக செய்து முடிக்க வேண்டிய இலக்குகளாகும்.

இதை ஒவ்வொரு சமுதாயமும் எவ்வாறு அடைய விரும்புகிறார்கள் என்ற கருத்தொற்றுமையின் கீழாகவே அடைய முடியும்.

எனவே தமிழர்களில் உள்ள அனைத்து மத, சாதிப் பிரிவுகள் ஒன்று கூடி எதிர்காலத்தில் தமிழர்கள் எந்த இலக்கை அடைய வேண்டும். என்ன மாதிரியான சமூக, அரசியலை கட்டியெழுப்ப வேண்டும் என்று கூடி முடிவு செய்து அதன்படி செல்வதுதான் தற்போதையத் தேவை.

அதுவே சரியான ஒன்றாக இருக்கும். மற்றபடி கற்பனையான சமுதாய, அரசியல் கருத்துக்கள் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மோதலை உருவாக்கக் கூடியவையே. அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது பற்றி பேசும் அரசியல்வாதிகளை ஒதுக்க வேண்டும்.

தமிழ்க் குலம் வாழ்க. தமிழினம் வாழ்க.

Thursday, February 7, 2013

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரைச் சூட்டக் கோரிக்கை



மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரைச் சூட்டக்கோரி ஐஎன்ஏ வீரர் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் மார்ச் 5ம் தேதி பேரணி  நடத்துகிறார்.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (86). இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்த வீரர் ஆவார். பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் 15 ஆண்டுகாலம் அரசியல் சமூக பணி செய்தவர் ஆவார்.
இவர் ஒவ்வொரு ஆண்டும் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜையில் தவறாமல் கலந்துகொள்கிறார்.

தற்போது இவர் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட முயற்சி செய்து வருகிறார். தனது கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் 5ம் தேதி மதுரையில் பேரணி நடத்துகிறார்.

இதற்காக இவர் அனைத்துக் கட்சித் தலைவர்களின் உதவியை நாடி வருகிறார். பார்வேர்டு பிளாக் கட்சி எம்எல்ஏ கதிரவன் இவருக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார். இவர் தனது கோரிக்கை மற்றும் பேரணிக்கு ஆதரவளிக்குமாறு வேண்டி திருமாவளவன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.  

Sunday, February 3, 2013

மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி



மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது எனக்குப் பிடித்த தி.மு.க வின் கோஷங்களில் ஒன்று. தி.மு.க என்றால் இன்றைய தி.மு.க அல்ல. அறிஞர் அண்ணா காலத்து தி.மு.க. ஒரு நாடு எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டுமென்பதற்கு தெளிவான இலக்கணத்தைக் கொடுத்த கோஷம்.


இதைப் புரிந்து கொள்வதற்கு முன் நாட்டுக்கும், தேசத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். நாடு என்பதை ஆங்கிலத்தில் country என்றழைக்கலாம் பொதுவான கண்ணோட்டத்தில். தேசம் என்பது வடமொழியிலிருந்து வந்திருந்தாலும் அது ஆங்கிலத்தில் nation என்ற சொல்லுக்கு இணையானது.

தேசம் என்பது பெரும்பாலான மக்கள் மதத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ ஒன்றுபட்டு வாழும் ஒரு நிலப்பரப்பு. மதத்தால் ஒன்றுபட்ட தேசங்களை விட மொழியால் ஒன்றுபட்ட தேசங்களுக்கு ஆயுள் அதிகம். காரணம் மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. மொழி என்பது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம் கூடவே வருவது பிறந்து சில ஆண்டுகளிலிருந்து. இதற்கு உதாரணமாக பாகிஸ்தான், வங்காளதேசத்தைக் குறிக்கலாம். இரு தேசங்களுக்கும் மதம் ஒன்றாக இருந்தாலும் மொழி அவர்களைப் பிரித்தது. இந்தியாவைக் கூட இன்றைய இந்து மதத்தால் இணைக்கப்பட்ட தேசம் என்று பாவிக்க முயன்றாலும் மதத்தால் உருவாக்கப்படும் அத்தகைய கட்டமைப்பு நெடுநாளைக்கு நீடிக்காது.

மதத்தால் ஒன்றுபட்ட தேசம் என்றால் இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகியவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மொழியால் ஒன்றுபட்ட தேசங்கள் பிரான்சு, ஜெர்மனி ஆகியவை. இந்தியாவில் உள்ள மொழிவாரி மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேசமாகத் திகழத் தகுதி கொண்டவை.

நாடு என்பது அரசியல் காரணங்களுக்காக செயற்கையாக உருவாக்கப் பட்ட நிலப்பரப்பு. இந்தியா, ஐரோப்பிய யூனியன், முந்தைய சோவியத் ருஷ்யா ஆகியவை இதற்கு சிறந்த உதாரணம். இந்த கட்டமைப்பில் ஒவ்வொரு மாநிலத்துக்கோ அல்லது தேசத்துக்கோ உள்ள முக்கியத்துவத்தைப் பொறுத்து அக்கட்டமைப்பின் ஆயுள் அமையும். இதில் ஏதாவது ஒரு மாநிலமோ தேசமோ அடுத்த மாநிலத்தை அடக்கி ஆள முயன்றால் அது நாடு உடைவதற்கு வழிவகுக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை தான் ஒரு நாடு என்பதை ஒப்புக் கொள்ளாமல் இந்தி பேசும் ஒரு தேசமாகத் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதே அதன் பிரச்சினை.

மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது ஆட்சிமுறையைச் சிறப்பாக்கும் ஒரு தத்துவம். இம்முறையில் ராணுவம், பொருளாதாரம் போன்ற பொதுவான துறைகளை மட்டும் மத்திய அரசு நிர்வகிக்கும். கல்வி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, உள்கட்டமைப்பு போன்ற துறைகள் மாநிலம் அல்லது தேசத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது போன்ற கட்டமைப்பில் அனைத்து மாநிலங்களும் அல்லது தேசங்களும் பொதுவான நாணயத்தையும், மக்கள் தடையில்லாமல் பல்வேறு மாநிலங்கள் அல்லது தேசங்களுக்கிடையே சென்று வரும் அனுமதியைப் பெற்றிருப்பர். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் அல்லது தேசங்களுக்கும் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு அந்த மாநிலத்தையோ அல்லது தேசத்தையோச் சார்ந்தவருக்குத்தான் முன்னுரிமை. மேலும் ஒவ்வொரு மாநிலத்தின் அல்லது தேசத்தின் வரி வருவாயை எப்படி செலவு செய்வது என்பது அம்மாநிலமே முடிவு செய்யலாம். இந்தியாவில் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தாத பீஹார், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாடு, கர்நாடகா போன்ற வளர்ச்சி பெற்ற மாநிலங்களின் வரி வருவாயில் பெரும் பங்கைச் சுருட்டி கொள்வது போன்றவை மாநில சுயாட்சி முறையில் நடக்காது. சிலர் இதற்கு சொல்வார்கள் பீஹாரின் இரும்பை வளத்தை நாம் பயன்படுத்தவில்லையா என்று. ஆனால் அதற்கு தமிழ்நாடு தகுந்த விலை கொடுத்துதான் அதை வாங்குகிறது. ஆனால் சோம்பேறித்தனமாக இருந்துவிட்டு வளர்ந்த மாநிலங்களின் வரி வருவாயில் பீஹார் போன்ற மாநிலங்கள் பெரும் பங்கு வாங்குவதை யாரும் கேட்க மாட்டார்கள்.

இந்தியா சுதந்திரம் பெற்றிருந்தபோது மாநிலங்களுக்கு சுயாட்சி அளிக்காமல் பெரும்பாலான அதிகாரங்களை மத்திய அரசிடம் கொடுத்ததனால் வந்த விளைவுகள் இவை.

ஐரோப்பிய யூனியன் 1980 களில் உருவானபோது இத்தகையக் குறைகளைக் களைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள். அந்த கூட்டமைப்பில் ஒரு தேசத்துக்கு கூட்டமைப்பின் வெளியுறவுக் கொள்கை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தங்களுக்கென தனி வெளியுறவுக் கொள்கை வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது ஐரோப்பா முழுவதுமே ஒரு நாடு போலத்தான் காட்சியளிக்கிறது. தடையில்லாமல் பல்வேறு தேசங்களுக்குச் சென்று வரும் வசதி, ஒரே நாணயமான யூரோ ஆகியவை மட்டும்தான் இத்தேசங்களை இணைக்கும் ஒரே காரணி. ஐரோப்பிய யூனியன் அங்கத்தினர்களும் ஒன்று சேர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த நாடாளுமன்றம் மிகவும் குறைந்த அதிகாரங்களைக் கொண்டது. அனைத்து அங்கத்தினர்களின் பொதுவான பிரச்சினைகள் மட்டும்தான் இங்கு விவாதிக்கப்படும்.

அமெரிக்காவும் தன்னுடைய பல்வேறு மாநிலங்களுக்கு பூரண சுயாட்சியை அளித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி சட்டங்கள், வரி விகிதங்கள் கூட உண்டு.

இன்னும் சொல்லப்போனால் பிரித்தானியர்கள் நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்போகும் சேதி கேட்டு (ஜின்னா, பாகிஸ்தான் பிரிவினையை கேட்டுக்கொண்டிருக்கும்போது) அன்றைய காங்கிரஸ் தலைவர் அபுல் கலாம் ஆசாத்(1946), இந்தியா சுதந்திரம் அடையுமானால் மாநிலங்களுக்கு சுயாட்சி முறையும் மத்தியில் கூட்டாட்சி முறையும் அமுல்படுத்துப்படும் என்று தெரிவித்தார்.இந்த அறிவிப்பைக் கண்ட ஜின்னா, இந்தியா மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்குமேயானால் நாங்கள் பாகிஸ்தான் பிரிவினையை கைவிடுகிறோம், இந்தியாவோடு இணைந்து இருக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டார்.47ல் காங்கிரஸ் தலைவராக வந்த நேரு அபுல் கலாமுடைய மாநில சுயாட்சி என்ற வாதத்தை திரும்பப்பெற்று மத்தியில் அதிகாரங்கள் குவியும் என்றதால் ஜின்னா மீண்டும் பிரிவினையை கையிலெடுத்தார்.

அன்று அண்ணா கோரிய, உண்மையான, மாநில சுயாட்சி தத்துவம் என்பது வேறு. இன்று நேற்றாக கலைஞர் கோரும் மாநில சுயாட்சி தத்துவம் என்பது வேறு.கருணாநிதி ஐந்தாவது முறை முதல்வராயிருந்தும் மத்தியில் இருந்து பணத்தை மட்டும் தமிழகத்துக்கு கேட்டு பெரும் நடவடிக்கைகளையே மாநில சுயாட்சியாக நினைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்துவருகிறார். மாநிலத்தில் சுயாட்சி என்ற வாதம் உண்மையாக இருந்திருக்குமேயானால் வி.பி. சிங் ஆட்சி காலத்திலேயே அதை வலியுறுத்தியிருக்க முடியும். உண்மையாக வேண்டும் என்று நினைத்திருந்தால் இவருடைய ஐம்பது வருட அரசியல் வாழ்வில் என்றோ துவக்கி இதை செய்து முடித்திருக்க முடியும்.ஆனால் அதை செய்யவில்லை, செய்யவும் துணிய மாட்டார். காரணமாக நான் கருதுவது மாநிலத்தில் ஆட்சி இழந்தால் மத்தியில் தாவிக்கொள்ள அங்கு ஒரு முழு அதிகாரமுள்ள ஒரு அமைப்பு தேவை. அது மாநில சுயாட்சியில் கிடைக்காது.

முரசொலி மாறன் மாநில சுயாட்சி குறித்து ஒரு புத்தகம் எழுதினார்.மாநில சுயாட்சி அமல்படுத்தப்பட்டால் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் எழுந்தது போன்ற பிரிவினைவாத கோஷங்கள் எழாது. பாகிஸ்தான் பிரிவினை கூட தடுக்கப் பட்டிருக்கலாம்.ஆனால் தேசியக் கட்சிகள் எனச் சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகள் வலுவாக உள்ளவரை நடைமுறைக்கு வர வாய்ப்பேயில்லை. இன்னும் சில தேர்தல்களில் மக்கள் மறுபடி ஒரு கட்சி ஆட்சியைக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது.இப்போது இருக்கும் மாநிலக் கட்சிகளை நம்பி சுயாட்சியை அமல்படுத்தினாலும் அது எந்த அளவிற்கு நன்றாக இருக்கும் என்று தெரியவில்லை. தெலுங்குதேசம், பிஜு ஜனதா தளம், ம.தி.மு.க போன்ற கட்சிகள் நிறைய உருவாக வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த மாநிலக் கட்சிகள் உருவானால் மாநில சுயாட்சி முறையை அமல்படுத்துவது நன்மை பயக்கும்.

நன்றி - http://jagannathchennai.blogspot.de/2009/06/blog-post.html

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...