Wednesday, February 29, 2012

நதியின் பிழையன்று...

இந்திய நதிகள் இணைப்பு குறித்து ஆலோசனை வழங்க, 2002-ம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் ஏற்படுத்திய குழு தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது. தென்னிந்திய நதிகள் இணைப்பு மற்றும் வடஇந்திய நதிகள் இணைப்பு என்று இரு வகையாகப் பிரித்துச் செயல்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கியது. எந்தெந்த நதிகளை எவ்வாறு, எந்தெந்த நதிகளுடன் இணைத்து, இந்தியா முழுவதிலும் நீர்வளத்தைப் பெருக்க முடியும் என்றும் விரிவான அறிக்கை தந்தது இக்குழு.

ஆனாலும் கடந்த பத்து ஆண்டுகளாக இதைப் பற்றி எதிர்க்கட்சிகள் மட்டுமே பேசுகின்றன. இதை அமலாக்குவதற்கான எந்த முயற்சியும் மத்திய அரசால் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில்தான், காலக்கெடு நிர்ணயித்து திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம். இதைச் செயல்படுத்துவதற்கான உயர்நிலைக் குழு ஒன்றையும் அறிவித்துள்ளது. இந்திய நதிகளை இணைப்பது என்பது இன்றைய அரசியல் சூழலில் சாத்தியமானதா என்பதும், அப்படியே சாத்தியப்பட்டாலும் அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதும் யோசனைக்குரியவை.

நதிகளை இணைக்க குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் கோடி செலவாகும் என்பதால்தான் இக்கனவு நனவாகக் காலதாமதம் ஆகின்றது என்கின்ற வாதம் மேம்போக்கானது. இத்திட்டத்துக்குப் பணம் தடையில்லை. மாநில அரசுகளும், மக்களின் அச்ச உணர்வில் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளும்தான் மிகப்பெரும் தடை. இது சாதாரண மக்களுக்கே தெரிந்திருக்குமென்றால், நீதிமன்றத்துக்கு ஓரளவு உண்மை புரிந்திருக்கவே செய்யும்.

இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்னைகள் முடிவுக்கு வராத, வரமுடியாத பிரச்னையாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் காவிரி மற்றும் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகம் நேர்கொள்ளும் உண்மை. இதே நிலை ஆந்திரத்தில் கிருஷ்ணா நிதிநீர்ப் பிரச்னையில் இருக்கிறது. கங்கை, யமுனை நதியிலும் இந்தச் சிக்கல்கள் இருக்கின்றன. நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையில், மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகள் பதவியில் இருக்கும் மாநிலங்களாக இருந்தாலும்கூடத் தீர்வு காண இயலவில்லை என்பதுதான் நிலைமை.

நதிநீர்ப் பிரச்னைகளைப் பொறுத்தவரையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தையும் மத்திய அரசையும் துச்சமாக மதிக்கின்ற போக்கும் தலையெடுக்கத் தொடங்கிவிட்டது. அதற்கு முக்கியமான காரணம் பலமான மத்திய அரசும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் செல்வாக்குள்ள மத்திய அரசின் தலைமையும், அரசியல் லாப நஷ்டங்களை மீறிய தேசியப் பார்வையும் இல்லாமல் இருப்பதுதான்.

நதிகளைத் தேசியமயமாக்கி, நதிநீர் முழுவதும் இந்திய நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் வந்தால் மட்டுமே நதிகள் இணைப்பு என்பது சாத்தியமாகும். ஆனால், நதிகள் மீதான தங்கள் உரிமையை மாநில அரசுகள் விட்டுக்கொடுக்குமா? இதில் எந்தவொரு மாநிலத்தையும் தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. நதிகள் உள்ள எல்லா மாநிலங்களும், "தனக்கு மிஞ்சினால் தானம்' என்ற நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளன.

அடிப்படையில், நதிகளை இணைக்கும் திட்டம் என்பது வெள்ள கால மிகை நீர் வீணாகக் கடலில் சென்று கலக்காதபடிக்கு, பல இடங்களுக்கும் வாய்க்கால் மூலம் பிரித்து எடுத்துச் செல்லுதல் என்பதுதான். வாய்க்கால் அமைப்பதைவிட, மற்ற சிறு நதிகளுக்கு மடைமாற்றி விடுவதுதான் நதிகள் இணைப்புத் திட்டம்.

இது உண்மையில் நதிகளின் மிகைநீர்ப் பயன்பாட்டுத் திட்டம். இத்திட்டம் அமலுக்கு வந்தால் ஏதோ இணைக்கப்பட்ட நதிகளுக்கு இடையே 365 நாளும் வாய்க்காலில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதுபோன்ற ஒரு தோற்றமயக்கம் பலரிடமும் உள்ளது. அதுவல்ல நிஜம். முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு, மிகையாக ஓடிக்கொண்டிருக்கும்போது அதைத் திசை திருப்பி, வேறு இடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேமித்துப் பயன்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

மிகையாக ஓடிவரும் நீர்தான் மற்ற நதிகளுக்குத் திருப்பப்படும் என்று புரிய வைத்தாலும், நதிகளில் வழக்கமாக வரும் நீரின் அளவே குறைந்துகொண்டு வருகிறது என்பதால்தான் மாநில அரசுகள் இத்திட்டத்தில் சுணக்கம் காட்டுகின்றன. ஒரே மாநிலத்தில் உள்ள இரு நதிகளை இணைப்பதும்கூட, எடுத்துக்காட்டாக காவிரி - தாமிரபரணி இணைப்பு, சாத்தியமாகவில்லை.

கிளை நதிகளின் நீரை, பல்வேறு பாசனத் திட்டங்களுக்காக சிற்றணைகள் மூலம் தடுத்து எடுத்துக்கொண்டுவிடுவது காலப்போக்கில் அதிகரித்துள்ளதே தவிர, குறையவில்லை. முக்கிய நதிகளுக்குத் தண்ணீர் வரத்து குறைந்துபோனதற்கு இது ஒரு முக்கிய காரணம். காவிரியின் கிளை நதிகளிலிருந்து பல திட்டங்களுக்காகத் தண்ணீரை எடுத்துக்கொண்ட பிறகு, எப்படி காவிரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடும்? காவிரி- தாமிரபரணி இணைப்பை இரு ஆயக்கட்டுதாரர்களும் ஒப்புக்கொள்வார்களா?

இந்த நிலையில், நதிநீரை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் விதமாகவும், குடிநீர் மற்றும் பாசன நீர் பயன்பாட்டைக் கட்டணமாக்கும் விதமாகவும் நடுவண் அரசு நீர்க்கொள்கை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

நதிகளை இணைத்து நீர்வளத்தை அனைத்து மக்களுக்கும் உரித்தாக்க வேண்டும் என்கின்ற கனவை ஒருபக்கம் காட்டுகிறார்கள். இன்னொரு பக்கம், நதிநீரை விலைபேசும் நீர்க்கொள்கை காலத்தின் கட்டாயம் என்ற கருத்தைப் பரப்புகிறார்கள். நதிகளோ நாளுக்குநாள் மெலிந்துபோய் வெறும் கழிவுநீர்க் கால்வாய்களாக மாறி வருகின்றன. நதிகளைத் தேசியமயமாக்காமல் ஒன்றும் செய்ய முடியாது. இந்நிலையில், இந்திய நதிகள் இணைப்பு எந்த அளவுக்குச் சாத்தியம்?

நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில், நமது பிரச்னைகள் எல்லாமே மாநிலப் பிரச்னைகள். ஆனால், அதன் தீர்வோ தேசியத் தீர்வாக இருக்கிறது. இதை மாநிலங்களும் அரசியல் கட்சிகளும் புரிந்துகொள்ளாதவரையில் நதிநீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படப் போவதில்லை!

நன்றி -
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=559305&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

Tuesday, February 28, 2012

தலையங்கம்:நடிப்பு விதேசிகள்!

ஒர் அரசியல்வாதி என்ன தொழில் செய்தார் அல்லது செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரிந்தால்தான், அவருடைய சொத்து மதிப்பு, சென்ற தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் பல கோடியாக உயர்ந்திருப்பதற்கான காரணத்தை ஒரு குடிமகன் புரிந்துகொள்ள முடியும். எந்தத் தொழிலும் செய்யாமல், பதவிக்காக அரசு வழங்கும் சம்பளத்தில் மட்டுமே வாழ்க்கை நடத்திக்கொண்டு, அதேசமயம் சொகுசு கார், பங்களா, மகன் பெயரில் பல கோடி ரூபாய் ஷேர் என்பதெல்லாம் சாத்தியமில்லை.

அவ்வாறு தொழில் செய்ததாகக் கூறினாலும், அந்தத் தொழில் நிறுவனத்தின் பெயர் என்ன? அது எங்கெல்லாம் செயல்பட்டது? அதன் உற்பத்தி அல்லது விற்பனைப் பொருள் என்ன? என்பது தெரிந்தால்தான், அந்த நிறுவனம் உண்மையிலேயே செயல்பட்டதா அல்லது ஊழல் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் "லெட்டர்பேட்' நிறுவனமா என்பதை ஒரு குடிமகன் அறியமுடியும்.
இதை, எனது சொந்த விஷயம், மூன்றாவது நபர் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஒரு கட்சியின் தலைவர் சொல்கிறார் என்றால், அவரைப் பற்றி நாம் என்னவென்று சொல்வது? அப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாரும் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திதான்.

சென்னையைச் சேர்ந்த வி. கோபாலகிருஷ்ணன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சோனியா காந்தி கடந்த 10 நிதியாண்டுகளில் வருமானவரித் தாக்கல் செய்த ஆவணங்களைக் கோரினார். முதலில் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்முறையீடு செய்தபோது, வருமான வரித் துறையின் தலைமை பொதுத் தகவல் அலுவலர் இதில் சோனியாவின் கருத்தைக் கேட்டு, ஆர்டிஐ சட்டம் பிரிவு 2-ன் கீழ் சோனியா காந்திக்கு இது தொடர்பாக ஜனவரி 23-ம் தேதி கடிதம் எழுதினார்.

வருமான வரித் தாக்கல் விவரங்களை வெளியிடுவதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் அளித்துள்ள பதில் இது:

""....பொதுவாழ்வில் வெளிப்படைத் தன்மை என்ற போர்வையில் (கேட்கப்படும்) இத்தகைய கேள்விகளுக்கு மூன்றாம் நபருக்குப் பதில் சொல்வதன் மூலம், தனிநபர் அந்தரங்கத்தில் மற்றவர்கள் தேவையின்றி நுழைவதாக ஆகிவிடும். வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட வருமானவரித் தாக்கல் தனிப்பட்டது, ரகசியமானது. வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 138-ன் படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாதது...''

அந்தரங்கம் புனிதமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வருமானத்தில் அந்தரங்கம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தனிநபருக்கே, மேற்சொன்ன சட்டத்தின்படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாதது என்று ஒவ்வொரு நபரும் சொல்வாரேயானால், என்ன ஆகும்? அரசு அலுவலர் தொடங்கி, அமைச்சர்கள் வரை அனைவரும், வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்கு வரி செலுத்தத் தவறியவர்களாக மட்டுமே கருதப்படுவார்கள். அவர்கள் முறைகேடாக, லஞ்சத்தால் பதவியின் ஆதாயத்தால் பொருள் சம்பாதித்த குற்றவாளிகளாகக் கருத இடமில்லாமல் போய்விடும்.
பொது வாழ்க்கைக்கு வரும்போது, குறிப்பாக தேர்தலில் போட்டியிடும்போது, ஒரு வேட்பாளர் தனக்குள்ள சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு உருவாக்கப்பட்டதன் காரணமே, பொதுவாழ்க்கையில் வருபவரின் பொருளாதார வசதி என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்ளத்தான்.

சோனியா காந்தி தனிநபர் அல்ல. அவர் ஒரு தேசியக் கட்சியின் தலைவி. ஆண்டுதோறும் வருமான வரித் தாக்கல் செய்கின்றார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அப்படிப்பட்டவரின் வருமான வரித் தாக்கல் விவரம் தெரிந்தால்தானே, அவர் வளர்ச்சி அவரது வருமானத்துக்குப் பொருந்துவதாக உள்ளதா, அவர் கூடுதல் வருமானத்துக்கு ஆதாரமாகக் காட்டும் நிறுவனங்கள், பங்குகள் எப்படிக் கிடைத்தன, பழையதா, புதிதா என்பதையெல்லாம் கணிக்க முடியும்.
நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு எம்பி, எம்எல்ஏ-வும் தனது வருமானவரி, தன் குடும்ப ரத்த உறவுகளின் வருமான வரித் தாக்கல் விவரங்களை அவர்களாகவே ஆண்டுதோறும் வெளியிடும் நடைமுறையை அரசியல் சட்டப்படி கட்டாயமாக்குவதுதான் வெளிப்படைத் தன்மைக்கு வழிவகுக்கும்.

தனிநபர் சுதந்திரம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, பலரும் தவறுகள் செய்து வருவதால்தான் மக்களுக்குப் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்களாட்சித் தத்துவம் செயல்பட வேண்டுமானால் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் இருந்தாக வேண்டும். அதேநேரத்தில் அரசியலில் ஈடுபட்டுப் பொது வாழ்க்கையை வரித்துக் கொள்பவர்கள் நேர்மையாளர்களாக இல்லாமல் போனால் அதன் விளைவு மக்களாட்சியையே தடம்புரளச் செய்துவிடும்.

வருமான வரித் துறையில் தாக்கல் செய்யப்படும் கணக்குகள் வெளிப்படைத் தன்மையுடையதாக இருப்பதில் என்ன பிரச்னை? நியாயமாக நேர்மையாகச் சம்பாதித்த வருவாய்க்கு உரிய வரியைச் செலுத்துவதுதானே வருமான வரி. இந்தக் கணக்குகளை யார் வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம் என்கிற நிலைமை ஏற்படும்போதுதான், ஊழல்வாதிகள்,கள்ள மார்க்கெட்டில் தவறாகப் பணம் சம்பாதிப்பவர்கள், தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் போன்றவர்களின் செயல்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ளவும், சந்தேகம் ஏற்படும்போது விசாரணைக்கு வலியுறுத்தவும் முடியும்.
செல்போன் யுகத்தில் தனிமனித உரிமைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கும்போது, பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒருவர் பொது வருமானம் பற்றிக் கேட்பதை தனிமனித உரிமை மீறல் என்று சொன்னால் எப்படி ஏற்பது? தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்கள். முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் மூடி மறைக்க ஆசைப்படுகிறார்கள். இவர்களெல்லாம் ஊழலை ஒழிக்கப் போவதாக உத்தரப் பிரதேசத்தில்போய் வாய்ப்பந்தல் போடுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

நன்றி -
http://www.thamizham.net/tv/newstv.htm

Sunday, February 26, 2012

தீர்ப்புதான் பலன்!

யோகா குரு ராம்தேவ் புதுதில்லி, ராம்லீலா மைதானத்தில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கான அனுமதியை ரத்துசெய்து, நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த ஆதரவாளர்களைத் தாக்கிய தில்லி போலீஸின் செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், போராட்டம் நடத்திய பாபா ராம்தேவையும் பொறுப்பாக்கியுள்ளது. 2011, ஜூன் 4-ம் தேதி நள்ளிரவு, போராட்டப் பந்தலுக்குள் நுழைந்த போலீஸôர் எவ்விதமாக நடந்துகொண்டார்கள் என்பது உலகமே அறியும். உறங்கிக்கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை வீசினர். பலரைக் கைது செய்தனர். பலரை காயப்படுத்தினர். இதில் காயமடைந்தவர் இறக்கவும் நேரிட்டது.

போராட்டம் நடத்தியவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். இவர்களில் பலர், சமூகத்தில் உயர்வான இடத்தையும் பதவிகளையும் வசதிகளையும் பெற்றவர்கள். ஆனால் அத்தகையவர்களிடமும் கடுமையான தாக்குதலை நடத்தியது தில்லி போலீஸ். வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை உடனடியாக இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ராம்தேவ் அறிவித்த நாள் முதலாகவே, அவரைச் சமாதானம் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது.

அமைச்சர்கள் கபில் சிபல், பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் என்று பலரும் அவரை சமரசம் செய்ய முயன்றனர். அதற்கு ராம்தேவ் உடன்படவில்லை. அந்தத் தோல்வியினால் மத்திய அரசுக்கு ஏற்பட்டகோபம்தான், போலீஸின் அத்துமீறலாக மாறியது. உண்மையான குற்றவாளி மத்திய அரசும் அமைச்சர்களும்தான். இருப்பினும், முனை மழுங்குவதும் முறிபடுவதும் எப்போதும் அம்புகள்தாமே!தில்லி போலீஸார் மீது நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளதற்கு முக்கிய காரணம், அன்றைய இரவு தடியடி நடத்திய போலீஸôர் மீது சிலர் செங்கற்களை வீச, போலீஸாரும் பதிலடியாக செங்கற்களை எடுத்து வீசியது சிசிடிவி-யில் பதிவாகியிருப்பதுதான். சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களே அதனை மீறுவதா? ஒரு போராட்டத்துக்கான அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டால், கூடியவர்கள் கலைந்து செல்வதற்கு உரிய காலஅவகாசம் தரவேண்டாமா? அனுமதியை ரத்து செய்ததில் காவல்துறை தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டு, அடிப்படை உரிமைக்கு எதிராகச் செயல்பட்டுள்ளது என்பதும் நீதிமன்றத்தின் கடுமைக்குக் காரணம்.

இந்தச் சம்பவத்துக்கு, போலீஸôரை மட்டுமன்றி, யோகா குரு தலையிலும் ஒரு குட்டு வைத்துள்ள நீதிபதிகள், இழப்பீட்டில் 25 விழுக்காடு தொகையை ராம்தேவ் ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று தெரிந்தவுடன், ராம்தேவ் தனது ஆதரவாளர்களைக் கலைந்துசெல்லும்படி கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்யாததுதான் ராம்தேவ் செய்த தவறு என்கின்றது நீதிமன்றம்.

தீர்ப்பின் இந்தப் பகுதிக்கு, எதிர்க்கட்சிகளிடையே ஆட்சேபம் இருக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய யோகா குரு ராம்தேவ் ஏன் இழப்பீட்டில் 25 விழுக்காட்டை ஏற்க வேண்டும் என்ற கேள்வி நியாயமானதாகவே தோன்றும். போராட்டம் அறவழியில் நடைபெற்றது என்றாலும்கூட, அதைத் தலைமையேற்று நடத்திய யோகா குருதேவ், அறவழியில் நிற்கவில்லை. அறவழியில் அவருக்கு நம்பிக்கை இருந்திருந்தால், தன்னைக் கைது செய்ய போலீஸôர் வந்தபோது, சல்வார் கம்மீஸ் அணிந்து தப்பிச் சென்றிருக்கமாட்டார். மாறாக, மேடையிலேயே முதல்நபராகக் கைதாகியிருப்பார். கைதாக விருப்பம் இருப்போர் தவிர, மற்றவர்கள் அமைதியாக வீடு திரும்புங்கள் என்று அறிவுறுத்தியிருப்பார். அதுதான் காந்தியின் வழி. அங்கே ஆதரவாளர்களின் அதிருப்தியும், கோபமும் இருந்திருக்கும். ஆனால், வன்முறை நிகழ்ந்திருக்காது. ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார் ராம்தேவ். ஓர் அறவழிப் போராட்டத் தலைவர் நடந்துகொள்ள வேண்டிய விதத்தில் அவர், அந்த இடத்தில் அன்றைய தினத்தில், நடந்துகொள்ளவில்லை. ஆகவே, அவரையும் நீதிமன்றம் பொறுப்பாக்குவதில் நியாயம் இருக்கிறது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோருக்கு எதிராக இந்தத் தீர்ப்பு அமைந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இந்தத் தீர்ப்பை எதிர்மறையாகப் பார்க்க வேண்டியதில்லை. போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கும் ஒரு தலைவர், தன் சொல்லுக்கு கூட்டம் கட்டுப்படும் என்று தெரிந்திருந்தும், கூட்டத்தின் கொந்தளிப்பைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதும், தான் மட்டும் கைதாகாமல் பாதுகாப்பாக வெளியேறுவதும் வன்முறைக்கு வித்திடும் குற்றச்செயல் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது.கட்சிகள் நடத்தும் கடையடைப்பு, வேலைநிறுத்தம், பேரணியின்போது ஏற்படும் வன்முறையால் சேதமடையும் பொதுச்சொத்துக்கு, அழைப்புவிடுத்த கட்சி/ அமைப்புதான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஏற்கெனவே தமிழகத்தில் ஒரு சட்டம் (கிடப்பில்?) இருக்கிறது.

இச்சட்டம் எவ்வாறு கட்சிகளைப் பொறுப்பேற்கச் செய்கின்றதோ, அதேபோன்று உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, போராட்டம் நடத்தும் தலைவர்களின் பொறுப்பை வரையறுக்கிறது.காவல்துறையைக் கண்டித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பதவி உயர்வோ, விருதுகளோ பாதிக்கப்படப் போவதில்லை. இழப்பீட்டுத் தொகையை மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் அரசு கொடுக்குமே தவிர, அவர்களுக்கு என்ன நஷ்டம்?

வெளிநாட்டிலுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவரக் கோரித்தான் உண்ணாவிரதம் நடத்த முற்பட்டார் யோகா குரு ராம்தேவ். அவர் எழுப்பிய கோரிக்கைக்கு இன்றுவரை பதில் கிடைத்தபாடில்லை. நல்லதொரு நோக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்ததில் அவர் கண்ட பலன் உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான்.

நன்றி-
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=558420&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

Thursday, February 23, 2012

நவீன ராமன்

இரவு மணி ஏழு ,21 பிப்ரவரி 2012 அன்று கார் விழுப்புரம் தாண்டி தேசிய நெடுஞ்சாலையில் 120 கி மீ வேகத்தில் கடந்து கொண்டிருந்த போது அரசூர் நாலு முட்டு ரோடு அருகாமையில் காரின் என்ஜின் தடதடவென சத்தம் .,

முகப்பை (BONNET) தூக்கி பார்த்தால் என்ஜின் VALVE ஒன்றில் லேசாக புகை வந்து கொண்டு இருந்தது . ஒரு முக்கிய அலுவல் காரணமாக மதுரை மறு நாள் காலை இருந்து ஆக வேண்டிய கட்டாயம் எனக்கு .

ஒரு டயர் பழுது சரி செய்யும் சிறிய கடை முன் நிறுத்தி , எனது ஓட்டுனரை அழைத்து , மெக்கானிக் யாராவது இருந்தால் கூப்பிடுங்கள் என்று சொல்லி கொண்டு இருக்கும் போது என்ன விஷயம் என்று ஒரு பெரியவர் கேட்க .அவரிடம் உரையாடிய ரெண்டு மணி நேர நேரத்தின் தொகுப்பு உங்களுக்காக :

விவசாயம் எப்படி போகுது ஐயா ?
பெரியவர் : 20 ஏக்கர் கரும்பு போட்டுருக்கேன் ., டன்னுக்கு 2700 வருது .. 10 ஏக்கர் உளுந்து போட்டுருக்கேன்...

முதலுக்கு வருமானம் வருதா ஐயா ?
பெரியவர் : கரண்ட் ரொம்ப கஷ்டங்க ..பத்து மணி நேரம் தான் வருது ...எதோ பிழைப்பு ஓடுது .,முத்த பையன் எஞ்சினியர் படிச்சி விவசாயம் பாக்க மாட்டேன் சொல்லிட்டு சென்னைக்கு போய்ட்டான் ., ரெண்டாவது மகன் ஒத்தாசை செய்றான் ..முன்ன மாதிரி விவசாயம் பாக்க முடியல ,ஆன எங்கப்பா விவசாயம் மட்டும் செய்யாம விட்டுறாதன்னு சொல்லிட்டு போயிட்டார். வருஷம் 40 ஓடி போச்சு , எனக்கு கொடுத்த நிலத்த வச்சு நானும் காலத்தை ஒட்டிட்டேன். .,என்ன கஷ்டம் வந்தாலும் , நான் சாகுற வரையில் விவசாயம் நிலம் விற்க மாட்டேன் ., 120 ஏக்கரில் விவசாயம் பார்த்த குடும்பம் இப்போ 30 ஏக்கரா சுருங்கி போச்சு , இந்த வருஷம் கடன் நிலுவை வேறு 165000 /- ரூ ஆகி விட்டது .

கரண்ட் இல்லாத அம்மாவசை இருட்டில் .,அந்த நெடுஞ்சாலையில் அவ்வப்போது விரைந்து செல்லும் வாகனங்கள் ஒளியில் அவர் முகம் பார்த்த போது கவலை ரேகைகள் ., ஏராளமான சுருக்கங்கள் ., அவர் பேச பேச விவசாயத்தின் வலிகள் புரிய ஆரம்பித்தது . மனதும் கனத்தது .

இதற்குள் அந்த கிராம மெகானிக் இலகுவாக VALVEவை கழற்றி ., நூல் சுற்றி மிக நுண்ணிய துளை வழியே அதை நாசுக்காக பொருத்தி என்ஜின் புகையும் ., சத்தத்தையும் அடியோடு நிறுத்தி இருந்தார் .அந்த அம்மாவாசை இருட்டில் முன்று அலைபேசி ஒளி உதவியோடு முடித்து இருந்தார். அவர் பெயர் கேட்டேன் பாஷா என்றார் ., எவ்வளவு உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற போது அவர் சொன்ன விலை எனக்கு உண்மையிலே தூக்கி வாரி போட்டது .சென்னையில் இந்த வேலை செய்து இருந்தால் என்ன கேட்பார்களோ அதில் பத்தில் ஒரு பங்கையே அவர் கேட்டார் .

நன்றி சொல்லி விட்டு அந்த இருட்டில் விடை பெற்ற போது அந்த முதியவர் சொன்னார். தம்பி பாத்து பத்திரமா போய் வாங்க ., காலம் கெட்டு கெடக்கு., எங்கப்பன் சுடலையன் உங்களுக்கு துணை இருப்பான்.

தமிழக கிராமத்து மக்கள் எளிமை தானே ஒரு மனிதரை மேலாடை தவிர்க்க வைத்து மகத்மாவாய் , உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது! எனது தேசத்து இருதயம் கிராமத்தில் இருக்கிறது என்று அவர் சொன்ன வாக்கியம் மனதில் வந்து போனது.

இந்த அம்மாவசை ரெண்டு மணி நேரம் இருட்டு எனக்கு பல புத்தகம் சொல்லி தராத அனுபவங்கள் தந்தது . கார் இப்போது இருட்டை கிழித்து வேகமாக கிளம்பியது ., நான் தலை திருப்பி பார்கிறேன்.

அந்த சிறிய கடையும் , "மடப்பட்டு" கிராமமும் .,மனிதர்களும் இருளில் மறைய ஆரம்பித்தர்கள் . ஆனால் எப்பாடு பட்டாலும் தந்தை சொல்லை காக்கும் இந்த 67 வயது நவீன "ராமனும்" , ஆபத்து நேரத்திலும் காசு சம்பாதிக்க மனது வைக்காத இந்த 27 வயது பாஷாவும் மிக உயர்வாய் ., முப்பொழுதும் மனதில் நிஜங்களாக .....

நன்றி - ச. வெ. ரா முகநூலில்

Wednesday, February 22, 2012

வினை விதைக்கிறோம்

இந்தியா முழுவதிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியின் தரம், பள்ளிகளின் நிலை, வசதி, மாணவர் சேர்க்கை போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன. இத்தகைய "கல்விக் கணக்கெடுப்பு ஆண்டறிக்கை - 2011' அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் தமிழ்நாடு மகிழ்ச்சி கொள்ள இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவதாக, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வது 100 விழுக்காடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர், ஆசிரியர் பள்ளி வருகையும் 90 விழுக்காடுக்கு அதிகமாக உள்ளது. இது ஓர் ஆரோக்கியமான சூழல். அதேவேளையில், அரசும் பெற்றோரும் கவலைகொள்ளக்கூடிய இரண்டு விஷயங்களும் உள்ளன.

முதலாவதாக, 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 32 விழுக்காடு மாணவர்களுக்குத்தான் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்துள்ளது. இது 8-ம் வகுப்பில் சற்றே உயர்ந்து 66 விழுக்காடு மாணவர்கள் எளிய தமிழைப் படிக்க இயலுவோராக இருக்கின்றனர். இரண்டாவதாக, 5-ம் வகுப்பில் 45 விழுக்காடு மாணவர்களால் கழித்தல் கணக்கு மட்டுமே செய்ய முடியும். 14 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே கழித்தல், வகுத்தல் இரண்டையும் செய்ய இயலுகிறது. எட்டாம் வகுப்பில் இந்த நிலை மாறுகிறது. கழித்தல் மட்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 38 விழுக்காடாகவும், கழித்தல், வகுத்தல் இரண்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 45 விழுக்காடாகவும் உயருகிறது.

இந்த ஆய்வு ஏதோ அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் கருதிவிட வேண்டியதில்லை. தனியார் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் இந்த ஆய்வு. தனியார் பள்ளிகளில் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தால், சிறப்பாகக் கல்வி பயில வாய்ப்பு ஏற்படும் என்கிற எண்ணத்தில்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், அங்கும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் 2-ம் வகுப்பு தமிழ்ப்பாட நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னபோது, அரசுப் பள்ளி மாணவர்களில் 68 விழுக்காடு மாணவர்கள் திணறினார்கள் என்றால், தனியார் பள்ளிகளில் கொஞ்சம் குறைவு- அதாவது 66 விழுக்காடு! 8-ம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களில் 15 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றனர் என்றால், தனியார் பள்ளி மாணவர்கள் 25 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றார்கள்.

தனியார் பள்ளியில் படித்தாலும் நான்கில் ஒருவர் ட்யூஷன் படித்துதான் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்றால், தனியார் பள்ளிகளுக்கு கொட்டி அழுது கண்ட பலன் என்ன என்பது பெற்றோர் சிந்திக்க வேண்டிய விஷயம். இந்த ஆய்வில் கிடைக்கும் இன்னொரு தகவல், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் 92 விழுக்காட்டினரின் வீட்டு மொழி, தமிழ் மொழியாக இருக்கின்றது. அப்படி இருந்தும், இவர்களால் தமிழைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், கற்பித்தல் முறையில்தான் தவறு இருக்கிறது என்பது உறுதியாகின்றது.

ஆங்கில மொழியில் கிராமப்புறப் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதாலும், தனியார் பள்ளிகளில்தான் ஆங்கில அறிவு சிறப்பாகக் கிடைக்கும் என்பதாலும்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், தாய்மொழியான தமிழையே இந்தத் தனியார் பள்ளி மாணவர்களால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை என்றால், இவர்களால் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவும், படிக்கவும் எழுதவும் எவ்வாறு முடியும்? ஒரு மாணவன் பள்ளிக்கூட வாசலை மிதிக்காமலேயே கற்றுக்கொள்ளக்கூடிய, மிக இயல்பான கற்றல் சூழல் இப்போது இருக்கின்றது. இன்றைய தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடே கிடையாது என்ற நிலைமை உள்ளது.

தொலைக்காட்சியில் இடம்பெறும் பெயர்கள், டிவி விளம்பரங்களைக் குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்க முடியும். ஊர் முழுவதும் சுவரொட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. கடைகளின் விளம்பரங்கள் இரவு நேரத்தில்கூட தமிழிலும் ஆங்கிலத்திலும் மின்னுகின்றன. இதில் நகரம், கிராமம் என்ற எல்லைக்கோடுகள் மறைந்து வருகின்றன. பிறகும் ஏன் மாணவர்களால் எளிய தமிழைப் படிக்கவும், சிறிய கணக்குகளைப் பிழையின்றி கணிக்கவும் முடியவில்லை?

இந்த ஆய்வு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 26,000 மாணவர்களிடம் நடத்தப்பட்டது என்றாலும், "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிற அளவில் இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, மதிப்பீடு என்கின்ற வகையில் தமிழக அரசு மிகத் தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும். பள்ளி வாராக் குழந்தைகள் இல்லை என்ற நிலையை எட்டி விட்டோம். ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவதும்கூட நன்றாக இருக்கின்றது. ஆனால், கற்றல் மட்டும் இல்லை. கல்வி தரமானதாக இல்லை என்றால், அதற்கு ஒரே காரணம் கல்வித்துறையின் கற்பித்தல் முறைதான் என்பது வெளிப்படை.

நமது கல்வி முறையில் இருக்கும் அடிப்படைக் குறைபாடு, ஆசிரியர்கள் மத்தியில் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமை. அரை நூற்றாண்டுக்கு முன்னால் அரை வயிற்றுக் கஞ்சியுடன் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வு இன்று அரசு ஊழியர்களாக ஊதியம் பெறும் ஆசிரியர்களிடம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஆசிரியர் பணியை சேவையாகக் கருதாமல் ஒரு தொழிலாகக் கருதுவதுதான். மேலும், சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த உன்னதமான இடமும் மரியாதையும் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.

கல்வித் துறையில் அரசியல் தலையீடு, பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கல்வி என்கிற பெற்றோரின் தவறான அணுகுமுறை, ஆசிரியர்களின் தரம், ஆசிரியர்கள்மீது சமுதாயத்தில், குறிப்பாக, பெற்றோரிடத்தில் காணப்படும் மரியாதையின்மை போன்றவைதான் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காரணங்கள் தெரிகிறது. அந்தத் தவறுகளைத் திருத்திக் கல்வி முறையை மேம்படுத்தும் எண்ணம் இல்லை என்றால் அது யார் தவறு? நாளைய தலைமுறையைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருப்பது நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருப்பது என்பதை மறந்துவிட வேண்டாம்!

நன்றி - தினமணி

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=556943&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

Saturday, February 18, 2012

என்னப்பா Facebook என்னதான் உங்க பிரச்சனை ?



தராதரம் தெரியாம Facebookல ஆளு ஆளுக்கு பல்லு மேல நாக்கு போட்டு பேசுறாங்க . நீங்க எவ்வளவு "தங்கம்" என்று எனக்கு மட்டும் தான் தெரியும் . கொபசெ ,எம்பி கட்சி பதவி தந்து அழகு பார்த்தவருக்கு அவர் நோய்வாய் இருக்கும் காலத்திலே MGRராய் தூக்கி சொல்லி நீங்க முதல்வராக வேண்டி ராஜீவ் காந்தியுடன் நட்பு கொண்டு கடிதம் எழுதிய உங்க அரசியல்சாணக்கியம் எங்கே ? இந்த Facebook கத்து குட்டிகள் எங்கே? ! நீங்க சசிகலாவின் கணவர் நடராஜனை சென்னையில் தூக்குங்க ., எல்லா நாளும் யாராவது கைது என்று தான் நியூஸ் பத்திகிட்டு எறியணும் .. அமைதியா ரெஸ்ட் எடுங்க நான் இவங்களை ஒரு வழி பண்ணிட்டு வரேன் !

என்னப்பா Facebook என்னதான் உங்க பிரச்சனை ?

Facebook: சென்ற ஆட்சியில் கடைசி வருட நான்குமணிநேர மின்வெட்டுக்கு எதிராக பொங்கியெழுந்த மக்கள், இப்போது அங்கங்கே 12 மணி நேரம் மின்சாரம் இல்லை. முன்னாடிமாதிரியே கட்பண்ணிகிட்டா கூட பரவால்ல என கண்ணீர் வடிக்கின்றனர் !


சோ : வருஷம் 38 நட்பு பிரிச்சு போச்சே !! சசி வேற அங்க அழுவுது ..கரண்ட் என்ன ஷாக் என்ன ஞான தங்கமே அப்படின்னு கம்முனு உக்காது இருட்டினில் மேடம் தியானம் செய்யறாங்க .!! ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் !

Facebook : பி.பி.என், ஜி.எம்.ஆர் வாசவி ,சாமல்பட்டி ,மதுரை பவர் ஆகிய நான்கு மின்சார ஆலை நிறுவனங்கள் 737.6 மெகாவாட் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் . நீதிமன்றத்தில் நிலுவை தொகை நாள் ஒன்றுக்கு ஒரு கோடி செலுத்தி விடுகிறேன் என்று பிச்சை கேட்கும் நிலையில் தமிழக அரசு இன்று உள்ளது . நீங்கள் கூடங்குளம் ஆரம்பித்தால் கூட தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305 மெகாவாட் மின்சரம் தானே ?. இதற்கு பதிலாக ., நான்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் நிலுவை தொகையை கட்டி விட்டால் 737.6 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் அல்லவா!

சோ : என்ன இப்படி சொல்லிடிங்க இந்த ஒன்பது மாதத்தில் நாங்க செஞ்ச சாதனையால் தான் 2010-2011யில் 1400 MW,2011-2012யில் 3316 MW மின்சாரம் , 2012-2013யில் 1222 MW மின்சாரம், 2013-2014யில் 1860 MW மின்சாரம் வர போகிறது தெரியுமா .?!
(இக்கும் தொண்டையை செருமி கொண்டு சிரிக்கிறார் )

Facebook : நீங்க மேல சொன்ன மொத்த மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் (2006~2011) தி முக ஆட்சியில் தொடங்கப்பட்டன . உங்கள் ஜெயா அரசு ஆட்சில்( 2001~2006) அன்றும் இந்த ஒன்பது மாதம் என்ன மின்சார திட்டம் தொடங்கப்பட்டது ?!


சோ :இக்கும் தொண்டையை செருமி கொண்டு யோசிக்கிறார் (ப்பிகலி பயலுக எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு வசமா மாட்டி விடுறாங்க )

Facebook : சரி Mr. சோ, இதுக்கு மட்டுமாவது பதில் சொல்லுங்க . 1.85 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிக்கு வருடத்துக்கு ஆகும் செலவே 900 கோடி மட்டுமே. ஆனால் இலவச அரிசி , மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினி ஃபேன் தர தேவை சுமார் 19200 கோடி ரூபாய்.
ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்றிய வரி முலம் வருமானம் 6000 கோடி ., பால் விலை , சாராய விற்பனை ., ஸ்போட் பைன் முலம் வருமானம் மேலும் 20000 கோடிக்கு மேல வரும் . நீங்கள் இலவசத்தை கொடுத்த மாதிரியும் தெரியில ., அதிக வருமான எங்க போச்சு ??


சோ : என்ன பேச்சு பேசுறிங்க நீங்க ..நம்ம ஓ பி எஸ் பன்னிர் செல்வம் கார் டயர் எல்லாம் விழுந்து கும்பிட்டு பார்த்து விட்டார் தெரியுமா ? அவராலே ஒன்னும் முடியலே ., கருணாநிதி கஜான காலி செய்த விட்டார்
( சிரித்து கொள்கிறார் ., இந்த கருணாநிதி பற்றி என்ன சொன்னாலும் படிக்காத மக்கள் என்ன ? Facebook மக்களும் நம்பி விடுவார்கள் )

Facebook : இந்த முல்லை ., அணு உலை ., மீனவர் கடல் சாவு ., ஈழம் ., விலைவாசி ., அரசு கேபிள் டெண்டர் ஊழல் ., தினம்தோறும் கொலை ., கொள்ளை ., ஆற்று மணல் ஊழல்...அடிக்கடி IAS IPS அதிகாரி ., மந்திரிகள் இடமாற்றம் ..,

சோ : ஹேய் ஸ்டாப் !! பாராளுமன்ற 40 தொகுதில் வெற்றிபெற வைத்து மேடத்தை பிரதமர் ஆக்கி விட்டால் என் பையன் தான் தமிழக முதமைச்சர் எல்லா பிரச்சனையும் பஞ்சாய் பறந்து விடும் . புரிஞ்சுதா!!(இக்கும் தொண்டையை செருமி கொண்டு சிரிக்கிறார் )

நன்றி - ச.வெ.ரா என்கிற வெங்கட் - முகநூலில்

Sunday, February 12, 2012

நம்பிக்கை அடிப்படையிலான கொள்கை பிரச்சாரங்கள் எவ்வாறு தவறானவையோ அதேபோல உண்மைக்கு புறம்பான பகுத்தறிவு பிரச்சாரங்களும் தவறானவையே.

மின் வெட்டு ஏன்..? தீர்வு தான் என்ன..?

கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நம் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையில் உள்ள இடைவெளியை விளக்குவீர்களா? துறைரீதியாக இதனைப் பட்டியலிட முடியுமா?

தொடர்ச்சியாகவே இடைவெளி சுமார் 2500 மெகா வாட்டாக இருந்து கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் மின் தேவை குறைவு. ஆனால் இப்பொழுது இரவில் கூட தேவையை நிவர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள்ளது. இரவு நேரங்களில் உள்ள இந்தப் பற்றாக்குறை பெரும்பாலும் விவசாயத்துறையைப் பாதிப்பதாக உள்ளது. தொழில்துறைக்கு பொதுவாக 30% பற்றாக்குறை உள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து அறிவிப்பில்லாத மின்வெட்டு தனியார் மின் நிலையங்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் திறன் இருந்தும் குறிப்பாக நான்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

யார் அந்த நான்கு நிறுவனங்கள்? எதற்கு இந்த உற்பத்தி நிறுத்தம்?
* பிள்ளைப் பெருமாநல்லூர் (பி.பி.என் 330 மெகாவாட்)
* ஜி.எம்.ஆர் வாசவி (196 மெகாவாட்)
* மதுரை பவர் (106 மெகாவாட்)
* சாமல்பட்டி (105.6 மெகாவாட்)
மொத்தம் 737.6 மெகாவாட்.

மின்வாரியத்தில் இருந்து தங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகைக்காகவே இந்த உற்பத்தி நிறுத்தம். இந்த நிலுவை தொகைகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட தமிழக மக்களைப் பிணை வைத்து மின்வாரியத்தை இக்கட்டிற்குத் தள்ளியிருக்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் பிபிஎன் நிறுவனம் மின் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் இந்த நேரத்திலும் மின் வாரியம் தினமும் இந்த நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் தந்தாக வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இந்த நிறுவனம் அப்போல்லோ மருத்துவமனை முதலாளிகளுக்கு சொந்தமானது.

மின் உற்பத்தி தொடர்ச்சியாகக் குறைந்து இருப்பதற்கான காரணம் என்ன?

நடுவன் அரசின் மின்சாரக் கொள்கையே இதற்குக் காரணம். 1992 ஆண்டிற்குப் பிறகு எதிர்கால மின் உற்பத்தி அனைத்தையும் தனியார் மட்டுமே மேற்கொள்ளலாம் என்பது தான் அது. அனைத்து மின் வாரியங்களின் புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் ஒட்டு மொத்தமாக மறுக்கப்பட்டன. அதன் விளைவையே இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்க்கு பாதகமாகவும் நடந்து கொண்டதற்கான எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியுமா?

ஏராளமாகக் கூறமுடியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தனியாருக்கும் மின்வாரியத்துக்கும் இடையிலான வழக்குகளில் தனியாருக்கு சாதகமாகவே ஒருதலைப்பட்சமாக ஆணையம் தீர்ப்பு வழங்கிவந்துள்ளது.

இந்த வழக்குகளில் பெரும்பாலானவை நூறு கோடி ரூபாயிக்கு மேல் வாரியத்துக்கு இழப்பை ஏற்படுத்துபவை. மிகக் குறிப்பாக, ஜி.எம்.ஆர் வாசவிக்கு வழங்கப்பட்ட 484 கோடி ரூபாய்க்கு தீர்ப்பு, பிபிஎன் 189 கோடி ரூபாய் கேட்ட வழக்கில் 1050 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கச்சொல்லி வழங்கிய தீர்ப்புகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இவை இரண்டும் உயர்நீதிமன்றத்தின் தடையையும் மீறி சுய ஆர்வத்தின் அடிப்படையில் ஆணையம் வழங்கிய தீர்ப்புகளே.

ஆணையத்தின் மீது எங்கள் அமைப்பு கடந்த ஜூலையில் ஒரு ஊழல் புகார் மனுவை முதலமைச்சரிடம் சமர்பித்துள்ளது. பிரச்சனையை அறிந்து மக்கள்தான் ஆணையத்தின் போக்குகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்சாரப் பிரச்சனையை தீர்க்க கூடங்குளம் அணுமின் திட்டத்தால் மட்டுமே முடியும் என்ற கருத்து சமீப காலமாக சிலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த கருத்து சரிதானா?

பைத்தியக்காரத்தனமானது. கூடங்குளத்தில் இருந்து நமக்கு கிடைக்கவிருப்பது 462 மெகாவாட்தான். இன்று நான்கு தனியார் மின் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது மூலமாக 737 மெகாவாட் இழப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். 2010ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டிய 2700 மெகாவாட் மின்வாரிய உற்பத்தி நிலையங்களை நான்கு தனியார் மின் நிறுவனங்கள் கொண்டுவந்த செயற்கையான கடன் தொல்லையின் காரணமாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த நான்கு தனியார் நிறுவனங்கள் தமிழக மக்களைப் பிணைக்கதிகளாகப் பிடித்து வைத்திருப்பதை எதிர்க்காமல் கூடங்குளம் அணு மின் நிலையத்தை பற்றிப் பேசுவது பைத்தியக்காரத்தனமானது.

தடையற்ற மின்சாரம் என்பது தமிழ்நாட்டில் சாத்தியம்தானா?

சாத்தியம்தான். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள மின்சாரச் சட்டத்தில் (2003) பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். அதாவது, மீண்டும் மாநில அரசிடம் மின்சாரத் துறை ஒப்படைக்க வேண்டும். மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

தமிழ்நாட்டின் மின்சார பிரச்சனையைத் தீர்க்க வழிதான் என்ன?

திட்டமிடப்பட்டுள்ள அனைத்து மின்வாரிய உற்பத்தி நிலையங்களும் திட்டமிட்ட காலத்திற்குள்ளே செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது தான் இதற்கான வழி.

நன்றி:
திரு. சா. காந்தி
ஓய்வுபெற்ற மின் பொறியாளர்
தலைவர் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு.

Saturday, February 4, 2012

பென்னி குக்கிற்கு மணிமண்டபம் கட்டுவது ஏமாற்றுவேலை

தேவன்


முல்லைப் பெரியாறு பிரச்சனை தலை தூக்கியதுமே தமிழர்களுக்கு அதனை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னி குக்கின் பெருமை புலப்பட ஆரம்பித்து விட்டது. அவரது வரலாறு மறுபரிசீலனை செய்யப்பட்டது. அவரது அருமை-பெருமை புலப்பட்டது. அவர் அந்த அணையை கட்ட செய்த தியாகம் தெரியவந்தது. அவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவருக்கு பொங்கல் விழா நடத்தப்ட்டது. தேனி மாவட்டத்தில் அவருக்கு யாராவது கோவில் கட்டினாலும் ஆச்சரியமில்லை. பென்னி குக் விஷயத்தில் ஓரளவு விழித்துக் கொண்ட தமிழ் சமூகமே நன்றி. உமது தூக்கமும் விழிப்பும் எத்தனை மேலோட்டமாக உள்ளது என்பதை உணர்த்த விரும்பும் நோக்கத்தில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.



முல்லைப் பெரியாறு போராட்டம் அரசியல் பின்புலம் இல்லாத போராட்டமாக தலையெடுத்தது. இது ஒரு செயற்கையான போராட்டம் அல்ல. இந்த எழுச்சி எல்லாருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது. சொந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பன்னீர்செல்வம் மீது மக்கள் செருப்பை வீசினர். இது ஆட்சியில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனவே அவர்களின் உணர்ச்சியை சாந்தப்படுத்தும் விதத்தில் பசியால் அழுகின்ற பிள்ளைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுப்பதைப் போல தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா ரூ. 1 கோடி செலவில் பென்னி குக்கிற்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மேலோட்டமாக இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. எனவேதான் சரத் குமார், வைகோ போன்றோர் இதனை வரவேற்று முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.



ஆனால் இது சரியா என்று ஆராய்ந்து பார்க்கிறபோது இது ஒரு ஏமாற்று வேலை என்றே தெரிகிறது. ஈழப்படுகொலைகள் சேனல் 4-ல் ஒளிபரப்பப் பட்டபோது ஜெயலலிதா தமிழக சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். ஆனால் மத்திய அரசு அந்த தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது. அதற்கு பின் என்ன ஆச்சு? மாநில அரசு என்ன செய்ய வேண்டும்? தங்களது தீர்மானம் அவமதிக்கப்பட்டதே அதற்கு ஏதாவது செய்ய முடியுமா? பரிகாரம் உண்டா? இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கப்படவும் இல்லை. கவலைப்படவும் இல்லை. ஏனெனில் அது ஒப்புக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம். அது ஒரு நாடகம் என்று எல்லாருக்குமே தெரியும். அதனால்தான் மற்ற கட்சிகள் கூட அதனை கண்டு கொள்ளவில்லை.



தீர்மானம் அவமதிக்கப்பட்டால் என்ன செய்வது?



தீர்மானம் அவமதிக்கப்பட்டதும் மாநில அரசு என்ன செய்திருக்க வேண்டும்? மத்திய அரசுக்கு ஒரு காலக் கெடு கொடுத்து மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும். அதாவது போர்க்குற்றமோ, பொருளாதார தடையோ தேவையில்லை, குறைந்தபட்சம் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிக்க வேண்டும். அந்த தீர்மானத்தையும் மத்திய அரசு குப்பை தொட்டியில் போட்டிருக்கும். அப்போது இலங்கைக்கு உதவி செய்வது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி மீண்டும் இன்னொரு தீர்மானம் போட்டிருக்கலாம். அதற்கும் பதில் இல்லாத பட்சத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றலாம். அதாவது மத்திய அரசு மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றலாம். அதென்ன நம்பிக்கையில்லா தீர்மானம்? அதனால் மத்திய அரசு கவிழ்ந்து விடுமா? இல்லை. ஆனால் மத்திய அரசு மீது மாநில மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை தெளிவாக்கும். அது மத்திய அரசை யோசிக்க வைக்கும். மாநில அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆனால் ஜெயலலிதா மத்திய அரசுடன் மோதிக்கொள்ள மாட்டார். அவருக்கு அவரது பதவிதான் முக்கியம். தமிழக மக்கள் முக்கியமல்ல.



ஏனெனில் அவருக்கும் தமிழ் மக்களுக்கும் சம்பந்தமில்லை. அவருக்கு தமிழகத்தில் யாராவது ஒரு உறவுக்காரர் இருக்கிறாரா என்பதே சந்தேகம்தான். தமிழகம் அவருக்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையாக இருந்தது. அது இப்போது பணத்தோடு அதிகாரத்தையும் கொடுத்துள்ளது. தமிழ் மக்களாவது, உணர்வாவது? அவர் மட்டும் ம்ம்ம்... என்றால் தமிழகமே அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும். பின் அவர் எதற்காக எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டும்? எனவேதான் ஈழத்தமிழருக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்று கூறி ஈழத்தாய் என்று பெயர் பெற்ற தமிழக முதல்வர் அதன் பின் அதனை வசதியாக மறந்து விட்டார். அப்படி ஒரு தீர்மானத்தை புறக்கணித்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூட அவரிடம் திட்டம் இல்லை. ஏனெனில் அது ஒரு கண்துடைப்பு தீர்மானம். அதேபோல பென்னி குக்கிற்கு ஜெயலலிதா மணிமண்டபம் கட்டாவிட்டாலும் யாரும் கேட்கப் போவதில்லை. அடுத்த தேர்தலுக்கு முன்பாக அடிக்கல் நாட்டலாம். அதன் பின் அதனை வசதியாக மறந்து விடலாம். அதற்கு முன்பே மக்கள் அதனை மறந்து விடுவார்கள்.



அப்படியானால் பென்னி குக்கிற்கு எப்படி நன்றி தெரிவிக்கலாம்?



பென்னி குக் என்ற ஒரு ஆங்கிலேய பொறியாளர் தான் தமிழ் மக்கள் மீது கொண்டிருந்த மனிதாபம் காரணமாக தனது சொத்தை விற்று அணை கட்டியபோது, தமிழக மக்களின் ஆதரவைப் பெற்ற தலைவி என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்? ஏன் ஜெயலலிதா அந்த அணையை மீண்டும் புதிதாக கட்டக் கூடாது? அப்படி கட்டி அந்த அணைக்கு பென்னி குக் அணை என்று பெயரிட்டால் அதுவே அவரது நோக்கத்திற்கு நாம் மதிப்பளிப்பதாக அமையும். அதைவிடுத்து அவருக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்பது நமது இயலாமையையும், ஏமாற்று வேலையையுமே காட்டுவதாக அமையும். பென்னி குக்கை இன்றும் நமக்கு நினைவுறுத்துவது எது? முல்லைப் பெரியாறு அணை. அது பென்னி குக் தமிழ் மக்களின் மீது கொண்டிருந்த அன்புக்கும் அனுதாபத்திற்கும் அவரது உன்னத நோக்கத்திற்கும் உதாரணமாக உள்ளது. அவருக்கு நாம் மதிப்பளிப்பதாக இருந்தால் நாம் அவரது நோக்கத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அதை எப்படி செய்வது?



கேரள அரசியல்வாதிகளின் வாதத்தை முறியடித்து அம்மாநில மக்களின் அச்சத்தை போக்கலாம். அதற்கு முன்பாக கேரள அரசியல்வாதிகளின் வாதத்தை முறியடிக்க வேண்டும். அதாவது அணை பலவீனமாக உள்ளது, நாங்கள் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தருகிறோம் என்ற வாதத்தை முறியடிக்க, அணை பலவீனமாக இருந்தால் அதனை நாங்களே இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய அணையை கட்டுவோம் என்று அறிவிக்க வேண்டும். இதன் மூலம் கேரள அரசியல்வாதிகளின் பொய் பிரச்சாரம் அடிபடும். இரண்டாவதாக கேரள மக்களின் அச்சத்தை நாம் போக்குவதாகவும் அவர்களின் பாதுகாப்பு மீது நாம் அக்கறை கொண்டவர்களாகவும் நம்மை காட்டும். இன்னும் ஒரு துணிச்சலான முயற்சியாக அணை பலவீனமாக இல்லாவிட்டாலும் கூட முழு அளவு தண்ணீரை நிரப்புவதற்காக அணையை புதிதாக கட்டித் தருகிறோம் என்பதை தமிழக அரசு அறிவிக்கலாம்.



அணை பலவீனமாக உள்ளது என்பவர்களால், புதிய அணையை நாங்களே அதே இடத்தில் கட்டிக் கொள்கிறோம் என்பதற்கு மறுப்பு தெரிவிக்க இயலாது. அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளும்போது அவர்களிடம் மத்திய அரசின் முன்னிலையில் புதிய ஒப்பந்தம் போட வேண்டும். அதாவது மத்திய அரசுக் குழு ஒன்று அணையை ஆராய்ந்து இறுதி அறிக்கை தரவேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் அணை பலவீனமாக இருந்தால் புதிய அணை கட்டப்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் கேரளா அணை கட்டுமானப் பணியை பார்வையிடலாம், ஆனால் எந்தகாரணத்தைக் கொண்டும் அணைக் கட்டும் பணியில் குறுக்கிடக்கூடாது என்ற வாக்குறுதியையும் பெற வேண்டும். இதன் மூலம் இந்த விஷயத்தில் தலையிட முடியாது என்று கூறிவரும் மத்திய அரசும் தமிழக அரசின் வாதத்தை ஏற்கும் நிலைக்கு தள்ளப்படும். அப்போது அந்த அணையை கட்டுவதற்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெறுவது எளிதாகிவிடும். மத்திய அரசு தானே முன்வந்து நிதி தரும் நிலைக்கு தள்ளப்படும். ஒருவேளை மத்திய அரசு நிதி தர தாமதம் செய்தாலும் கூட மாநில அரசு மற்ற நிதி ஆதாரங்களை தேட வேண்டும்.



இதுபோன்ற ஒப்பந்தம் போடப்பட்ட பின் புதிய அணை கட்டப்பட்டால் அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி வரை தண்ணீரை நிரப்பலாம். இதனால் ராமநாதபுரம் மாவட்டமும் நீர்வளம் பெறும். இதுவே அந்த ஆங்கில பொறியாளனுக்கு நாம் செலுத்தும் நன்றியாக அமையும்.


எல்லை உரிமையை மீட்டல்

ஜெயலலிதா தமிழக வரலாற்றில் நீங்காத இடம் பெற நினைத்தால் தமிழகத்தின் எல்லையை மீண்டும் வரையறை செய்ய கோரிக்கை விடுக்கலாம். அவர் தமிழகத்திற்கு சொந்தமான தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை பகுதிகளை (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18048...) கோரிப் பெற முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு கோரிப் பெற்றால் முல்லைப் பெரியாறு அணையும் தமிழகத்திற்குள் வந்துவிடும். குறைந்தபட்சம் அவற்றை கோரி ஒரு தீர்மானத்தையாவது நிறைவேற்ற வேண்டும். அதுவே அவர் தமிழ் மக்கள் தன்னை முதல்வராக தேர்ந்தெடுத்ததற்கு செய்யும் நன்றி ஆகும். இதையெல்லாம் செய்யாவிட்டால் தமிழக மக்கள் தங்கள் உரிமைகள், உணர்வுகளை மதிக்கும் ஒரு தலைவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக மற்றவர்களை கெஞ்சாமல் இருக்கலாம்.

நன்றி - http://www.atheetham.com/story/penny

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...