Sunday, September 27, 2015

இம்மானுவேல் கொலை வழக்கின் தீர்ப்பு - நகல் - பாகம் 1

இம்மானுவேல் கொலை வழக்கின் தீர்ப்பு - நகல் - பாகம் 1

குற்றவியல் அமர்வு நீதிமன்றம்
ராமநாதபுரம் பிரிவு
இருப்பு புதுக்கோட்டை (ஜனவரி அமர்வு)

முன்னிலை : திரு எம்.அனந்தநாராயணன், .நீ..
(முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி)
புதன்கிழமை 7-ம் தேதி ஜனவரி மாதம் 1959
அமர்வு நீதிமன்ற வழக்கு எண் 189/ 1958

(மேல் விசாரணைக்கு அனுப்பியது திரு. வி.ஆர்.வரதராஜன், பிஏ., பிஎல்., தனி முதன்மை குற்றவியல் நடுவர், புதுக்கோட்டை. பார்வை வழக்கு எண் XV /1958, தனி முதன்மை குற்றவியல் நீதிமன்றம், புதுக்கோட்டை, குற்ற எண் 209/ 1957, பரமக்குடி காவல் நிலையம்)

குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள்:
1. திரு. முத்துராமலிங்கத் தேவர் (1-வது எதிரி)
ஆஜரான வழக்கறிஞர்கள்:
திரு. வி. ராஜகோபாலாச்சாரி,
திரு. நாராயணசாமி,
வழக்கறிஞர்கள், மதராஸ் மற்றும்
திரு. கே. குப்புசாமி அய்யர்,
வழக்கறிஞர், மதுரை.
2. அங்குசாமி தேவர்
3.  பேயன் மாயாண்டித் தேவர்
4. தவசித் தேவர்
5. சல்லி குருசாமித் தேவர்
6. காட்டுச் சாமி
7. முனியசாமி
8. சடையாண்டி
9. திருக்கண்ணத் தேவர்
10. நல்லுத் தேவர்
11. கருப்பண்ணன்
12. பெரியசாமித் தேவர்

6-வது எதிரி முதல் 12-வது எதிரி வரை ஆஜரான வழக்கறிஞர்கள்
திரு. கே. வேலாயுத நாயர்
திரு. தனுக்கோடி, மதுரை

குற்றச்சாட்டுக்கள்:

1. இரண்டாவது எதிரியும் மற்ற எதிரிகளும் கொலை செய்யத் தூண்டி விட்டது. இதன்படி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 109 மற்றும் 302-ன் படி முதல் எதிரி தண்டிக்கத் தக்கவராவர்.

2. பொது எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு 2-வது எதிரி முதல் 12-வது எதிரி வரை சேர்ந்து கொலைக் குற்றம் செய்து இதன்படி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 302 மற்றும் 304-ன்படி தண்டிக்கத் தக்கவராவார்கள்.

எதிரிகளின் பதிலுரை: நிரபராதிகள்

நீதிபதியின் முடிவு:

1-வது எதிரி மற்றும் 5-வது எதிரி முதல் 12-வது எதிரி வரையும் குற்றமற்றவர்கள் எனவும் வனையப்பட்ட குற்றச் சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

2 முதல் 4 வரையான எதிரிகள் குற்றச் சாட்டுப்படி குற்றவாளிகள்

தண்டனை மற்றும் உத்தரவு

1-வது எதிரி இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்படுகிறார். மேலும் மற்ற வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்க நடைமுறையோ அல்லது சட்டப்படியோ உரிமையில்லை, என்றால் 5-வது எதிரி முதல் 12-வது எதிரி வரை விடுதலை செய்யப்படுகின்றனர்.

5-வது எதிரி மற்றும் 8-வது எதிரி முதல் 12- வது எதிரி வரை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 6-வது எதிரி மற்றும் 7-வது எதிரியின் பிணைப் பத்திரங்கள் ரத்து செய்யும்படி உத்தரவிடப்படுகின்றது. 2-வது எதிரி முதல் 4-வது எதிரி வரை ஒவ்வொருவரும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 படியும் அத்தோடு இணைந்து பிரிவு 34 படியும் குற்றம் சாட்டப்பட்டு ஒவ்வொருவருக்கும் சாகும் வரை தூக்கில் தொங்கவிடும்படி தண்டனை அளிக்கப்பட்டு அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிடப்படுகின்றது.

தீர்ப்புரை

1957-ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட இடைத் தேர்தல் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி தாலுகாக்களின் ஜாதிக் கலவரம் பெரிய அளவில் ஹரிஜனங்களுக்கும் மறவர்களுக்கும் (தேவர்கள்) ஏற்பட்டது. இந்த வழக்கின் சாட்சியங்கள் மூலம் மேற்படி பிரச்சனை மிக ஆழமாக வோறோடி இருப்பதும் தெரிகின்றது. மேலும் நீண்டகால சாதிய பிரச்சனையாக புரையோடி இருப்பதும் தெரிகின்றது. ஹரிஜன கிறிஸ்தவரான இம்மானுவேல், அந்தப் பகுதியில் ஹரிஜன மக்களின் பிரதிநிதியாக தன்னைத்தானே ஆக்கிக் கொண்டவர்.

1-வது எதிரி முத்துராமலிங்கத் தேவர் அப்பகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்கவரும், மறவர்களின் தலைவராகவும் திகழ்ந்தார் என்பது சாட்சியங்களிலிருந்து தெளிவாகப் புலப்படுகின்றது. நிலைமை மிக மோசமாக இருந்ததால் மாவட்ட ஆட்சியர் சி.வி.ஆர். பணிக்கர் (அரசு தரப்பு சட்சி 21) முதுகுளத்தூரில் 10.09.1957ல் ஒரு சமாதான கூட்டத்தை தாலுகா அலுவலகத்தில் கூட்ட அதில் அப்பகுதியில் பல தலைவர்கள் உட்பட முதல் எதிரி மற்றும் இறந்த இம்மானுவேலுவும் கலந்துகொண்டனர்.

அரசு தரப்பு வழக்காவது, அந்த சமாதானக் கூட்டத்தில் முதல் எதிரிக்கும், இறந்த இம்மானுவேலுவுக்கும் சிறு சலசலப்புகள் நிகழ்ந்தன. இது ஹரிஜனங்களுக்கு இம்மானுவேல் பிரதிநிதித்துவம் செய்வதை ஏற்காதது தொடர்பாக ஏற்பட்டதாகும். இறந்த இம்மானுவேல் 1-வது எதிரிக்கு மரியாதை கொடுக்காதது அவரை மிகவும் சிந்திக்க வைத்தது. பொதுவாக அப்பகுதியில் 1-வது எதிரிக்கு மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டம் முடிந்த பிறகு தனது ஆதரவாளர்களான மறவர்களிடம் முதுகுளத்தூர் கர்ணம் ஆத்மநாப பிள்ளை வீட்டில் சில வார்த்தைகளை தூண்டிவிடும் விதம் பேசியதாகக் கூறப்படுகிறது.

2. கடந்த 11.09.1957-ல் இரவு 9.30 மணிக்கோ அல்லது அதைத் தொடர்ந்தோ இம்மானுவேல் பாஸ்டர் மாணிக்கம் வீட்டின் எதிரில் சிலரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது இந்தக் குற்றம் மிகவும் திட்டமிட்டு கச்சிதமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தாக்கியவர்களில் ஒருவரான 2-வது எதிரி அப்போது கூறிய சில வார்த்தைகள் மூலம் தெரிவது என்னவெனில் முதல் நாள் நடந்த கூட்டத்தில் இம்மானுவேல் 1-வது எதிரிக்கு மரியாதை கொடுக்காததால்தான் இக்கொலை நடந்ததென்பதாகும். இவ்வழக்கில் நடந்த கொலை, நடந்த நேரம், நடந்த இடம் ஆகியவைகள் பற்றி இவ்வழக்கில் எந்தவித முரண்பாடும் இல்லை.

3. 1-வது எதிரி (முத்துராமலிங்கத் தேவர்) மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 அத்தோடு இணைத்து பிரிவு 109 மீது கொலை செய்ய உடந்தையாகவும், தூண்டுதலாகவும் இருந்ததாக குற்றச் சாட்டு - வனையப்பட்டுள்ளது. எதிரிகள் 2 முதல் 12 வரை உள்ள கீழத்தூவல் அல்லது அதைச் சார்ந்த ஊர்களின் மறவர்கள் ஆவார்கள். அவர்கள் மீது இம்மானுவேலைக் கொலை செய்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 34-ன்படியும் குற்றச் சாட்டு வனையப்படுகிறது. எல்லா எதிரிகளும் தாங்கள் குற்றமற்றவர்கள் எனவும் தங்கள் மீதுள்ள வழக்கை விசாரிக்கலாம் எனவும் கூறினர்.

4. அரசு தரப்பில் 33 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். எல்லா சாட்சிகள் விசாரணைக்குப் பிறகு எதிரிகள் தங்கள் தரப்பில் நால்வரை சாட்சிகளாக விசாரித்தனர். சாட்சியமல்லாமல் இரு தரப்பிலும் கணிசமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதில் முதல் எதிரி சார்பாக பல ஆவணங்கள் வாக்குமூலங்கள் தாக்கல் செய்யப்பட்டு அவைகளை ஆராய்ந்து பார்க்கும்படி கோரப்பட்டது. விசாரணை 13 வேலை நாட்களை எடுத்துக் கொண்டது.

5. வழக்கில் சாட்சியங்களை சீர்தூக்கிப் பார்க்கும் முன்பு, 1-வது எதிரி சம்பந்தப்பட்ட சில பகுதிகளையும், பின்னாலுள்ள சங்கதிகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கொலைக்குப் பின்னணியைப் பார்க்கும்போது ஜாதிப் பிரச்சனை மட்டுமே காரணமில்லை. மேலும் முதுகுளத்தூரில் நடந்த சமாதானக் கூட்டமும் காரணமாகும். மேலும் 1-வது எதிரியின் அரசியல் முந்தைய செல்வாக்கும் ஆகும். மேலும் சாட்சியங்களில் கூறப்பட்ட அரசியல் சம்பந்தப்பட்ட சாட்சியங்களையும் உற்று நோக்க வேண்டும். ஆனால் இவைகள் எல்லாம் நீதிமன்றத்திற்கு அப்பால் உற்று நோக்க வேண்டியவைகளாகும். இது போன்ற வழக்குகளில் விசாரணைக்கு அப்பாற்பட்டவைகளாகக் கருத வேண்டும். ஆனால் 1-வது எதிரி இச்சங்கதிகள் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். காரணம் அவைகள் அனைத்தும் அரசியல் காரணங்களுக்காக தனக்கெதிராக புனையப்பட்ட ஒன்றாகும் என்று கூறுகின்றார்.

1-வது எதிரியைப் பொறுத்த வரை செப்டம்பர் 19 மற்றும் 23, 1957-ல் நடந்த சம்பவங்களை வைத்து அரசியலில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் தூண்டுதலோ, அல்லது அவர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலோ தன் பேரில் இந்த வழக்கு பொய்யாகப் புனையப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனார். அவரைப் பொறுத்தவரை மாநில முதலமைச்சர் திரு. காமராஜ் மற்றும் உள்துறை மந்திரி திரு பக்தவத்சலம் ஆகியோர்களுக்கு சம்பந்தப்பட்ட பகுதியில் சரியான எதிர்ப்பாளனாக இருப்பதால்தான் இந்த வழக்கில் தன்னை சம்பந்தப்படுத்தியுள்ளார்கள் என்று கூறுகின்றார்.

வழக்கின் பொருண்மைகளோ அல்லது குற்றச் சாட்டுக்களோ முதல் எதிரிக்கு வலுச் சேர்ப்பதாக இல்லை. எனவே நான் அவர் மீது சாட்டப்பட்டுள்ளவைகளை மிக தெளிவாகவும், ஆழமாகவும் அரசியல் சம்பந்தமாக ஆராயத் தேவையில்லை. ஆனால் 1-வது எதிரி மீது மாநில அரசின் தலைமையில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்தவே தன்னை வழக்கில் சேர்த்திருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கையே பொய்யாகப் புனையப்பட்டதாகும் எனக் கூறுகின்றார். அவற்றை ஆராய்ந்து நோக்கினால், நீதியின் பொருட்டோ அல்லது பொருண்மையின் பொருட்டோ ஆராய்ந்தால், அரசு தரப்பு சாட்சிகள் கட்டாயம் பாதிக்கும். நீதியை நிலைநாட்டும் பொருட்டு வழக்கின் பின்னணிகளையும், சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. விசாரணையின் எல்லைக்கப்பாலும் கவனிக்கத் தக்கதாகின்றது.

6. நாம் மார்ச் மாதம் 1957-ல் நடந்த பொதுத் தேர்தலிலிருந்து ஆராய்வோம். 1-வது எதிரி காங்கிரசிற்கு எதிராக மாநில அசெம்பிளிக்கும், மக்களவை உறுப்பினர் பதவிக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் மிக அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வெற்றி பெற்றார். ஒதுக்கப்பட்ட பொதுத் தேர்தலில் ஹரிசன தொகுதி வேட்பாளராக ஒரு ஹரிசன வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தியது. அதேபோல தான் தலைவராக இருந்த பார்வர்டு பிளாக் என்ற கட்சியின் சார்பாக பெருமாள் என்பவரை பிரதிநிதியாக நிறுத்தினார். 1-வது எதிரியின் வேட்பாளர் மிக அதிக ஓட்டுக்களில் வெற்றி பெற்றார். இதுவன்றி பொதுத் தேர்தலில் திரு காமராஜ், சாத்தூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். 1-வது எதிரியின் அதி தீவிர ஆதரவாளரான திரு ஜெயராம் ரெட்டி என்பவர் திரு காமராஜை எதிர்த்துப் போட்டியிட்டார்.

இந்தப் பொதுத் தேர்தலில் முதல் எதிரி தனது தொகுதியிலிருந்து வெளியிடமான திரு காமராஜ் தொகுதிக்கும் சென்று அவரைப் பற்றி தீவிரமாகத் தாக்கிப் பேசினார். மேலும் 1-வது எதிரி தனது மக்களவை அங்கத்தினர் பதவியை வைத்துக் கொண்டு மாநில சட்டசபையின் அங்கத்தினர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே அவசியம் ஜூலை 1957-ல் இடைத்தேர்தல் நடைபெற வேண்டியதாயிற்று. அதில் சாதியப் பிரச்சனைகளும் தலைதூக்கியது. அதுவும் அரசியலும் ஒன்றையொன்று சார்ந்திருந்தனவா எனப் புலப்படவில்லை. இந்த இடைத் தேர்தலில் பார்வர்டு பிளாக்கைச் சேர்ந்தவரும் 1-வது எதிரியின் தொண்டருமான சசிவர்ணத் தேவர்  என்பவர் அதிகாரப்பூர்வமான காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த இடைத் தேர்தலில் அரசாங்கத்தின் மூன்று மந்திரிகள் திரு பக்தவத்சலம் உட்பட தங்களின் அதிகாரத் தோரணையில் முகாமிட்டிருந்தனர். திரு பக்தவத்சலம் 1-வது எதிரியை மிகவும் தாக்கிப் பேசினார். இவற்றுக்கெல்லாம் 1-வது எதிரி காங்கிரசிற்கு எதிராக இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸை ஆதரித்தார். 1-வது எதிரி தான் கைது செய்யப்படும் முன் 26, செப்டம்பர் 1957-ல் அந்த மாநாட்டைக் கூட்டினார். அவர் தேசிய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அவர் தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டதை இந்த வழக்கில் ஆராய விரும்பவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் 1-வது எதிரி கீழத்தூவல் மற்றும் கீரந்தை கிராமங்களில் போலீசார் 14 மற்றும் 17 தேதிகளில் செப்டம்பர் மாதம் 1957-ல் துப்பாக்கிச் சூடு நடத்தி பல மறவர்கள் சாவுக்கு நீதித்துறை விசாரணை வைக்க வேண்டும் என வற்புறுத்தினார். இந்த வழக்கின் சாராம்சம் மிக்க தெளிவாக உள்ளது.

1-வது எதிரியின் கூற்றானது, தான் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு, குறிப்பாக திரு காமராஜருக்கும், திரு பக்தவத்சலத்திற்கும் பிரதான எதிரியாக இருப்பதாக கூறுகின்றார். நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் முதல் எதிரியின் செல்வாக்கையும், முதுகுளத்தூருக்கு வெளியேயுள்ள செல்வாக்கையும் மறுப்பதற்கில்லை. எனவே அந்த சூழ்நிலைக்கு எதிர்ப்பாக அரசு 1-வது எதிரியை இம்மானுவேல் கொலை வழக்கில் சேர்த்துள்ளது. இது மட்டுமல்ல இதையும் தாண்டி ஆரம்ப புலன் விசாரணையுமே பொய்யாகும். உண்மைச் சங்கதிகளையும் சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜூகளையும் உண்மையில் தாக்கல் செய்யவில்லை. வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமாயின் சாதாரணமாக அரசின் எந்திரமும், புலன் விசாரணையும் இந்த வழக்கில் தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதேயாகும். இது மிகவும் கவலைப்படத் தக்க குற்றச்சாட்டாகும். அவைகள் உண்மையாக இருந்தாலோ அல்லது இருப்பதற்கு சாத்தியமானாலோ அரசின் சாட்சியங்களை அளவிடுதலில் பாதிப்பு ஏற்படும். எனவே நான் தேவையற்ற அவைகளை இனி இவ்வழக்கில் மீண்டும் குறிப்பிடப் போவதில்லை.

7. முதுகுளத்தூர் அமைதிக் கூட்டத்தில் என்ன நடந்தது என நாம் அறிய அரசு சாட்சி 21 திரு பணிக்கர், திரு எம்.ஜே.ஹோம்ஸ் (அரசு தரப்புச் சாட்சி 22) அரசின் துணை ஆய்வாளர் ஜெனரல் அவரும் அக்கூட்டத்தில் பங்கு கொண்டவர், அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஹரிஜன தலைவரும் அரசின் 20 வது சாட்சியுமான பெருமாள் பீட்டர், அரசு தரப்பு முதல் சாட்சி சந்தானம், மற்றும் அரசு சாட்சி 18 ராமநாதன் ஆகியோர் (இவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்படாதவர்கள் முற்றத்தில் நின்று கொண்டிருந்தவர்கள்) கூட்டம் நடப்பதைப் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் தாலுகா அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தவர்கள். முதல் சாட்சி மற்றும் 18வது சாட்சிகள் பற்றி கூறுவதாவது, அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அவர்கள் முன்னரே சம்பவம் நடப்பதற்கு முன்பே வெளியேறி இருக்க வேண்டும். அவர்கள் கூட்ட சம்பவத்தைப் பற்றி ஏதும் கூற இயலாது. எனவே அவர்களது சாட்சியங்களை நம்பும்படியாக இல்லை என்பதாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக கூட்டம் நடந்தது பற்றி எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் நமக்குப் பொறுப்புள்ள அதிகாரியான திரு பணிக்கர், அரசு சாட்சி 21-ன் சாட்சியம் மிகவும் துணையாக உள்ளது. அவரைப் பற்றி எதிர் தரப்பில் ஒருபோதும் எந்தக் குறையும் கூறவில்லை. 1வது எதிரிக்குச் சாதகமாக உள்ள சில பொருண்மைகளை இங்கே கூற வேண்டியுள்ளது.

அவைகள் மறவர்களின் தலைவர்களான சசிவர்ணத் தேவர் மற்றும் 1வது எதிரி அமைதிக் கூட்டத்தில் கூறிய சங்கதிகளைப் பற்றியதாகும். ஹரிஜனங்களுக்காக இறந்த இம்மானுவேல் அரசு தரப்பு சாட்சி 20 பீட்டர், இம்மானுவேல் மற்றும் பலர் பிரதிநிதித்துவம் செய்தனர். அமைதிக் கூட்டத்தில் ஒவ்வொரு பிரிவினரையும் தனித்தனியே விசாரிக்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மூன்றாவது தரப்பினர்களாக நாடார்கள் உள்ளனர் என்பதையும் நினைவு கூரத்தக்கது. மேலும் ஆரம்ப காலத்திலிருந்தே 1-வது எதிரி தொடர்ந்து அவர்கள் மீது குற்றம் சாட்டி வந்தார். மேலும் ஆடம்பரமற்ற ஹரிஜனங்களும் அவர்களும் கூடி ஆலோசனை செய்தனர் எனவும் கூறப்படுகிறது.

சசிவர்ணத் தேவரும், 1-வது எதிரியும் சிறிது கால தாமதமாக அமைதிப் பேச்சுக் கூட்டத்தில் பங்கேற்றனர். திரு பணிக்கர் அரசு சாட்சியம் 21-ம் மற்றும் அரசு சாட்சி 22 திரு ஹோம்ஸூம் முக்கியமான ஒரு சங்கதியை நோட்டம் விட்டனர். முதல் எதிரி காலதாமதமாக வந்தாலும் கூட்டத்திலிருந்து அனைத்து ஹரிஜனங்களும் அவருக்கு வணக்கம் சொல்லி தக்க மரியாதை செலுத்தினர். இது சம்பந்தமாக அரசு சாட்சி 20 பெருமாள் பீட்டரின் சாட்சியம் தெளிவாக உள்ளது.

தற்போது கூட இந்த சாட்சியம் 1-வது எதிரிக்கு பாதகமாக சொல்ல யோசிக்கின்றார். பொதுவாக 1-வது எதிரியை எல்லா ஹரிஜன மக்களும் எஜமான் என்றே கூறுவார்கள். ஆனால் இறந்த இம்மானுவேல் மட்டும் இதற்கு மாறுபாடாக சாதாரணமாக முக ஸ்துதி செய்ததோடு சரி. அவரது நடத்தை இரு அதிகாரிகளுக்கும் வித்தியாசமாகத் தோன்றியது.

இதில் எனது சொந்தக் கருத்து யாதெனில் அந்தப் பகுதியில் 1-வது எதிரி ஒரு பெரிய பிரபுத்துவமான உயர்ந்த மனிதராக கருதப்பட்டார் என்பதே. ஆனால் புதிய தலைமுறையில் வந்த இறந்த இம்மானுவேலுவுக்கு இது பிடிக்கவில்லை. இந்த வழக்கை கூட்டாக நடத்த மனுப் போட்டபோது 1-வது எதிரி முக்கால்வாசி ஹரிஜனங்களுக்கு பிரசுரிக்கப்பட்ட மனுவின் சாராம்சம் தெரியாது. அவர்கள் படிக்காதவர்கள் என சுட்டிக் காட்டினார். இதை மறுத்த இம்மானுவேல் கணக்கெடுப்பு செய்தால் மறவர்களிலும் ஹரிஜனங்களை விட படிக்காதவர்கள் அதிகம் உள்ளனர் என்றார். முதல் எதிரி மேலும், தான் கூட்டு அறிக்கைக்கு ஒத்துக் கொண்டு கையொப்பம் இடுவதில்லை என்றும், ஹரிஜனங்களுக்காக பிரதிநிதித்துவம் செய்யும் இம்மானுவேலின் வழியில் நிற்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

மீண்டும் இறந்த இம்மானுவேல் தான் 1-வது எதிரிபோல் பெரிய தலைவர் இல்லை என்றும், தான் ஒரு மிகச் சிறிய குறிப்பிட்ட மக்களுக்கு வழிகாட்டுதலாக உள்ளதாகக் குறிப்பிட்டார். முதல் எதிரி இறந்த இம்மானுவேலைப் பார்த்து கையசைத்து அச்சுறுத்தும் தோரணையில் பேசினார் என அரசு சாட்சி - 20 பெருமாள் பீட்டர் கூறுகிறார். 1-வது எதிரிக்கு ஆஜராகும் கற்றறிந்த வழக்கறிஞர், பெருமாள் பீட்டர் கூறிய இதுபோன்ற வாக்குமூலங்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 32(1)ன்படி வராது என வாதிட்டார். அவர், பகால நாராயணசாமி எதிர் பேரரசர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் வெங்கட சுப்பா ரெட்டி எதிர் பேரரசர் (1939 சென்னை வாராந்திர குறிப்புகள் 17 மற்றும் சென்னை வாராந்திர குறிப்புகள் 245 ஆகியவை) போன்ற வழக்குகளின் முன் தீர்ப்புகளையும் முன் வைத்தார். சட்டம் முழுமையாக சந்தேகத்தை அனுமதிக்கவிட்டாலும், சாட்சியங்களில் சொன்ன சங்கதிகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால், இருந்தபோதிலும் 1-வது எதிரி இறந்த இம்மானுவேலிடம் நடந்து கொண்ட முறை மற்ற ஹரிஜன தலைவர்களிடம் நடந்த முறைக்கு மாறுபட்டதாக தெரிகிறது. சாட்சியப்படி மாநில சட்டமன்ற உறுப்பினர் பெருமாள் ஹரிஜனங்களுக்காகப் பிரதிநிதித்துவம் செய்தார். 1-வது எதிரி வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். அதாவது ஹரிஜனங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டசபை உறுப்பினர் பெருமாள் கையெழுத்திட ஒதுக்கப்பட்ட பகுதி கையொப்பமிடப்படாமலேயே இருந்ததால் திரு பெருமாள் கையெழுத்திற்கு பிறகு இடைவெளி விட்டு இம்மானுவேல் கையெழுத்திட 1-வது எதிரி ஏற்றுக் கொண்டுள்ளார். இதையே அரசு தரப்பு ஆவணம் 13-ம் நிரூபிக்கின்றது.

8. 1-வது எதிரியும் மற்றவர்களும் அமைதிப் பேச்சு கூட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களில் எதிர் தரப்பு முதல் சாட்சி ராமசாமி மற்றும் 2-வது சாட்சி சுப்பிரமணிய ராஜா போன்ற மாநில சட்ட மன்ற அங்கத்தினர் போன்றவர்கள் மதியம் கர்ணம் ஆத்மநாப பிள்ளை வீட்டில் மதிய உணவு சாப்பிட்டனர். எனவே இது ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். தாலுகா அலுவலகத்திற்கு வெளியே அமைதிக் கூட்டம் நடைபெற்றபோது, அங்கிருந்த கும்பலில் அரசு சாட்சி 19 பெருமாள் நாயுடுவும் நின்றிருந்தார். இவர் ஒரு சுதந்திரமான தனி சாட்சி ஆவார். இவர் ஹரிஜனோ அல்லது மறவரோ அல்ல.

கூட்டம் மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்ததும் கும்பல் கலைந்ததும் ஒரு கும்பலோடு 1-வது எதிரி வெளியேறி கிழக்குப் பக்கமாக மறவர்கள் பின் தொடரச் சென்றார். அரசு சாட்சி 20 பெருமாள் பீட்டரும் அந்தக் கும்பலில் இருந்தார். அரசு சாட்சி 20-க்கு 1-வது எதிரி காங்கிரஸில் இருந்தபோது நன்கு தெரியும் என்றும் அமைதிக் கூட்டம் முடிவடைந்த பிறகு மரியாதை நிமித்தம் தனியே சந்தித்துப் பேசுவதற்காகச் சென்றதாகவும் கூறுகின்றார்.

அரசு சாட்சி 18 ராமநாதனும் அக்கூட்டத்தில் ஒருவராவார். வராந்தாவில் நின்றிருந்தவர் அரசு சாட்சி 20- 1-வது எதிரியிடம் அறிமுகம் செய்து வைக்க வேண்டினார். இவ்வாறாக அரசு சாட்சி 18 அரசு சாட்சி 20- பின்தொடர்ந்தார். அரசு சாட்சி 19-ம் அந்தக் கும்பலில் இருந்தார். அரசு சாட்சி 19 பேருந்து நிலையம் செல்லுவதற்காக உடன் சென்றார். சாட்சியத்திலிருந்து ஆத்மநாப பிள்ளையின் வீடு பிரதான சாலையிலிருந்து சுமார் 120 அடி தூரம் தள்ளி 12 முதல் 15 அடி  அகல சந்திலிருந்து 1-வது எதிரியும் மற்றவர்களையும் சாப்பாட்டிற்கு கூப்பிட்டதால் அந்த வீட்டை அடைய அச்சந்தில் சென்றனர். அவர்கள் அரசு சாட்சிகள் 18, 19 மற்றும் 20 உட்பட ஒரு கும்பலுடன் சென்றனர். அவர்கள் முக்கியமாக தேவர்கள் இருந்தனர். 1-வது எதிரி அவர்களை பார்த்து ஆக்ரோஷமாக, “நீங்கள் ஏன் ஒரு பள்ளப் பயலை என் கூட எதிர்த்துப் பேச இவ்வளவு வளர்த்து விட்டீர்களே! சேச்சே! நீங்களும் மறவர்களா?” என்று பேசினார்.

9. நான் அந்த வார்த்தைகளை அப்படியே தமிழில் கூறுகிறேன். அதன் சாராம்சமே முதல் எதிரி பேரில் வனையப்பட்ட குற்றச் சாட்டாகும்.  “ஒரு பள்ளப் பயலை என் கூட எதிர்த்துப் பேச இவ்வளவு வளர்த்து விட்டீர்களே! சேச்சே! நீங்களும் மறவர்களா?”  இதை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இந்த வாசகங்களில் எந்த முக்கியத்துவமும் இல்லை. 1-வது எதிரி 2-வது எதிரியைப் பார்த்து சைகை மூலம் கூப்பிட்டுயார் அங்கே, இங்கே வாருங்கள்என்றார். அவர் 2-வது எதிரியிடம் மிக தாழ்வான குரலில் பேசினார். இந்தப் பேச்சைக் கேட்டு அரசு சாட்சி 20 அதிர்ச்சியடைந்தார். அந்தப் பேச்சு வழக்கத்திற்கு மாறான குரலில் இருந்தது. ஜாதிகள் பற்றி அமைதிக் கூட்டத்தில் பேசியதை முறியடிப்பதாக இருந்தது. எனவே அரசு சாட்சி 20 முதல் எதிரியையோ அல்லது அரசு சாட்சி 18- சந்திக்காமல் அங்கேயிருந்த காங்கிரஸ் அலுவலகம் சென்று விட்டார். அங்கு நாடார்கள் தலைவர் வேலுச்சாமியைப் பார்த்து சம்பவம் பற்றிய தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

10. இவைகளையன்றி 1-வது எதிரிக்கு எதிராக உள்ள சாட்சியங்கள் அரசு தரப்பு சாட்சி 24 தன்ராஜ் நாடார் மற்றும் அரசு தரப்புச் சாட்சி 25 மூக்க நாடார் அளித்தவைகளாகும். அரசு தரப்புச் சாட்சி 24 முதல் எதிரி ஊரான பசும்பொன்னிற்கு தன் நிலங்களை உழுவது சம்பந்தமாக திரு. திருஞானம்பிள்ளை என்பவரோடு பேசச் சென்றார். அரசு சாட்சி 25 பசும்பொன்னில் ஒரு ஆட்டுக் குட்டி வாங்க அரசு தரப்பு சாட்சி 24 உடன் சென்றார். இது நடந்தது கொலை நடந்த மறுநாள் 12.9.1957 காலையாகும். அப்போது 1-வது எதிரி தன் வீட்டின் திண்ணையில் கிழக்கு மூலையில் உட்கார்ந்திருந்தார். அவருடன் 2-வது எதிரியும் இருந்தார். மற்ற தேவர்கள், அவர் முன்பு நின்றிருந்தனர். இது சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியானாலும் வலுவற்றதாக உள்ளது. இதை எதிரிகள் தரப்பில் மிக்க ஆட்சேபம் செய்யப்படுகின்றது. ஊரின் அமைப்பும் அவ்வாறு இல்லை எனவும், அரசு தரப்பு சாட்சிகள் 24 மற்றும் 25 நம்பத் தகுந்தவர்கள் இல்லை என்றும் வாதம் செய்யப்பட்டது. இது தொடர்பாக எதிரிகள் சார்பாக நில அளவையர் 3-வது சாட்சியாக விசாரிக்கப்பட்டு எதிர் தரப்பு ஆவண எண் 33 ஆக கிராம வரைபடம் தாக்கல் பண்ணப்பட்டுள்ளது. அதில் 1-வது எதிரியின் வீடும் காட்டப்பட்டுள்ளது. இதை நான் பின்னால் விவரிக்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - 1957 யார் காரணம்? முதுகுளத்தூர் கலவரம்
பசும்பொன் தேவர் ஆன்மீக மனிதநேய நலச் சங்கம்
14, ஆண்டவர் நகர், 2-வது தெரு,
கோடம்பாக்கம், சென்னை - 600024

-------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...