Saturday, February 18, 2017

தமிழ்த் தேசியமும் அதிமுக ஆதரவும் (?)



அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டது முதல் அவர் இறந்தது வரையான கடந்த சில மாதங்களாக (நவம்பர்-2016 முதல் பிப்ரவரி-2017 வரை) தமிழக அரசியலில் பெரும்புயல் வீசி ஓய்ந்துள்ளது. அது இன்னும் தொடரும் என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் அவ்வாறு தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்தச் சூழலில் கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய அரசியல் குறித்தும், தமிழ்ச் சமூக அரசியல் குறித்தும் பேசிவரும் நான் இந்த அரசியல் சிக்கல்களில், அதிமுகவில் பெரும்பான்மை கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். இந்த போட்டியில் சசிகலா-பன்னீர் செல்வம் ஆகிய இருவரில் யார் வெற்றி பெற்றாலும் நான் அவர்களை ஆதரிப்பேன் என்று பலமுறை தெளிவுபடுத்தினேன்.

அதற்கு காரணம் என்னவென்றால் ஏறக்குறைய 45 ஆண்டுகாலத்திற்கு பின்னால் அதிமுகவின் தலைமை பீடம் தமிழ்ச் சாதியினருக்கு கிடைத்துள்ளது என்பதால்தான். இன்னும் குறிப்பாக, இதே இடத்தில் மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் கிருஷ்ணசாமி, திருமாவளவன், ஜி.கே.வாசன் போன்றோர் இருந்தாலும் அவர்களுக்கும் நமது ஆதரவு உண்டு என்பதை தெளிவுபடுத்தினேன்.

இருந்தாலும் மிகவும் நன்றாக அறிந்த சிலர் கூட எனது நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பிய காரணத்தால் இந்த மடலை எழுத வேண்டியதாயிற்று. இளங்கலை அரசியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாழ்க்கைச் சக்கரத்தில் உழன்று கொண்டிருந்த என்னை ஈழப்போர், தமிழின அழிப்புதான் அரசியல் பற்றிச் சிந்திக்கச் செய்தது.

அவ்வாறு அரசியல் குறித்து சிந்திக்கத் தொடங்கியபோது தமிழகத்தில் உள்ள அரசியல் சிக்கல்கள், சமூக சிக்கல்கள் போன்றவற்றையெல்லாம் அலசி ஆராய நேரிட்டது. அப்போது தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை நம் முன்னோர்கள் பேசிச் சென்றதையும், வெள்ளையரிடம் அடிமைப்பட்டிருந்த தமிழினம் தற்போதும் தங்கள் இறையாண்மையை இழந்து அடிமைப்பட்டிருப்பதையும் உணர முடிந்தது. அப்போது இந்தியா என்ற குறைமாதக் குழந்தையும் அதனால் நமக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களையும் உணர முடிந்தது.

அதன் பின்னர்தான் தமிழ்த் தேசியத்தின் அவசியத்தை உணர்ந்து அது குறித்துப் பேசத் தொடங்கினேன். நான் தமிழ்த் தேசியத்தின் ஏகபோக குத்தகைக் காரன் கிடையாது. எனது சிந்தனைக்கு, அறிவுக்குப் புலப்பட்டவற்றை நான் பேசி வருகிறேன். என்னை விட சிறந்த தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள், தலைவர்கள் தற்போதும் இருக்கிறார்கள், இனிமேலும் தோன்றலாம்.

வானத்திலிருந்து கோட்டையைக் கட்ட முடியாது, சிறு மண் சுவர் ஆனாலும் அதனை நிலத்திலிருந்துதான்  கட்டியமைக்க முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் நான் அரசியல் பேசி வருகிறேன். எனவே எனது அரசியல் கருத்துக்கள் அனைத்தும் உண்மை நிலை, களநிலையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். உணர்ச்சியை, கற்பனையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது.

அவ்வாறு இருக்கும்போது தற்போதுள்ள தமிழக அரசியல் சூழலை வைத்துத்தான் தமிழ்த் தேசியம் குறித்துப் பேச முடியும். அந்த வகையில் நான் தற்போதைய தமிழ்த் தேசிய அரசியல் குறித்தும் திராவிட அரசியல் குறித்தும் பேசி வருகிறேன். ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுகவின் அதிகாரம் தமிழர்களின் கைக்கு வந்துவிடும் என்பதை என் போன்றவர்கள் பலமுறை பேசியுள்ளோம்.

எதிர்பாராத நிலையில் ஜெயலலிதா விரைவிலேயே இறந்து விடவே அவரது அதிகாரம் தமிழர்களின் கைகளுக்கு வந்துவிட்டது. இந்தக் கோணத்தில்தான் நான் இந்த அதிகார மாற்றத்தைப் பார்க்கிறேன். சசிகலா நல்லவரா? கெட்டவரா? அவரது கைக்கு அதிகாரம் போவது சரியா? தவறா என்று நான் பார்க்கவில்லை.

ஜெயலலிதா என்ற திராவிடத் தலைமை இறந்த உடனேயே தமிழர்களுக்கு ஒரு நன்மை நடந்தது. அது மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்ததாகும். ஏற்கனவே திராவிடர்கள் தமிழர்களாக நடித்து தமிழர்களுக்கு நன்மை செய்வதாக நடித்து அரசியல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திராவிடக் கருத்தியலில் இருந்தாலும் கூட, சசிகலா தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். எனவேதான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. இதுபோல தமிழர் நலன் குறித்த அக்கறை கொண்டவர்களாக நடிக்க, அல்லது காட்டிக் கொள்ள இவர்கள் தமிழர் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார் அல்லது எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார் என்பதுதான் எனது நம்பிக்கை. மற்றபடி நாளையே இவர்கள் தமிழ்த் தேசத்தை மலரச் செய்வார்கள் என்பது என் நம்பிக்கையல்ல.

அடுத்தாக சசிகலாவுக்கு ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அவர் சாதியில் கள்ளராக இருக்கிறார். அதேவேளையில் பன்னீர் செல்வம் முக்குலத்தோரில் மற்றொரு பிரிவான மறவர் சாதியைச் சேர்ந்தவராக இருக்கிறார். இவர்கள் இருவரும் எனக்கு ஒன்றே. ஆனால் அதிமுக என்ற அந்தக் கட்சிக்குள்ளே யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று பார்த்தோமானால் அது சசிகலா குடும்பத்தினருக்கு என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளது.

பன்னீர் செல்வம் எனது மாவட்டத்தை, எனது பக்கத்து ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அவரை நான் நன்கு அறிவேன். கட்சிக்குள் தனக்கு செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்வது அவரது நோக்கமாக இருக்கவில்லை. ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று இரண்டு முறை குற்றம் சொல்ல முடியாத அல்லது சர்ச்சையில் சிக்காத முதலமைச்சராக இருந்தார் என்பதைத் தவிர அவருக்கு அதிமுக கட்சியைக் கட்டிக் காப்பாற்ற, வழிநடத்த வேண்டிய தகுதி இல்லை. அதை கடந்த பத்து நாட்களாக நடந்தேறிய அரசியல் காட்சிகளும் உண்மையென நிரூபிக்கின்றன.

கடந்த இரண்டு முறையும் முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் ஒரு மனித இயந்திரம் போல செயல்பட்டார். அவர் எப்படி திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு கதாநாயகன் ஆனார்? அவரது இந்த தலைநிமிர்வுக்கு காரணமாக இருந்தது மோதி என்ற உத்தமர் ஆவார். அவர் எப்படியாவது அதிமுக கட்சியை உடைத்து விடலாம் என்று கணக்குப் போட்டார். அதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் ஆளுநரின் இழுத்தடிப்புகள். இருந்தாலும் ஒரு சிலரைத் தவிர அதிமுகவின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் பக்கம் செல்லவில்லை.

இது பன்னீர் செல்வத்தின் பலவீனத்தையே உணர்த்துகிறது. ஒருவேளை 20-30 எம்எல்ஏக்கள் அவர் பக்கம் சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதிமுக தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியாமல் போயிருக்கும். தனக்குள்ள சொற்ப எம்எல்ஏக்களுடன் திமுகவின் ஆதரவு பெற்று அவர் ஆட்சி அமைத்தால் அது நீடிக்கவும் செய்யாது. அதிமுகவின் எதிரியான திமுகவின் ஆதரவைப் பெற்றதால் நிரந்தர துரோகி என்ற பட்டமும் அவருக்கு கிடைத்திருக்கும்.

சேகர் ரெட்டியுடன் கொண்ட தொடர்பை வைத்துதான் மோடி அந்த வழக்கில் பன்னீர் செல்வம் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டி அடிபணிய வைத்தார். அப்படி அவர் சிறிது காலம் முதல்வராக தொடர்ந்திருந்தாலும் அது மோடியின் மறைமுக ஆட்சியாகவே இருந்திருக்கும். அது தமிழர்களுக்கும், அதிமுக கட்சிக்கும் எதிரான ஒன்றாகவே இருந்திருக்கும். பன்னீர் செல்வத்தின் பின்னால் இருப்பது யார் என்று அறிந்ததால்தான் நான் அவரை கடுமையாக எதிர்த்தேன்.

ஓபிஎஸ் போகிற போக்கில் மீத்தேனுக்கு இயற்கை எரிவாயு என்ற பெயரிலும் மேகதாது அணையைக் கட்டவும் அனுமதி கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இது உண்மையா என்பது தெரிய வர நீண்ட காலம் ஆகாது. இவர் 4 ஆண்டு காலமும் மோதியின் அடிமையாய் இருந்து ஆட்சி செய்தால் என்ன ஆகும் என்பதுதான் நமது கேள்வி.

மற்றபடி எனது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது. இதை ஏற்பது, புறந்தள்ளுவது, விமர்சிப்பது, மறுப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

-------------------------------------------------------------------------


Monday, February 13, 2017

தமிழ்த் தேசிய அரசியலின் முதல் சதவீதம்




பலரும் தமிழ்த் தேசிய அரசியலையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் ஒன்றாக நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். ஈழத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் போர் வேறு. தமிழகத்தில் பேசப்படும் தமிழ்த் தேசிய அரசியல் வேறு.

ஈழத்தில் தமிழர்கள் ஒற்றை பெரிய இனமான சிங்களவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும்  என்ற நிலை இருந்தது. அங்கு அவர்களுக்கு தனி அரசு இல்லை. உரிமைகள் பறிக்கப்பட்டனஅதற்காக அவர்கள் ஆயுதப் போராட்டத்தை துவக்கி வெற்றிகரமாக ஒரு அரசை நடத்தி இறுதியில் தங்கள் கொள்கைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்து ஈகியர் ஆகினர்.

ஆனால் தமிழகத்தில் பேசப்படும் தமிழ்த் தேசிய அரசியல் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதுஇந்தியாவில் உள்ள பல தேசிய இனங்களில் தமிழர்களும் ஒரு இனமாக உள்ளனர். இங்கு தமிழர்களுக்கு என ஒரு அரசாங்கம் உள்ளது. இங்கு தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தாலும் பல முக்கிய உரிமைகள் மறைமுகமாக அல்லது நேரடியாக பறிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு உரிமைகள் பறிபோகக் காரணம் இந்தியா விடுதலை பெற்றபோது மாநில உரிமைகளை பாதுகாக்க போதுமான அரசியலமைப்பு கட்டமைப்புகளை உருவாக்காமல் விட்டு விட்டதே. காஷ்மீரைப் போல எல்லா மாநிலங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தியாவில் இணைந்திருந்தால் இவ்வாறு உரிமைகளை இழந்திருக்க முடியாது. மேலும் இந்தியாவே நமது நாடு என்று கருதிய காரணத்தால்தான். இதற்கு காரணம் மற்ற தேசிய இனங்கள் அல்ல. குறுக்கு புத்திகொண்ட மத்திய அரசியல்வாதிகளும், தமிழகத்தில் தமிழராக நடித்து அரசியல் செய்து வந்த அந்நியருமே ஆவர்.

எனவே இவர்களை எதிர்த்துப் போராட இங்கே ஆயுதப் போராட்டம் தேவையில்லை. மேலும் தற்போதுள்ள இந்திய அரசியலமைப்பின் கீழாகவே தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வாய்ப்புள்ளது. தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை கைகொண்டால் அவர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க மற்ற இனங்களும் வடஇந்திய சக்திகளும் காத்திருக்கின்றன. எனவே தமிழர்கள் மிகவும் எச்சரிக்கையான தமிழ்த் தேசியக் கருத்தியலை, அரசியலை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அதேவேளையில், இந்தியாவிலிருந்து முற்றிலுமாக சுதந்திரம் தேவை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டாலும் கூட தமிழ்நாடு தனது பன்னாட்டு அரசியல் பாதுகாப்பு, முன்னேற்றம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்திய ஒன்றியத்துடன் இணைந்து செயல்படுவதே நல்லது. இன விடுதலை என்பது இப்படி இருக்க, இங்குள்ள அரசியல் நிலை எவ்வாறு தமிழ்த் தேசியத்திற்கு சாதகமாக உள்ளது என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

இங்கு ஏழை ஒருவரால், கொள்கைப்பற்று, இனப்பற்றுக் கொண்ட ஒருவரால் அரசியல் கட்சியைத் துவக்கி அதிகாரத்தை வென்றெடுக்க முடியாது. மக்களை எந்த அளவிற்கு மோசமான பழக்கங்களுக்கு ஆளாக்கி வைத்திருக்கிறார்களோ அதுபோல அரசியலை சீரழித்து வைத்திருக்கிறார்கள். அதாவது தற்போதைய அரசியல் கட்டமைப்பில் நல்லவர்கள், கொள்கை பிடிப்புள்ளவர்கள், இன நலனை முன்னிறுத்துபவர்களால் அரசியல் செய்யவே முடியாத ஒரு சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

இப்படியான சூழலில் தமிழ்த் தேசிய சிந்தனை தேவை, அதன் அவசியம், முக்கியத்துவத்தை கருத்தியல் ரீதியாக விதைப்பதே பெருங்கடினமாக உள்ளது. ஆனால் அது தமிழ்த் தேசிய கருத்தியல் என்பதை உணராமலேயே மக்களிடையே ஒரு தமிழர் நல ஆர்வம் தோன்றியுள்ளதை காண முடிகிறது. அதுதான் மாணவர்களின் மூலமாக ஜல்லிக்கட்டு எழுச்சியாக வெளிப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அதிமுகவில் எதிரெதிர் நிலையில் உள்ள சசிகலாவையும் பன்னீர் செல்வத்தையும் தமிழ்த் தேசியத் தலைவர்களாக பார்க்க முடியாது. இவர்கள் திராவிட அரசியலில ஊறிப்போனவர்கள். ஆனால் அடிப்படையில் இவர்கள் இருவரும் தமிழர்களாக இருப்பதால், நீண்ட காலத்திற்குப் பின்னர் அதிகாரம் தமிழர்களின் கைக்குத் திரும்புகிறது. அதற்கு இவர்கள் ஒரு துருப்பாக உள்ளனர்.

இது தமிழ்த் தேசியக் கருத்தியலின் முதல் சதவீதம் என்றே எடுத்துக் கொள்ள முடியும். மீதியுள்ள 99 சதவீதத்தை யார் சாதிப்பது? இவர்களே சாதிப்பார்களா? என்று கேட்டால் அதற்கு எந்தவித உத்தரவாதமும் கொடுக்க முடியாது. ஆனால் தற்போது இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக இவர்களைப் போன்ற ஆட்சியாளர்கள் தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கத் தொடங்கலாம். அப்போதும் இவர்கள் வேறு வழியில்லாமல்தான் செய்வார்களே ஒழிய உளமாறச் செய்ய மாட்டார்கள்.

ஆனால் அவர்களைத் தொடர்ந்து வரக் கூடிய அரசியல்வாதிகளில் முழு தமிழ்த் தேசியச் சிந்தனை படைத்த தலைவர்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, பன்னீர் செல்வம் எத்தனை கோடிகளுக்குச் சொத்துச் சேர்த்துள்ளார்? சசிகலாவின் எப்படியெல்லாம் பதவியை, பணத்தை தவறாக பயன்படுத்தினார்கள் என்பதெல்லாம் தேவையில்லாத விஷயங்கள். ஏனெனில் இவர்கள் தமிழ்த் தேசிய அரசியலின் முதல் சதவீதமே.

----------


அரசியலில் யார் தகுதி படைத்தவர்?



சாதிப்பாசம் இயல்பானது.

ஒரு வன்னியர் அன்புமணி முதல்வராக வரவேண்டும் என்று ஆசைப்படுவதில்
தவறில்லை. ஒரு பறையர் திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என்று
ஆசைப்படுவதில் தவறில்லை. ஒரு பள்ளர் கிருஷ்ணசாமி முதல்வர் ஆக வேண்டும்
என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஒரு மறவர் பன்னீர் செல்வம் முதல்வர் ஆக
வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஒரு கள்ளர் சசிகலா முதல்வர் ஆக
வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அவர்களின் அந்த ஆசைக்குப்
பின்னே அதற்கான நியாயமும் உண்மைத் தன்மையும் நடைமுறை சாத்தியமும் இருக்க
வேண்டும்.





பதவி - அதிகாரம் என்பது கூர்மையான கத்தி போன்றது. அது எவ்வாறு இனத்தை,
உரிமைகளை காக்க பயன்படுமோ, அதுபோலவே அது தெரிந்தோ தெரியாமலோ
புண்படுத்தவும் செய்யும். இதற்கு அன்புமணியோ, திருமாவளவனோ, பன்னீர்
செல்வமோ, சசிகலாவோ விதிவிலக்கு அல்ல. அது அவருக்கும் அவர் சார்ந்த
குடும்பத்தாருக்கும் கெட்ட பெயரையே ஏற்படுத்தும்.

ஆனால் அன்புமணியை முதல்வர் பதவியில் அமர வைக்காமலேயே அவர் ஊழல்வாதி,
மோசடி பேர்வழி அவர் அங்கே வரவே கூடாது என்று கூறுவது மூடத்தனம் ஆகும்.
இதில் அன்புமணியோ, திருமாவளவனோ, பன்னீர் செல்வமோ, சசிகலாவோ தங்கள்
அரசியல்  செயல்பாட்டிற்காக பணம் திரட்டும்போதுதான் அவர்கள் கெட்டவர்களாக
ஆக அதிக வாய்ப்புள்ளது. அவ்வாறு அவர்கள் பணம் திரட்டும்போது எத்தனை பேர்
கெட்டவர்களிடமிருந்து பணம் வாங்காதீர்கள் நாங்கள் தருகிறோம் என்று முன்
வருகிறார்கள்?

நீங்கள் அரசியல் செய்ய தீய வழிகளில் பணம் சம்பாதித்தவர்களிடம் பணம்
வாங்காதீர்கள், நல்ல வழியில் பணம் சம்பாதித்த நாங்கள் தருகிறோம் என்று
எத்தனை பேர் முன் வருகிறார்கள்? அப்படிச் செய்யாத நாம் எப்படி நம்மை
யோக்கியர்கள் என்றும் அவர்களை அயோக்கியர்கள் என்றும் சொல்ல முடியும்?

சரி, பணம் யார் கொடுப்பார்கள்? யாருக்கு காரியம் ஆக வேண்டுமோ அவர்கள்தான்
பணம் கொடுப்பார்கள். பணம் வாங்குபவர்கள் அவர்களின் வேலையை முடித்து
தருவதுதானே நியாயம்? அப்படியிருக்க யாரை நல்லவர் யாரை கெட்டவர் என்று
சொல்ல முடியும்?

அரசியல் அதிகாரம் என்பது சுலபத்தில் கிடைப்பதில்லை. ஒவ்வொரு தலைவரும்
ஏதாவது ஒருவகையில் உழைத்து, அல்லது தந்திரமாக செயல்பட்டு அதிகாரத்தை
கைப்பற்றியுள்ளனர். அப்படி இருக்க அரசியலில் செயல்பாடு காட்டாத ஒரு
நல்லவர் அந்த அதிகாரத்தை என்னிடம் கொடுங்கள் என்று கேட்டால் அப்படி
அதிகாரத்தை கைப்பற்றியுள்ள அவர் விட்டுக் கொடுப்பாரா? உண்மையில் ஒரு
நல்லவர் அவ்வாறு அதிகாரம் பெற விரும்பினால் அவரிடம் போட்டியிட்டு அரசியல்
செய்துதான் அந்த அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.

ஒரு நல்லவர் ரயிலேற வேண்டும். ஆனால் அவர் ரயிலடிக்கே வரவில்லை. ஆனால் ரயிலேறும் இடத்தில் ஒரு கெட்டவர் இருக்கிறார். அவர்தான் அங்கு ரயிலை பிடிக்க முடியும். இங்கே ரயிலடியில் நிற்பதுதான் தகுதியாக உள்ளது. வீட்டிலிருந்து ரயிலேற ஆசைப்படும் நல்லவரை இங்கு தகுதி கொண்டவராக கருத முடியாது.

அதேவேளையில் முடமாக ரயிலடியில் படுத்திருக்கும் ஒருவருக்கும் அதந்தத் தகுதி இல்லை. ஏனெனில் ரயிலைப் பிடிக்கவும். ரயிலிலிருந்து இறங்கவுமே அவருக்கு மற்றவர்களின் உதவி தேவை. அவரால் எதையும் சாதிக்க முடியாது. இழப்புகளையே ஏற்படுத்த முடியும். இதில் நல்லவருக்கும் கெட்டவருக்கும் ஒரே இடம்தான் உள்ளது. நல்லவர் அந்த தீயவருடன்
போட்டியிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றாதவரை அதிகாரத்தை கோருவதற்கான தகுதி
அவருக்கு இல்லை என்றே பொருளாகும்.

------------------------

Friday, February 10, 2017

சாதி பாசம் இருப்பது இயல்பானது

Pollachi Kumaresan


Perumal Ammavasi Thevan அவர்களே நீண்ட நாட்களாக உங்கள் பதிவை கவனித்து வருகிரேன், அதில் சாதி பாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது, அதிலும் சசிக்கலாவை நீங்கள் தாங்கிபிடிக்க முயல்வதும் அப்பட்டமாக தெறிகிறது, ஒருவர் தானாக மட்டும் விழுந்தால் தாங்கி பிடிக்கலாம் ஒரு மானிலமே தள்ளிவிடும் ஒருவரை ஒரு சிலர் தாங்கி பிடிக்க எண்ணுவது முட்டாள் தனத்தின் உச்சகட்டம், நாங்கள் அதிமுக இல்லை அதே சமயம் தேவரும் இல்லை என்றாலும் தேவர் சமுகத்தை சேர்ந்த பன்னீர் ஆட்சிக்கு வர நினைக்கும் எங்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் சமதர்மத்தை.

- திரு குமரேசன் அவர்களுக்கு வணக்கம்.

தமிழர் என்ற முறையில் நான் சசிகலா-பன்னீர் செல்வம் ஆகிய இருவரையும் சமமாகவே பார்க்கிறேன். மற்றபடி எல்லாருக்கும் சாதி பாசம் இருப்பது இயல்பே. அது தமிழினத்தின் அடிப்படைக் கூறாக உள்ளது. சாதி கெட்டது என்று திராவிடர்களால் கற்பிக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தால் நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போதைய சூழலில் சசிகலா-பன்னீர் செல்வம் இருவருமே மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் கிடையாது. இவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசும் கிடையாது.
தமிழ்த் தேசியவாதிகளான எங்களுடைய பார்வையில் இவர்கள் இருவரும் சமமே. இவர்கள் அல்லாமல் இவர்களின் இடத்தில் டாக்டர் ராமதாஸ் அவர்களோ அல்லது திருமாவளவனோ அல்லது ஜி.கே. வாசனோ அவர்கள் தமிழர்கள் என்ற முறையில் யார் இருந்தாலும் எங்களது நிலைப்பாடு இதுவே.

ஆனால் கள நிலவரங்களைப் பார்க்கும்போது பன்னீர் செல்வம் அந்நிய சக்திகளுக்கு விலை போய் விட்டதாக தெரிகிறது.

சசிகலாவுடன் ஒப்பிடுகையில் பன்னீர் செல்வத்திற்கு கட்சிக்குள் ஆதரவு கிடையாது. இவர்களில் யாரும் நல்லவர் என்று நான் சொல்லவில்லை. எனவே ஒரு தமிழர் குடும்பத்திற்கு அதிகாரம் சென்று விடக் கூடாது என்பதில் அந்நிய சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இதை கடந்து வருவதே சசிகலாவின் அரசியல் திறமையை நிரூபிப்பதாக இருக்கும். சசிகலாவை இந்த அளவு எதிர்க்கும் இந்த நபர்கள் நாளை பன்னீர் செல்வத்திற்கு என்னவிதமான குடைச்சல் கொடுப்பார்கள் என்று சொல்ல முடியாது.


எனவே உண்மையில் பன்னீர் செல்வம் சசிகலாவை எதிர்த்தது அவரது அரசியல் வாழ்வுக்கு மட்டுமல்ல அதிமுக கட்சிக்கும் தமிழர்களின் நலனிற்கும் தீதே.

இருந்தாலும் சசிகலாவை வென்று அவர் தன் தலைமையிலான அரசி நிறுவி அதிமுகவை திறம்பட நடத்தி வநதார் என்றால் அவருக்கும் எனது ஆதரவு உண்டு. பன்னீர் செல்வம் முக்கியமான நேரத்தில் தவறான வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறார் என் கருத்து.

Tuesday, February 7, 2017

தமிழர் யார், தெலுங்கர் யார்?


அண்ணன் Perumal Ammavasi Thevan, ஒரு சந்தேகம்... தீர்த்து வையுங்க.

ஒரு 100 வருசத்துக்கு முன்ன,
மதுரை செட்டியார், கோயமுத்தூர் நாடார், விழுப்புரம் தேவர் என்று பத்து
பதினைந்து குடும்பங்கள் ஐதராபாத்தில் வந்து குடியேறுகிறார்கள் ......
ஏதோவொரு காரணத்திற்காக, இவர்கள் அதற்கு பிறகு தெலுங்கர்களிடையே திருமணம்
செய்து கொள்கிறார்கள்... காலப் போக்கில் தங்களது தாய்மொழி தமிழை மறந்து
விடுகிறார்கள்... இப்போது அந்த குடும்பங்களில் தாய்மொழி #தெலுங்கு.....
இந்த தலைமுறையில் அங்கு ஒருவருக்கு பெயர் #தமிழ்_மறவன் ....

இப்ப, இவர் தமிழரா, தெலுங்கரா?

அதே மாதிரி ,

ஒரு 100 வருசத்துக்கு முன்ன,
சித்தூர் நாயுடு, ஐதராபாத் ரெட்டி, விசாகப்பட்டினம் ராவ், ஓங்கோல்
நாயக்கர் என்று பத்து பதினைந்து குடும்பங்கள் மதுரைப் பக்கம் வந்து
குடியேறுகிறார்கள் ... ஏதோவொரு காரணத்திற்காக, இவர்கள் அதற்கு பிறகு
தமிழர்களிடையே திருமணம் செய்து கொள்கிறார்கள்... காலப் போக்கில் தங்களது
தாய்மொழி தெலுங்கை மறந்து விடுகிறார்கள்... இப்போது அந்த குடும்பங்களில்
தாய்மொழி #தமிழ் .....
இந்த தலைமுறையில் அங்கு ஒருவருக்கு பெயர் #தெலுங்கு_ரெட்டி ....

இப்ப, இவர் தெலுங்கரா, தமிழரா?


அன்புத் தம்பி S Manickavasagam அவர்களுக்கு,

நீங்கள் கூறிய எடுத்துக் காட்டு ஒன்றின் கீழ் வரும் வகையினருக்கு தமிழர்
வழித்தோன்றிய தெலுங்கர் என்றும் எடுத்துக் காட்டு இரண்டின் கீழ் வரும்
வகையினருக்கு தெலுங்கு வழித் தோன்றிய தமிழர் என்றும் சொல்லலாம்.

இதனை இன்னமும் சுருங்கக் கூறின் முதல் வகையினரை தமிழர் வழித்தோன்றல்கள்
என்றும் இரண்டாம் வகையினரை தெலுங்கு வழித்தோன்றல்கள் என்றும்
குறிப்பிடலாம்.

இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

பொதுவாக நாம் ஒருவர் தமிழரா அல்லது வேற்று மொழியினரா என்று ஏன் பார்க்கத்
தொடங்கினோம் என்று ஆராய்ந்தால் இவ்வாறு சிலர் இருப்பதில் எந்தச்
சிக்கலும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு நாடு என்பது
பெரும்பான்மையாக ஒரு இனம்-மொழி பேசும் மக்களைக் கொண்டதாக இருந்தாலும்
பல்வேறு இன-மொழி மக்கள் வாழக்கூடிய பகுதியாகவே இருக்கும்.

அவ்வாறு இருக்கும்போது ஒரு தெலுங்கர் தமிழ் நாட்டிலோ ஒரு தமிழர்
ஆந்திராவிலோ வசிப்பதில் தவறில்லை. ஒரு தெலுங்கர் தமிழரை திருமணம்
செய்துகொள்வதிலும் ஒரு தமிழர் தெலுங்கரை திருமணம் செய்துகொள்வதிலும்
தவறில்லை. அது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை, சூழல் சந்தர்ப்பங்களைப்
பொருத்தது. ஆனால் பிரச்சனை எப்போது எழுகிறது என்றால் ஒரு தெலுங்கர் தன்னை
தமிழர் என்று கூறி ஏமாற்றி அரசியல் செய்யும்போதுதான் ஏற்படுகிறது.
எனவேதான் ஒரு ஆட்சியாளர் தமிழரா அல்லது வேறு மொழி பேசுபவரா என்பதை நாம்
ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

நீங்கள் எடுத்துக் காட்டாக கூறிய கலப்பு இனத்தவர் தங்களை இன்னாரென்று
வெளிப்படையாகக் கூறி அரசியலில் ஈடுபடுவதிலும் தவறில்லை. தேர்தலில்
அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்போது அவர்களை ஆந்திரா-தமிழ்நாடு
இடையிலான பிரச்சனைகளை தீர்க்கும் பிரதிநிதிகளாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் அவர்களை தலைமை பொறுப்புகளில் அமர்த்த முடியாது. அதுதான் முக்கியப்
பிரச்சனையே தவிர அவர்கள் கலப்பு இனமாக இருப்பதில் எந்த பிரச்சனையும்
இல்லை.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...