Friday, January 31, 2020

யார்_அந்த_ஆதித்தமிழன்

சென்ற பாகத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தை, தமிழர் நாகரிகம் என நிறுவிய மதிப்பிற்குரிய ஐராவதம் மகாதேவன் ஐயாவை பற்றிய சிறுகுறிப்பை பார்த்தோம்.
இனி அவருடைய ஆய்வில் யாரை ஆதித்தமிழராக சுட்டிக் காட்டுகிறார் என்று பார்ப்போம்.
சிந்துசமவெளியில் கிடைத்த குறியீடு எழுத்துக்களின் வளர்ச்சியில் தமிழ் எப்படி உருப்பெறுகிறது என்பதை தமிழ்நாட்டில் உள்ள ஒரு பூர்வீக பழங்குடியின் பெயரையும் அவர்தம் பண்பாட்டின் அடிப்படையை வைத்து மிகவும் நேர்த்தியாக பினைத்துள்ளார்.
தமிழ் மொழி என்பது இயற்கையின் மொழி என உலக ஆய்வாளர்கள் அனைவரின் கூற்று:-
அதனால் தான் தமிழ் மொழியை, தொல் மொழி என வர்ணிக்கின்றனர்.
தமிழ் மொழியில் #வலிமையை உணர்த்தும் வார்த்தைகளை நாம் பட்டியல் எடுத்துக் கொண்டால், நம்மால் தவிர்க்க முடியாத வார்த்தை #கள_கல_கழ
என்பதாகும்.
மேற்கோள் காட்டிய வார்த்தையில் ள,ல,ழ என்பது எழுத்துகள் உருவாகும் முன்பு அது ஒலியின் அடிப்படையில் ஒரே வார்த்தையை குறிக்கும்...!
பிற்காலத்தில் எழுத்துகள் உருவாகிய போது அதுவும் 2000வருடத்திற்கு முன்பு தான் ல,ழ,ளகரம் கல்வெட்டுகளில் வருகிறது.
ஆக அடிப்படை வார்த்தையாக #கள என்று எடுத்துப் பார்த்தால் அதிலுள்ள வலியையையும்,நாகரிகத்தின் வேரையும் நாம் உணரலாம்.
கள் :-
தமிழரின் ஆகச்சிறந்த உணவு,நடுகற்களில் வீரர்களின் கையில் இருக்கும்
களபம்:-
வலிமையான உயிரினம் யானை
களம் :-
நாகரிகத்தின் நிலைத்த தினை மருத நிலத்தின் வேளாண் நிலத்தின் பெயர்
களை :-
மருத நிலத்தின் உயிர் நாடிச் சொல்
களைஞர் :-
களை எடுப்பவர்
களரி :-
போர்க்களம்,அரங்கம்
களர்:-
நாகரிகத்தின் இடையில் கண்டுபிடிக்கப்பட்ட உப்பு நிலத்தின் பெயர்
களமர்:-
களத்தில் உழுத மருத நில மக்களின் பெயர்
களவி :-
உலகம் தொடர்ந்து இயக்க காரணமான தலைவன்,தலைவி கூடுதல்....!
களாசம் :-
பிரம்பு
களி :-
செருக்கு,இன்பம்
களேபரம் :-
உடல்
கலகம் :-
போர்
கலப்பை :-
மருத நில வேளாண் கருவி
கலம் :-
கப்பல்
கலவர் :-
பரதவர்
கலியன் :-
சனீஸ்வரர்
கழி :-
கடல்
கழியர் :-
பரதவர்
என நாகரிகத்தை வளர்த்தவர்களின் பெயர்களும், வலிமையின் பெயர்களும் கள,கல,கழ போன்ற சொற்களில் இடம்பெறும்...!
சரி இதற்கும் சிந்துசமவெளி நாகரிகத்திற்கும்,தமிழ் வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்.....?
இந்த நாகரிகத்தை எடுத்த சென்ற மக்களின் வேராக இரண்டு தமிழ் பழங்குடிகள் அடையாளப்படுகிறார்கள்...!
களவர்,மழவர்
ஏன் இவ்விரு பழங்குடிகளை எடுத்தார் என்றால்...!
சிந்துசமவெளியில் கிடைத்த குறியீடு எழுத்துகளின் அதிகமாக உள்ள எழுத்துகளின் அடுத்த பரிணாமம்.
கள,மழ என்றே ஆரம்பிக்கிறது. அதற்கான குறியீடு விளக்கத்தை இனைத்துள்ளேன்.
இலக்கியரீதியாகவும் இரு பழங்குடிகளாக களவர்,மழவர் அடையாளம் காணப்படுகிறார்கள்.
மூவேந்தர்களில் மூத்தவராக அறியப்படும் பண்டையனாகிய பாண்டியனை, ஆகோள் மூதூர் கள்வர் என்று அகநானூறில் பாண்டிய மன்னரை பசுக்களை கவர்ந்து செல்லும் கள்வர் தலைவர் என்று அகநானூறு குறிப்பிடுகிறது
கிபி50ல் வாழ்ந்த மதுரை கணக்காயர் “கள்வர் பெருமகன் தென்னன்” என்று பாண்டிய மன்னனை கள்வர் தலைவர் என்று பாடியுள்ளார்.
வேங்கடத்தை ஆண்ட வலிமைமிக்க மன்னரான புல்லி அரசரை “கள்வர் கோமான் புல்லி” என்று கள்வர் தலைவர் என்று அகநானூற்றில் அறியப்படுகிறார்.
களவர் தலைவராக புல்லி எப்படி வருகிறாரோ...!
அதேபோல் மழவர் தலைவராக ஓரி வருகிறார்.
அதனை அகநானூறில் “மழவர் பெருமகன் மாவள் ஓரி” என மழவர் தலைவராக ஓரி அடையாளம் காட்டப்படுகிறார்.
மேலும் அகநானூறு 61ல் மழவர்களுக்கென்று தனி நாடு இருந்ததை #மழபுலம் என கூறுகிறது. இளம்பூரணாரும் மழவர் நாடு என்றே சுட்டிக்காட்டுகிறார்.
மழவர்களே வெட்சி மற்றும் கரந்தை எனப்படும் ஆகோள் பூசல்களில் ஈடுபடும் வீரர்களாக வருகிறார்.
அம்மழவர்களை அடக்கிய களவர் தலைவர் புல்லி என அகநானூறு உரைக்கிறது.
“மழபுலம் வணங்கிய மாவண் புல்லி”
மழவர் என்போர் இளையர் என தொல்காப்பியர் விளக்கம் கொடுக்கிறார்.
கள்வர் கோமான் புல்லி அகநானூறு 83ல்
“இளையர் பெருமகன் புல்லியாகவும் அறியப்படுகிறார்.
சோழனையும்:-
இளையர் பெருமகன் - தொகுபோர்ச் சோழன்
ஆக களவர்,மழவர் இருவரும் ஒரே புள்ளியில் தான் வருகிறார்கள்.
இன்றும் கள்ளர்களில் இளம்பூண்டார்,மழவர்,மழவரார்,மழவராயர்,அதியமார்,கோவலர் பட்டம் உள்ளதை நினைவில் கொள்ளவும்.
இவ்விரு பழங்குடியின் கள,மழ என்ற சொல்லில் இருந்தே சிந்துசமவெளி நாகரிகத்தின் குறியீடு எழுத்துக்கள் பரிணாமம் அடைகிறது.
கள :- களம்,களவர்,களமர்,களபம்
மழ :- மலை,மட்டி,மழவர்
இவ்விரு மக்களும் மனித நாகரிகத்தின் அடிப்படை தினைகளான குறிஞ்சி,முல்லையில் பெரும்பான்மையாக அடையாளப்படுகின்றனர்.
இலக்கியரீதியாக :- களவர்,மழவர்,கோவலர்,ஆயர்
கலாச்சாரரீதியாக :- ஏறுதழுவுதல்,ஆநிரை கவர்தல்
இன்றும் தமிழ் நாட்டில் ஏறுதழுவுதல் 119கள்ளர் நாடுகளிலும் தொடர்ச்சியாக இன்றும் விளையாடப்படுவது அனைவரும் அறிந்ததே...!
இதற்கு முன்பாக ஏறுதழுவுதல் பதிவை பார்க்கவும்.
ஆக ஐராவதம் மகாதேவன் ஐயா அவர்கள் சிந்துசமவெளி நாகரிகம் என்ற ஆதித்தமிழர் நாகரிகம் தற்போது வாழும் கள்ளர் சமூகம் என்று ஆணித்தனமாக ஊன்றியுள்ளார்.
இதற்கு வழுசேர்க்கும் விதமாக ஆசியாவின் மிகப்பழமையான டிஎன்ஏவான M130y மதுரையில் உள்ள கள்ளர் சமூகத்திற்கு உள்ளதை அறிவியல்ரீதியாகவும் உறுதி செய்தது.
சரி களவர்,மழவர் இன்னொரு பெயரில் அழைக்கப்பட்டனர்.
அது யார்...?
அடுத்த பாகத்தில் சந்திப்போம்....!
நன்றி
அகநானூறு
Walking with the Unicorn
Social Organization and Material Culture in Ancient South Asia
Jonathan Mark Kenoyer Felicitation Volume
மற்றும்
விக்னேஸ்வர் பா மாளுசுத்தியார்
சியாம் சுந்தர் சம்பட்டியார்
Sambandamoorthi Mazhavarayar
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு












Thursday, January 30, 2020

தமிழகத்தின் தொன்மையான நடுகல்

தமிழகத்தின் தொன்மையான நடுகல் தேனியில் :-(2400 ஆண்டுகள் பழமையானது)
மதுரைக் கணக்காயனார்
அகநானூறு 342
குறிஞ்சி பாடலில்
" ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலைபுணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்கியான்கிளைஞன் அல்லனோ நெஞ்சே தெனாஅதுவெல்போர்க் கவுரியர் நன்னாட் டுள்ளதை மண்கொள் புற்றத் தருப்புழை திறப்பின்ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்ஏவல் இளையர் தலைவன் மேவார்அருங்குறும் பெறிந்த ஆற்றலொடு பருந்துபடப் பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கைகெடாஅ நல்லிசைத் தென்னன் தொடாஅநீரிழி மருங்கிற் கல்லளைக் கரந்தவவ்வரையர மகளிரின் அரியள்அவ்வரி அல்குல் அணையாக் காலே" எனப் பாடியுள்ளார்.
இதன் விளக்கம் :
கவுரியர் ( பாண்டியர்)நன்னாட்டில் உள்ள மண்ணாலாய புற்றினையுடைய, காட்டரணின் இடத்தைத் திறத்தலோடு, பகைவர் ஆக்களைக் கவர்ந்துகொள்ளும் பழைய ஊரினராய கள்வர்கட்கு முதல்வனும், ஏவுதலைச் செய்யும் வீரர்கட்குத் தலைவனும், பகைவரது அரிய அரண்களை அழித்த வலிமையுடன், பருந்துகள் வந்துகூடப் பகைவரது பலபோரையும் வென்ற, இடியுடன் மாறுபடும் பெரிய கையினையும்,என்றும் கெடாத நல்ல சீர்த்தியினையுமுடையானும் ஆகிய, பாண்டிய மன்னன்!
பாண்டிய நாட்டில் உள்ள பழைய ஊரினராகிய பகைவரின் பசுக்கூட்டங்களை கவர்ந்து வரும் வெட்சிப்போர் புரியும் கள்வர் பெருமக்களின் தலைவன் பாண்டிய மன்னன் என பாண்டியத்தேவர் போற்றப்படுகிறார்.......
இந்தப் பாடல் எழுதப்பட்ட அதே காலகடத்தை சேர்ந்த தமிழகத்தின் பழமையான ஆகொள் நடுகல் கல்வெட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் உள்ள புலிமான் கோம்பை எனும் ஊரில் கிடைத்துள்ளது.
கிட்டதட்ட 2400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பிராமி எழுத்துக்களால் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.இந்த நடுகல் சுமார் 3 அடி உயரமும் 1.5 அடி அகலமும் கொண்டுள்ளது. முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட ஈம சின்னத்தின் ஒரு பகுதியாக இந்த நடுகல் நடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகளிலேயே இந்த கல்வெட்டு தான் பழமையானது என தொல்லியல் துறை கணக்கிட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் எழுதப்பட்ட அகநானூறு பாடல்களில் மதுரையில் ஆகொள் பூசலில் கள்வர்கள் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டோம்.
தமிழகத்தின் மிக பழமையான ஜல்லிக்கட்டு தொடர்பான குகை ஒவியங்கள் உசிலம்பட்டி வட்டத்தில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்வெட்டு நடப்பட்டு இருக்கும் பகுதியில் அதிமான முதுமக்கள் தாழிகள் கிடைத்து உள்ளது.
இவற்றை நோக்கும் போது இப்பகுதியில் பழங்காலம் முதலே மக்கள் வசித்து வருவதும், ஆநிரை கவர்தல், ஜல்லிக்கட்டு ஆகிய நிகழ்வுகள் ஆதிகாலம் தொட்டே இப்பகுதியில் நடந்து வருவதை அறியலாம்.
தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்
( கல்வெட்டு நகல் :- நடுகல் கல்வெட்டுகள் : ர பூங்குன்றன்)


Saturday, January 25, 2020

அமெரிக்கா_ஈரான்_பிரச்சனையை_தூண்டிவிடுவது_யார்?

கடந்த வாரத்தில் ஈரான் குவாட் படைத்தளபதி சுலைமானி அமெரிக்க வான்வெளி தாக்குதலில் மரணமடைந்த நிகழ்வை தொடர்ந்து அமெரிக்க ஈரானிடயே நிலவும் அசாதாரண நிலை சம்பந்தமாக ஏராளமான கட்டுரைகள் காணொளிகள் போன்றவை சமூக வலைத்தளங்களிலும் செய்தி ஊடகங்களிலும் தொடர்ந்து வலம்வருகின்றன அவற்றுள் பல ஈரானின் எண்ணெய் வளத்தை சுரண்ட அமெரிக்க சதி, ஈரானின் அணுஆயுத ஒப்பந்த மீறல், தன் அரசியல் ஆதாயத்திற்காக உக்ரைனை மிரட்டியதாக டிரம்ப் மீது இந்த மாதம் அமெரிக்க செனட்டில் கொண்டுவரப்படும் விசாரணையை திசை திருப்ப ஈரான் மீதான தாக்குதல் மற்றும் மூன்றாம் உலகப்போர் தொடக்கம் என்கிற கண்ணோட்டத்திலேயே இந்த விடயத்தை பார்க்கின்றன. நடந்து வரும் அமெரிக்கா-ஈரான் மோதலுக்கு உண்மையான காரணம் என்ன, இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யார் ? இதனால் யாருக்கு என்ன பயன் அதோடு மட்டுமல்லாமல் தமிழ் தேசிய பார்வையில் இப்பிரச்சனையை அடிவேர் முதல் ஆய்வு செய்து தமிழர்களுக்கு எதார்த்த புரிதலை ஏற்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்
#உருவாக்கப்பட்ட_டிரம்ப்_பாம்பியோ_பென்ஸ்_கூட்டணி
ஈரான் படைத்தளபதி சுலைமானி மீதான தாக்குதல் நடந்தவுடன் உலகமே அதிர்ச்சி அடைந்திருந்த போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்பியோ அவர்கள் இந்த தாக்குதலை நியாயப்படுத்தி உடனேயே ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதாவது என் கட்டளைப்படியே இந்த தாக்குதல் நடந்தது என்றும் டிரம்ப்பும் ஈரான் பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் எந்தவித நடவடிக்கையை எடுக்கவும் தயங்கமாட்டார் என பாம்பியோவும் இனி அமெரிக்கர்கள் அமைதியாக வாழலாம் என அமெரிக்கா துணை அதிபர் மைக் பென்சும் ஒரு கருத்தை வெளியிட்டார்கள். ஒரு இறையாண்மை மிக்க நாட்டின் மக்கள் பிரசித்திபெற்ற ஒரு பாதுகாப்பு தலைவரை அந்த நாட்டின் உள்ளயே ஊடுருவி படுகொலையை ஏன் அமெரிக்கா நடத்தியது ?
பெரும்பாலான அமெரிக்கா தலைவர்களும் அமெரிக்கர்களும் இந்த நடவடிக்கையை எதிர்க்கும்போது ஏன் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களான அதிபர் டிரம்ப், செயலர் பாம்பியோ மற்றும் துணை ஜனாதிபதி பென்ஸ் மட்டும் தன்னிச்சையாக ஏன் இந்த நிகழ்வை நடத்திருக்கிறார்கள் ? இவர்களின் சித்தாந்தம் என்ன ? ஒத்த கருத்துடைய இந்த மூவரும் எப்படி அமெரிக்காவின் உயரிய பதவிகளில் வந்தனர் ? இதன் பின்புலத்தில் உள்ள அரசியல் என்ன ? யார் இவர்களை இயக்குவது என்பதை நாம் இன்னும் விரிவாக பார்ப்போம்
#பாம்பியோவின்_ஈரானிய_எதிர்ப்பும்_அமெரிக்க_செயலாளர்_பதவியும்
ஈரான் பாதுகாப்பு தலைவர் குவாஸிம் சுலைமணி மீதான தாக்குதல் இன்று நேற்று அல்ல இதன் வியூகம் 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றிபெற்று வந்த நாள் முதலே வகுக்கப்பட்டு வந்திருக்கிறது. 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் டிரம்ப்பும் துணை ஜனாதிபதியாக மைக் பென்சும் தேர்தேக்கப்பட்டனர். இவர்கள் பதவிக்கு வந்த பிறகு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ வின் தலைமை இயக்குனராக மைக் பாம்பியோ 2017 ஜனவரியில் நியமிக்கப்படுகிறார் பிறகு அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை வகுக்கும் வலிமைமிக்க பதவியான அமெரிக்க அரசின் செயலாளராக டிரம்பால் 2018 ஏப்ரலில் நியமிக்கபடுகிறார்.
மைக் பாம்பியோ 2011-2017 வரை அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் பிரதிநியாக பணியாற்றிருக்கும் காலம் தொட்டு ஈரான் மீதான வஞ்சனை அதிகம் அதற்க்கு காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் அமைதியின்மைக்கு ஈரான் தான் முக்கிய காரணமென்று அதிகம் நம்பியவர் அதுமட்டுமல்லாமல் 2014 ஆம் ஆண்டு லிபியாவின் பென்காசி நகரத்தில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட பெங்காசி ஆணையத்தின் 6 பேர் குழுவில் பாம்பியோவும் நியமிக்கப்பட்டார். இந்த அறிக்கை பென்காசி தூதரக தாக்குதலின் பின்னையில் ஈரானின் பங்குஉண்டு என்பதை சொல்லியது மேலும் 2013 ஆண்டு பாஸ்டன் நகரில் நடைப்பற்ற குண்டுவெடிப்பில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இவரின் பேச்சு மிகவும் சர்ச்சைக்குள்ளானது. மேலும் கடந்த ஒபாமா ஆட்சியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் ஏற்பட்ட அணுஆயுத ஒப்பந்தத்தை முற்றிலும் எதிர்த்தவர்தான் பாம்பியோ. இராணுவ ரீதியாக ஈரான் வலுப்பெற்று வருவதும் இது பாலஸ்தீனிய ஹமாஸ் படைக்கும் லெபனோனின் ஹிஸபுல்லா படைக்கும் பக்கபலமாக இருப்பதும் இதற்க்கு குவாஸிம் சுலைமானியின் ஆளுமை திடமாக இருப்பதும் மைக் பாம்பியோ சற்றும் விரும்பவில்லை. இவரின் இஸ்லாமிய மற்றும் ஈரானின் தீவிர எதிர்ப்புக்கு . இன்னொரு முக்கிய காரணமும் உண்டு அவற்றை கீழே விரிவாக காண்போம்.
#அமெரிக்க_ராஜாங்கத்தில்_இஸ்ரேல்_யூதர்களின்_தலையீடும்
அமெரிக்க ராஜாங்கத்தில் மிகப்பெரிய தரகு(லாபி) வேலைபார்க்கும் CUFI(Christians United for Israel) என்ற அமைப்பு உள்ளது. கிட்டத்தட்ட 50 லட்சம் உறுப்பினர்களை கொண்ட இவாஞ்சலிக்கல் கிறித்துவ தத்துவத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த CUFI அமைப்பு இசுரேலிய யூதர்களுக்கு ஆதரவாக அமெரிக்க ராஜாங்கத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் அளவிற்க்கு வலுப்பெற்ற ஒரு அமைப்பு. இந்த அமைப்பை ஜான் ஹாஜி என்ற மதபோதகரால் இஸ்ரேல் யூத நலன் சார்ந்த விடயங்களை முன்னெடுக்க 2006 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கமே யூதர்களை மட்டுமே உள்ளடக்கிய பரந்த இசுரேலை மத்திய கிழக்கில் உருவாக்குவது மற்றும் பாலஸ்தீனிய, சிரியா மற்றும் லெபனான் இஸ்லாமியர்களை வெளியேற்றுவது. இவர்களின் அத்தனை குறிக்கோள்களையும் நிறைவேற்ற அமெரிக்காவின் அதிகாகர வர்க்கத்தில் இஸ்ரேல் யூதர்களின் சார்புடைய ஆட்களை பணியமர்த்துவதே இந்த CUFI அமைப்பின் நோக்கம்.அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் செனட் உறுப்பினர்கள் பலர் இந்த CUFI அமைப்பிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் ஆதரவை அளித்துவருகிறார்கள
#2008_அதிபர்_தேர்தலில்_CUFI_தலையீடு
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலேயே CUFI அமைப்பு அதன் வேலையை காண்பிக்க ஆரம்பித்துவிட்டது அதாவது அப்போதைய குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் மெக்கைன் அவர்களுக்கு CUFI ஆதரவு கொடுத்தது காரணம் மெக்கைன் ஒரு தீவிர கிறித்துவ மதநம்பிக்கை உடையவர் மற்றும் ஈரான் எதிர்ப்பு சிந்தனையுடைவர் மேலும் அப்போதய தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமா மேற்கொண்ட ஈரான் சார்பு நிலைப்பாட்டை கடுமையாக விமர்ச்சித்தவர் மெக்கைன். எனவே ஈரான் எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் CUFI தலைவர் ஜான் ஹாஜி மெக்கனை ஆதரித்தார் ஆனால் தன்மீது மதவாத முத்திரை குத்தப்பட்டுவிடும் என்ற காரணங்களுக்காக மெக்கைன் CUFI ஐ விட்டு விலகி நின்றார்.
2008 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் அதாவது 2008 ஜூலை மாதம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைப்பெற்ற CUFI மாநாட்டிற்கு மூன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்றனர் அவற்றுள் முக்கியமானவர் தற்போதைய அமெரிக்க துணை ஜனாதிபதியான குடியரசு கட்சியை சேர்ந்த மைக் பென்ஸ். பென்ஸ் 2008 காலகட்டத்தில் இண்டியான மாகாணத்தின் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார். அப்போதிலிருந்தே மைக் பென்ஸ் CUFI அமைப்போடு இணக்கமாக இருந்து வருகிறார்.
2014ஆம் ஆண்டு பென்ஸ் தன் மனைவியுடன் ஜெருசலேத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க CUFI நிர்வாகமே முழு ஏற்பாடையும் அதற்கான செலவையும் செய்தது. அந்த அளவிற்கு இஸ்ரேலின் விசுவாசி இவர். ஆனால் 2008ல் ஜனநாயக வேட்பாளர் ஒபாமா வெற்றிபெற்று அமெரிக்க அதிபரானார் அதன் பின் ஒபாமா அரசாங்கம் ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டது பின்னர் அமெரிக்க அரசு ஈரான் மீது ஏற்கனவே போட்டிருந்த அணு ஆயுத கொள்முதல் தடையை நீக்கியது. ஒபாமா அரசின் இத்தகைய நிலைப்பாடு இஸ்ரேலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. காரணம் இது ஈரானை சர்வதேச அளவில் அணு ஆயுத கொள்முதல் செய்யவும் மேலும் அணு சக்தி வலிமை மிக்க நாடாக்கவும் வழிவகுக்கும் பின்னாளில் இது இஸ்ரேலுக்கு பிரச்சனையாக அமையும் என்பதால்.
#இஸ்ரேல்_சார்புடைய_CUFIயின்_செயல்திட்டங்கள்
இஸ்ரேல் அரசு மத போதகர் ஜான் ஹாஜியின் CUFI அமைப்பின் ஊடாக அமெரிக்க ராஜாங்கத்தில் தன் காய்களை நகர்த்த தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டது. அதன் படி இவர்களின் செயல் திட்டம் பின்வருமாறு
1. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் கிறிஸ்துவ மதப்பற்றுடைய மற்றும் இஸ்ரேல் சார்புடைய வேட்பாளரை வெற்றிபெற செய்வது.
2. அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைசார்ந்த முடிவுகளை எடுக்கும் சில அரச உயர் பதவிகளில் இஸ்ரேல் சார்புடையவர்களை கொண்டு வருவது.
3. இசுரேலுக்கு பாதகத்தை உருவாக்கும் ஒபாமா அரசின் ஈரான் அணு ஒப்பந்தத்தை கைவிடுவது.
4. யூதர்களின் புனித தளமாக கருதப்படும் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக மாற்றுவது மற்றும் இஸ்ரேலின் எல்லையை விரிவு படுத்துவது. இதற்கெல்லாம் முட்டுக்கட்டைபோடும் மத்திய கிழக்கில் கோலோச்சும் ஈரானை முற்றிலுமாக அழிப்பது.
மேற்கூறிய அனைத்தையும் உறுதி படுத்துவதுபோல 2016 அமெரிக்க தேர்தல் அமைந்தது எப்போதுமில்லாத அளவிற்கு அமெரிக்காவின் வலது சாரி அரசியல் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு அனைத்து கிறித்துவ இவாஞ்சலிக்கல் அமைப்பும் குடியரசுகட்சி வேட்பாளர் டிரம்பிற்கு ஆதரவு அளித்தது. அதேபோல CUFI அமைப்பின் வளர்ச்சியும் தாக்கமும் 2016ல் தேர்தலுக்கு முன்பே அமெரிக்கர்கள் மத்தியில் அதிகமாகி கொண்டிருந்தது. 2006ல் சில ஆயிரங்கள் உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பு 2015ல் 20 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் அளவிற்கு விஸ்வரூபமாக வளர்ந்திருந்தது. இவர்கள் சமூக வலைத்தளத்தை முக்கியமாக முகநூலை ஒரு கருவியாக பயன்படுத்தி அமெரிக்க தேர்தலில் ஒரு மாபெரும் தாக்கத்தை உருவாக்கினர்.(அதேபோன்று தற்போதும் சுலைமானி கொல்லப்பட்டபிறகு அதிபர் டிரம்ப்பின் செயல்பாட்டுக்கு ஆதரவாக முகநூல் கிட்டத்தட்ட 800 க்கும் மேற்பட்ட வெவ்வேறு விளம்பரங்களை வெளியிட்டது). இதைப்பற்றி டிஜிட்டல் ஒடுக்குமுறை என்ற கட்டுரையை தமிழர் ஆய்வுக்கூடம் ஏற்கனவே வெளியிட்டது. CUFI அமைப்பின் இத்தகைய செயல்பாடுகளின் பலனாக 2016ஆம் ஆண்டு தேர்தலில் குடியரசு கட்சியின் டிரம்ப் அமெரிக்க அதிபரானார் மற்றும் மைக் பென்ஸ் துணை அதிபரானார். பின்னாளில் பாம்பியோ அமெரிக்க செயலாளர் பதவியில் குடியரசு கட்சியின் பெரும்பான்மை மிகுந்த செனட்டால் அமர்த்தப்பட்டார்.
2016 அமெரிக்க தேர்தலில் டிரம்ப் மற்றும் பென்ஸ் வெற்றிபெற்ற ஒருசில மாதத்திலேயே CUFI அமைப்பு நடத்திய 2017 ஜூலை மாநாட்டில் மைக் பென்ஸ் வெளிப்படையாகவே 'நான் ஒரு கிறித்தவன் என் மத கோட்பாட்டின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே செயல்படுவேன்' என்று கூறியிருந்தார் மேலும் ஈரானுடைய வளர்ச்சி முடக்கப்படும் என்றார். டிரம்ப் மற்றும் பென்சால் அமெரிக்க செயலாளராக நியமிக்கப்பட்ட பாம்பியோ 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவை இஸ்ரேலில் சந்தித்தார் இந்த சந்திப்பிற்கு பிறகு ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இஸ்ரேலுக்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் இல்லையேல் இந்த ஒப்பந்தமே முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினார் மேலும் ஈரானை எதிர்க்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவும் என கூறினார். இந்த சந்திப்பு நடந்த இரு வாரங்களுக்குள் டிரம்ப் ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா கைவிடுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். JCPOA (Joint Comprehensive Plan of Action ) எனப்படும் ஈரானுடனான ஒப்பந்தம் 2018 மே 18 அன்று முடிவிற்கு வந்தது. இதற்கு டிரம்ப் சொன்ன காரணம் ஈரான் இந்த ஒப்பந்தத்தின் ஓழுங்கு முறைகளை சரியாக கடைபிடிக்கவில்லை என்று ஒரு குற்றசாட்டை வைத்தார் ஆனால் சர்வதேச ஆயுத கட்டுப்பாட்டு அமைப்போ (Arm Control Association) ஈரான் இந்த ஒப்பந்தத்தின் ஒழுங்குமுறைகளை சரியாக கடைபிடிக்கிறது என்று ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. இதன் மூலம் அமெரிக்க ஈரானை கட்டம்கட்ட வேண்டும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்து தற்போது ஒரு கண்துடைப்பு நாடகம் ஆடிவருகிறது என்பது தெளிவாகிறது. மேலும் இஸ்ரேல் யூத தரகு அமைப்பான CUFI யின் செயல்திட்டத்தில் ஒன்றான ஈரான் அணுஒப்பந்தம் பாம்பியோ மூலமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதோடு மற்றும் நின்றுவிடவில்லை ஈரானில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர அமெரிக்காவும் இசுரேலும் இன்னொரு சதித்திட்டத்தை தீட்டின அதாவது நேரடியாக சண்டையிடாமல் தனது நட்பு நாடுகளிடம் இந்தியா உட்பட ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று 2019 ஏப்ரல் மாதத்தில் கட்டுப்பாடு விதித்தது இதன் மூலம் ஈரான் பொருளாரதார ரீதியாக பாதிக்கப்பட்டு ஈரானியர்கள் தனது ஆட்சியாளர்களுக்கு எதிராக திரும்புவார்கள் என எதிர்பார்த்தது ஆனால் ஈரான் அதிபர் ஹாசன் ரௌஹானி மற்றும் பாதுகாப்பு தலைவர் சுலைமானியின் சிறந்த நிர்வாக ஆளுமை மற்றும் பொது மக்களின் ஆதரவு போன்றவற்றால் ஈரானின் பொருளாதாரமும் வேலைவாய்ப்பும் பலமடங்கு உயர்ந்தன. இதனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரானுடைய ஆட்சிமாற்ற கனவு பலிக்கவில்லை. ஒருபக்கம் ஈரான் பொருளாதார ரீதியாகவும், தொழிநுட்ப மற்றும் இராணுவ ரீதியாக பலம் பெற்று வரும் நிலையில் இது மேலும் இஸ்ரேலுக்கு சிக்கலை கொண்டு வரும் என்ற அச்சத்தின் வெளிப்பாட்டில் ஈரானை நிலைகுலைய சுலைமானியை அமெரிக்காவினூடாக பதம்பார்த்துள்ளது இஸ்ரேல் இதற்கான அத்தனை வேலையும் அச்சு பிசையாமல் செய்துகொடுத்தது CUFI அமைப்பு.
இதுமட்டுமல்லாமல் இஸ்ரேலின் பலநூறு ஆண்டுகள் லட்சியமான பாலஸ்தீனத்தின் ஜெருசலேத்தை 2018 ஏப்ரலில் ஆக்கிரமித்து இஸ்ரேலின் தலைநகராக்கி அதற்க்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் தூதரகத்தை ஜெருசலேத்தில் நிறுவி அதற்க்கு தம் கைகளிளாலேயே திறப்பு விழா செய்யும் அளவிற்கு ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கிறது யூத சார்பு CUFI அமைப்பு இந்த அமைப்பின் தலைவர் மதபோதகர் ஹாஜிதான் இதன் திறப்பு விழாவை நடத்தி அங்கேயே ஒரு ஜெப கூத்தை நடத்தினார்.
மேலும் இஸ்ரேலின் மற்றொரு லட்சியமான எல்லை விரிவாத்தின் ஒருபகுதியாக சிரியாவின் கோலன் பகுதியை ஆக்கிரமித்து அதற்கு அமெரிக்காவின் அமெரிக்காவின் அங்கீகாரத்தையும் பெற்றது இஸ்ரேல் .
இவர்களின் இன்னுமொரு குறிக்கோள் தான் ஆக்கிரமித்துவைத்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியை (West Bank) அமெரிக்காவின் ஊடாக சர்வதேச அங்கீகாரத்தை பெறுவது. இதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது CUFI அமைப்பு. இசுரேலின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து போரிடும் பாலஸ்தீன, சிரியா மற்றும் லெபனோனின் ஆயுத குழுக்களான ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கு ஈரானின் படை தலைவர் சுலைமானி ஆதரவாக இருந்ததால்தான் கொல்லப்பட்டார்.
இஸ்ரேலின் புவிசார் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற CUFI அமைப்பு கடந்த 14 ஆண்டுகளாக இப்படிதான் தீவிரமாக செயல்பட்டு அமெரிக்க ராஜாங்கத்திலே ஊடுருவி அதன் பலனை தற்போது அடைந்துவருகிறது. கிட்டத்தட்ட அமெரிக்காவையே தன அடியாள்போல் மாற்றிவைத்துள்ளது இஸ்ரேல்.
அமெரிக்கா என்பது பல இனத்தவர் மொழியினர் மதத்தினர் ஆகியோரின் கூட்டுமுயற்சியினால் அறிவியல், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு ஜனநாயக நாடு. அப்படிப்பட்ட நாடு இவாஞ்சலிகள் மற்றும் இஸ்ரேல் யூத லாபியினால் இஸ்ரேலுக்கான அடியாளாக மாறிவருவது எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கும் அமெரிக்க மக்களுக்கும் பல பாதகங்களை கொடுக்க வாய்ப்புள்ளது.
#இந்தியாவின்_மத்தியகிழக்கு_வெளியுறவு_கொள்கையில்_இந்துத்துவ_தலையீடு
காலங்காலமாக ஈரானின் நட்பு வட்டத்திலிருந்த இந்தியாவின் நிலையை நாம் கூர்ந்து கவனிப்பது அவசியம். என்னதான் ஈரான்-அமெரிக்கா விடயத்தில் இந்தியா நடுநிலை என்று காட்டிக்கொண்டாலும் எதார்த்த நிகழ்வு அப்படியில்லை. காலங்காலமாக பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டிருந்த இந்தியா சமீபகாலமாக இஸ்லாமிய எதிர்ப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை எடுத்துக்கொண்டு வருகிறது. உதாரணமாக பாலஸ்தீனத்தை மையமாக கொண்டு இயங்கும் "ஷஹீத்" என்ற மனித உரிமை அமைப்பிற்கு பார்வையாளர் அந்தஸ்து கொடுக்க ஐநா 2019 மே மாதம் எடுத்த வாக்கெடுப்பிற்கு இந்தியா வரலாற்றில் முதன் முறையாக ஒரு மனித உரிமை அமைப்பிற்கு எதிராக இஸ்ரேலின் பேச்சைக்கேட்டு வாக்களித்தது. இந்தியாவை தவிர எந்தவொரு ஆசிய நாடும் இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.
இந்திய சுதந்திரம் அடைந்து இதுவரை இஸ்ரேல் இந்தியாவின் மிகப்பெரிய நட்பு வட்டத்தில் இருந்ததில்லை காரணம் சுதந்திர போராடட்டத்தில் இந்திய விடுதலை இயக்கங்களின் ஜெர்மனியின் தொடர்பு மற்றும் பாலஸ்தீனிய ஆதரவு போன்ற காரணிகளால் அதிருப்தியில் இருக்கும் இஸ்ரேலை திருப்தி செய்யவே மோடியின் அரசு இஸ்ரேல் ஆதரவு செயலில் ஈடுபடுகிறது.மேலும் கடந்த சில வருடங்களாக "இஸ்ரேலுக்கான இந்தியர்கள்" (Indians for Israel) என்ற அமைப்பு ஜெர்மனியில் மையமாக கொண்டு இயங்கிவருகிறது. “விஜேதா உனியேல்” என்ற தொழிலதிபர் இந்த அமைப்பை நடத்திவருகிறார் இவர் ஒரு பத்திரிக்கை மற்றும் எழுத்தாளரும் கூட. கடந்த சில வருடங்களாக இவர் எழுதிவரும் கட்டுரைகள்,இஸ்ரேலிய இந்தியா அரசு அதிகாரிகளின் பங்கேற்கும் கூட்டங்கள் அனைத்தும் ஒருவித சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன. காரணம் ஜெர்மனியில் இருக்கும் இவரின் கட்டுரைகள் அனைத்தும் இஸ்ரேலின் அனைத்து முக்கிய ஊடகங்களிலும் வெளியிடப்படுகின்றன. முக்கியமாக 2015 ஆம் ஆண்டு இஸ்ரேல்-பாலஸ்தீன பற்றிய விவாதம் ஐநாவில் வரும்போது RSS,ABVP, BJP, VHP போன்ற இந்துத்துவ அமைப்புகள் #IndiaWithIsrael என்ற ஹாஷ் டேக்யை ட்விட்டரில் பிரபலப்படுத்தின இதனை மையமான கொண்டு ஒட்டுமொத்த இந்தியர்களும் ஹிந்துக்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கின்றனர் முன்பை போல இல்லாமல் இனி இசுரேலியா இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் வரும் என்று விஜேதா உனியேல் எழுதிய கட்டுரை இசுரேலின் பல முக்கிய நாளிதழிகைள் வெளிவந்துள்ளன. இதேபோன்ற இவர் எழுதிய பல கட்டுரைகளும் இசுரேலின் பல முன்னனி ஊடகங்களில் வெளிவந்துள்ளன. கிட்டத்தட்ட இவர் இஸ்ரேல்-இந்திய தரகராகவே (lobbyist ) செயல்படுகிறார். மேலும் இந்த இஸ்ரேலுக்கான இந்தியர்கள் அமைப்பு செயல்பாட்டின் ஒருபகுதியாக 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி மும்பையில் யூத ஜியோனிச மற்றும் இந்துத்துவத்தின் இடையிலான ஒற்றுமை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரமணிய சுவாமியும் ஜெருசலேம் பல்கலைக்கழகத்தின் பேராசியரும் கலந்துகொண்டு இஸ்லாமிய, கம்யூனிச மற்றும் பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரான பலதரப்பட்ட கருத்துக்களையும் செயல்பாட்டினையும் முன்வைத்தனர். இதன் மூலம் ஹிந்துத்துவ சக்திகள் எவ்வாறு இஸ்ரேலுடன் உறவை வளர்க்க ஆசைப்படுகின்றன என்பதை நாம் அறியலாம். .
1930 இல் இந்துத்துவ அமைப்புகளின் பரமப்பிதாவான சாவர்க்கர் ஒருமுறை பாலஸ்தீனம் யூதர்களின் நிலமாக மாறும்போது யூதர்கள் எப்படி மகிழ்வார்களோ அதேபோல இந்துக்களும் அந்த மகிழ்ச்சியை கொண்டாடுவர் என கூறியுள்ளார் மேலும் 1950 களில் இந்தியா ஐநாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் போது கண்டித்தவர் இந்த சாவர்க்கர். இன்று அவர்களின் இந்துத்துவ ஆட்சி பெரும்பான்மையோடு இருக்கும்போது இவர்களின் குருவான சாவர்க்கரின் ஆசையை நிறைவேற்ற போவாமல் போகப்போகிறார்களா மோடியும் அமித்ஷாவும் ? மேலும் மத்தியில் ஆளுகின்ற இந்துத்துவ கட்சியான பாஜகவும் இந்தியாவின் தூதரகத்தை ஜெருசலேத்தில் அமைக்க ஒரு திட்டத்தை தீட்டி வருகின்றன. ஒருவேளை இந்த திட்டம் நிறைவேறினால் இந்தியாவின் எதிர்காலம் பூலோக அரசியல் ரீதியாக ஒரு கேள்விக்குறியாகும்.
இந்த நேரத்தில் நாம் இன்னொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் அதாவது ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றுகுவிக்க காரணமான பௌத்த மத தீவிரவாத அமைப்பான பொதுபல சேனாவுடனும் (BSS ) இந்தியாவின் RSS அமைப்பு கூட்டுவைத்து அதன் பயிற்சிமையங்களை இலங்கையில் 17 மாவட்டங்களில் தமிழர்களுக்கும் தமிழ் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஆரம்பித்துள்ளது.
அதே போல இந்தியாவும் ஈரானிடமிருந்து பெட்ரோல் இறக்குமதியை மிகவும் குறைத்துக்கொண்டது இந்த விடயத்தில் ஈரான்-இந்திய உறவில் சிறிய விரிசல் ஏற்பட்டதாகவே பார்க்கப்படுகிறது மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தபோது ஈரான் தன் கண்டனத்தை தெரிவித்துள்ள நேரத்தில் ஈரான் பாகிஸ்தானுடனும் நல்ல நட்புறவை மேற்கொண்டுவருகிறது. என்னதான் இந்தியா ஈரானில் சப்பார் துறைமுகத்தை கட்டிக்கொண்டு இருந்தாலும் இந்தியா மற்றும் ஈரானின் உறவு சுமூகமாக இருக்கிறது என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது காரணம் இந்த துறைமுகத்தை அமெரிக்காவின் ஒப்புதலோடுதான் கட்டிவருகிறது மேலும் சுமார் 85 மில்லியன் அமெரிக்க டாலரை இந்தியாவிற்கு கொடுக்க அமெரிக்க அரசு முன்வந்துள்ளது இதற்க்கு காரணம் சீனா தனது படைத்தளத்தை பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் கட்டிவருகிறது இதிலிருந்து ஈரானின் சப்பார் துறைமுகம் கிட்டத்தட்ட 100 கடல் மைல் தொலைவிலேயே இருக்கிறது. பிற்காலத்தில் சீனாவோடு பிரச்னை ஏற்பட்டால் அமெரிக்க இந்த துறைமுகத்தை இந்தியாவின் ஊடாக சீனாவிற்கு எதிராக பயன்படுத்தலாம் இது ஈரானுக்கும் ஆபத்துக்காக முடியும் எனவே இனி ஈரான் இந்தியாவை ஒரு சந்தேக கண்ணோடயே பார்க்கும் சூழல் எதிர்காலத்தில் வரும்.
#மத்தியகிழக்கில்_இனி_என்ன_நடக்க_வாய்ப்பிருக்கிறது ?
ஒருபக்கம் சீனா தன் "One Belt One Road" திட்டத்தின் மூலம் ஐரோப்பாவின் பல்கேரியா , செக் குடியரசு , குரோஷியா , எஸ்டோனியா , ஹங்கேரி , லாட்வியா, லிதுவேனியா , போலந்து , ரோமேனியா , ஸ்லோவாகியா , ஸ்லோவேனியா உள்ளிட்ட 15 நாடுகளையும் ஆப்பிரிக்காவின் கென்யா மத்திய கிழக்கில் துருக்கி , ஈரான் , ஆப்கானிஸ்தான் ஆசியாவில் இலங்கை பர்மா மலேசியா ஆகிய நாடுகளை தரை மற்றும் கடல்மார்க்கமாக இணைக்கும் பணிகள் 60% வெற்றிகரமாக முடித்துள்ளது. ஈரானும் பொருளாதார மற்றும் ஏவுகணை போன்ற தொழில்நுட்பத்தில் முன்னிலையில் வந்து கொண்டிருக்கிறது.
இந்த புவிசார் அரசியலின் மாற்றங்கள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஒரு சிக்கலை ஏற்படுத்தும். இதன் அடிப்படையில் நிச்சயமாக இஸ்ரேல் ஈரானின் வலுவை சீர்குலைக்க நேரடியாக மோதாமல் தன் அடியாள் அமெரிக்காவின் மூலம் பல குடைச்சல்களை தரும் அது பொருளாதார தடையாக இருக்கலாம், இராணு தாக்குதல்களாக இருக்கலாம், உள்நாட்டு கலவரமாக இருக்கலாம் இல்லை அமெரிக்காவில் இரட்டை கோபுர தகர்ப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்தி மத்திய கிழக்கில் ஒரு அசாதரண நிலையை வெகு விரைவில் கொண்டுவர வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
#தமிழர்கள்_நாம்_செய்ய_வேண்டியது_என்ன?
இந்திய 100 கோடி மக்களையும் இந்துக்கள் என வெளியுலகத்திற்கு அடையாளப்படுத்தி அவர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி மோடி என்பதன் போலவும் ஒட்டுமொத்த இந்தியர்களும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் போலவும் மோடியின் இந்துத்துவம் சார்ந்த பல உள்நாட்டு மற்றும் வெளியுறவு கொள்கைகளுக்கு மொத்த இந்தியர்களும் ஆதரவு அளிப்பது போலவும் உலக நாடுகளிடையே இந்துத்துவ அமைப்புகள் கட்டமைத்த போலி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக ஒரு பரப்புரையை மேற்கொண்டுவருகின்றன. இந்திய தன் இந்துத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் புவிசார் அரசியல் ரீதியாக தங்களை பலப்படுத்திக்கொள்ள இந்தியாவின் பல தேசியஇனங்களை பகடைக்காயாக பயன்படுத்திவருகிறது.ஒருபுறம் இந்துத்துவமும் யூத ஜியோனிஸமும் ஒன்று என்று சொல்லி ஒட்டுமொத்த இந்தியாவையும் இஸ்லாமியத்திற்கு எதிராகவும் மறுபுறம் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் பௌத்த இனவாத அமைப்போடு கூட்டணியும் வைத்துவருகிறது.
இது போக வலதுசாரி கட்சிகள் உலகம் முழுதும் தங்கள் ஆட்சியை நிறுவிவும் இந்த தருணத்தில் (அமெரிக்காவில் டிரம்ப், இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் , இந்தியாவில் மோடி, இலங்கையில் கோத்தபாயவும்) உலகம் முழுதுமுள்ள வலது சாரிகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒருங்கிணையும் நிகழ்வும் தொடர்ந்து அரங்கேறிவருகிறது. இந்த வலதுசாரி மற்றும் இஸ்லாமிய பிரச்னைகளுக்கிடையே தமிழர்கள் சிக்கினால் தமிழர் இன விடுதலைக்கு பேராபத்தாகவே எதிர்காலத்தில் இருக்கும்.
இந்திய கட்டமைக்கும் இந்த இந்துத்துவ பிம்பத்திலிருந்து தமிழர்கள் விரைவில் வெளிவந்து நம்முடைய தனித்துவ இன அடையாளத்தை வெளியுலகிற்கு கொண்டுசேர்க்கும் வேலைகளை தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.
#தமிழர்_ஆய்வுக்_கூடம்
Tamils Research Institute (Tamilri)
Copyright © 2009 Tamil Research Institute - All Rights Reserved.

Wednesday, January 22, 2020

தமிழர் என்ற வரையறையில் குல தெய்வத்தின் முக்கியத்துவம்


தமிழர் என்ற வரையறையில் குல தெய்வத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஒரு தம்பி சொன்னார்.
அதாவது, பல தலைமுறைகளாக தமிழகத்தில் வாழும் கன்னடர், மலையாளிகள் போன்றோர் தமிழர்களைப் போலவே பட்டப் பெயர்களை பயன்படுத்திக் கொண்டு சாதிச் சான்றிதழ் பெற்று அரசு பணியிலும் அமர்ந்துள்ளனர் என்று கூறினார்.
எடுத்துக் காட்டாக, பிள்ளை என்ற பட்டத்தைப் பயன்படுத்தும் ஒரு மலையாளி தன்னை வேளாளர் என்று சாதிச் சான்று பெற்று அரசு வேலையில் இருப்பதாக கூறினார். ஆனால் அவரது குலதெய்வத்தைப் பற்றி விசாரிக்கும்போது அது கேரளாவில் இருப்பதாகச் சொன்னதாக தெரிவித்தார். அதேபோல கவுண்டர் என்ற பட்டப் பெயரை பயன்படுத்தி வரும் ஒரு கன்னடரின் குல தெய்வம் மைசூரின் அருகே உள்ளது என்பதையும் தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழர் என்று வரையறை செய்வதில் அவரது சாதி (குலம்), பூர்வீகம் அடிப்படை அலகுகளாக இருப்பதோடு குல தெய்வங்களையும் ஒரு அலகாக எடுத்துக் கொள்ளலாம் என்பது சரியாகவே படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் தமிழராகவே இருந்தாலும் அவரின் செயல்பாடுகளே அவரை தமிழரா இல்லையா என்பதைக் காட்டும்.


Sunday, January 19, 2020

குடியரசுத் தலைவர்கள் ரப்பர் ஸ்டாம்ப்கள் ஆக்கப்பட்ட கதை



அரசியல் சட்டம் படைக்கப்பட்ட தருணத்தில் பண்டிட் நேரு இந்திய பிரதமராக விளங்கினார். அரசியலமைப்பு சட்ட வரை குழுவில் உறுப்பினராக இருந்தார். மத்திய அரசியல் சட்ட குழுவுக்கு தலைவராகவும் பணிபுரிந்தார். அரசியலமைப்பு அவையில் அவரது செல்வாக்கு சிகரமாக இருந்தது. குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்படும் அதிகாரம் நேருவின் தலைமைக்கு செல்வாக்குக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கும் என்ற அச்சத்தில் குடியரசுத் தலைவருக்கு அரசியல் அமைப்பு அவை அதிகாரம் வழங்கவில்லை. குடியரசுத் தலைவர் பிரதமர் சவாரி செய்யும் அழகிய அரேபிய குதிரை ஆக்கப்பட்டார்.

“டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் பிரதமராக இருந்து பண்டிட் நேரு குடியரசுத் தலைவராக விளங்கி இருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்” என்று கே.எம்.முன்ஷி வெளிப்படையாக கூறியிருக்கிறார். எனவே குடியரசுத் தலைவர் - பிரதமர் தலைமையில் உள்ள அமைச்சரவை ஆகியவற்றுக்கு இடையில் உள்ள அதிகாரத்தை அப்போது இருந்த தலைவர்களின் செல்வாக்கின் அடிப்படையில் வரையறை செய்து விட்டனர். கொள்கையின் வழியில் நிர்ணயம் செய்யப்படவில்லை.

அரசியலமைப்பு அவையில் தலைவராக பாபு ராஜேந்திர பிரசாத் விளங்கியபோது குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்று விரும்பினார். நாடாளுமன்ற ஜனநாயகம் பிரதமரின் சர்வாதிகாரத்திற்கு இடமளிக்கக்கூடாது என்று அவர் எண்ணினார். அவையில் அவரே நேரடியாக டாக்டர் அம்பேத்கரிடம் விளக்கம் கேட்டார். டாக்டர் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் தனக்கு நெருக்கடியை உண்டாக்குவார் என்று கருதிய பண்டிட் நேரு பாபு ராஜேந்திர பிரசாத்தை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கேட்டார். வல்லபாய் பட்டேலுக்கு ஒரு கடிதம் எழுதி ராஜேந்திர பிரசாத்தை ஆதரிக்க வேண்டாம் என்றும் வற்புறுத்தினார். நேரு விரும்பியது நடக்கவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். அவரை வல்லபாய் பட்டேல் ஆதரித்தார். பிரசாத் குடியரசுத் தலைவரானார்.

பண்டிட் நேரு எதிர்பார்த்ததுபோலவே குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தமக்குள்ள அதிகாரம் பற்றிய பிரச்சினையை எழுப்பினார். 1951 ஆம் ஆண்டு அதிகாரம் பற்றிய பிரச்சினை எழுப்பினார் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் “சட்ட முன்வடிவு ஒப்புதல் அளிப்பது குடியரசுத் தலைவரின் தன்னிச்சையான அதிகாரத்திற்கு உட்பட்டது குடியரசுத் தலைவர் அமைச்சர்களை நீக்கலாம் பொதுத்தேர்தலுக்கு ஆணையிடலாம் பாதுகாப்பு படைகளை தலைமை தளபதி என்ற முறையில் தளபதிகளை அனுப்பலாம் பாதுகாப்பு தொடர்புடைய விவரங்களை தளபதிகளையும் பெறலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரசாத்தின் மடல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சி. ஷீதல்வாட் அவர்களிடம் குடியரசுத் தலைவர் கடிதத்தில் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து பிரதமர் நேரு கருத்து கேட்டார்.

“குடியரசுத் தலைவர் தமது பணிகளை செய்ய பிரதமரின் தலைமையில் உள்ள அமைச்சரவையில் துணைசெய்ய வேண்டும் ஆலோசனை அளிக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. பிரிட்டிஷ் அரசியல் சட்டப்படி அதன் வழக்கப்படும் குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” என்று சி. ஷீதல்வாட் கருத்து கூறியதுடன் “குடியரசுத் தலைவர் அரசியல் சட்டப்படி உள்ள தலைமை என்ற முறையில் அரசுக்கு எதிராகவும் அமைச்சர்களுக்கு நெருக்கடி ஏற்படும் விதத்திலும் பேசுவதை தவிர்க்க வேண்டும்” என்றும் கூறினார்.

பிரதமர் நேருவுக்கும் குடியரசுத்தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட ஆதிக்கப் போட்டி நீங்கவில்லை. பிரசாத்தை மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்காதபடி தடுத்திட நேரு முயற்சி செய்தார். முடியவில்லை. இரண்டாவது முறையாக பிரசாத் குடியரசுத் தலைவர் ஆனார். இருவருக்கும் இடையில் மோதல் தொடர்ந்தது. பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணமேனன் நியமனம் செய்த சில அதிகாரிகளின் பணிகள் குறித்து பிரசாத்துக்கு திருப்தியில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினார். தலைமை தளபதி என்ற முறையில் தமக்கு அதிகாரம் இருப்பதாகவும் வாதிட்டார்.

இந்திய சட்ட நிறுவனத்தின் கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றபோது பிரதமர் முன்னிலையில் பிரசாத் அதிகாரம் பற்றி பேசினார்.

“குடியரசு தலைவர் அமைச்சரவை ஆலோசனைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் எந்த பிரிவும் இல்லை” என்று கூறியதுடன் “இந்திய குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அவரை கண்டன தீர்மானத்தின் மூலம் நீக்கலாம். எனவே குடியரசுத் தலைவரை இங்கிலாந்து மன்னருடன் ஒப்பிடுவது சரியல்ல” என்று சுட்டிக்காட்டிய அவர் நமது பிரச்சினைகள் நிலைமைகளை பிரிட்டிஷ் முறையுடன் ஒப்பிடக் கூடாது” என்று பேசினார். மோதல் தீவிரமடைந்தது நாடாளுமன்றத்திலும் இது குறித்து பிரச்சினை எழுந்தது இதனால் இருவருக்கும் இடையில் கசப்பு வெறுப்பு அதிகமானது.

பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிரசாத் பாட்னாவில் காலமானார். அவரது இறுதி சடங்கு கூட பண்டிட் நேரு செல்லாது ராஜஸ்தானில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றார். அதுமட்டுமல்ல இறுதி அஞ்சலி செலுத்த சென்ற குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனை போகவேண்டாம் என்று தடுத்தார். நேருவின் பேச்சினை பொருட்படுத்தாது டாக்டர் ராதாகிருஷ்ணன் பிரசாத்தின் இறுதிச் சடங்கில் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

குடியரசுத் தலைவரின் அதிகாரம் தொடர்பாக பிரசாத் எழுப்பிய கேள்வி ஆழமானது, ஆய்வுக்குரியது. அரசியல் சட்டம் குடியரசுத் தலைவருக்கு சாதகமாகவே அமைந்து இருந்தது.
1976 ஆம் ஆண்டு 42 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் கீழ் பிரிவு 741 (1) செலுத்தப்படும் வரை நடுநிலையாளர்கள் பிரசாத்தின் நிலையை ஆதரித்தனர். அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது குடியரசுத் தலைவரின் கடமை அல்ல அமைச்சரவையின் ஆலோசனையை எதிர்த்தும் செயல்படலாம் என்று கே.சந்தானம் கூறியிருக்கிறார்.

பி.என். ராவ் அவர்களும் “அமைச்சரவையின் ஆலோசனைப்படி குடியரசுத்தலைவர் நடக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. எந்த குறிப்பிட்ட பிரச்சனையிலும் அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக அவர் செயல்பட்டால் அது குறித்து நீதிமன்றம் கேட்க முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதன்காரணமாக பிரதமராக வருபவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். இந்த முயற்சியில் நேருவால் விரும்பிய வெற்றியை பெற முடியவில்லை. ஆனால் அவரது மகள் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். டாக்டர் ஜாகிர் உசேன், வி. வி. கிரி, பக்ருதீன் அலி அகமது ஆகியோர் பிரதமர் பயன்படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகள் ஆக விளங்கினர்.

தமக்கு வேண்டிய வரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தால் மட்டும் பிரதமருக்கு நிரந்தர பாதுகாப்பு அமைந்திடாது. அரசியல் சட்டம் திருத்தப்பட்டு தான் பிரதமரின் அதிகாரத்திற்கு அமையும் என்ற உறுதியான எண்ணத்துடன் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பயன்படுத்தி பிரிவு 74 (1)-ல் ஒன்றில் திருத்தம் செய்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இந்த திருத்தம் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது அமைச்சரவை சர்வாதிகாரமாக மாற இடமளிப்பது என்று பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது பிரிவு 74 (1)-ல் மீண்டும் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. ஜனதா அரசு நிறைவேற்றிய 44 வது திருத்தத்தின்படி அமைச்சரவையின் முடிவை மீண்டும் பரிசீலிக்க குடியரசுத் தலைவர் கேட்கலாம். அவ்வாறு அவர் கேட்ட பின்னர் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஏற்ப குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும். ஜனதா அரசு நிறைவேற்றிய திருத்தத்தால் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. குடியரசுத் தலைவருக்கு மீண்டும் பரிசீலிக்க கேட்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் அமைச்சரவையின் முடிவே இறுதியானது. குடியரசுத்தலைவர் அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்ற கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்ப குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டு விட்டதால், அரசியல் சட்டத்தின் 78 வது பிரிவின்படி குடியரசுத் தலைவர், மத்திய அரசின் நிர்வாகம் பற்றிய தகவல் கேட்கும் தருணத்தில் குடியரசுத்தலைவர் கேட்கும் எல்லா விவரங்களையும் அமைச்சரவை கொடுக்க முடியாது என்று பிரதமர் ராஜீவ் காந்தி வாதிட்டார். இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி தக்கார் கமிஷனின் அறிக்கையை குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் பலமுறை கேட்டும் ராஜீவ்காந்தி கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். இது அரசியலமைப்புச் சட்டத்தினை மீறும் செயல் என்று பத்திரிக்கை நிருபர்கள் சுட்டிக்காட்டிய போது “நான் நூற்றுக்கணக்கான மரபுகளை மீறி இருக்கிறேன்” என்று அலட்சியமாக பதிலளித்தார். பிரதமர் ராஜீவ் காந்தியின் பதில் நாடாளுமன்றத்தில் பெரிய பரபரப்பினை ஏற்படுத்தியது. குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் உள்ள ரகசிய கடிதங்கள் பற்றி அவை விவாதிக்கக் கூடாது என்று மாநிலங்களவையின் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தீர்ப்பளித்து ராஜீவ் காந்தியை காப்பாற்றினார்.

அமைச்சரவையின் முடிவு, ஆலோசனைக்கு எதிராக குடியரசுத் தலைவர் எதையும் நிர்வாகத்தில் செய்ய முடியாது என்ற நிலை உண்மையான நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு உறுதுணை புரிந்திடாது.
-       
-இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், ஆலடி அருணா

Sunday, January 12, 2020

பிரமலைக் கள்ளர் சங்கக் கூட்டம்


இன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பிரமலைக் கள்ளர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்கள் வழங்கிய காலண்டரை பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். படத்தில் சங்கத்தின் தலைவர் பொன். அண்ணத்துரை (முன்னாள் காவல் ஆய்வாளர் ஓய்வு), செயலாளர் பா. செந்தில்குமார், பொருளாளர் மா.ச. மணிகண்டன், சட்ட ஆலோசகர்கள் நேதாஜி சிவா, டிஎன்டி குமார், பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

Tuesday, January 7, 2020

அரசத்தேவன் பைக் ஓட்டினான்


05.01.2020 அன்று அரசத்தேவன் பைக் ஓட்டினான்.
(பி.கு. கால் எட்டாதபோதே போதுமான பயிற்சி பெற்று விட்டான். )

ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட 501 கள்ளர்கள்


மருத நாயகம் என்கிற யூசப் கானுக்கு கிபி1759ல் மதுரை கவர்னராக பிரிட்டிஸ் கவுன்சில் அறிவித்து, ஒட்டு மொத்த மதுரையும் பிரிட்டிஸ் கம்பெனியின் காலடியில் கொண்டு வர அறிவுறுத்தியது.
இதனை ஏற்றுக்கொண்ட மருதநாயகம் மதுரையை கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், தென்னகத்தில் உள்ள மற்ற பாளையக்காரர்களை அச்சுருத்தவும், மிகவும் கொடுரூரமான நடவடிக்ககைகளை கையாளுகிறார்.
இதனை மருத நாயகத்துடன் இறுதி வரை பயணம் செய்த பிரெஞ்சு வீரர் M.Marchant வாக்குமூலமாக அளித்துள்ளார்.
அப்படி அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியது:
மருத நாயகம் மதுரையின் கவர்னராக ஆனவுடன், பாளையக்காரர்களின் புரட்சியை அடக்க, மதுரையில் தன்னை எதிர்த்த மேலூர் நாட்டு கள்ளர் தலைவரையும், அவருக்காக சண்டையிட்ட 500கள்ளர்களையும்.....!
ஒரே நாளில் மருதநாயகம் தூக்கிலிட்டார், இந்த கொடுரூரமான சம்பவம் அனைத்து தென் பாளையக்காரர்களையும் அச்சுருத்தியது, பல பாளையக்காரர்கள் புரட்சியை கைவிட்டு அமைதிக்கு திரும்பினர் என்றும் வாக்குமூலம் அளிக்கிறார்.
அந்த கள்ளர் தலைவரை மதுரை பாளையக்காரர் என்று குறிக்கிறார், ஆனால் மதுரையில் எந்த பாளையமும் இல்லை, மேலூர் நாட்டு கள்ளர் தலைவரை அங்கு பாளையக்காரர் என்று குறிக்கிறார்.
இன்றுள்ள காலக்கட்டத்தில் இந்திய சட்டமும்,அரசாங்கமும் பல பெண்களை கற்பழித்து கொலை செய்யும் மிருகத்திற்கு தூக்கு தண்டை அளிக்க யோசிக்கிறது, அப்படியே தூக்கு தண்டனை கொடுத்தாலும் கூட 20ஆண்டுகள் கழித்து தூக்கு தண்டனையை ரத்து செய்துவிடுகிறது.
அப்படி ரத்து செய்துவிட்டு 20வருடம் தண்டனை அணுபவித்து விட்டான் என்று அவனை விடுதலையும் செய்கிறது🤦🏻‍♂️
ஆனால் தங்களுடைய சுயாட்சிக்காக கள்ளர் பெருங்குடிகள் அன்னிய அரசிற்காக எதிர்த்து போர் செய்ததற்காக ஒரே நாளில் ஒரே நேரத்தில் 501பேரும் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
எனக்கு தெரிந்த வரை 501பேரை ஒரே நேரத்தில் பிரிட்டீஸாரால் இந்தியாவில் வேறு எங்கும் தூக்கிலிடப்பட்டதில்லை.😰
இன்று பல மேடைகளில் வந்தேரிகளை விரட்டுவோம் என்று கூக்குரலிடும் அரசியல் தலைவர்களுக்கு, காலம் காலமாக இந்த தமிழ் மண்ணுக்காவும்,தமிழ் மக்களுக்காகவும் வந்தேரிகளுடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்த இந்த கள்ளர் பெருமக்களை புறக்கணிக்க எப்படி தான் மனம் வருகிறதோ........?
மதுரை சுற்றி இருக்கும் பாறை கற்கள் கூட கண்ணீர் வடித்திருக்கும் இந்த சம்பத்திற்காக....😰
ஆனால் இன்றைய தமிழ் உணர்வாளர்களுக்கு....?
501கள்ளர்களை தூக்கிலிடப்பட்ட இடம் திருப்பரங்குன்றம் என கணிக்கிறார். பிரிட்டீஸ் இந்தியாவின் முன்னாள் ஆவணக்காப்பாளர் S.C HILL
இனி திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் போது நான் முருகனை வணங்குகிறனோ இல்லையோ,
என்னுடைய முன்னோர்களை கருப்பர்களாக வணங்குவேன்.
குறிப்பு: சில நபர்கள் சோழபாண்டியன் அவர் சார்ந்த சமூகத்தின் பெருமைகளை தூக்கி நிறுத்துகிறார் என்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில்: நான் ஒரு பிணம் தோண்டி.....! ஒவ்வொரு நூற்றாண்டில் உயிர் தியாகம் செய்த என்னுடைய முன்னோர்களின் பிணத்தை வரலாறோடு தோண்டி எடுத்து அதை ஆவணப்படுத்துகிறேன், ஒவ்வொரு தேடலும் எனக்கு கண்ணீரை மட்டுமே பரிசாக தருகிறது. இந்த பிணம் தோண்டும் வேலை என்னோடு போகட்டும்🙏
நன்றி
THE REBEL COMMANDANT BY S.C HILL
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Monday, January 6, 2020

சமூகப்பிரிவினைக்கு வித்திட்ட பிரம்மதேயங்கள்

—  முனைவர் எஸ்.சாந்தினிபீ


            நம் சமுதாயம் வாழும் பல பகுதிகளில் சிலர் ஊருக்கு உள்ளேயும் சிலர் வெளியேவும் வாழும் அவலம் தொடர்கிறது. யாதும் ஊரே யாவரும் உறவினராக வாழச் சொன்ன பரந்த நோக்கமுடைய மூத்தோர்களின் வாரிசுகளுக்கு இப்படி கீழ்த்தரமான சிந்தனையும் வாழ்க்கையும் எப்போது, எப்படி ஏற்பட்டது என நம்மில் பலர் ஆலோசித்திருக்கலாம். இதற்காக நம் வரலாற்றைப் புரட்டினால் விடை கிடைக்கும். வரலாறு என்பது நமது பாட்டன் பூட்டன் வாழ்ந்த வாழ்வைச் சொல்லும் கதைதானே.

            ஓர் இடத்தில் வாழ்ந்த மனிதஇனம் பல்வேறு காரணங்களுக்காக பன்னெடுங்காலமாகவே இடம் பெயர்ந்துள்ளனர். இதற்குத் தமிழகம் விதிவிலக்கல்ல. இத்தகைய காலச் சுழற்சியில் தென்னகத்தில் வடபுலத்தோர் வாழ வந்தனர். குறிப்பாகத் தமிழகத்தில் கி.பி. ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் கிடைக்கும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் இத்தகைய மாற்றத்தை மிகத் தெளிவாகச் சொல்லுகின்றன. வெவ்வேறு கலாச்சார மக்கள் ஓரிடத்தில் இணைந்து வாழும்போது, கலாச்சாரக் கலப்பு ஏற்படுவதும் இயற்கையே. அதுவும் ஆட்சியாளர்களின் ஆதரவு எந்த கலாச்சாரத்தின் பக்கம் சாய்கிறதோ அதுவே மேலோங்கி செழிக்கும் என்பது நமக்கு வரலாறு சொல்லும் செய்தி.

            பல்லவர்கள் வடபுலத்து மொழியையும் பார்ப்பன கலாச்சாரத்தையும் ஆதரித்து வளர்த்தனர் என்பதே வரலாறு. இக்காலத்தில் வளரத் துவங்கியதில் முக்கியமாக இன்றும் நம்மிடையே இணைந்திருக்கும் கோவில் கலாச்சாரம் ஆகும். இந்த நிலை கிட்டத்தட்ட ஆங்கிலேயர் ஆட்சிவரை நீடித்தது. அதுவரையிலும் ஆள்பவர்கள் மாறினார்களே தவிர, கோவிலுக்கான கொள்கையில் மாற்றமில்லை. ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கூட கோவில்களுக்கு நிலமும் பொருளும் தானமாகக் கொடுத்தனர். உதாரணமாக இன்று சேலத்திலுள்ள சுகவன ஈசுவரன் கோவிலுக்கு திப்பு கொடை அளித்துள்ளார்.

            கடந்த காலத்தில், பெரும்பாலான பார்ப்பனர்கள் தானாக வந்தாலும், அரசனால் குடியமர்த்திய போதும் நம் தென்னகச் சமுதாயத்தோடு ஒன்றி வாழவில்லை. இதைக் கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களும் தெளிவாகச் சொல்கின்றன. இதன்றி, பார்ப்பனர்கள் பல சலுகைகளும் பெற்று நாடாண்ட மன்னர்களின் செல்லப் பிள்ளைகளாய் வாழ்ந்தனர். இப்படிப் பார்ப்பனர் மட்டுமே தனித்து வாழ அரசாண்டோர் உண்டாக்கிய புது ஊர்களே பிரம்மதேயங்களாகும். சில நேரங்களில் பல ஊர்களை ஒன்றாக இணைத்து புதிய பெயருடன் ஒரு பிரம்மதேயம் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் அரசகுலத்தோரின் பெயர்களும் பட்டங்களும் இப்புதிய குடியேற்றங்களுக்குச் சூட்டப்பட்டது. இதற்கு உதாரணமாக அருண்மொழிதேவ சதுர்வேதி மங்கலம், திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம், இராஜஸ்ரீய சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்களைக் கூறலாம்.

            இவ்வூர்களில் குடியேறிய பார்ப்பனர்களுக்கு விலையின்றி நிலம் தானமாக வழங்கப்பட்டது. பல சமயங்களில் அதற்கு நிலவரியும் ரத்து செய்யப்பட்டது. இவர்களுக்கு முன்பாக அங்கு வாழ்ந்தோர் வேறு ஊர்களுக்கு இடம் பெயரச் செய்யப்பட்டனர். பல வேளைகளில் குடிகள் எனப்பட்ட விவசாய கூலிகளும் வெளியேற்றப் பட்டு புதியவர்கள் நில உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப பணியில் அமர்த்தப்பட்டனர். இந்த பிரம்மதேயங்களில் பார்ப்பனர் மட்டுமே பெரும்பாலும் வாழ்ந்தனர். இந்த பிரம்மதேயம் எனும் ஊர், சேரிகள் எனும் உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. முறையான திட்டமிடப்பட்ட தெருக்கள், குடியிருப்பு, தோட்டம், ஊரின் நடுவே விஷ்ணு கோவில், ஏரி குளம் போன்ற நீராதாரம் ஆகிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. சில பிரம்மதேயங்களில் வணிகர்களும், நெசவாளர்களும் பிற்காலத்தில் ஊருக்குள் வாழ்ந்துள்ளனர். இதற்கு, தஞ்சாவூர், உத்திரமேரூர் ஆகியவை உதாரணம் ஆகும். கோவில் நடப்புகளுக்கும் பிரம்ம தேயவாழ் பார்ப்பனர்களின் அன்றாட தேவைக்கான உணவு, உடை, பாத்திரம், பண்டங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வேறு ஒரு திட்டம் நடைமுறையில் வந்தது. அதுவே ‘’உள்ளே வெளியே” என்ற விபரீதத்திற்கு வித்திட்டது.

            பிரம்மதேயத்தின் எல்லையை ஒட்டியிருந்த ஊர்கள் கோவிலுக்கும் பார்ப்பனர்களுக்குமான நன்கொடைகளாக மாறின. இவற்றைப் பிடாகை என்றழைத்தனர். சில பிரம்மதேயங்கள் பத்துக்கும் மேற்பட்ட பிடாகைகளைக் கொண்டிருந்தன. பிடாகைகள் பிரம்மதேய ஊருக்குச் சொந்தம் என்றாலும் நடைமுறையில் பிரம்மதேயமும், பிடாகையின் செயல்பாடுகளும் இருவேறுவிதமாக இருந்தன. பெரும்பாலான விளைநிலங்கள் பிடாகையிலிருந்தன. இவர்களுடன் பயிர் செய்யும் தொழிலாளிகள், குயவர்கள், கால்நடை மேய்ப்போர், வண்ணார், தச்சர், கொல்லர் போன்ற தொழிலாள குடும்பங்கள் பிடாகையில் வாழ்ந்தனர். இவ்வாறாக, ஊர் எனும் பிரமதேயத்திற்கு வெளியே தொழிலாளர்களைக் குடியமர்த்தல் பார்ப்பனர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

             உதாரணமாக திரிபுவனியில் பல நெசவாளர் குடும்பங்கள் இவ்வூரின் தென் பிடாகையில் குடியமர்த்தப்பட்டனர்(கல்வெட்டு 208/1919). திரிபுவனிக்கு தெற்கே இருக்கும் புத்தூர் பார்ப்பனர்களின் பிடாகையாக பிரம்மதேயத்துடன் இணைகிறது. இந்த இணைப்பிற்குப் பின் புத்தூர் எனும் பெயர் ஜனநாத நல்லூர் என மாற்றப்படுகிறது. இந்த தென் பிடாகையில்தான் ஜனநாத வில்லிகள் எனும் வில் படை வீரர்களும் இருந்தனர்(கல்வெட்டு 199/1919). இதே பிரம்மதேயத்தின் கிழக்கு பிடாகையான வீரசோழ நல்லூரில் வாழ்ந்த ஒரு பெண்பணியாளர்  திருபுவனி ஆழ்வார் கோவிலுக்கு 12 ஆடு கொடை அளித்ததையும் அறியமுடிகிறது(கல்வெட்டு193/1919). இன்றைய புதுச்சேரியில் உள்ள பாகூர் சோழர்காலத்தில் ஒரு பிரம்மதேயமாக விளங்கியது. இதை, அழகிய சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைத்தனர். இந்த பிரம்மதேயத்தின் மேற்கில் அமைந்த பிடாகை அவியனூர் சேரியில் வாழ்ந்தவன் பள்ளி கேசன். சேந்தனின் மகனான கேசன்பாகூர் ஆழ்வார் கோவிலுக்கு விளக்கு ஒன்று தானமாகக் கொடுத்துள்ளார். இப்படி பிரம்மதேயங்களின் பல பிடாகைகள் குறித்துச் சொல்லலாம்.

            தொழிலாளர்கள் பிடாகைகளில் வாழ்ந்ததற்கும் பிரம்ம தேயவாழ் பார்ப்பனர்களுக்கும் என்ன தொடர்பு? இதற்குப் பார்ப்பனர்கள் எப்படி காரணமாவார்கள்? என்ற ஐயம் தோன்றுவது இயல்பே. இதற்கும் கல்வெட்டுகளே விளக்கம் சொல்லும். மன்னனின் ஆணைகள் மூலமாகவே பிரமதேயத்திற்குச் சலுகைகள் கிடைத்தன. இத்தகைய அரசாணைகள் நாட்டார் எனும் நாடு பிரிவு நிர்வாக அமைப்புக்கு அனுப்புவார்கள். நாட்டார்கள் பிரம்மதேய நிர்வாகத்தைக் கவனிக்கும் அமைப்பான ’சபை’க்கு கொடுப்பார்கள். இந்த சபையில் பிரம்மதேயவாழ் பார்ப்பனர்களே அங்கத்தினராவார்கள். இந்த சபையோரே மன்னனிடம் சலுகைப் பெற்று இடம்பெயர்ந்து பிடாகைகளில் வரும் தொழிலாளர்களுக்கு வாழ்விடங்களை ஒதுக்குவார்கள்.

            அரங்கன் கொமாரன் என்னும் ஒரு தட்டானுக்கு(தங்க நகை செய்பவன்)  மன்னன் முதலாம் ராஜாதிராஜன்திரிபுவனியில் தட்டார் பணி செய்யும் உரிமையும் அதற்கான சன்மானமாக தட்டார்காணியான நில உரிமையும் பெறக் கட்டளையிடுகிறார். இவன் மன்னனின் பெயரைப் பட்டமாகப் பெற்று ராஜராஜப் பெருந்தட்டான் என்று அழைக்கப்பட்டான். வழக்கப்படி மன்னனின் கட்டளை வரப் பெற்ற சபையோர் இவனுக்கு நிலம் ஒதுக்குகிறார்கள் (கல்வெட்டு 210/1919). இப்படி தங்கள் பிரமதேயத்திற்குக் கிட்டும் வசதி வாய்ப்புகள் எதுவாக இருப்பினும் அதனைச் செயல்படுத்தும் விதமும் முறையும் இந்த சபையே முடிவு செய்தது. இப்படித்தான் நெசவாளர்களைச் சபை குடியமர்த்தியது.

            இந்த உழைப்பாளிகளுக்கும் பிரம்மதேயத்திற்கும் தொடர்பு இருந்தது. இவர்களின் உடலுழைப்பால் விளைந்த பொருட்கள் கோவிலுக்கும் பிராமணருக்குமான அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்தது. அதே நேரத்தில் நெசவாளர்களின், குயவர், வண்ணார், தச்சர், தட்டான் மற்றும் விவசாய கூலிகள்  போன்ற அனைவருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான தொழிலும் பொருளாதாரமும் பிரம்மதேயத்தின் மூலம் கிடைத்தன. ஒருவரின் தேவை மற்றவருக்குப் பயன்பட்டு இருவரும் இணைந்தே அல்லது சார்ந்தே வாழ்ந்தபோதும் பிடாகைவாழ் தொழிலாளர்களுக்கு ஊருக்குள் வாழும் உரிமை மறுக்கப்பட்டது. இதற்குச் சாத்திரங்கள் என்றழைக்கப்பட்ட வடமொழி நீதி நூல்கள் ஆதாரமாகக் காட்டப்பட்டன.  

            இதன் அடிப்படையில், பதினோராம் நூற்றாண்டில் சிலருக்கு ஊருக்குள்ளே நில உரிமை மறுக்கப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இன்றைய புதுவையில் உள்ள திரிபுவனியில் குயவர்களுக்குச் சாத்திரத்தின் அடிப்படையில் ஊருக்குள்ளே நில உரிமை மறுக்கப்பட்டது. பிரம்மதேயத்திற்க்கும் அதனுடன் இணைக்கப்பட்ட பிடாகைகளுக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. இதன்படி, பிரம்மதேயங்களில் இணைக்கப்பட்டதால் தாம் அந்த ஊருக்குள் வாழ்வதாக பிடாகையினர் எண்ணினர். ஆனால், பார்ப்பனர்களைப் பொறுத்தவரை பிரம்மதேய எல்லைகளில் அமைந்த பிடாகைகள் ஊருக்கு வெளியே அமைந்தவை ஆகும். தனது சபை என்னும் நிர்வாக அமைப்பை பிரம்மதேயத்தில் பார்ப்பனர்கள் அமலாக்கி இருந்தனர். அதேசமயம், பிடாகைகளின் நிர்வாகம் சபைகளின் கீழ் அன்றி ஊர் என்னும் அமைப்பால் கட்டுப்படுத்தப்பட்டனர். ஆனால், பிடாகை வாசிகளுக்குச் சொந்தமான நிலங்களில் போதிய வருவாய் இல்லாததால், ஊர் எனும் நிர்வாகம் வலிமையற்றதாக இருந்தது. ஒப்பிட்டுப் பார்த்தால் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கம் போல் பிடாகைகள் பிரம்மதேயங்களால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தன.

            பிரம்மதேயங்கள் முறையாகத் திட்டமிடப்பட்டு தெருக்கள் கோவில்கள் வாழ்விடங்கள் என அமைக்கப்பட்டன. ஆனால் இத்தகைய திட்ட முறையைப் பிடாகைகளில் பின்பற்றப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. நாட்டின் வருமான நிர்வாகத்தின் வரி புத்தகங்களில் பிரம்மதேயமும் அதைச் சார்ந்த பிடாகைகளும் ஒரே ஊராகக் காட்டப்பட்டாலும் இவை இரண்டும் தனித்தனியாகவே செயல்பட்டன. பிடாகைவாழ் மக்கள் தாங்கள் ஊருக்குள் வாழ்வதாக நினைத்தார்கள் ஆனால் பிரம்மதேயத்தோர் இவர்களை ஊருக்கு வெளியே வாழும் நிலைக்குத் தள்ளி இருந்தார்கள். இப்படியாக ஒரே ஊரில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் கட்டமைக்கப் பட்டன. ஒருவரை மற்றொருவர் சார்ந்திருந்தும் பிரமதேயத்துப் பார்ப்பனர் முதலாளிகளாகவும், இவர்களது வேலையாட்களாக பிடாகைவாழ் மக்கள் வேறுபட்டனர். இந்த வேறுபாடு காலப்போக்கில் மோசமாகி பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாகவும், பிடாகையினர் தாழ்ந்தவர்களாகவும் அவதரித்தனர். இதற்குச் சோழத் தலைநகர் தஞ்சையும் விதிவிலக்கல்ல. இடையர், யானை மற்றும் குதிரைப் படைகளில் பணிசெய்தவர் பலரும் ஊருக்கு வெளியே வாழ்ந்ததைத் தஞ்சை கல்வெட்டுகள் சொல்கின்றன. நெசவாளர்களின் குடியிருப்பு மட்டுமே தஞ்சை நகருக்குள் இருந்த தகவலைக் கல்வெட்டுகளில் காணலாம். இதற்கு நெய்தல் ஒரு வணிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் முக்கியத்துவம் பெற்றிருக்கலாம்.

            இதுபோன்ற வேறுபாடுகளை மக்கள் வழிபடும் கோயில்களிலும் பார்ப்பனர்கள் விட்டுவைக்கவில்லை போல. பிடாகைகளில் பெரும்பாலும் சிவன் மற்றும் துர்கையின் கோவில்களே இருந்தன. ஆனால் பார்ப்பனர்களின் முக்கிய கடவுள்களில் ஒன்றான விஷ்ணு கோவிலைக் காணவில்லை. திரிபுவனியின் கிழக்குப் பிடாகையில் ஒரு துர்கைக் கோவிலிருந்தது எனக் கல்வெட்டு மூலம் அறிகிறோம் (கல்வெட்டு 207/1919) திரிபுவனி ஊருக்கு வெளியே தெற்கு திசையில் ஒரு சிவன் கோவிலும் துற்கை கோவிலும் இருந்தது (கல்வெட்டு 175/1919).  இப்படி வேறுபாடுகள் பல இருந்த போதும், பிடாகை வாழ் மக்கள் பிரம்மதேயக் கோவில்களுக்கு ஆடு, மாடு, நிலம் மற்றும் பொருள் எனப் பல தானங்களைச் செய்த தகவல்களையும் கல்வெட்டுகள் தருகின்றன.

            எல்லையில் அமைந்த ஒரு ஊர் பிரம்மதேயங்களுடன் இணைக்கப்பட்டதும் அங்கே வாழ்ந்த மற்றும் குடியமர்த்தப்பட்ட தொழிலாளிகள் ஊருக்கு வெளியே வாழ்பவர்கள் ஆனார்கள். காலப்போக்கில் இதுவே வழக்கமாகி எல்லா ஊர்களிலும் தொழிலாளிகள் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டனர். கைவினைஞர்கள், மற்றும் தொழிலாளிகளின் உடலுழைப்பு தனது பெருமையை இழந்து பார்ப்பனர்களால் தாழ்த்தப்பட்டது. ஒரே ஊரிலிருந்த பின்பும் அதன் உள்ளே, வெளியே எனப் பார்ப்பனர்களின் மக்களை வேறுபடுத்தும் திறமையினால் சமூகம் பிரிக்கப்பட்டது.


நன்றி: கணையாழி இலக்கிய மாத இதழ்,  ஏப்ரல், 2019




தொடர்பு:
முனைவர் எஸ்.சாந்தினிபீ (chandnibi@gmail.com)
வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர்
உபி  அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம்
அலிகர்-202002

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...