Tuesday, June 30, 2020

மாமியார் உடைத்தால் மண்குடம்! கீரை வடையும் கிணற்று நீரும்!



மேற்கண்ட வாக்கியத்தில் வரும் மண்குடம் என்பதன்
இலக்கணக் குறிப்பு என்ன?
மண்குடம் என்பது மண்ணால் செய்யப்பட்ட குடம் என்று
பொருள் படும்.
ஆல் என்பது மூன்றாம் வேற்றுமை உருபு.
மண்குடம் என்பதில் ஆல் என்னும் மூன்றாம்
வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது.
(தொக்கி நிற்றல் = மறைந்து நிற்றல்).
வேற்றுமை உருபு மட்டுமா தொக்கி நிற்கிறது?
வேற்றுமை உருபைச் சேர்த்துச் சொல்லிப்
பாருங்கள். மண்ணால் குடம் என்று சொல்லலாம்.
அப்படிச் சொன்னாலும் பொருள் நிறைவு
பெறவில்லை.
மண்குடம் என்பதற்கு மண்ணால் செய்யப்பட்ட
குடம் என்றுதானே பொருள்.
மண்குடம் = மண் + ஆல் செய்யப்பட்ட + குடம்.
இங்கு ஆல் என்பதும் தொக்கி நிற்கிறது.
செய்யப்பட்ட என்பதும் சேர்ந்து தொக்கி நிற்கிறது.
அதாவது வேற்றுமை உருபும் தொக்கி நிற்கிறது.
வேற்றுமை உருபின் பயனும் தொக்கி நிற்கிறது.
எனவே இதை உருபும் பயனும் சேர்ந்து தொக்கி
நிற்கிறது என்கிறோம்.
(தொக்கி நிற்றல் = மறைந்து நிற்றல்).
இதைத்தான் தமிழ் இலக்கணம் உருபும் பயனும்
உடன் தொக்க தொகை என்கிறது.
ஆக, மண்குடம் = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை ஆகும். இதுதான் மண்குடத்தின்
இலக்கணக் குறிப்பு.
மேலும் சில உதாரணங்கள்!
பொற்குடம் = பொன்னால் செய்யப்பட்ட குடம்.
எனவே இதுவும் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்க தொகை ஆகும்.
மண்பானை,
பித்தளைக்குடம்,
செம்புக்குடம்,
வைரத்தோடு,
தங்கக் கம்மல்,
பட்டுச்சேலை
நூல்சேலை (நூற்சேலை)
ஆகிய இவை அனைத்தும் மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன்தொக்க தொகை ஆகும்.
சரி, நெய்க்குடம் என்பதன் இலக்கணக் குறிப்பு என்ன?
நெய்யால் செய்யப்பட்ட குடம் என்று பொருள்படாது
அல்லவா? எனவே மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன்தொக்க தொகை என்று சொல்ல இயலாது.
பின் என்ன சொல்வது?
நெய்க்குடம் = நெய்யை உடைய குடம்.
இதில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும்
அதன் பயனும் சேர்ந்து தொக்கி நிற்கிறது அல்லவா?
எனவே இது இரண்டாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்க தொகை ஆகும்.
கோரைப்பாய் = கோரையால் செய்த பாய். எனவே
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க
தொகை.
தண்ணீர்ப் பானை = தண்ணீரை உடைய பானை.
இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை.
சரி, பின்வருவனவற்றுக்கு உரிய இலக்கணக் குறிப்பு
என்ன? வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.
இது கட்டாயம்!
இலக்கணக் குறிப்பு என்ன?
--------------------------------------------
1) வெள்ளிக் கொலுசு
2) கீரை வடை
3) வெண்ணெய்த் தாழி
4) அரிசிப் பானை
5) பருப்பு மூட்டை
6) கிணற்று நீர்
7) தங்கப் பதக்கம்
8) வெல்லப் பிள்ளையார்
9) தகர உண்டியல்
10) காகிதக் குவளை.
11) சுவர்க் கடிகாரம்
12) கைக்குழந்தை
13) புஷ்பக் காவடி
14) கிணற்றுத் தவளை
15) பல்வலி
------------------------------------------------------------------------
பின்குறிப்பு: வேற்றுமைகள் மொத்தம் எட்டு.
இவற்றுள் முதல் வேற்றுமை என்பது எழுவாய்
வேற்றுமை ஆகும். எட்டாம் வேற்றுமை என்பது
விளி வேற்றுமை ஆகும். இவற்றுக்கு உருபு இல்லை.
மீதி ஆறு வேற்றுமைக்கும் உருபு உண்டு.
இவற்றை நன்கு அறிந்திடுக. ஒவ்வொரு வேற்றுமைக்கும்
உரிய உருபும் பயனும் அறிந்திட வேண்டும்.
அவற்றை அறிந்தால்தான் வல்லினம் மிகும் இடம்,
மிகா இடம் பற்றி அறிய இயலும். கீழ்நிலை
வகுப்புகளின் இலக்கண நூற்களைக் கற்கவும்.

**************************************************


Sunday, June 28, 2020

மூளை சாவு அடைந்தவர்களை அறுத்து விடாதீர்கள் !

மூளை சாவு அடைந்தவர்களை அறுத்து விடாதீர்கள் !
மூளை சாவு அடைந்தவர்களை வர்ம மருத்துவத்தின் மூலம் எளிதில் குணமாக்க முடியும்.
தங்களுக்கு தெரிந்து யாரேனும் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
For Further details contact:
Master: S.SIVA KUMAR
MA(yoga)., Msc(varma)., M.phil(varma&yoga), Palm leaf reader., Dip.in.Sidhdha herbal science.,
முகவரி:
யோகாலயம் & வர்மாலயம்,
10/A,எட்டியப்பன் நகர்,
லக்ஷ்மிபுரம் நீடிப்பு,
குலத்தூர், சென்னை-600099.
E-mail: sivakumar0018@gmail.com
Mobile: +91 9444749969, +91 9445687969.
இப்பதிவை முடிந்த வரை ஷேர் செய்யுங்கள் !

Saturday, June 27, 2020

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் மண உறவுகள்


புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை ஏற்று மன்னர் ராஜகோபால தொண்டைமான், 3 March 1948 ல், எந்த நிபந்தனையும் இன்றி, உபரி நிதியாக இருந்த 48 லட்ச ரூபாயுடன், புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்த சிறப்பிற்குரியவர். கிட்டதட்ட 300 ஆண்டுகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்த தொண்டைமான் வம்சத்தில் 9 மன்னர்கள் அரியாசனம் ஏறி நாட்டை காத்துள்ளனர். புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தினர் கொண்ட மண உறவுகள் பற்றிய தகவல்களை காண்போம்.
ராய தொண்டைமான்(1639-1661)
**********************************
விஜய நகர அரசரான ஸ்ரீரங்கராயரின் யானையை அடக்கி, விருதுகள் பெற்று, அவரது உதவியுடன் புதுக்கோட்டையின் வட பகுதிகளை பல்லவராயரிடம் இருந்து பெற்று புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு அடிக்கோலிட்ட ராய தொண்டைமானின் மகள் காதலி நாச்சியார், ராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதியை மணந்து சேதுநாட்டின் அரசியானார். அரசின் சார்பாக பல தானங்களை செய்துள்ளார். இவரது பெயரால் களத்தூர் எனும் ஊர் காதலி நாச்சியார்புரம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு பிராமணர்களுக்கு தானம் அளிக்கப்பட்டது. கிபி 1694ம் ஆண்டை சேர்ந்த மேலசீத்தை செப்பேடு மற்றும் 1709ம் ஆண்டை சேர்ந்த களத்தூர் செப்பேடு ஆகியவற்றில் காதலி நாச்சியார் அளித்த கொடைகள் பற்றிய தகவல்கள் உள்ளன. கிபி 1710ல் சேதுசீமை மன்னர் கிழவன் சேதுபதி மரணித்த பிறகு காதலி நாச்சியார் உடன்கட்டை ஏறி கணவரோடு கரைந்தார்.
(சேதுபதி செப்பேடுகள்:தமிழ் பல்கலைக்கழகம்/ General history of pudukkottai state. R.Aiyar 1916)
ரகுநாதராய தொண்டைமான்(1686-1730)
********************************************
புதுக்கோட்டை மன்னர் ரகுநாதராய தொண்டைமான் 6 மனைவிகளை கொண்டிருந்தார்.
முதல் மனைவி -மலையத்தாயி ( மாங்காட்டான்பட்டி ராங்கியர் குடும்பம்)
இரண்டாவது மனைவி - பெரிய உடையம்மை ஆயி ( தென்னத்திரையன் குடும்பம்)
மூன்றாவது மனைவி- அவத்தாயி ( மலைக்குறிச்சி ராங்கியர் குடும்பம்)
நான்காவது மனைவி - வீரத்தாயி ( காடுவெட்டியார் குடும்பம்)
ஐந்தாவது மனைவி- பிள்ளத்தாச்சி வீராயி(ராங்கியர் குடும்பம்)
ஆறாவது மனைவி- பாச்சி ஆயி ( ராங்கியர் குடும்பம்)
( General history of pudukkottai state. R.Aiyar 1916 பக் 145)
நமண தொண்டைமான்(1686-1713)
************************************
புதுக்கோட்டை முதல் மன்னர் ரகுநாதராய தொண்டைமானின் தம்பியான, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் குளத்தூரை ஆட்சி செய்து வந்த நமண தொண்டைமான், நான்கு மனைவிகளை கொண்டிருந்தார்.
முதல் மனைவி- சம்பட்டியார் குடும்பம்
இரண்டாவது/ மூன்றாவது மனைவி- ராங்கியர் குடும்பம்
நான்காவது மனைவி-பன்றிக்கொண்டார் குடும்பம்.
நமண தொண்டைமானுக்கும் குருந்தன் சம்பட்டியாரின் மகளுக்கும் பிறந்த ராமசாமி தொண்டைமான் குளத்தூரின் அடுத்த மன்னராக பதவியேற்றார்.
(General history of pudukkottai state 1916, பக் 140)
திருமலைராய தொண்டைமான்
*********************************
புதுக்கோட்டையின் முதல் மன்னரான ரகுநாதராய தொண்டைமானின்(1686-1730), மகன் திருமலைராய தொண்டைமான் இரு மனைவிகளை கொண்டிருந்தார்.
முதல் மனைவி- நல்லாயி ஆயி ( பன்றிக்கொண்டார் குடும்பம்)
இரண்டாவது மனைவி - முத்தவீராயி ஆயி( மழவராயர் குடும்பம்)
(Trichinopoly Gazetter 1907/ பக் 361)
விஜய ரகுநாதராய தொண்டைமான்(1730-1769)
**************************************************
புதுக்கோட்டையின் இரண்டாவது மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் 5 மனைவிகளை பெற்றிருந்தார்.
முதல் மனைவி-நல்லக்காத்தாயி ஆயி( வேறு தகவல் இல்லை)
இரண்டாவது மனைவி- மங்காத்தாயி( வேறு தகவல் இல்லை)
மூன்றாவது மனைவி - ரங்கம்மா ஆயி( வேறு தகவல் இல்லை)
நான்காவது மனைவி - காத்தாயி ஆயி(வேறு தகவல் இல்லை)
ஐந்தாவது மனைவி - பெரிய நாயகி ஆயி (கிருஷ்ணன் பன்றிக்கொண்டார் குடும்பம்)
ஆறாவது மனைவி - ( நமண தென்னதிரையன் குடும்பம்)
(General history of pudukkottai state 1916, பக் 162)
ராயரகுநாத தொண்டைமான்(1769-1789)
******************************************
புதுக்கோட்டையின் மூன்றாவது மன்னராக ராயரகுநாத தொண்டைமான் பொறுப்பேற்றார். இவர் இரு மனைவிகளை பெற்றிருந்ததாக தகவல் உள்ளது.
முதல் மனைவி - அம்மணி ஆயி( கல்லாக்கோட்டை ஜமீன் சிங்கம்புலியார் குடும்பம்)
இரண்டாவது மனைவி - முத்தழகம்மாள்( வேறு தகவல் இல்லை)
(General history of pudukkottai state 1916, பக் 280)
ராயரகுநாத தொண்டைமானின் மகளான அம்மாள் ஆயியை, புதுக்கோட்டையை ஆட்சி செய்த பல்லவராயர்கள் வழிவந்த மாப்பிள்ளை பல்லவராயர் மணம் செய்து கொண்டார்.
(General history of pudukkottai state 1916, பக் 382)
விஜயரகுநாத தொண்டைமான்(1789-1807)
*********************************************
புதுக்கோட்டையின் நான்காவது மன்னராக ராயரகுநாத தொண்டைமான் பொறுப்பேற்றார். இவர் மூன்று மனைவிகளை பெற்றிருந்தார்.
முதல் மனைவி - ஆயி அம்மா ஆயி
இரண்டாவது மனைவி - சுப்பம்மா ஆயி
மூன்றாவது மனைவி - முத்தம்மா ஆயி
(General history of pudukkottai state 1916, பக் 289)
இவர்களைப் பற்றிய வேறு தகவல்கள் இல்லை. கிபி 1807ல் விஜயரகுநாத தொண்டைமான் மறைவிற்கு பிறகு, அவரது மனைவியான ஆயி அம்மா ஆயி காரைத்தோப்பு எனும் இடத்தில் உடன்கட்டை ஏறி கணவருடன் கலந்தார். இவருக்கு எழுப்பப்பட்ட கோயில் இன்றும் ஆயி அம்மன் கோயில் என அழைக்கப்படுகிறது.
விஜய ரகுநாதராய தொண்டைமான் (1807-1825)
**************************************************
மன்னர் விஜய ரகுநாதராய தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஐந்தாவது மன்னராவார். மன்னர் இரண்டு மனைவிகளை கொண்டிருந்தார்.
முதல் மனைவி-கல்லாக்கோட்டை ஜமீன் சிங்கம்புலியார் குடும்பம்
இரண்டாவது மனைவி- கத்தக்குறிச்சி திருமலை பன்றிக்கொண்டார் குடும்பம்
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 833)
மன்னர் விஜய ரகுநாதராய தொண்டைமானின்(1807-1825) தம்பி கத்தக்குறிச்சி சூர்யமூர்த்தி பன்றிக்கொண்டாரின் புதல்வியை திருமணம் செய்தார்.
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 833)
மன்னர் ரகுநாத தொண்டைமான்(1825-1839)
***********************************************
மன்னர் ரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆறாவது மன்னராவார்.
இவர் கத்தக்குறிச்சி பன்றிகொண்டார் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருந்தார்.
(General history of pudukkottai state 1916, பக் 413)
மன்னர் ரகுநாத தொண்டைமான் , அவர்களின் முதல் புதல்வியை 15 May 1828 ல் ஜாகிர்தார்( மன்னரால் அளிக்கப்பட்ட பெருமளவு நிலங்களை கொண்ட நிலக்கிழார்) ரங்கன் பல்லவராயர் மணந்தார்.
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 843)
மன்னர் ரகுநாத தொண்டைமான் அவர்களின் இரண்டாவது புதல்வி, 26 June 1831ல் ரகுநாதசாமி பன்றிக்கொண்டார் அவர்களை மணந்தார்.
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 843)
மன்னர் ரகுநாத தொண்டைமானின் மகனான திருமலைத் தொண்டைமான் , கல்லாக்கோட்டை ஜமீனை சேர்ந்த மதுராம்பாள் ஆயி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
மன்னர் ரகுநாத தொண்டைமானின் பேரன் பாலசுப்ரமணிய ரகுநாத ராமச்சந்திர தொண்டைமான், சிலத்தூர் ஜமீனான பன்றிக்கொண்டார் குடும்பத்தில் திருமணம் செய்திருந்தார்.
மன்னர் ரகுநாத தொண்டைமானின் பேத்தி பிரகதம்பாள் அம்மனி ஆயி , கல்லாக்கோட்டை ஜமீன் விஜயரகுநாத திருமலை சிங்கம்புலியார் அவர்களை மணந்தார்.
மன்னர் ராமச்சந்திர தொண்டைமான்(1839-1886)
***************************************************
மன்னர் ரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஏழாவது மன்னராவார்.
மன்னர் ராமச்சந்திர தொண்டைமான்(1839-1886) மற்றும் அவரது தம்பி கிபி 1845ல் கல்லாக்கோட்டை(சிங்கம்புலியார்) ஜமீனில் திருமணம் செய்துள்ளனர்.
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 846)
மன்னர் ராமச்சந்திர தொண்டைமான் , 31 August 1848 ல் நெடுவாசல் ஜமீன் பன்றிக்கொண்டாரின் புதல்வியையும் திருமணம் செய்துள்ளார்.
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 846)
மன்னர் ராமசந்திர தொண்டைமான் தனது மகளை(பிரகதாம்பாள் ராஜாமணி ஆயி) குழந்தைசாமி பல்லவராயர் என்பவருக்கு மணம் முடித்தார். குழந்தை சாமி பல்லவராயரின் மகன் மாரத்தாண்ட பைரவ பல்லவராயர் புதுக்கோட்டை மன்னராக 1886ல் பொறுப்பேற்றார்.
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 854)
மன்னர் ராமச்சந்திர தொண்டைமானின் மகள் வயிற்று பேத்தியான ராஜகுமாரி ஜானகி அம்மாள் பல்லவராயர் அவர்கள், திருமலை பாலசுப்ரமணிய ரகுநாத தொண்டைமானை மணந்தார்.
மன்னர் ராமச்சந்திர தொண்டைமானின் மற்றொரு மகள் வயிற்று பேத்தியான மீனாம்பாள் அம்மனி பல்லவராயர் அவர்கள், ராஜகோபால தொண்டைமான் சாகிப் என்பவரை மணந்தார்.
மன்னர் ராமச்சந்திர தொண்டைமானின் மற்றொரு மகளான, கமலாம்பாள் ராஜாமணி ஆயி, கல்லாக்கோட்டை ஜமீனான ரங்கசாமி சிங்கம்புலியாரை மணந்தார்.
மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர்(1886-1928)
********************************************************
மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் எட்டாவது மன்னராக பதவியேற்றார். மன்னர் ராமச்சந்திர தொண்டைமானுக்கு ஆண் வாரிசு இல்லாததால், தனது மகள் வயிற்று பேரனான மார்த்தாண்ட பைரவ பல்லவராயரை தனது வாரிசாக தேர்ந்தெடுத்தார்.
இவர் 1915ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டு இருந்தபோது, மோலி பிங்க் எனும் ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணை சிட்னியில் திருமணம் செய்துக் கொண்டார். வெள்ளைய இன பெண்ணை நாட்டின் ராணியாக ஏற்க மக்களில் ஒரு தரப்பினரிடம் எதிர்ப்பு இருந்தது. இதனால் கிபி 1916ல் மன்னர் தன்து மனைவியுடன் ஆஸ்திரேலியாவுக்கே சென்றார். மன்னர் பதவியைவிட தனது காதலியே முக்கியம் என கருதிய மன்னர், அரியாசனத்தை துறந்தார். அனைத்து அரசாங்க பொறுப்புகளையும் தனது தம்பியான விஜயரகுநாத பல்லவராயரிடம் ஒப்படைத்துவிட்டு சமஸ்தானத்தை விட்டு வேறு தேசம் சென்று வாழத் துணிந்தார். சிட்னியில் மன்னருக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு சிட்னி தொண்டைமான் என பெயரிடப்பட்டது.
மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர் பிறகு பாரிஸ் நகரில் குடிபெயர்ந்தார். அங்கு கிபி 1928 ல் மரணமடைந்தார். அவரது உடல் அங்கிருந்து லண்டன் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
(புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, ராஜா முகமது, பக் 147)
மன்னர் ராஜகோபால தொண்டைமான்(1928-1948)
*****************************************************
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மற்றும் ஒன்பதாவது மன்னராக ராஜகோபால தொண்டைமான் பொறுப்பேற்றார்.
இவர் கடைசி வரை திருமணம் செய்துக்கொள்ளாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.
இவரோடு பிறந்தோரின் திருமண உறவுகளை காண்போம்
மூத்த சகோதரி கமலாம்பாள் ராஜாயி - கல்லாக்கோட்டை ஜமீனில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்
இரண்டாவதாக இராஜகோபால தொண்டைமான்( புதுக்கோட்டை கடைசி மன்னர்)- திருமணம் செய்யவில்லை
மதுராம்பாள் இராஜாயி- சிவகங்கை சமஸ்தானத்தின் மன்னர் முத்துவிஜய ரகுநாத துரைசிங்கம் அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். ( சிவகங்கை இராணியாக இருந்தவர், இவரது நினைவாக மதுராம்பாள் ராஜாயி நினைவு மேல்நிலைப்பள்ளி சிங்கம்புணரியில் உள்ளது)
கடைசி சகோதரி- சேத்தூர் ஜமீனில் மணம் செய்து கொடுக்கப்பட்டார்
இவர்களோடு ராதாகிருஷ்ண தொண்டைமான் மற்றும் விஜயரகுநாத தொண்டைமான் ஆகியோர் மன்னர் ராஜகோபால தொண்டைமானோடு பிறந்தவராவர்.
புதுக்கோட்டை தொண்டைமான்களும், அவர்களின் குடும்பத்தார்களும், பெரும்பாலும் ராங்கியர், சிங்கம்புலியார் மற்றும் பன்றிக்கொண்டார் குடும்பத்தாரோடு மண உறவு கொண்டுள்ளனர். புதுக்கோட்டையை 15-17 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த பல்லவராயர் வம்சத்திடமும் தொண்டைமான்கள் மண உறவு கொண்டுள்ளனர். இவர்களை தவிர காடுவெட்டியார், தென்னதிரையர், மழவராயர், சம்பட்டியார் வம்சங்களுடனும் திருமண உறவு கொண்டிருந்ததை வரலாற்று பக்கங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. சிவகங்கை, ராமநாதபுரம் மன்னர்களிடமும் புதுக்கோட்டை மன்னர்கள் மண உறவில் இணைந்திருந்தனர்.
தொகுப்பு :- சியாம் சுந்தர் சம்பட்டியார்

Friday, June 26, 2020

யார் யாருக்கு வாய்ப்பு அளிப்பது?


(ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது, ஏன்?)



“தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்”, “இப்ப இல்லனா எப்பவும் இல்ல” என்று ஒரு புத்தகத்தை இணையத்தில் பரிந்துரைத்தார்கள். இந்தப் புத்தகத்தில் பேசப்படாத விஷயங்கள் பேசப்படுவதாக குறிப்பிட்டார்கள். எனவே இதனை படிக்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. உடனே அதனை தரவிறக்கிப் படித்துப் பார்த்தேன்.

இந்தப் புத்தகத்திற்கான மறுப்பு அல்லது விமர்சனம் என்று இந்த கட்டுரையை எடுத்துக் கொள்ளலாம். முதலில், அரசியல் மீது அக்கறை கொண்ட ரஜினி ரசிகர்களின் இதுபோன்ற முயற்சியை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும். காவலன் கதிர் சுதா, அனாமிகா என்ற இரண்டு ரஜினி ரசிகர்கள் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர்.

இந்தப் புத்தகத்தில் 30 பிரச்சனைகளைக் கூறி அதற்கான தீர்வுகளையும் விவரித்துள்ளனர். முதல் பிரச்சனையாக இவர்கள் எடுத்திருப்பது “தண்டனைகளைக் கடுமையாக்கினால் குற்றங்கள் குறையும் என்பது சரியா” என்பதுதான். ஆனால் இவர்கள் கூறும் தீர்வானது 100% கண்காணிப்பின் மூலமாக குற்றங்களை குறைக்க முடியும் என்பதுதான். இது ஓரளவு உண்மை என்றாலும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் அரசின் கண்காணிப்பை தீர்வாக கூறுகிறார்கள். கண்காணிப்போடு கண்டறிதலையும் (tracing) தீர்வாக இவர்கள் கூறுகிறார்கள்.

தற்போது தமிழர்கள் எல்லாவித எல்லைகளைக் கடந்தும், அரசியல் பற்றி சிந்தித்து எழுதி பேசி செயல்படுத்தி வருகிறார்கள். தமிழர்களின் அரசியல் தமிழர் கையில் இல்லை என்பதை உணர்ந்து, அதை எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த நிலையில், மக்களைக் கண்காணித்தல் என்பது இன்றைய முதலாளித்துவத்தின் நோக்கமாக இருக்கிறது, ஒரு தனிமனிதனின் படுக்கை அறையைக் கண்காணித்தாலும் தவறில்லை என்ற கருத்தைப் புகுத்தும் விதமாகவே பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன, இதன் அடுத்த கட்டமாக மனிதனை சிப்-பின் மூலமாக கண்காணித்து, அவனை கட்டுப்படுத்துவது போன்ற முயற்சியின் தொடக்கமாக உள்ளது என்று விமர்சிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் அரசின் கட்டுப்பாடு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பது விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

இவர்கள் மாற்றம் காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று கூறி மாற்றத்தை வலியுறுத்துகிறார்கள். ஊதியமில்லா வேலைநேரம், தொழிலாளர்கள் சுரண்படப்படுதல் போன்றவற்றுக்கும் கண்காணிப்பே தீர்வு என்று கூறுகிறார்கள். வேலை வாய்ப்பு பற்றி பேசும்போது தேவை ஏற்பட்ட பின்னரே வேலைகள் உருவாக்கப்படுகின்றன என்று சொல்லி தேவைக்கு முன்னரே வேலைகளை அளிக்க வேண்டும் என்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மாறாதிருப்பது ஆச்சரியமளிப்பதாக கூறியுள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் மக்கள் தொகை வளர்ச்சி வீத மாறுபாட்டால் அது நிறுத்தப்பட்டது என்பதை இவர்கள் அறியாதிருப்பதில் ஆச்சரியமில்லை. மக்கள் தொகையில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தென் மாநிலங்கள் பெருமளவு பிரதிநிதிகளை  இழக்க வேண்டியிருக்கும் என்ற உண்மையை இனி இவர்கள் தெரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். லாரி ஓட்டுனர் பிரச்சனைகள், சான்றிதழ் பெறும் பிரச்சனைகள் கவனிக்கத் தக்கவையே.

காவிரியும் பெரியாறு அணையும்தான் நம் பிரச்சனையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கான தீர்வாக குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீர் தேவைக்கு மாநிலம் சுயசார்பு நோக்கி நகர வேண்டும் என்று கூறியுள்ளனர். எந்தவிதமான தண்ணீர் பிரச்சனைக்கும் சுயசார்பை நோக்கி நகர்வது வரவேற்கத் தக்கது. ஆனால், இயற்கை வளங்கள் மீதான நம் உரிமையை எவ்வாறு விட்டுக் கொடுக்க முடியும்? சர்வதேச நீர் ஆதாரப் பகிர்வு சட்டங்கள் பற்றியும், அதில் புனல் பகுதிகளுக்கே அதிக நீர் உரிமை உள்ளது என்பதையும் இவர்கள் பிற்காலத்தில் அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
தனியார் கல்லூரிகளுக்கு அரசு ஆதரவு கூடாது, தேர்வு முறையில் மாற்றம் தேவை என்ற கருத்துக்கள் வரவேற்கத் தக்கவையே. நீட் தேர்வை வரவேற்கும் இவர்கள் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் இடம் கிடைக்கா விட்டால் வெளி மாநிலங்களில் சென்று இடம் பெற்று படிக்கலாம் என்ற அரிய கருத்தைக் கூறுகிறார்கள். நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும், நுழைவுத் தேர்வை தாய் மொழியில் நடத்த வேண்டும் என்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அளவு மருத்துவக் கல்லூரிகள் வடமாநிலங்களில் இல்லாதபோது இந்தத் தேர்வு தமிழக இடங்களை தமிழர் அல்லாதவர் பயன்படுத்தவே வழிவகுக்கிறது. டெல்லி போன்ற நகரங்களில் தமிழக மாணவர்களை வட மாநில மாணவர்கள் தாக்கும் போக்கு உள்ளது என்பதையும் இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

வாடகை வாகனங்களின் கட்டண நிர்ணயம்,  பணியிடப் பாதுகாப்பு, கிராமங்களில் மருத்துவ வசதி தேவை போன்ற கருத்துக்கள் வரவேற்கத் தக்கவை.

நியாய விலைக் கடைகள் பற்றிப் பேசும் இவர்கள் விற்பனை நேரம் குறித்து குறை கூறுகிறார்கள். உண்மையில் நியாய விலைக் கடை என்பதே பெரும் மோசடியாக இருப்பதுதான் உண்மை. இந்த அமைப்பில் அடி முதல் நுனி வரை அத்தனையும் ஊழல் செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது. பொருட்கள் சரியான அளவில், தரத்தில் அளிக்கப்படுவதில்லை. அதனை கீழ்நிலை ஊழியர்களால் சரி செய்ய முடியாது. அதோடு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க வேண்டிய கட்டாயம் போன்ற பிரச்சனைகள் உள்ளன. இதனால் ஒவ்வொரு கடையிலும் லட்சக் கணக்கில் ஊழல் நடைபெற வேண்டிய சூழல் உள்ளது. இன்னும் அரசு கொடுக்கும் விலைக்கு ஏற்ற தரமுள்ள அரிசி மற்றும் மற்ற பொருட்கள் கொடுக்கப்படுகின்றனவா என்ற கேள்வியும் உள்ளது. அரசு போக்குவரத்து துறையும் இந்த வரிசையில் இடம் பிடிக்கிறது. இதையெல்லாம் சரி செய்ய மண்ணின் மீதும் மக்கள் மீதும் அளவற்ற அக்கறை கொண்டோரால் மட்டுமே முடியும்.

நகை விற்பனையை ஒழுங்குபடுத்துதல், உணவுப் பொருட்களில் கலப்படத்தை தடுத்தல், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், மொழி வளர்ச்சியை முன்னெடுத்தல் போன்றவை வரவேற்கத் தகுந்தவை. ஆனால், மொழி குறித்த அக்கறையும், “தமிழ்”, “தமிழர்” என்று நூற்றுக் கணக்கான இடங்களில் பேசும் இந்தப் புத்தகத்தில் ஆங்கில வார்த்தையை நேரடியாக பயன்படுத்துவதையும் காண முடிகிறது. வசனங்களில், பாடல்களில், புத்தகங்களில் வேற்று மொழிக் கலப்பு இருந்தால் அதற்கேற்ப வரிவிதிக்க வேண்டும் தீர்வு சொல்லும் இவர்கள், ஒரு தமிழர் நடிக்க வேண்டிய இடத்தில் வேற்று மொழியாளர் நடிப்பதற்கு என்ன வரி விதிக்க வேண்டும் என்று சொல்லத் தவறி விட்டார்கள்.

திராவிடக் கட்சிகளை அதிகம் சாடும் இவர்கள், சாதிச் சான்றிதழ் ஒருமுறை மட்டுமே வழங்க வேண்டும், சாதிப் பாகுபாடு பார்க்கக் கூடாது என்ற போன்ற விஷயங்களில் திராவிடத்தின் நீட்சியாக நின்று பேசுகிறார்கள். துப்புறவு பணியாளர்களுக்கான சம்பள உயர்வு, கட்டிட பராமரிப்பு தேவை, அதற்காக தனிக் குழு அமைத்தல் போன்றவை வரவேற்கத் தகுந்தவை. வாடகை வீடுகள் - இருப்பிட மாறுதல் சவால்கள், நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துதல் போன்றவை வரவேற்கத் தகுந்தவை. தொழிற் சங்கப் பிரச்சனைகளில் கட்சி சார்ந்த தொழிற் சங்கங்கள் இருக்கக் கூடாது என்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பல பிரச்சனைகளிலும் எல்லாரும் தனிநபர்களாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு எதிரான முதலாளித்துவச் சிந்தனை ஆகும். சாலைப் பாதுகாப்பு தேவை, சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதிச் செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் வரவேற்கத் தகுந்தது என்றாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதிக்கென ஒதுக்கப்படும் செலவினத்தை அவர் விருப்பதிற்கு எதிராக அல்லது அதைக் கண்காணித்தல் என்பது எவ்வளவு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை.
அரசு கொடுக்கும் இலவச பொருட்களால் மின் தேவை அதிகரித்திருப்பதாக குறிப்பிடுகிறார்கள். இது ஏற்புடையதாகத் தெரியவில்லை. இலவசத் திட்டங்களை சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆளும் கட்சியானது ஒருத் திட்டத்தை செயல்படுத்தினால் அது பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்றதாகத்தானே பொருள்? பெண்களை சுதந்திரமாக திரிய அனுமதிக்க வேண்டும் என்று புரட்சிகரமான கருத்தைக் கூறாமல் பெண்களின் பாதுகாப்புப் பற்றி பேசுவது வரவேற்கத் தக்கது. மனையிட அங்கீகார ஒழுங்குகள் வரவேற்கத் தக்கது. வாக்கு அரசியலுக்காக உருவாக்கப்படும் விழாக்கள் என்ற பிரச்சனையில் தேசத் தலைவர்களின் சாதிப் பெயர்களை பயன்படுத்தக் கூடாது என்பது வேடிக்கையானது. பாவம், இவர்களால் தமிழகம் தவிர வெளியே இவ்வாறு பேச முடியுமா என்று இவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்.

சாமானியர்கள் தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலை பற்றி பேசும்போது சாதாரண மனிதர்களால் அரசியலே செய்ய முடியாத நிலை உள்ளதைப் பற்றி பேசாமல் விட்டு விட்டு அவர்கள் ரஜினியின் பின்னால் திரள வேண்டும் என்கிறார்கள்.

இருபெரும் கட்சிகளை காரசாரமாக விமர்சிக்கும் இவர்கள் சிறு, குறு கட்சிகளை போகிற போக்கில் விலாசிவிட்டுச் செல்கிறார்கள். ஜனநாயக நாட்டில் சிறு, குறு கட்சிகள் இருக்கக் கூடாது என்பது என்னவிதமான மனநிலை என்று தெரியவில்லை.

முதல் பாகத்தில் பிரச்சனைகள் குறித்துப் பேசும் இவர்கள் இரண்டாம் பாகத்தில் முழுக்க முழுக்க ரஜினிகாந்தின் அரசியல் முக்கியத்துவம், அவரை ஏன் இருபெரும் கட்சிகள் எதிர்க்கின்றன என்பது குறித்து விளக்கி இருக்கிறார்கள். வராது வந்த மாமணியாக இருக்கும் ரஜினிகாந்தை மக்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். 

தமிழக மக்கள் மூன்றாவதாக ஒரு தேர்வாக ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ரஜினிகாந்த் தான் என்கிறார்கள். அவர் அரசியலுக்கு வந்தால் தங்கள் அரசியலுக்கு பாதிப்பு வந்துவிடும் என்பதால், இவர்கள் ரஜினிகாந்த் மீது அவதூறு பரப்புவதாக கூறுகிறார்கள்.
மக்களாகிய நாம் தனித்தனி வாக்காளர்களாக, கட்சி, சாதி, மதம், இனம் வாரியாகப் பிரிந்து கிடைப்பது அரசியல்வாதிகளுக்கு லாபமாக அமைகிறது என்று கூறும் இவர்கள் மேற்கண்ட பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் அதிகாரத்தை ரஜினிகாந்தின் கையில் அளிக்க வேண்டும் என்கிறார்கள். யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் ஒரு புள்ளியாக இணைய வேண்டும் என்கிறார்கள். அரசியல் என்கிற “குழந்தை” நல்ல வழியில் செல்ல நாம் நமது தேர்வை மாற்றிக் கொள்வது அவசியம் என்கிறார்கள்.

ரஜினியின் அரசியல் பயணத்தை திராவிடக் கட்சிகள் எதிர்ப்பதால் அக்கட்சிகளின் கொள்கையான “கடவுள் மறுப்பு” என்பதை தவறு என்று சுட்டிக் காட்டுகிறார்கள். தமிழர்கள் மற்ற சமுதாயங்களின் நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டார்களே தவிர இறை மறுப்பாளர்களாக இருந்ததில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

“யார் தமிழர் என்று ஆராய்ச்சி செய்து, இன்னும் வரும் காலத்திற்கும் மொழி உணர்வைத் தூண்டி அரசியல் செய்பவர்களின் பின்னால் சென்று, பயன்படாமல் போகும் ஐந்து சதவீத வாக்காளர்களாய் நிற்பதற்கு பதிலாக, அவர்கள் நாங்கள் தமிழர்கள் என்று வீதிக்கு வீதி நின்று கூச்சல் போடுகிற நேரத்தில், தமிழை முழுதாகப் படித்து உணர்ந்து, ஆன்மீகம் அரசியல் பற்றிய தெளிவை அடைந்து, தேர்தலில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய செல்வாக்கு மிக்க வாய்ப்புகளை மக்களுக்கும் இளைஞர்களுக்கும் தரத் தயாராக இருக்கின்ற ஒருவரின் பின்னால் நின்று, மாற்றத்தை சாத்தியப்படுத்துகிற பெரிய வாக்காளர் கூட்டத்தில் ஒருவராய் இருப்பதுதான் நமக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.” இந்த வாசகம் இந்தப் பகுதியில் வருகிறது. இதுவே இவர்களின் மனநிலையை வெளிக்காட்டுவதாக உள்ளது. ரஜினிகாந்த் சுய ஒழுக்கம் மிக்கவர் என்று சொல்கிறார்கள். பாவம், இவர்கள் ரஜினியின் கடந்தகால வாழ்க்கையைத் தெரியாதிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதே வார்த்தைகளை ஒரு பாஜக ஆதரவாளரும் சொல்லலாம். இவர்கள் பாஜக ஆதரவாளர்கள் என்று நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்வது மாதிரி உள்ளது என்று கூறுகிறேன்.

“நடிகரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட முட்டாள் ரசிகர்கள்” என்று ரஜினி ரசிகர்களை மற்றவர்கள் சொல்வதாகக் கூறுகிறார்கள். நிச்சயமாகத் தமிழர்கள் அப்படிச் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு நடிகர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு நடிகர். தமிழக அரசியலில் கால் பதித்த ஓரளவு வெற்றியும் கண்ட விஜய்காந்த் ஒரு நடிகர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் அரசியலில் ஈடுபட்டவரே.
சாதாரண இளைஞர்களால் அரசியலில் ஈடுபட முடியாத நிலை உள்ளது, அவர்களுக்கு ரஜினிகாந்த் வாய்ப்பளிக்க வந்திருப்பதாக கூறுகிறார்கள். ரஜினிகாந்தின் பலமாக, “அவர் பிரதிபலன் எதிர்பார்க்காதவர், அரசியலுக்குத் தேவைப்படும் “விளம்பரம்” உள்ளவர், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் அவர்களிடம் “பேசி காரியம் சாதிக்கக் கூடியவர்”, பதவிக்காக கோஷ்டி பூசலில் ஈடுபடாமல் அரசியல் செய்யத் தயாராக உள்ள கூட்டத்தை வைத்திருப்பவர், அரசியலில் ஈடுபட தேவையான “பண பலமும்” கொண்டவர்” என்ற கருத்துக்களை உதிர்த்திருக்கிறார்கள். 

சமூக வலை தளங்களில் ரஜினியை பற்றி கேள்வி எழுப்புபவர்கள் வீணாக அவ்வாறு செய்கிறார்கள். இதற்கு ஜனநாயகமே காரணம் என்ற வகையில் பேசுகிறார்கள்.
“ரஜினிகாந்த் மக்களுக்கான களத்தில் இறங்கிப் போராடாமல் நேரடி அரசியலுக்கு வர பார்கிறார் என்றும் குற்றச்சாட்டு” பற்றியும் பேசுகிறார்கள். போராட்டங்களால் அரசியல்வாதிகளுக்குப் பாதிப்பில்லை, பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறும் இவர்கள் போராட்டங்கள் என்பவையே தேவையில்லாதவை என்கிற பாணியில் பேசுகிறார்கள். தொழிற்சங்கங்கள் கட்சிகளின் கீழாக இருக்கக் கூடாது என்ற அரிய கருத்தையும் சொல்கிறார்கள்.  குடியேற்ற உரிமை திருத்தச் சட்டம் நல்லது என்று கூறும் இவர்கள் தமிழர்களுக்கு அதில் உரிமை மறுக்கப்பட்டது பற்றி பேசவில்லை. முத்தாய்ப்பாக, மக்களாட்சியில் போராட்டமென்பது மக்களை பாதித்து அரசியல்வாதிகளுக்கு அரசியல் ஆதாயம் பெற்றுத் தருவதே அன்றி வேறு ஒன்றும் செய்யாது என்ற கருத்தை உதிர்க்கிறார்கள்.
ரஜினிகாந்த் ஆன்மீகப் பகுத்தறிவுவாதி என்றும் அரசியல் பகுத்தறிவுவாதிகள் அவரை மதவாதியாகச் சித்தரிக்க முயல்கிறார்கள் என்று கூறும் இவர்கள் ரஜினிகாந்த் திரைப்பட வசனங்களை மேற்கோள் காட்டுவது முரண்பாடுகளின் உச்சமாக உள்ளது. திரைப்படங்கள் இலக்கிய தரங்கொண்டவையாகவும் உள்ளன. ஆனால் ரஜினிகாந்தின் படங்கள் எப்படிப்பட்டவை என்று மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். இதில் கிருஷ்ணர், புத்தர், ஏசு முகமது நபி போன்றோரின் ஆன்மீகத் தேடல்கள் பற்றிப் பேசுகிறார்கள். பெரியாரின் ஊர்வலத்தில் இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்டது உண்மையே என்று சொல்லும் இவர்கள் பெரியாருக்கு முன்பே ஈஷ்வர சந்திர வித்யாசாகர், ராஜா ராம் மோகன் ராய் போன்றோரின் சமூக சீர்திருத்தம் செய்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆன்மீகம் “ஆன்மா” சார்ந்தது என்றும் அது “மதம்” சார்ந்தது அல்ல, இல்லறத்தில் இருப்பதும் ஆன்மீகமே என்று சொல்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் பின்னால் போகக் கூடாது என்று கூறுவதோடு ஆங்காங்கே திருக்குறளை மேற்கோள் காட்டும் இவர்களின் தமிழ் உணர்வு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. போராட்டமே கூடாது என்று பேசும் இவர்கள் “எனக்காக ரத்தம் சிந்துங்கள் நான் உங்களுக்காக சுதந்திரம் பெற்றுத் தருகிறேன்” என்று சொல்லி அதனைச் சாதித்துக் காட்டிய மாவீரன் சுபாஷ் சந்திர போஸை ஆன்மீக அரசியலுக்காக உதாரணம் காட்டுவது நகைச்சுவையைத் தருகிறது.

ரஜினியின் கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பும் மற்றவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசும் இவர்கள், “கொள்கை என்ற ஒன்று யாரிடமும் இல்லை” என்ற வகையில் பேசுகிறார்கள். அப்படி ஒரு கொள்கை எங்களுக்கு இருக்காவிட்டால் தவறும் இல்லை என்கிறார்கள். முதலில் அரசியல் என்றால் என்னவென்று இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிலப்பரப்பையும் அதில் வாழும் மக்களையும் பாதுகாப்பதுதான் அரசியல். இது குறிக்கோள். அவ்வாறு பாதுகாக்கப்படும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டை வழிநடத்தும் விதம், அவர்களுக்கு முன்னேற்றத்தை வழங்க எந்த வழியில் பயணிக்கப் போகிறோம் என்பதே கொள்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி உணர்வை முன்னிலைப்படுத்தக் கூடாது என்று பேசும் இவர்கள் பெரும் போராட்டத்தின் அடிப்படையில்தான் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது அந்தந்த மொழி பேசுவோருக்கான அரசியலை அந்தந்த மொழி பேசுவேரே செய்ய வேண்டும் என்பது வகுக்கப்பட்டு விட்டது. அதை தமிழகத்தில் மட்டும் தெலுங்கர்கள் மாற்றினர். அதையே பின்பற்றி மராட்டியரான சிவாஜி ராவ் கெய்க்வாடும் தமிழர் தலையில் மிளகாய் அரைக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம். சிறப்பான விமர்சனத்திற்கு இவர்கள் பரிசு அளிப்பார்களாம். இந்த நூலே ஒரு விலை கொடுக்கப்பட்ட பரப்புரை புத்தகம் என்றால் மிகையாகாது.

“தமிழ்நாட்டில் தமிழர் மட்டுமே அரசியல் செய்ய வேண்டும்” என்பது இங்கு அரசியல் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கையாக இருக்க வேண்டும். தமிழர் அல்லாதோர், தமிழ் அறிந்தோர், தமிழ்ப் புலமை பெற்ற அயலார் யாரும் தமிழக அரசியலில் இருந்து விலகிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தமிழர் முன்னெடுக்கும் அரசியலுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்புத் தரவேண்டும்.

“அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வருகிறாரா” என்று மற்றவர்கள் முன்வைக்கும் கேள்விக்கு ரஜினிகாந்த், தான் முதல்வர் ஆவது பற்றியும், சட்டமன்றம் செல்வது பற்றி நினைத்தும் பார்க்கவில்லை என்ற ரீதியில் பேசுகிறார்கள். ரஜினிகாந்த் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதாக கூறும் இவர்கள் ரஜினிகாந்திற்குப் பிறகு யார் கட்சியை நடத்துவார்கள் என்று பேசவில்லை. ரஜினிகாந்தின் மருமகனான தனுசு அரசியலுக்கு வருவாரா என்பது பற்றியும் பேசவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினியின் வயது ஒரு முக்கிய காரணி ஆகும். தற்போது 70 வயதாகும் அவரால் இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்கு பின்னர் செயல்பட முடியாது. அதன் பின்னர் அவர் யாருக்கு வாய்ப்பு அளிப்பார்? இதையெல்லாம் ரஜினிகாந்தை நம்பி அவர் பின்னே செல்ல நினைக்கும் இளைஞர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

புத்தகத்திற்கு “தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்” என்று இவர்கள் தலைப்பு வைத்திருப்பதே தமிழினத்தை அவமதிப்பதாகும். இதற்காக இவர்கள் தமிழினத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும். தமிழினம் உலகின் மூத்த இனமாக இருந்து அறிவியலையும், கலையையும், இலக்கியத்தையும், மருத்துவத்தையும் ஒருங்கே வழங்கிச் சென்றுள்ளது. இந்த இனம் சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் ராஜராஜன் போன்ற மாபெரும் அரசியல் தலைவர்களை வழங்கிய இனம். அண்மை வரலாற்றில் அறம் தவறாத போராளி பிரபாகரனை வழங்கிய இனம். இந்த இனம் மலட்டு இனமல்ல, இது போன்ற ஆயிரம் தலைவர்களை உருவாக்கக் கூடிய இனம். உலகிற்கே அறம் கூறும் நல்லிலக்கியங்களை வழங்கிய இனம். ரஜினிகாந்த் அந்த இனத்தின் வாய்ப்பைப் பெற்று பிழைக்க வந்தவர். ரஜினியின் பெயரும், புகழும், செல்வாக்கும் தமிழினம் அவருக்குப் போட்ட பிச்சை. அதற்கு நன்றி விசுவாசமாக ரஜினியும் அவரது வாரிசுகளும் தமிழினத்திற்கு காலகாலமாக உழைத்தாலும் போதாது. அதை லாகவமாக மறந்து விட்டு “தமிழனித்திற்கு வாய்ப்புத் தருகிறேன், இப்போ இல்லானா எப்போதும் இல்லை” என்பதெல்லாம் பிதற்றலே அன்றி வேறொன்றும் இல்லை.

போராட்டம் என்பது ஜனநாயக அரசியலில் ஒரு பகுதியாகும். “போராடுபவர்கள் சமூக விரோதிகள்” என்று கூறிய ரஜினிகாந்த் மக்கள் மன்றத்திற்கு வர தகுதியற்றவர் ஆவார். ஆன்மீகம் பற்றி பேசும் இவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது “வேற, வேற கேள்வி இருக்கா?” என்று அதட்டும் தொணியில் பேசியதும் விஜயகாந்த் சட்டமன்றத்தில் நாக்கைத் துருத்திப் பேசியதும் ஒன்றுதான். இவர்கள், முதலில் நடிகர்களாக இருந்து அரசியல் செய்தவர்களுடன் ரஜினிகாந்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். திமுக-அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஆணிவேராக இருந்து எந்தவித பதவியையும் எதிர்பார்க்காமல் அரசியலுக்காக பட வாய்ப்புகளை துறந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் பற்றி இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசியலையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ரஜினிகாந்திற்கு வாய்ப்பு அளிக்காவிட்டால் அவருக்கு ஒன்றும் இழப்பில்லை என்பது அரசியலின் உச்சகட்ட அறியாமை. ஒரு தலைவன் என்பவன் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தன் அரசியலுக்காக அர்ப்பணிக்க வேண்டும். நீங்கள் என்னை ஏற்காவிட்டால் எனக்கு ஒன்றும் இழப்பு இல்லை என்று பேசினால் உங்களுக்கு அரசியல் ஆர்வமே இல்லை என்றுதான் பொருள்.

இவர்கள் பேசாது விட்ட விஷயங்களில் பல உள்ளன. எடுத்துக் காட்டாக, தனியார் மயம், லஞ்ச ஊழல், அரசியல் கட்சிகள் நிதி திரட்டுதல், எரிவாயு உருளை வழங்குவோரை வைத்து நடைபெறும் கொள்ளை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி இப்படி பலவற்றைச் சொல்லலாம். குறிப்பாக ரஜினிகாந்த் சொல்வதுபடி “சிஸ்டம் (அரசியலமைப்பு) சரியில்லை” என்ற பிரச்சனை. அரசியலமைப்பு என்றால் அது இந்திய அரசியலமைப்பையே குறிக்கும். அதில் எது சரியில்லை, எது சரியானது என்றெல்லாம் ரஜினிகாந்தின் அறிவாளி ரசிகர்கள் விளக்க வேண்டும்.

தமிழர்கள் ஏன் அரசியலில் அயலாரை வெறுக்கத் தொடங்கினர் என்பதை ரஜினி ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிறப்பால் தெலுங்கரான பெரியார் என்ற ராமசாமி நாயக்கரை தலைவராக ஏற்று அவரது மூளைச் சலவைகளுக்கு ஆளானதால் தமிழ்ச் சமூகம் ஏராளமான இன்னல்களுக்கு ஆட்பட்டு வருகிறது. பிறப்பால் மலையாளியான எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்த காலத்தில்தான் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் உச்சநீதிமன்றம் சென்று நீர் மட்டத்தை உயர்த்த உத்தரவு பெறப்பட்டது. இதற்குள் இடைப்பட்ட காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாகி விட்டது. பிறப்பால் தெலுங்கரான கருணாநிதி அடித்த கொள்ளைகளை பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால் ஈழப்போரின்போது அவர் அரங்கேற்றிய நாடகம் கண்டு எல்லாரும் ஆத்திரமடைந்தார்கள். தமிழர்களின் அரசியல் அதிகாரம் அந்நியரின் கைக்குச் சென்றதால் ஏராளமான இழப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. மேற்படி மூன்று தலைவர்களும் தமிழினத்திற்கான தலைவர்களாக நடித்தவர்கள். ஆனால், தமிழின நலனிற்காக இது வரை நடிக்கக் கூட செய்யாத மராட்டியரான ரஜினிகாந்தின் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் என்னவாகும் என்பதுதான் எங்களுக்கெல்லாம் உள்ள உச்சபட்ச அச்சம். ரஜினிகாந்திற்கு செல்வாக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி செல்வாக்கு இருந்தால் அரசியலில் இறங்கி நிரூபிக்க வேண்டியதுதானே? ஏன் தயக்கம்? எழுச்சி ஏற்பட வேண்டுமாம். இவர் வந்து நோகாமல் நோம்பு கும்பிடுவாராம்.
*****


           

ராசராச தேவரின் ராணியும், ராஜேந்திர சோழ தேவரின் தாயும் கள்ளர்கள்



ராசராச தேவரின் ராணியும், ராஜேந்திர சோழ தேவரின் தாயும் , பிறந்த புதுக்கோட்டை கொடும்பாளூர் வேளிர் குலத்தரசர்களான கள்ளர்கள் - Indian council of historical research

Wednesday, June 24, 2020

அண்ணாதுரைக்கு நூறு கேள்விகள்!


கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள்
24.6.1927

1. 'மொழிவழி பிரிந்து இன வழி ஒன்று கூடுவது' என்று திராவிடக் கூட்டாட்சிக்கு இலக்கணம் அமைக்கிறீர்களே! அப்படி மொழி வழி பிரிகிற தமிழர்கள் ஒரு கூட்டமா, அல்லது ஒரு தனி இனமா?
2. தமிழர்கள் தனியான இனம் அல்ல என்றால் பிரிந்து, பிறகு கூட வேண்டிய அவசியம் என்ன?
3. ஒரு மொழியுணர்வு இன அடிப்படையாகாது என்றால், அந்த ஒரு மொழியுணர்வுக்குப் பெயர் என்ன?
4. இனத்தால் ஒன்றுபட்டவர்கள் மொழி வழி பிரிந்து நிற்கவேண்டிய அவசியம் என்ன?
5. ஓரின ஆட்சியாக, திராவிடக் கூட்டாட்சி அமையும் போது விரும்பினால் பிரிந்து போகும் உரிமை எதற்கு?
6. இலங்கையில் தமிழர்கள் இன்னலுக்காளாயினர் என்ற சேதி கிடைத்ததும், தமிழகத்திலே பரந்து காணப்படுகிற துயர் திராவிடத்தின் மற்றைய பகுதிகளில் காணப்படாதது ஏன்?
7. 'திராவிடத்தின்' பொதுமொழியாக ஆங்கிலம் இருக்கும் என்றால், திராவிட விடுதலைக்குப் போராடும் கழகத்துக்கு, தமிழில் பெயர் ஏன்?
8. நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளைத் தமிழ்நாட்டில் மட்டும் கொண்டுள்ள திராவிட ஸ்தாபனத்துக்கு, ஆந்திரத்தில் எத்தனை கிளைகள், கேரளத்தில் எத்தனை கிளைகள்?
9. இதுவரை இல்லை என்றால், ஏன் இல்லை?
10. கலப்பில்லாத அசல் தெலுங்கன், கலப்பில்லாத அசல் மலையாளி, அசல் கன்னடத்துக்காரன் முன்னேற்றக் கழகத்தில் ஒருவனாவது உண்டா?
11. தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தெலுங்கரிடை, மலையாளிகளிடை, கன்னடத்தவரிடை உண்டா?
12. இல்லையென்றால், அத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் என்றைக்காவது முயற்சி எடுத்ததுண்டா?
13. இந்திமொழிக்குத் தமிழ்நாட்டிலே, கட்சி, சாதி, சமய பேதத்தையெல்லாம் கடந்த எதிர்ப்பு பரவலாக இருக்கும் போது ஆந்திரத்திலும், கேரளத்திலும் அதற்கு அமோக வரவேற்பு இருப்பது ஏன்?
14. இல்லாத இந்திய தேசியத்தை ஏற்படுத்தியே தீரவேண்டும் என்று வீம்புக்காக, காங்கிரஸ்காரராவது கேரளத்தைச் சேர்ந்த கிருஷ்ண மேனனை பம்பாயிலும், வடநாட்டுக் கோயங்காவை விழுப்புரத்திலும் தேர்தலுக்கு நிற்க வைத்தார்கள். திராவிட தேசியத்தின் பெயரால் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களில் யாரேனும், ஒருவரையானும் கேரளத்திலோ, ஆந்திரத்திலோ நிற்க வைத்தீர்களா?
15.இல்லை எனில் இனியேனும் அப்படிச் செய்கிற எண்ணமோ, தைரியமோ உண்டா?
16. "திராவிட நாட்டை இரண்டு முறையில் பெற முடியும். ஒன்று ஓட்டுமுறை; மற்றொன்று வேட்டுமுறை" என்று சொன்னீர்கள். ஓட்டுமுறையால் திராவிட நாட்டைப் பெறுவதற்கு இந்திய அரசியல் சட்டத்தையே திருத்தியாக வேண்டும் என்பதை அறிவீர்களா?
17. இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதற்கான அதிகாரம், சென்னை சட்டசபையிடம் இல்லை என்பதையும், அது டெல்லி பாராளுமன்றத்தினிடம் தான் உள்ளது என்பதும் தெரியுமா?
18. அந்தப் பாராளுமன்றத்தில் கூட, மொத்த அங்கத்தினர் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி கிடைத்தால் மட்டுமே இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட முடியும் என்பதை அறிவீர்களா?
19. தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய 'திராவிடத்தின்' அத்தனைப் பகுதிகளிலுமுள்ள பாராளுமன்ற இடங்கள் அனைத்தையுமே தி.மு.க. கைப்பற்றி விடுகிறது என்று வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் அது பாராளுமன்றத்தின் மொத்த அங்கத்தினர் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகமுடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?
20. உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய இந்திமொழிப் பிரதேசங்களின் பாராளுமன்ற அங்கத்தினர் தொகை திராவிடத்தின் பாராளுமன்ற அங்கத்தினர் தொகையைவிட அதிகம் என்பதை அறிவீர்களா?
21. அந்தப் பகுதிகாரர்கள் திராவிட நாட்டுப் பிரச்னை பாராளுமன்றத்தில் தீர்மான உருவில் வரும்போது அதைக் கடுமையாக எதிர்ப்பார்கள் என்பது நீங்கள் அறியாததா?
22. இந்த நிலையில், டில்லி பாராளுமன்றத்தில், திராவிட நாட்டுப் பிரிவினைக்காக நீங்கள் கொண்டு போகும் எந்தத் தீர்மானமும் தோற்கடிக்கப் பட்டு விடும் அல்லவா?
23. அப்படியானால், திராவிட நாட்டை ஓட்டு முறையில் பெறுவேன் என்பது ஏமாற்று வித்தையா?
24. ஓட்டு முறை இல்லை என்றால், வேட்டு முறை மூலம் பெறுவோம் என்று சொன்னால், அதற்காக நீங்கள் தி.மு.க.வுக்கு இதுவரை தந்துள்ள பயிற்சி என்ன?
25. திராவிடக் கூட்டாட்சிக்கு பார்லிமெண்ட் இருக்குமா?
26. இருந்தால் அந்த பார்லிமெண்டில் தமிழ் உறுப்பினர்கள் மைனாரிட்டியாகத்தானே இருப்பார்கள்?
27. எல்லா மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்கும் என்று சொல்வீர்களேயானால், இரண்டு மாநிலங்களின் உறுப்பினர்கள் ஒன்றுசேரும் போது, தமிழ் உறுப்பினர்கள் மைனாரிட்டியாகத்தானே ஆகி விடுவார்கள்?
28. 'திராவிடம்' என்ற நிலப்பரப்புக்கு சரியான வரையறை எது?
29. தங்கள் 'திராவிட நாடு' பத்திரிக்கை 16.9.45 இதழில், 'திராவிடம்' என்று தாங்கள் கேட்பது (அன்றைய) சென்னை மாகாணத்தை என்று எழுதியிருக்கிறீர்களே, கவனமுண்டா?
30. அன்றைய சென்னை மாகாணத்தில் மைசூர் இல்லை. திருவாங்கூர்- கொச்சி இல்லை. புதுக்கோட்டை சமஸ்தானம் இல்லை. ஐதராபாத் சமஸ்தானம் இல்லை. குமரி மாவட்டம் இல்லை. இது எப்படித் திராவிடம் ஆகும்?
31. இன்றைக்கு நீங்கள் கேட்கும் 'திராவிட நாடு' மேற்குறித்த பகுதிகள் நீங்கியது தானா?
32. 'இத்தனை கேள்விகளையும் நீ யார் கேட்பதற்கு?' என்று சொல்லாமல், பதில் சொல்ல முயற்சிப்பீர்களா? முடியவில்லை என்றால், 'பதில் சொல்ல முடிய வில்லை' என்று ஒத்துக் கொள்கிற அரசியல் நாணயமாவது உங்களுக்கு இருக்கிறதா?
(1961இல் தி.மு.க.வை விட்டு விலகி 'தமிழ்த்தேசியக் கட்சி' தொடங்கியவர் ஈ.வெ.கி.சம்பத். அவரோடு சேர்ந்து தமிழ்த்தேசிய முழக்கமிட்டவர் கவியரசர் கண்ணதாசன். தி.மு.க.வின் 'திராவிட கானல்நீர் வேட்டைக்கு' எதிராக, "அண்ணாதுரைக்கு நூறு கேள்விகள்" எனும் நூல் கண்ணதாசன் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது. இந்த நூறு கேள்விகளுக்கும் அறிஞர் அண்ணாவோ, அவரது தம்பிமார்களோ இது நாள்வரை பதில் அளித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 32 கேள்விகள் மட்டும் இங்கு தேர்ந்தெடுத்து வெளியிடப்பட்டுள்ளது.)

Saturday, June 20, 2020

தமிழர்களின் ஆதிக்கலையான வர்மக்கலை

தமிழர்களின் ஆதிக்கலையான வர்மக்கலை எம்பெருமான் ஈசன் மூலம் அகத்தியருக்கும் முருகருக்கும் அருளப்பட்டது!!
இந்த ஆதி வர்மக்கலையே உலகின் தலைசிறந்த போர்க்கலையும் தற்காப்பு கலையும் ஆகும்!
வர்க்கலையில் அடிமுறை, பிடிமுறை, பூட்டுமுறை, வர்மம்., வர்ம சிலம்பம்., நோக்கு வர்மம்..etc.. என்று பல படிகள் உள்ளது!!.
இப்படிப்பட்ட உலகின் தலைசிறந்த போர்/ தற்காப்பு கலையான வர்மக்கலையை எனது உடன் பிறந்த சகோதரர் ஆசான் கௌ.குகனேஸ் அவர்கள் நாளை 21-06-20 முதல் ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு *(தமிழர் குடிகளுக்கு மட்டும்)* கற்றுக்கொடுக்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!..
வர்மக்கலையின் ஆரம்பகட்ட வகுப்புகளான அடிமுறை பயிற்சி வகுப்பு நாளை மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஓசூரில் உள்ள எமது இடத்தில் நடைபெற உள்ளது!.
விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: +919597019856
ஆசான் கௌ.குகனேஷ் : +919445756740
அகத்தியர் ஆதி வர்மக்கலை ஓசூர்.

ஆர்ப்பாட்டம் - செய்தித் தாள்களில்

நேற்று முன்தினம் நடத்திய ஆர்ப்பாட்டம் நேற்றைய செய்தித் தாள்களில்..




Wednesday, June 17, 2020

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் ஆர்ப்பாட்டம்



அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேசியத் தலைவரும், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் திரு பி.வி. கதிரவன் அவர்களின் ஆணைக்கிணங்க, தேனி மாவட்ட பொதுச் செயலாளர் திரு எஸ்.ஆர். சர்க்கரவர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இன்று தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் எஸ்பிஐ வங்கி எதிரில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு ஆர்.கே. தங்கராஜா அவர்களின் தலைமையில், மாவட்ட பொருளாளர் அ. பெருமாள் தேவன் அவர்களின் முன்னிலையில் ஒன்றிய பொறுப்பாளர் திருமுருகன்,  தேவதானப்பட்டி பொதுச் செயலாளர் ஆர். மணி, துணைச் செயலாளர் எஸ். சுபாஷ், மற்றும் பொறுப்பாளர்கள் சசிக்குமார், உதயன், பூமிநாதன், பிரபு முதலானோர் கலந்து கொண்டனர். இன்று (18/06/2020) காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் கொல்கத்தா துறைமுகத்தின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரை மாற்ற முயற்சிப்பது, கொரோனா நோயை பரவ அனுமதித்தது, தனியார் மயமாக்கல் போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

Sunday, June 7, 2020

கல்வெட்டு: பெண்களை விசாரிக்கக் கூடாது: ராஜராஜசோழன் உத்தரவு


வெண்குடி வெள்ளார் காஞ்சிபுரத்தை கடந்துவிட்டாராம் இன்னும் அரைநாள் பொழுதில் நம்முடைய ஊரை வந்து சேர்ந்துவிடுவாராம் என்ற தகவல் கிடைத்ததும் "காவேரிப்பாக்கம்" ஊரே பரபரத்தது. காவேரிப்பாக்க ஊர் மகாசபையை சேர்ந்த முக்கியஸ்தர்கள் அனைவரும் ஊர் மத்தியில் இருந்த காமகோட்டத்தில் (பார்வதி கோயில்) ஒன்றுகூடினார்கள். ஊர் இரண்டு பட்ட எண்ணங்களை கொண்டிருந்தது. "புருஷன் செய்த தவறுக்கு மனைவியை கைது செய்வது தவறு" எனவும் " தவறில்லை " எனவும்..
தஞ்சையிலிருந்து இராஜ ராஜ சோழன் அனுப்பிய ஆணையை கொண்டு வரும் அவரின் அதிகாரியான வெண்குடி நாட்டு வெள்ளார் காவேரிப்பாக்கத்தை அடைந்ததும் பணிவுடன் அவரை வரவேற்று காமக்கோட்டத்திற்கு அழைத்து வந்தார்கள் ஊர் மக்கள். சுற்றும் முற்றும் பார்த்த அவர் சட்டென தன் இடுப்பில் சொருகி இருந்த ஓலையை வெளியே எடுத்தார். ஊரே பரபரத்தது..அதிகாரி படிக்கத் துவங்கினார்.
"ராஜகேசரிவர்மற்கு ஆண்டு இருபத்தஞ்சாவது (1010) காவிதிப்பாக்கமாகிய அவனிநாராயண சதுர்வேதிமங்கலத்து ஊர் வாரிய, கழனி வாரிய, ஏரி வாரிய, உதாசின வாரிய, பட்டர்கள், வைஷ்ணவ பெருமக்களாகிய உங்களுக்கு "எப்பேர்ப்பட்ட கரணங்களும் (Arrest Warrant) சங்கிராந்தியும் (Important Holy Day) உவாவும் (பௌர்ணமி) பிரதிபதமும் (பிரதமை) (First day after full moon day) இந்நாளால் காணப்பெறாததாகவும். மற்றும் எப்பேர்ப்பட்டதும் காட்டுமிடத்து காட்டப்பட்ட புருஷரைக் கொண்டு போதுவாராகவும் புருஷரைக் காணாவிடிலும் ஸ்திரீகளைக் கொண்டு போகப் பெறாதாராகவும் கொண்டு போந்தார் சபையோருக்கும், பெருமானடிகளுக்கும், அரசனுக்கும் பிழைத்தாராகவும் ................." என்று படித்துக்கொண்டிருக்கும் போதே கூட்டம் சலசலத்தது..
அந்த கூட்டத்தில் சரியாக காது கேட்காத பெரியவருக்கு அந்த செய்தி புரியவில்லை, என்னவென்று அருகில் இருந்த சிறுவனிடம் விசாரித்தார். அதாவது பெரியவரே "அரசாங்கத்திடமிருந்தோ, ஊர் சபையிடமிருந்தோ யாரவது குற்றம் பண்ணவங்கள பிடிக்க சொல்லி கரணம் (Arrest Warrant) வந்தா சங்கிராந்தி, பௌர்ணமி, பிரதமை நாட்கள்ல ஆண், பெண் யாரையும் கைது பண்ணக்கூடாதாம். மத்த நாட்கள்ல மட்டும் தான் கைது பண்ணணுமாம். அதுவும் குற்றம் பண்ண ஆம்பளங்க தேடி கிடைக்கலனா, அதுக்கு பதிலா அந்த வீட்டு பெண்கள ஊர் சபைக்கு கூட்டி போய் விசாரிக்கக்கூடாதாம். அப்படி மீறி பிடிச்சிட்டு போறவங்க அரசனுக்கும் ஊர் சபைக்கும் துரோகம் பண்ணதா ஆகுமாம். அவங்களுக்கு தண்டனையும் குடுப்பாங்கலாம். இந்த உத்தரவ இந்த ஊர் சபையும் இதுக்கு பெறவு வரப்போற எல்லா சபையும், இந்த ஊர் அரசு அதிகாரிகளும் நடைமுறை படுத்தி இந்த உத்தரவ கல்லுல வெட்ட சொல்லி ராஜ ராஜன் தஞ்சாவூர்ல இருந்து உத்தரவு அனுப்பி இருக்காரு" என்று முடித்தான் அந்த சிறுவன்.
அதை கேட்டவுடன் அந்த பெரியவரின் கண்கள் குளமானது, கடந்த வாரம் தன் மகன் செய்த குற்றத்திற்காக அவன் தேடி கிடைக்கவில்லை என்று தன் மருமகளை அழைத்துச் சென்று ஊர் சபையில் நிறுத்தி விசாரித்ததால் அவள் சரியாக உணவு கூட உண்ணாமல் நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்து ஒருகட்டத்தில் அவமானம் தாங்காமல் இனி இந்த ஊரில் எப்படி வாழ்வதென தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அவர் கண்முன்னே நிழலாடியது.
பெண்கள் அழுதால் வீடு விளங்குமா? அல்லது நாடு தான் விளங்குமா? கண்ணுக்கு தெரிந்து வீட்டில் உள்ள பெண் தெய்வங்களை அழவைத்து விட்டு, பெண்கடவுள்களுக்கு உகந்த "சங்கிராந்தி, பௌர்ணமி, பிரதமை" ஆகிய தினங்களில் அவற்றை வணங்கினால் மட்டும் பலன் கிட்டுமா?
ஆண்கள் தவறு செய்து தப்பித்து விட்டால் அதற்கு வீட்டில் இருக்கும் பெண்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தல்லவா இப்படி ஒரு ஆணையை ராஜ ராஜன் பிறப்பித்திருக்கிறார்! இந்த கல்வெட்டு பொறிக்கப்படும்..இனி வரப்போகும் அரசும்..ஊர் சபையும் இந்த உத்தரவை பின்பற்றும்.. என் மருமகளுக்கு நேர்ந்த அவலம் இனி இந்த மண்ணில் பிறந்த, பிறக்கப் போகும் எந்த பெண்ணுக்கும் நேராது என யோசிக்க யோசிக்க அந்த பெரியவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. இடுப்பில் இருந்த துண்டை கழற்றி கண்ணை துடைத்தவாறு கூட்டத்தை விட்டு நகர்ந்தார். தூரத்தில் காவேரிப்பாக்கம் வரதர் கோயில் தூணில் மன்னனின் அரசாணையை கல்லில் செதுக்கும் ஓசை அவர் காதிற்கு கேட்கத் துவங்கியது, தஞ்சையில் இருக்கும் இராஜராஜனை நோக்கி தெற்கே திரும்பி ஒரு கும்பிடு போட்டபடி நடையை துவங்கினார் அந்த பெரியவர்!!

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...