Wednesday, October 5, 2016

ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும், பாஜகவையும் தேவர் ஆதரித்தாரா?


தேவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும், பாஜகவையும் தேவர் ஆதரித்தார் என்று ஒரு தம்பி சொல்கிறார்.


இதுபோன்ற மூளைச் சலவையில் இருப்பவர்களுக்காக இந்த கடிதம். தேவர் இந்து மத பற்றாளராக இருந்தாரே ஒழிய இந்து தீவிரவாத அமைப்புகளில் இருக்க வில்லை.


1935-ம் ஆண்டு வீர் சாவர்க்கர் திருநெல்வேலியில் பேசினார். அவரது தீவிரமான பேச்சால் மதுரை கூட்டத்திற்கு தலைமை வகிக்க ஒப்புக் கொண்டவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். பின்னர் அந்த கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் பொறுப்பு தேவருக்கு கொடுக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய தேவர் சாவர்க்கரின் தீவிரவாத கொள்கையை ஏற்கிறேன். அதன் பலனாக என்ன கிடைத்தாலும் பரவாயில்லை என்று பேசினார்.


பின்னர் பேசிய சாவர்க்கர், தேவரை "தென்னாட்டுத் திலகர்" என்று போற்றினார். மேலும் தேவர் போன்ற தீவிரவாதிகள் நாடுமுழுவதும் தோன்ற வேண்டும் என்று பேசினார். வீர் சாவர்க்கர் ஒரு இந்து என்பதால் தேவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் ஒரு தீவிர சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் அதில் கலந்துகொண்டார். வெள்ளை அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களை மதவாதிகளாக காட்ட முயன்றது என்பது வேறு விஷயம். தேவர் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு தீவிரவாதி. ஆனால் மத விஷயத்தில் அப்படி இல்லை.


1938-ம் ஆண்டு ராஜாஜி தலைமையிலான மத்திய அரசு அரிஜன ஆலய நுழைவு உரிமையை சட்டமாக்கியது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆலய நுழைவை நடத்தும் பொறுப்பு காந்தியின் தீவிர பக்தரான வைத்தியநாத ஐயரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஆலய நுழைவு நடத்தினால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரத்த ஆறு ஓடும் என்று சனாதனிகள் எச்சரித்தனர். சனாதனிகள் என்பது ஆர்எஸ்எஸ்-காரர்களே. சனாதன மதம் என்பதுதான் இந்து மதத்தின் பழைய பெயர்.


அப்போது வைத்தியநாத ஐயர் மதுரை சிறையிலிருந்த தேவரின் உதவியை நாடினார். தேவர் சனாதனி ரவுடிகளை எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் ஆலய நுழையவில் நானும் கலந்துகொள்வேன். ரவுடிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார். அதன் பின்னரே ஆலய நுழைவு அமைதியாக நடைபெற்றது.
1948-ம் ஆண்டு நாதுராம் கோட்ஸே காந்தியை கொலை செய்ததும் மதுரையில் யாரோ முஸ்லீம் ஒருவர்தான் காந்தியை கொன்று விட்டதாக வதந்தி பரப்பப்பட்டது. அந்த வதந்தி முஸ்லீம்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டது.


அப்போது தேவர் காந்தியை கொன்றது ஒரு முஸ்லீம் அல்ல, ஒரு இந்துதான் என்று மதுரை மக்களிடையே பிரச்சாரம் செய்து அமைதியை நிலைநாட்டினார். இவ்வாறு தேவர் ஒரு இந்துவாக இருந்தாரே தவிர இந்து தீவிரவாதிகளுக்கு அவர் ஒருபோதும் ஆதரவாக இருந்ததில்லை.


தேவர் தலைவராக இருந்த ஒரே இந்து அமைப்பு பசும்பொன் அருகேயுள்ள அபிராம் கிராமத்தில் உருவாக்கப்பட்ட இந்து மகா சபைதான். அதுவும் ஏன் உருவாக்கப்பட்டது என்றால் அந்த கிராமத்தில் ஏற்பட்ட இந்து - முஸ்லீம் பிரச்சனைக்கு தீர்வு காணவே.


அந்தக் கிராமத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்டிய முஸ்லிம் செல்வந்தர்கள் பலர் இருந்தனர். பொது சந்தை முஸ்லீம்களின் பகுதியில் இருந்தது. சந்தையில் வியாபாரம் செய்யும் இந்துப் பெண்களிடம் முஸ்லீம் இளைஞர்கள் முறை தவறி நடந்துகொண்டார்கள். இந்தப் பிரச்சனை தேவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர் முஸ்லீம் பெரியவர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பினார். ஆனால் முஸ்லீம் பெரியவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.


முஸ்லீம் இளைஞர்களின் அட்டூழியங்கள் தொடர்ந்தன. தேவர் வெளியூர்க்காரர் இந்தப் பிரச்சனையில் தலையிடக் கூடாது என்று முஸ்லீம்கள் தரப்பில் சொல்லப்பட்டது.


இதைத் தொடர்ந்து அந்த கிராம மக்கள் தேவரின் பெயரில் அந்த கிராமத்தில் ஒரு வீடு வாங்கியதோடு அவரை இந்து மகாசபை என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகவும் தேர்வு செய்தனர்.


அதன் பின் தேவர் அந்த கிராமத்தில் முஸ்லீம் கடைகளில் பொருட்களை வாங்கக் கூடாது என்ற ஒத்துழையாமை போராட்டத்தை துவக்கினார். இதனால் முஸ்லீம்களின் வியாபாரம் படுத்தது. அவர்கள் தேவர் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கிறார் என்று சொல்லி அருகேயுள்ள ஊர்களான முதுகுளத்தூர், கமுதி, பெருநாழி போன்ற ஊர் முஸ்லீம்களிடம் உதவி கோரினர்.


ஆனால், நீங்கள் தொடக்கத்திலேயே நமது இளைஞர்களை கண்டித்திருந்தால் விவகாரம் இந்த அளவுக்கு முற்றி இருக்காது, இதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்று கூறி ஒத்துழைக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக தேவர் மீது கலவர வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு இதுபோன்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்துவதில் தவறில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


அதேபோல தேவர் ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கோல்வால்கரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதாக ஒரு புகைப்படத்துடன் ஒரு பொய் பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அறிவாளிகள் செய்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் இருப்பவர் தேவரும் அல்ல. அந்த தகவலும் பொய்யானது.


1980-ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரசியல் கட்சியான பாரதிய ஜனசங்கம் 1951-ம் ஆண்டில் துவக்கப்பட்டது. அப்போது தேவர், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.


தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் தமிழர் விரோத கட்சியான பாஜக எத்தனையோ மூளைச்சலவையைச் செய்யலாம் உஷாராக இருந்துகொள்ளுங்கள்.


https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
https://en.wikipedia.org/wiki/All_India_Forward_Bloc
https://en.wikipedia.org/wiki/Rashtriya_Swayamsevak_Sangh

https://en.wikipedia.org/wiki/Bharatiya_Janata_Party

No comments:

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...