Monday, December 24, 2018

பெரியார் தனிமனிதர் இல்லை, தமிழ்த்தேசியத்திற்கு எதிரான தத்துவக் குறியீடு.

"பெரியார்" தனிமனிதர் இல்லை...!

அநேக நெருக்கடியான சூழலில் இதை எழுத வேண்டாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் சிலவற்றை உணர்வதற்கும், உணர்த்துவதற்கும் இந்த பதிவு தேவையாகிறது.

இன்றைய சூழலில் பெரியார் மீது வைக்கப்படுகின்ற விமர்சனம் தேவையா ? தேவையற்றதா ? என்பதை உங்களில் பார்வையில் இருந்தே விளக்குறேன். பெரியாரை நீங்கள் இறந்துபோன ஒரு நபராக, ஒரு தத்துவத்தை பிடித்து நடந்து, அவரின் தத்துவ வாரிசுகளை தமிழர் அரசின் அதிகாரத்து உயர்த்திய தனிமனிதனாக பார்க்கிறீர்களா ? இல்லை இறந்துபோன ஒரு தத்துவத்தை உயிர்ப்பிக்க, அந்த தத்துவத்தோடு தொடர்புபடுத்தப்பட்ட, பொய்யான வரையறைகளின் படி புனிதப்படுத்தப்பட்ட, அந்த தத்துவத்தின் நீட்சி இந்த இனத்திற்கு செய்த, செய்துகொண்டு இருக்கிற துரோகங்களை எல்லாம் பத்திரமாக மூடி மறைக்கிற ஒரு கேடயமாக பார்க்கிறீர்களா ?

உண்மையில் எனது பார்வை இரண்டாவது. ஏன்எனில் ஐம்பது ஆண்டுகாலமாக இந்த மண்ணில் திராவிட அரசியல் செய்த துரோகங்கள் விமர்சிக்கப்படும் போதெல்லாம், மண்ணுரிமை நாம் இழந்துபோனது திராவிடர்களால் மட்டுமே என்று பேசும் போதெல்லாம், தமிழர் வாழ்வியல் கலாச்சாரம் முற்றிலுமாக சீரழிக்க பட்டுவிட்டதே அதற்கு காரணம் திராவிட அரசியலே என்று நாம் பேசுகிற போதெல்லாம், ஈழத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் உறவுகள் கொல்லப்பட்டதற்கு காரணம் காங்கிரஸும் அதனுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவும் மட்டுமே என்று நாம் பேசுகிற போதெல்லாம், நமது பேச்சுக்கு தொடர்பற்று "பெரியார் மட்டும் இங்கு இல்லாவிட்டால், நீங்கள் ?" என்று திராவிட கூடாரங்கள் கூக்குரல் எழுப்பும். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது பெரியார் ஒரு தனிநபரல்ல, திராவிடர்களின் துரோகங்களை, திராவிடம் செய்த அயோக்கியதனைகளை மூடி மறைக்கின்ற பேராயுதம்.

இப்போது சொல்லுங்கள், போர்க்களத்தில் நிற்கின்ற ஒருவன், நூற்றாண்டுகால எதிரியை போர்க்களத்தில் வெல்லவேண்டிய இறுதிக்கட்டத்தில் இருக்கின்ற ஒருவன், எதிரியின் பலவீனங்களையெல்லாம் மூடி மறைக்கும், அவர்களை சரியவிடாமல் பாதுகாக்க அவர்கள் பயன்படுத்தும் பொய்யாக புனிதமாக்கப்பட்ட கேடயத்தை கட்டுடைக்க வேண்டாமா ? இல்லையா ?.

எமது பெரியாரிய விமர்சனகள் கூட, தனிநபரை நோக்கியது அல்ல, எதிர்த்தளத்தின் தத்துவமாக முன்னிறுத்தப்படுகிற தனித்த பெயரினை மட்டுமே.

பெரியார் இந்த மண்ணில் புனிதமாக்கப்படுவதால் என்ன நிகழப்போகிறது ? என்று நமது உறவுகள் கூட சிந்திக்கலாம். ஆம் அது மிகவும் ஆபத்தான அணுகுமுறை. ஏன் என்றால், ஏற்கனவே புனிதமாக்கி கட்டமைக்கப்பட்ட ஒன்றை, ஒரு தத்துவத்தின் குறியியிடாக இருக்கும் ஒன்றை உண்மையான விமர்சனத்தை கூட வைக்காமல் நகர்ந்துவிட முடியாது. எதிர்கால சந்ததிக்கு உண்மையான அரசியலை நாம் அடையாளம் காட்டவேண்டும் என்ற அவசியம் இருக்கிறது, நமது அண்ணன் சீமான் நமக்கு காட்டியது போல.

உங்கள் ஆழ்மனதில் ஒன்றை கேட்டுக்கொள்ளுங்கள், 1970 களில் நமது தந்தையர்கள் அரசியல் அறிவில் தெளிவுபெறாமல் இருந்தது போல, இன்று நாம் இருந்திருந்தால் இன்று பெரியாரை இவர்கள் கொண்டாடத்தேவையில்லை, கருணாநிதியையே கொண்டாடி இருப்பார்கள். ஆனால் காலச்சூழலில் இப்போதை தலைமுறையாகிய ஓரளவிற்கு அரசியல் அறிவுபெற்று வருகின்ற இந்த சூழலில், கருணாநிதியை புனிதப்படுத்ததுதலில் எந்த பயனும் இல்லை, எவரும் நம்பப்போவதுமில்லை. திராவிட அரசியலில், நிகழ்காலத்தில் புனிதப்படுத்த எந்த அடையாளங்களும் இல்லாத சூழலில் திராவிடம் தனது இருப்பை தக்கவைத்து கொள்ள ஏற்கனவே புனிதப்படுத்தப் பட்ட ஒன்றை தனது அடையாளமாக கட்டமைத்து தனது துரோகங்களை மறைக்க நினைக்கிறது. திராவிட அரசியலில் இந்த மண்ணில் நிகழ்ந்த துரோகங்களுக்கெல்லாம் மறைக்க பயன்படுத்தும் புனிதப்படுத்தப்பட்ட அடையாளம் "பெரியார்"

உண்மையில் பெரியார் மட்டும் "போலி கடவுள் மறுப்பு" கொள்கையை முன்மொழியாமல் இருந்திருந்தால் இன்றைய சூழலில் திராவிட தளகர்த்தர்கள் அனைவரும் பெரியாருக்கு ஊருக்கு ஊர் கோவிலை கட்டி, ஆறுகால பூஜை செய்து, திராவிடத்தை தனி மதமாக அறிவித்து இந்நேரம் பல்கி பெருகி இருப்பார்கள். ஆனால் கடந்தகால வாழ்க்கை அதற்கும் இடம்தரவில்லை.

எனவேதான் இந்த பெரியார் புனிதப்படுத்தும் படலம் முழுவீச்சாக இங்கே நடக்கிறது. திருச்சியில் "கருஞ்சட்டை ஊர்வலம், மாநாடுகூட" பெரியார் புனிதப்படுத்துதலின் வந்த தொடர்ச்சிதான்.

ஸ்டாலினிடம் இருந்து கட்டளை திராவிட இயக்கங்களுக்கு வருகிறது, திராவிட இயக்கங்கள் ஏற்கனவே திமுகவின் இரண்டாவது பிரிவு என்பதால் இந்த இயக்கங்களால் பொதுவான ஒரு ஒருங்கிணைப்பை செய்ய இயலவில்லை. அதை செய்ய ஒரு ஆள் தேவைப்படுகிறது. 160 இயக்கங்கள், அவற்றில் பெரும்பாலான இயக்கங்களிடம் அவர்களின் பெயரை பயன்படுத்த முறையான அனுமதி பெறவில்லை. தமிழகத்தில் பெரிய ஆளுமைகள் அனைவரையும் அவர்களிடம் ஒப்புதல் பெறாமலேயே அவர்களின் பெயரினை போட்டு துண்டுசீட்டுகள் பிரசுரிக்கப்பட்டது (இன்று ஊர்வலத்திற்கு வராதவர்கள் எவரிடமும், அவர்களின் பெயரினை பயன்படுத்த அனுமதி பெறவில்லை என்பதே உண்மை). இப்படியான அவசரகதியாக கருஞ்சட்டை ஊர்வலத்தையும், கைத்தடியும் தூக்கவேண்டிய அவசியம் என்ன ?

காவிகளை எதிர்க்கவா ? காவிகள் இங்கே எங்கு இருக்கிறார்கள் ? உண்மையில் காவிகளை எதிர்க்கவே இந்த கருஞ்சட்டை பயணம் என்றால், முறைப்படி காவிகள் கொட்டாரமடிக்கிற மாநிலங்களில் இதை செய்து இருக்கலாமே ? குறைந்த பட்சம் இந்த கருஞ்சட்டை பயணத்தை காவிகளை எதிர்க்கும் பொருட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலிலாவது அவர்கள் செய்திருக்கலாமே ? இது உண்மையில் காவிகளை எதிர்க்கும் பேரணியல்ல.

மாறாக எல்லா எலிக்களையும் மயக்கி இசைவாசித்து, ஆற்றில் இறங்கிவிடும் சூதகம்தான், ஸ்டாலின் அரசியலுக்கு பலியிடப்படும் கறுப்பாடுகள் அவை. இவைகளை முன்னின்று நடத்த இயக்கங்களை ஒன்றிணைக்கும் வாழும் வல்லபாய் படேல் திருமுருகன் காந்தி.

இந்த கருஞ்சட்டை ஒருங்கிணைவு முழுக்க முழுக்க தமிழ்த்தேசியத்தின் எதிர்நிலை தத்துவமான ஆரியம் போலவே திராவிடம் செய்கின்ற இன்னொரு சூது. உண்மையில் திராவிட அரசியல், தமிழ்த்தேசியத்தின் மீது வைத்திருக்கும் அளவற்ற பயத்தின் வெளிப்படையான வெளிப்பாடு.

இன்றைய கருஞ்சட்டை மாநாட்டில் ஆரிய-பார்ப்பன அரசியல் அதிகாரத்தை எதிர்த்து ஏதேனும் தீன்மானம் நிறைவேற்றப்பட்டதா ? ஒருவேளை தீர்மானம் காவிகளுக்கு எதிராக நிறைவேற்ற பட்டிருந்தால், அந்த பார்ப்பன எதிர்ப்பு தன்னைத்தானே காஸ்மீர் பார்ப்பனன் என்று பேரறிவுப்பு செய்து கொண்ட காங்கிரசின் தலைவர் ராகுல் காந்திக்கும் பொருந்துமா ? ஒருவேளை பொருந்தினால் நாளை காங்கிரசோடு திமுக கூட்டணி அமைத்தால் இந்த கருஞ்சட்டை கூட்டம் எதிர்க்குமா ?

அப்படியெல்லாம் நிகழவில்லை என்றால் இன்று புனிதப்படுத்தப்படும் பெரியாரும் அவரின் தடியும் ஆரிய-பார்ப்பனர்களை எதிர்க்க இல்லை என்பது உண்மைதானே ?.

கருஞ்சட்டையின் நோக்கம் ஆரிய-பார்ப்பன எதிர்ப்பு இல்லை என்ற பட்சத்தில்,அவர்களின் இந்த நோக்கமற்ற ஒன்றுகூடலின் நோக்கமென்ன ?

இந்த மண்ணில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமாக வளர்ந்துவரும் தமிழ்த்தேசிய அரசியலை எதிர்க்கத்தானே இந்த ஒன்றுகூடல்?

அப்படியெனில் அங்கே புனிதப்படுத்தப்பட்டு, கட்டமைக்கப்படும் பெரியார் எனும் பிம்பம் தமிழ்த்தேசியத்தை எதிர்க்கத்தானே ?

இந்த கேள்விகளின் தொடர்ச்சி, பெரியார் என்ற புனிதப்படுத்தட்ட பிம்மம், மேலும் புனிதப்படுத்த படுவதன் நோக்கம் தமிழ்த்தேசியத்தின் களங்களை சமாளிக்கவே. எனவே களத்தில் தடைகளை உடைப்பதே நமக்கான வெற்றியாக இருக்க முடியும்.

தமிழ்த்தேசியத்தின் அடையாளத்தை தவிர, இந்த மண்ணில் புனித்தபடுத்தப்படும் எந்த அடையாளங்களும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதே. எனவே நாம் இந்த மண்ணில் விழிப்போடு இருக்கவேண்டும்.

இங்கே துரோக அரசியல்கள் சில புனிதமாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களின் பின்னே மறைந்துகொண்டு தப்பிக்க நினைக்கிறது.

காவிகளும் - கருஞ்சட்டைகளும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களே...!

இன்னும் பெரியார் வழியில் உங்களுக்கு சொல்லப்போனால்...

எப்படி ஆரிய-பிராமண எதிர்ப்பை, அதன் புனிதப்படுத்தப்பட்ட வடிவமாக இருந்த பிள்ளையாரை எதிர்த்து தனது பகுத்தறிவை பெரியார் நிலைநாட்டினாரோ...

அதேபோல திராவிட அரசியலின் எதிர்ப்பை, அந்த திராவிட அரசியலின் புனிதப்படுத்தப்பட்ட பிம்பமாக திராவிடர்கள் கட்டமைக்கும் "பெரியார்" எனும் பிம்பத்தை எதிர்ப்பதும் ஒருவகையான, இந்த நேரத்தில் மிகவும் அவசியமான செயல்பாடு என நான் உளமார நம்புறேன்.

அதை மிகவும் நெகிழ்ச்சியோடு செய்வேன்.

பெரியார் தனிமனிதர் இல்லை, தமிழ்த்தேசியத்திற்கு எதிரான தத்துவக் குறியீடு.

Senthilnathan Dhurai

https://www.facebook.com/senthilnathan.dhurai.3/posts/124128801949083

Tuesday, December 18, 2018

மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்


அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 18வது தேசிய மாநாடு 2018 டிசம்பர் 12 முதல் 16 வரை கொல்கத்தா. மௌலாஅலி பகுதியில் ராம் லீலா மைதானத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேனி மாவட்டத்தின் பொருளாளரான எனக்கு மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.

Sunday, December 2, 2018

பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத்தேவர்


தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.
"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!"
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர்.
"சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர். பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார்.
அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார்.
சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் "சோமசுந்தர விலாசம்" என்று பெயரிட்டார்.
1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.
தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார். தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர்.
பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.
நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.
அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சமயத்தில் பாண்டித்துரைத் தேவர் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு பிறந்த கதையை பாராதிதாசனின் "பாரதியாரோடு பத்தாண்டுகள்" நூல் வாயிலாக அறியலாம்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பாண்டித்துரைத் தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் கருத்து பின் வருமாறு:-
தமிழ்நாட்டைப் பற்றி சுருக்கமாக எல்லாரும் பாடக் கூடிய மெட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது.
அந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம்.
அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம்
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கி பாட்டொன்று எழுதினார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.
சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய;
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.இராகவையங்கார், மு.இராகவையங்கார், அரசன் சண்முகனார், இராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், புலவர் அப்துல்காதிர் இராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" ஏடே உதவியது.
உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி, செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார்.
அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப் பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில் மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ் மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.
மேலும் சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர்.
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.
நான்காம் தமிழ்ச்சங்கம் கி.பி. 1901 முதல்
பிலவ ஆண்டு ஆவணித் திங்கள் 13-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை சித்திரை மீன் கூடிய நன்னாளில் 14. 09.1901 பகல் 1.30 மணிக்கு மேல் 2.45 மணிக்குள் மதுரை சேதுபதி உயர்பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்டது. அதே நன்னாளில் 1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை, 2. பாண்டியன் புத்தகசாலை 3. நூலாராய்ச்சி சாலை என்பனவும் தொடங்கப்பெற்றன.
சங்கம் தோன்றக் காரணங்கள்
முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களும் அழவுற்று சிதைந்தன. கடைச்சங்க பாண்டி மன்னன் உக்கிர பெருவழுதிக்குப் பின் கி.பி. 250ல் கடைச்சங்கம் முழுமையாய்ச் செயல்இழந்து விட்டது. பண்டைய நாளில் தமிழ் மொழிகும், தமிழ்ச் சங்கத்திற்கும் இருந்து வந்த ஏற்றத்தையும், பின்நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்திய பாண்டியத்துரைத் தேவர், மீண்டும் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் நிலை ஏற்றம் பெற்று, பண்டைய நிலைக்கு உயர வேண்டும் என்னும் பேரார்வப்பெருக்கால் சுமார் 1651 ஆண்டுகளுக்குப்பின் 1901 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தனர்.
சங்க நோக்கங்கள்
1. நான்காம் தமிழ்ச்சங்கம் பொழுது போக்குக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ, அரசியல் செல்வாக்குப் பெறுதற்காகவோ அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல.
2. அரசின் பொருட்கொடையையோ, பல்கலைக் கழகங்களின் நல்குதலையோ எதிர்பார்த்து தொடங்கப்பட்டதும் அல்ல.
3. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், முச்சங்கம் கண்டு முன்பு தமிழ் மொழி பெற்றிருந்த உச்ச நிலைக்கு மீண்டும் உயர்த்த வேண்டும் என்ற நன்னோக்கோடும் உருவாக்கப்பட்ட சங்கமே நான்காம் தமிழ்ச்சங்கம்
தொடக்க நாளிலே உருவாக்கப்பட்ட சங்கத் தீர்மானங்கள்
நான்காம் தமிழ்ச்சங்கத் தொடங்க விழாவிற்கு மன்னர் பாசுகர சேதுபதியவர்கள் தம் பரிவாரங்கள் புடைசூழ வந்திருந்தார். சேதுநாட்டு அவைப்புலவர்களும் பாண்டித்துரை தேவர் தம் அவைப் புலவர்களும் குழுமினர். பெரும்புலவர்களாகிய உ.வே. சாமிநாதைய், சடகோப ராமாநுசாச்சாரியார், ராகவ ஐயங்கார், பரிதிமாற் கலைஞர், சண்முகம்பிள்ளை விழாவிற்கு வந்திருந்தனர். மதுரை மாநகரமே விழாக்கோலம் கண்டது. சங்கத் தொடக்க நாளிலேயே கீழ்க்காணும் “9 தீர்மானங்கள்” நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ்க் கல்லூரி உண்டாக்குதல்.
2. தமிழ் ஏடுகளை அச்சிட்டு பயன்படுமாறு தொகுப்பது.
3. வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல்.
4. வடமொழி ஆங்கில நூலைகளை தமிழில் மொழி பெயர்த்தல்
5. தமிழ்க் கல்வி பற்றிய செந்தமிழ் இதழ் வெளியிடுதல்.
6. தமிழில் தேர்வு நடத்தி பட்டமும் பரிசும் வழங்குதல்.
7. தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல்.
8. தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல்.
9. வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை அரங்கேற்றுதல்
இந்த ஒன்பது நோக்கங்களை நிறைவேற்றத்தக்க ஏழு அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கின.
1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை.
2. பாண்டியன் புத்தக சாலை.
3. நூலாராய்ச்சி சாலை.
4. கல்விக் கழகம்.
5. தமிழ்ச் சங்க முத்திராசாலை (அச்சகம்)
6. செந்தமிழ் என்னும் திங்களிதழ்
7. தமிழ்த் தேர்வு என்பவைகளாம்.
சேது சகோதரர்களின் கொடைகள்
ஒன்றுவிட்ட உடன் பிறப்புக்களான மன்னர் பாண்டித்துரையாரும் மன்னர் பாசுகர சேதுபதியவர்களும் இளம்வயிதலேயே தந்தையர்களை இழந்தபோதிலும் மனம் தளராமல் தமிழ்த் தொண்டாற்றத் துணிந்தனர். இன்று நான் காணும் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, செந்தமிழ்க் கல்லூரி, நான்காம் தமிழ்ச் சங்கம் போன்ற அனைத்துமே அவர்கள் தந்தருளிய கொடைகளே. வேந்தர் பாசுகரசேதுபதி சங்கத் தொடக்க நாளிலே 10000 வெண்பொன் வழங்கி வாழ்த்தினர். பாண்டித்துரைத் தேவர் தாம் குடியிருந்த மாளிகையையே சங்கத்திற்குத் தியாகம் செய்த்ததோடு மட்டுமல்லாமல் சங்கம் என்ற குழந்தை எந்தவிதக் குறையின்றி வளரத் தேவைபடும் அனைத்து வசதிகளையும் தம் சொந்தச் செலவிலேயே பராமரித்தார். சங்கம் என்றுமே சுயமாக தங்குதடையின்றி நடைபெறுவதற்கு தக்க வகையில் சில நிலையான அறக்கட்டளை பாண்டிய மன்னர் பாசுகர் சேதுபதியவர்கள், கடைச் சங்க பாண்டிய மன்னம் உக்கிரப் பெருவழுதி காலத்தில் கி.பி. 250ல் மறைந்த தமிழ்ச் சங்கம், 1901இல் பொன்பாண்டித்துரைத் தேவரால் மீண்டும் நான்காம் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் உயிர்பெற்று எழுந்தது. நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, உயிர்கொடுத்து, உடல் வளர்த்து, கல்லூரி கண்டு, செந்தமிழ் என்னும் திங்களிதழ் பெற்று, தமிழ்மனம் வீச வீரநடை போடுகிறதென்றால் அது சேது சகோரதர்கள் வழங்கிய கொடைகளே.
இன்றும் நான்காம் தமிழ்ச் சங்கம்
அன்று, அதாவது 1910 இல், எவ்வளவு சிறப்பாக இந்த நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டதோ அதே சிறப்புடன் அதே நோக்கங்களை நிறைவேற்றி, வளர்ச்சிப் பாதை நோக்கி முன்னேறிச் செல்கிறது. இன்று சங்கம் தொடங்கப்பட்ட அன்றே நிறைவேற்றப்பட்ட முதல் அய்ந்தாம் தீர்மானங்கள் உடனே நிறைவேற்றப்பட்டு, செந்தமிழ்க் கல்லூரியாகவும், செந்தமிழ் திங்களிதழாகவும் மலர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வருகின்றன. பல தமிழ் அறிஞர்களையும், தமிழ் முனைவர்களையும், தமிழ் இலக்கிய மேதைகளையும் உருவாக்கி மகிழ்கிறது நான்காம் தமிழ்ச் சங்கம்.
தமிழ்ச் சங்க நிர்வாகங்களை, தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு கண்காணித்து வருகிறது. ஆட்சிக் குழுவின் தலைவராக – முகவை மன்னர் மாட்சிமை தாங்கிய திரு, இராசா நா .குமரன் சேதுபதியவர்களும், துணைத் தலைவராக திருமதி. இராணி இலட்சுமி நாச்சியார் அவர்களும் மாண்புமிகு அய்யா திரு. இரா. அழகுமலை அவர்கள் செயலாளராகவும் மற்றும் ஒன்பது ஆட்சிக்குழு உறுப்பினர்களும் ஆட்சிக் குழுவில் பங்கேற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
செந்தமிழ்க் கல்லூரியின் நிர்வாகங்களை கல்லூரிக் குழு கண்காணிக்கிறது. கல்லூரிக் குழுவின் தலைவராக மாண்புமிகு டாக்டர் ந. சேதுராமன் அவர்களும், செயலாளராக மாண்புமிகு அய்யா திரு. இரா. குருசாமி அவர்களும் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்டு சிறப்புடன் செயல்பட்டுவருகிறது. செந்தமிழ் திங்கள் இதழ் சிறப்பாகத் தமிழ்த் தொண்டாற்றி வருகிறது.
பாண்டித்துரைத் தேவர்கள் உருவச்சிலை
கொடைவள்ளல், சங்கம் கண்ட தமிழ்ச் செம்மல், மாண்புமிகு மன்னர் பாண்டித்துரைத் தேவரின் திரு உருவச் சிலை மீண்டும் அதே இடத்தில் 2007இல் சங்கம் நிறுவியது. சங்கத் தலைவர், துணைத்தலைவர், சங்கச் செயலர், சங்க ஆட்சிக்குழு, பொதுக்குழு, கல்லூரிக் குழு, கல்லூரிப் பேராசிரியப் பெருமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களின் ஆர்வத்தாலும் அயராத உழைப்பாலும் சிலை நிறுவப்பட்டதோடு மட்டுமல்லாமல், மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதைகளோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் குழு
நான்காம் தமிழ்ச் சங்கவெளியீடாகிய செந்தமிழ் என்னும் திங்கள் இதழ், 1902 முதல் இன்று வரை மிகச்சிறப்பாக தமிழ்த் தொண்டாற்றி வருகிறது. இவ்விதழை சிறப்புடன் வெளியட ஆசிரியர் குழு ஒன்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. இக்குழுவில் தமிழறிஞர்களும், பெரும்புலவர்களும், பேராசிரியப் பெருமகளும், முனைவர் பெருமக்களும், மொழி ஆய்வாளர்களும், தமிழார்வளர்களும் பங்கேற்று தொண்டாற்றுகிறார்கள். தமிழ் அறிஞர் முனைவர் திரு. தமிழண்ணல், பெரும்புலவர் திரு. இரா இளங்குமரன், நா. பாலுசாமி, ம. ரா. போ. குருமசாமி, அ.அ. மணவாளன், கதிர் மகாதேவன் மற்றும் தமிழார்வளர்கள் ஆலோசகர்களாகவும் அவைப் புலவர்களாகவும் வீற்றிருக்கின்றனர்.
நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களால் 1901 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம் நூறு ஆண்டைக் கடந்து எட்டாம் ஆண்டில் நடைபயின்று கொண்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெறவேண்டிய நூற்றாண்டு விழா இவ்வாண்டு 2008ல் நடைபெறத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் சங்க ஆட்சிக்கு குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு விழா வெற்றிவாகை சூடட்டும். கொடை வள்ளல் பாண்டித்துரைத் தேவரின் புகழ் ஓங்கட்டும். நான்காம் தமிழ்ச் சங்கம் செழித்தோங்கி வளரட்டும்.
நாற்சங்கம் கண்ட செம்மொழி தமிழே நீ வாழ்க!

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...