Tuesday, October 22, 2013

(தலித்களுக்கு) நீதிக் கட்சி இழைத்த அநீதி


‘தென்னிந்தியாவில் அரசியல், சமூக மோதல்: பிராமணரல்லாதார் இயக்கமும் தமிழ்ப் பிரிவினை வாதமும் 1916-1929’ (Politics and Social Conflict in South India: The Non-Brahman Movement and Tamil  Separation. 1916-1929) என்ற ஆய்வு நூலை எழுதிய யூகென் எஃப். இர்ஷிக், நிதிக்கட்சி தாழ்த்தப்பட்டோர் விரோதப் போக்கைக் கடைப் பிடித்து வந்ததை விரிவாகவே அலசியிருக்கிறார்.

தாழ்த்தப்பட்டோரை சென்னை மாநகர எல்லைக் குள்ளேயே இருக்கவிடலாகாது என்றும் அவர்களை ஒரே இடத்தில் திரளாக வசிக்கவிடாமல் அதிக இடைவெளிவிட்டு வெவ்வேறு இடங்களில் குடி அமர்த்த வேண்டம் என்றும் வற்புறுத்துகிற அளவுக்கு அந்த விரோதப் போக்கு வரம்பு மீறியிருக்கிறது!

நடேச முதலியாரும் டி.எம். நாயரும், தாழ்த்தப் பட்டோர் சமூகம் என்பது பல்வேறு பிரிவுகளைக் கண்ட ஒரு மிகப் பெரிய சமூகம் என்பதை உணர்ந்திருந்தார்கள். தங்களுடைய கட்சி வளர அத்தகைய பெரிய சமூகத்தின் ஆதரவு கிடைப்பது பேருதவியாக இருக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதியாக முன்னுக்கு வந்துகொண்டிருந்தவர் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்கிற எம்.சி.ராஜா (1883-1943). தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக அரசினரால் அடையாளம் காணப்பட்ட ராஜா, 1909-லேயே சென்னை ராஜதானியின் சட்டசபைக் கவுன்சிலில் நியமன உறுப்பினராக இடம் பெற்றிருந்தார்.

நீதிக்கட்சி தொடங்கப்படுவதற்கு முனபே நடேச முதலியார், ராஜாவை அரவணைத்து வந்தார். அதுவே நீதிக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் ராஜாவை அந்தக் கட்சியில் கொண்டு போய்ச் சேர்த்தது.  

நீதிக்கட்சியில் பெரும் நிலப் பிரபுக்களும், வர்த்தகப் பிரமுகர்களும், படிப்பாளிகளும் இருக்கையில் அங்கு சாமானிய மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத குறையை எம்.சி.ராஜாதான் நிரப்பினார். அவரும் ஒரு பட்டதாரியாக இருந்தபோதிலும், உத்தியோக வேட்டையில் இறங்காமல், தமது சமூகத்தினரின் நலனைப் பாதுகாப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்தி வந்தார். இந்து சமூகத்திலிருந்து வெளியேறுவது தாழ்த்தப்பட்டோரின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது என உறுதியாக நம்பியவர் அவர். தாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளர் பட்டியல் வேண்டும் என முதலில் வற்புறுத்திய ராஜா, நடைமுறை நிலையை உணர்ந்து, தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் போதும் என்று ஒப்புக் கொண்டார்.
நடேச முதலியாரும் டி.எம். நாயரும் நீதிக் கட்சியில் தாழ்த்தப்பட்டோரின் பங்கு இருக்க வேண்டும் என்று விரும்பிய போதிலும் மற்ற தலைவர்களுக்கு அதில் ஈடுபாடு இல்லை. அவர்களின் கவனம் எல்லாம் அரசு நிர்வாகத் துறையிலும் ஆட்சியிலும் பிராமணர்களின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு அந்த வெற்றிடங்களை பிராமணரல்லாத பிற மேல் சாதியினர் கைப்பற்றிக் கொள்வதற்கான வழிமுறைகளைத் தேடுவதில்தான் இருந்ததது.
டி.எம்.நாயரின் மறைவும் தியாகராயச் செட்டியால் நடேச முதலியார் கட்சியில் ஓரங்கட்டப்பட்டதும் எம்.சி.ராஜாவுக்கு நீதிக் கட்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும், அவர் கட்சியில் நீடித்து வந்தார்.

1920-ல் திருத்தி அமைக்கப்பட்ட விதிகளின்படி சென்னை ராஜதானி சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற்றபோதிலும் ராஜாவுக்கு நீதிக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதி என்கிற சொந்தச் செல்வாக்கின் பேரிலேயே அவர் சட்டசபையில் அரசின் நியமன உறுப்பினராக இடம்பெற முடிந்தது.
செல்வந்தர்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்டோரைத் தமது விவசாயப் பண்ணைகளில் அடிமைகளைப் போல் நடத்தி வந்த நிலச்சுவான்தார்கள் நிரம்பியிருந்த நீதிக்கட்சி, தாழ்த்தப்பட்டோர் நலனில் ஆர்வம் இருப்பது போல் காட்டிக் கொள்வது தனக்கு ஆள்பலம் தேவை என்பதற்காகவே என்பதைப் புரிந்துகொள்ள ராஜாவுக்கு அதிக நாள் தேவைப்படவில்லை.

1921-ல் சென்னையில் பக்கிங்காம் கர்னாடிக் மில் பஞ்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது அது பிராமணரல்லாத பிற சாதியினருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையிலான சண்டையாக உருவெடுத்தது. அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, எம்.சி. ராஜா தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுக்கச் செய்துவிட்டதன் விளைவு அது.
தொழிற்சங்கத் தலைவர் என்ற முறையில் திரு.வி.க., தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார். அவர் காங்கிரஸ்காரராக இருந்தாலும், தொழிலாளர் பிரச்சனையில் ஈடுபாடுள்ள நடேச முதலியார் அவருக்கு ஆதரவாகத் துணை நின்றார்.
தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ராஜாவிடம் திரு. வி.க. கேட்டுக் கொண்டார். இருவருக்குமிடையே நல்ல நட்புறவு இருந்து வந்தது.

ஆனால், ‘ஆங்கிலேய ஆட்சியின் பயனாகத்தான் தாழ்த்தப்பட்டோரின் நிலை சீராகி வருகிறது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்று அமைதியைக் குலைக்க வேண்டாம் என்று அரசினர் அறிவுறுத்தியுள்ளனர். அதை மீறி நடப்பது சாத்தியமில்லை’ என்று ராஜா அவரிடம் உறுதியாகக் கூறிவிட்டார்.

பிராமணரல்லாத பிற சாதித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டபோது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றார்கள். அவர்களை வேலைக்குப் போகவிடாமல் பிற சாதித் தொழிலாளர்கள் தடுத்தனர். ஆலையைக் காத்து நின்ற காவலர் மீது பிற சாதித் தொழிலாளர்களின் சீற்றம் திசை திரும்பியது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் பல பிற சாதித் தொழிலாளர்கள் இறந்தனர். அவர்களின் ஆத்திரம் தாழ்த்தப்பட்டோர் மீது பன்மடங்காகப் பாய்ந்தது.
தாழ்த்தப்பட்டோரை கருங்காலிகள் என்று தூற்றிய பிராமணரல்லாத பிற சாதித் தொழிலாளர்கள், அவர்கள் பெருமளவில் வசித்து வந்த புளியந் தோப்பு பகுதியின் மீது தாக்குதல் நடத்தினார்கள். தாழ்த்தப்பட்டோரின் குடிசைகள் கொளுத்தப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். பிராமணர் அல்லாத பிற சாதித் தொழிலாளர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் பதில் தாக்குதல் நடத்தினர். புளியந்தோப்புப் பகுதியில் பிற சாதியினர் நடமாடவே முடியாது என்ற நிலைமை உருவாகிவிட்டது. அருகில் உள்ள பெரம்பூர் பகுதியில் இருந்த நடேச முதலியாரின் உறவினர் வீட்டின் மீதும் தாக்குதல் நடந்தது.

தொழிலாளர் நல ஆணையரும் காவல்துறை அதிகாரிகளும் தாழ்த்தப்பட்டோருக்குச் சாதகமா நடந்துகொள்கிறார்கள் என்று நிதிக் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் தொழிலாளர் நலத்துறையையே நீக்கிவிடலாம் என்றார் நீதிக் கட்சியின் முக்கியத் தலைவரான ஓ. தணிகாசலம் செட்டியார்!
சட்டம் ஒழுங்கு சீரடைவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வறிக்கை அளித்த நீதிக் கட்சித் தலைவர் பிட்டி தியாகராயச் செட்டி அதற்கும் ஒரு படி மேலே போய், சென்னை நகரில் அமைதி நிலவ வேண்டுமானால் தாழ்த்தப்பட்டோரை நகரை விட்டே அப்புறப்படுத்திவிட வேண்டும் என்றும் அவர்களை ஒரே இடத்தில் பெரும் திரளாக வசிக்கவிடாமல் பல்வேறு பகுதிகளில் தூர தூரமாகக் குடியமர்த்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்!

முதன்மை அமைச்சராகப் பதவி ஏற்ற பனகல் அரசர் ராம நிங்கராயரும் இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர் நலனைப் புறக்கணித்து, பிராமணர் அல்லாத பிற சாதியினர் நலனை மட்டுமே கவனித்தார்.

‘பிராமணர் மீது பிராமணரல்லாதோர் சுமத்தும் குற்றச் சாட்டுக்கள் அத்தனையையும் பிராமணரல்லாதார் மீது தாழ்த்தப்பட்டோரான நாங்கள் இப்போது சுமத்துகிறோம்’ என்று தமது ‘ஆதி திராவிடன்’ இதழில் எம்.சி. ராஜா எழுதினார்.

நீதிக் கட்சியின் போக்கால் அதிருப்தியடைந்த ராஜா, 1922-ல் அதிலிருந்து வெளியேறினார். அவரைப் பின்பற்றித் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் நீதிக் கட்சியிலிருந்து விலகினர்.
1923-ல் திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற தென்னிந்திய ஆதி திராவிடர் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராஜா, ‘புளியந்தோப்பு கலவரத்திலிருந்துதான் ஜஸ்டிஸ் கட்சித் தவைர்களுக்கும் ஆதி திராவிடர்களுக்கும் இடையில் கருதுது வேறுபாடு ஏற்பட்டதாக எவரும் எண்ண வேண்டாம். அதற்கும் நீண்ட காலம் முன்பிருந்தே ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் மேலாதிக்கப் போக்குடன் வெளிப்படையாகவும் மறைவாகவும் தாழ்த்தப்பட்டோரை நசுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறார்கள். நண்பர்களைப் போல நடித்து நமக்காக முதலைக் கண்ணீர் வடித்து நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்’ என்று கண்டனம் தெரிவித்தார்.

1940-ல் திராவிடஸ்தான் கோரிக்கையை ஈ.வே.ரா.வும் அவரது தொண்டர்களும் எழுப்பியபோது, ‘ஆதி விராவிடஸ்தான்’ கோரிக்கையை தாழ்த்தப்பட்டோர் தலைவர் முனுசாமிப் பிள்ளை எழுப்பினார். பிராமணர் அல்லாதோரின் வன்கொமைகளிலிருந்து தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்கும் பொருட்டே ஆதி திராவிடஸ்தான் அவசியமாகிறது என்று அவர் வாதிட்டார். அதனை ஈ.வே.ரா.வின் ‘விடுதலை’ இதழ் வன்மையாகக் கண்டித்தது.
நீதிக் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் விரோதப் போக்கு தெள்ளத் தெளிவாகப் புலப்படுகையில், அதனோடு சொந்தம் கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணியாக இப்போது மாறியுள்ள கி. வீரமணியின் திராவிடர் கழகமும் தாழ்த்தப்பட்டோர் நலனுக்குத் தாமும் எதிரிகளே என ஒப்புக் கொள்வதாகக் கருதலாம் அல்லவா?

நன்றி :-
திராவிட இயக்கம் புனைவும் - உண்மையும் (பக்கம் 104-108)


நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...