Sunday, April 29, 2012

மீண்டும் வலுப்பெறுகிறது தமிழீழக் கோரிக்கை


அனலை நிதிஸ் ச. குமாரன்

போரை வெற்றிகொள்ள களம் இருந்தால் மட்டும் போதாது. புறநிலைக் களம் மற்றும் மக்களின் ஆதரவுகள் இருந்தால்த்தான் போரை வெற்றிகொள்ள முடியும் என்பதுதான் நியதி. இறுதிப் போர் நடைபெற்ற வேளையில் தமிழகம் புறநிலைக் களமாக இருந்திருந்தால் தமிழீழத் தனியரசை பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கியிருக்க முடியும்.

1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாறுதல்கள் தமிழீழம் அடையும் நோக்கத்திற்கு தடையாக இருந்தது. 1991-ஆம் ஆண்டுக் காலப் பகுதிகளுக்கு முன்னர் பல ஆண்டுகள் தமிழ் போராளி அமைப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் தமிழீழம் அமைக்கும் நோக்கம் பலிக்காமல் போனதற்கு ஒரு காரணமாக இருந்தது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான ஈழத் தமிழர்களின் ஆயுதப் போர் தமிழீழக் கோரிக்கைக்கு தடைக் கற்களாகவே அமைந்தது. தமிழர்களுக்கென்று ஒரு கட்டுக்கோப்பான அரசியல் தலைமைத்துவம் இன்றுவரை இருந்ததில்லை. இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைப் பண்புகளை கொண்டிருந்தார்கள். அரசியல் ரீதியாக தமது தலைமைப் பண்பை உருவாக்கி வரும் வேளையில் இறுதிப் போருடன் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.
ஏறத்தாள எட்டுக் கோடித் தமிழர்களைத் தன்னகத்தே வைத்துள்ள தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளின் பின்னுக்கு முன் முரணான நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக தமிழர்களை ஒற்றுமைப்படுத்தும் நிலையில் இல்லை. தமிழ்நாடு மற்றும் தமிழர் மேம்பாட்டுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிட்டால், ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளை வசைபாடி மக்களை பிழையான வழிக்கே அழைத்துச் சென்றுள்ளார்கள் என்பதுதான் வரலாறு.

தலைமைப் பண்புகளுக்கு ஒவ்வாத செயற்பாடுகளையே கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் இதுநாள் வரை செய்து வந்துள்ளார்கள். கொள்கை ஒன்றை வகுத்துவிட்டால் அதற்காக இறுதிவரை போராடும் தன்மை ஒரு தலைவருக்கு இருத்தல் வேண்டும். தொண்டர்கள் அக்கொள்கைகளில் இருந்து மாறாமல் இருக்க தலைவர் தொடர்ந்தும் அதற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். பெரியார், காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற மறைந்த தமிழகத் தலைவர்கள் தமது கொள்கைகள் என்னவோ அதற்காக போராடி வெற்றியடைந்தவர்கள்.

போராட்டப் பாதைகள் மாறலாம் ஆனால் போராட்டம் மாறிவிடக்கூடாது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அடிக்கடி கூறுவார். இவருடைய கூற்று நூற்றுக்கு நூறு வீதம் உண்மையே. ஒற்றையடிப் பாதையில் சென்று போராட்டத்தை வெல்லலாம் என்பது மடத்தனம்.போராட்டத்தின் தன்மைகளை அறிந்து நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு போராட்டத்தை செய்தாலே வெற்றிகொள்ள முடியும்.

காலத்திற்கு ஏற்றவாறு மாறும் தலைமைகள்
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் உயரிய தலைமைப் பண்பைக் கொண்டவர். தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை பற்றுக்கொண்டு வெல்லும் மனம் படைத்தவர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதித் தீர்வு என்கிற கொள்கையை ஏற்றுக்கொண்டு தமிழீழப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் பல்வேறு உதவிகளைச் செய்தவரே எம்.ஜி.ஆர் என்பது உலகறிந்த உண்மை.

1970 மற்றும் 1980-களில் தமிழ்ப் போராளிகள் தமிழகம் சென்றபோது அவர்களைப் பிடித்து சிறிலங்காவிடம் ஒப்படைத்த கலைஞர் பின்னர் தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி ரெசோ என்கிற அமைப்பின் தலைவராக செயற்பட்டார். இயக்கங்களை ஒற்றுமைப்படுத்துவதற்குப் பதில் அவர்களை பிரித்துப் பார்க்கவே விரும்பினார் கலைஞர். டெலோ போன்ற போராளி இயக்கங்களுக்கு பண உதவிகளை செய்து விடுதலைப் புலிகளின் தலைமையை ஓரம்கட்ட வேண்டுமென்கிற வகையில் செயற்பட்டார் கலைஞர்.
காலத்திற்குக் காலம் மாறுபட்டக் கருத்துக்களைக் கொண்டு செயற்பட்டவரே கலைஞர். இராஜீவ் மரணத்திற்குப் பினனர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாறுதல் காரணமாக1991-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் கலைஞர் பேசுகையில்,விடுதலைப் புலிகளின் தனி ஈழம் என்ற கோரிக்கையில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார். ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென்கிற வாதத்தை முன்வைத்துப் பேசிவந்தவர் கலைஞர்.

பிரபாகரன் இல்லையென்றால் தமிழர்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று கூறி வந்தவரே ஜெயலலிதா. 1990-ஆம் ஆண்டில் கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்து மீண்டும் தேர்தலை நடத்தி அதன் மூலமாக தான் ஆட்சிக்கட்டில் ஏறிவிட வேண்டுமென்கிற காரணத்தினால் பொய்ப் பிரச்சாரங்களை ஜெயலலிதா மேற்கொண்டார்.

சிங்கள அரச படைகளுடன் மீண்டும் 1990-ஆம் ஆண்டில் போர் ஆரம்பித்தவுடன் பல்லாயிரம் தமிழர்கள் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக படையெடுத்திருந்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் உட்புகுந்து விட்டதாகவும், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்து விட்டதாகவும் கூறி தமிழக ஆட்சியைக் கலைக்க உத்தரவிடும்படி போராட்டங்களை முன்னெடுத்த ஜெயலலிதா வெற்றியும் கண்டார்.

இந்திய மத்திய சர்க்கார் தமிழக அரசைக் கலைத்து ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்தது. 1991-ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். இதனைச் சாட்டாக வைத்து கலைஞர் தலைமையிலான தி.மு.காவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஜெயலலிதா அமோக வெற்றிபெற்று தமிழக முதல்வரானார். இதன் பின்னர் இயற்றப்பட்ட சட்டங்கள் ஈழத் தமிழர்கள் பற்றியோ அல்லது அவர்களுடைய போராட்டம் பற்றியோ தமிழகத்தில் பேசுவதற்குக்கூட இடமளிக்கவில்லை.

தமிழீழத்திற்கு ஆதரவாக பேசுபவர்கள் சிறை அடைக்கப்பட்டனர். அப்பாவி ஈழத் தமிழ் அகதிகளை கைது செய்து புலி எனும் முத்திரை குத்தி பல்லாண்டு காலம் சிறைவாசம் அனுபவிக்க வழி அமைத்து கொடுத்தார் ஜெயலலிதா. காலங்கள் உருண்டோடின. பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் ஈழத்தில் அழியும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள் தமிழக அரசியல்வாதிகள்.தமிழீழ விடுதலைக்குப் போராடிய விடுதலைப் புலிகள் புறநிலைக் களமின்றி தவித்தார்கள்.

பல்வேறுபட்ட தடைகளை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மக்களை வதைப்படுத்தியது சிங்கள அரசுகள். தமிழ் நாடு பக்கபலமாக இருந்திருந்தால் எவ்வித தடைகளுமின்றி பொருட்களை கொள்முதல் செய்து பல்லாயிரம் மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். புறநிலைக் களம் இல்லாத காரணத்தினால்த்தான் ஈழத் தமிழர்கள் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. ஈழத்திற்கு ஆதரவாக தாம் வாழும் நாடுகளில் உலகத் தமிழர்கள் போராட்டங்களைச் செய்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்ந்தார்கள். ஆனால், புறநிலைக் களம் இல்லாத காரணத்தினாலேயே நான்காம் கட்ட ஈழப் போர் தோல்வியில் முடிந்தது.

மீண்டும் ஈழத்திற்கான குரல்
ஈழப் போர் உச்சிக்கட்டத்தில் இருந்த போது ஜெயலலிதாவின் கட்சி எதிர்க் கட்சியாக இருந்தது. தமிழக மக்களின் எழுச்சியைக் கண்டு அவர்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறிவிட வேண்டுமென்கிற காரணத்தினால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மூன்று வருடங்களுக்கு முன்னர் எடுத்தார் ஜெயலலிதா. கலைஞருக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு மீண்டும் அரச நாற்காலியைப் பிடித்துக் கொண்ட ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சில செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். தமிழீழமே ஈழத் தமிழர்களுக்கு இறுதித் தீர்வு என்று கூறாமல் இலங்கைத் தமிழர்கள் என்றே கூறிவருகிறார் ஜெயலலிதா.

கலைஞர் தலைமையிலான தி.மு.க. கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.அன்றிலிருந்து இன்றுவரை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பேச்சுக்களை பேசி வருகிறார் கலைஞர்.பொதுக்கூட்டம் ஒன்றில் கலைஞர் சில தினங்களுக்கு முன்னர் பேசும்போது, “தமிழீழம் மலராததற்கு காரணம் நிறைய உண்டு. அது பற்றி ஆராய்ந்து சொல்ல விரும்பவில்லை. தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். தமிழீழத்துக்கு இன்றைய தினம் புதிய எழுச்சியை உருவாக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.நான் முன்பு சொன்னது போல் எனக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளோ தெரியாது. ஆனால் ஈழத்தின் எழுச்சியை உருவாக்காமல் உங்களை மட்டும் அல்ல இந்த உலகத்தை விட்டே போகமாட்டேன்"என்றார் கலைஞர்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உங்களுக்கு நிறைவேறாத ஆசை உண்டா?என்று பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு ஈழம் மலர வேண்டும் என்பதே என் ஆசை என்றேன். தமிழ் மலர பாடுபட நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மீண்டும் டெசோவை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதில் நானும்இ பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி இடம்பெறுவோம்" என்றார் கலைஞர்.

கடந்த வாரம் சிறிலங்கா சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜனும் இடம்பெற்று இருந்தார். நாடு திரும்பியதும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவான பல சொற்பதங்களை பாவித்தே வந்தார் இவர். குறிப்பாக தாம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் சென்ற போது தமிழ் மக்கள் தனித் தமிழீழம் கோரவில்லையெனவும், இலங்கை நாட்டிற்குள் சில அரசியல் அதிகாரங்களைப் பெற்று வாழ வேண்டுமென்பதே தமது விருப்பம் என்று தம்மிடம் தமிழ் மக்கள் கூறியதாக பத்திரிகையாளர்களிடம் கூறினார் ரங்கராஜன். இது குறித்து இவருடைய கருத்துக்களை நிராகரிக்கும் விதமாக அறிக்கையை வெளியிட்டார் கலைஞர்.

கலைஞர் தனது அறிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், சுரேஷ் பிரேமச்சந்திரன், வாக்குறுதிகளை மீறுவதையே இலங்கை அரசு வழக்கமாக கொண்டிருக்கும் வரலாற்றினை சுட்டிக்காட்டி இருக்கிறார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தோலுரித்துக் காட்டியிருக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பின்பற்றி வரும் தமிழர் விரோத வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் பார்த்தால்; தற்போது சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் அதிபர் ராஜபக்சே அளித்திருக்கும் உறுதிமொழிகள் அனைத்தும் ஏமாற்றும் தந்திரோபாயங்கள் தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்."

டி.கே.ரங்கராஜன் வெளியிட்டுள்ள இன்னொரு தகவல் நமது உள்ளத்தை உலுக்குகிறது. மட்டக்களப்பு பகுதிகளுக்குச் சென்ற போது எங்களுக்கு வேதனையான நிலை ஏற்பட்டது. உண்மையிலேயே நான் கண்ணீர் விட்டேன்.இலங்கைப் போரில் 35,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாகி உள்ளதைப் பார்த்தோம். இவர்களில்13,000 விதவைகள் 23 வயதுக்கும் குறைவானவர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார்."

தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் யாரும் வலியுறுத்தவில்லை என்று சொல்லியிருக்கும் டி.கே. ரங்கராஜன் கவனத்திற்கு ஒரு நிகழ்வினை நினைவூட்ட விரும்புகிறேன். 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு, 1976-ல் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், அனைத்துத் தமிழ் மக்களின் விடுதலைக் கூட்டணி, மலையக மக்களுடைய அமைப்பு என எல்லோரும் ஒன்றிணைந்து ‘தனித் தமிழ் ஈழம் தான் என்ற முடிவினைத் தீர்மானமாக வடித்தெடுத்து அதனையே முன் வைத்து தேர்தலிலே போட்டியிட்டார்கள்.தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர 18 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.”

தனித் தமிழ் ஈழம் தான் என்பது 1977-ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு.ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.இலங்கைத் தமிழர் பிரச்சினையை அடக்குமுறை அடாவடிகளாலோ,அதிகார அத்து மீறல்களாலோ, சர்வாதிகார சதிராட்டங்களாலோ தீர்த்து விட முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மேலும் தாமதமோ தயக்கமோ இன்றி தீர்வு காணப்பட வேண்டுமென்பது காலத்தின் கட்டளை. அதைக் கால வரையறையின்றி ஒத்தி வைத்து விட முடியாது" என்று தனது அறிக்கையில் கூறினார் கலைஞர்.

தனி ஈழக் கோரிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சித்துள்ள கலைஞருக்கு அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கூறியுள்ள கருத்தைத்தான் டி.கே.ரங்கராஜன் தெரிவித்ததாக ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார். இதுதொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தனி ஈழத்திற்குக் குறைவான எதற்கும் இலங்கைத் தமிழர்கள் எதற்கும் சம்மதிக்க மாட்டார்கள் என்ற கருணாநிதியின் கருத்து குறித்து தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே தீர்வு காண்பதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை சென்ற இந்திய எம்.பிக்கள் குழுவிடமும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்."

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கருத்தரங்கில் உரையாற்றுகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்பதையே வலியுறுத்தினார்.இப்போதும் கூட அவர் தனி ஈழத்திற்குக் குறைவான எதையும் ஏற்கமாட்டோம் என்று கூறவில்லை.மாறாக, தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றுதான் வலியுறுத்தியுள்ளார்.எந்த ஒரு பிரச்சனையிலும் சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்தோட்டம் என்ன என்பதே முதன்மையானது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி, அர்த்தபூர்வமான அதிகாரப்பரவல் என்பதையே முன்பின் முரணின்றி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது" என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

தமிழீழம் அடையும் வரை ஓயமாட்டேன் மற்றும் வன்முறையின்றி ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றவாறு தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இதற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசு உதவ வேண்டுமென்று கருணாநிதி குரல் கொடுத்துள்ளதானது உலகத் தமிழர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. ஆட்சிக் கட்டிலில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கலைஞர் பேசுவது நாடகம் என்று கருதுகிறார்கள் உலகத்தமிழர்கள்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு அதுவே தனது நிலைப்பாடும் என்று கலைஞர் தொடர்ந்து கூறிவந்தார். ஆனால் தற்போது திடீரென பல்டி அடித்துள்ளது வெறும் நாடகம் என்று கருத வேண்டியுள்ளது. சிங்களவர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்கூடாது என்று சில வருடங்களுக்கு முன்னர் பேசியவரே கலைஞர். தனி ஈழம் என்கிற வாதத்தை இப்போது முன்வைத்துப் பேசும்போது மகிந்த ராஜபக்சாவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சா கலைஞரைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்.ஈழத்தை இந்தியாவில் அமைப்பதே சிறந்ததாகவும் கலைஞர்ருக்கு அறிவுரை கூறியுள்ளார் கோத்தபாய.

பல்லாயிரம் தமிழ் மக்கள் ஈழத்தில் சாகும்போது ஆட்சியில் இருந்தவரே கலைஞர்.இந்திய மத்திய அரசில் கலைஞருடைய கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தனது கட்சியின் செல்வாக்கை பாவித்து மனிதாபிமான ரீதியிலாவது ஈழத் தமிழர்களின் துயரை துடைக்க முனையாமல் வெறும் கண்துடைப்பு நாடகங்களை நடத்தியதைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை. இப்படிப்பட்டவர் தற்போது தொடர்ந்தும் ஈழம் பற்றி அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார். இவருடைய அறிக்கைகளுக்கு பதில் அறிக்கைகளை தொடர்ந்தும் வெளியிட்டுவரும் ஜெயலலிதா இது சம்பந்தமாக எதனையும் தெரிவிக்காமல் இருக்கிறார்.

தமிழீழ விடுதலைக்கான குரல் மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கிறது என்பது உண்மையே. தலைமைப் பண்புகள் இல்லாமல் வெறும் அரசியல் காய் நகர்த்தல்களுக்காக ஈழப் போராட்டத்தைப் பாவிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம். தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் தமிழீழமே சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு இறுதியும் அறுதியுமான தீர்வு என்று கூறி அறவழிப் போராட்டத்தை ஆரம்பிப்பதே தமிழீழ தனியரசை நிறுவ வழி வகுக்கும். இதுவே லட்சக்கணக்கான மக்களின் குருதி சிந்திய மண்ணுக்கும் மக்களுக்கும் அளிக்கும் ஆதரவாக அமையும்.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்:nithiskumaaran@yahoo.com

சாதிப் பிரச்சனைக்கு தீர்வுண்டா?



பண்புடன் குழுமத்தில் நடைபெற்ற சாதிப்பிரச்சனைக்கு தீர்வு உண்டா என்று நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதுகிறேன். உலகில் இந்தியாவை தவிர ஏனைய பகுதிகளில் சாதிஎன்ற அமைப்பு இல்லாவிட்டாலும் கூட மனிதர்கள் சிறு குழுக்களாக இருப்பதும் அவர்கள் தங்களிடையே வேற்றுமை பாராட்டி வருவதும் நடப்பில் உள்ளது. நடைபெற்ற விவாதத்தில் படித்தவர்கள் மத்தியிலும்சாதி உணர்வு உள்ளது, எனவே இந்த உணர்வை ஒழிக்க முடியாது என்று பாதிக்கும் மேற்பட்டோர் வாதிட்டனர். சாதி பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பதால் அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று மறுபாதியினர் குறிப்பிட்டனர். இதனை ஒழிக்க கட்டாய முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிலர் கூறினர்.

இந்த பிரச்சனையை ஆழமாக புரிந்துகொள்ளும் நோக்கில் இதுபற்றி ஆராய்வோம்.

சாதி வலுவான சமூக கட்டமைப்பு

சாதி என்பது ஒரு பிரச்சனைக்குரிய அமைப்பாக இருந்தாலும், இது வலுவான சமூக, அரசியல், பொருளாதார கட்டமைப்பாக உள்ளது. ஒரு சாதியில் இருப்பவர் சமூக அந்தஸ்து என்று வரும்போது அவர் தனது சாதியை சேர்ந்தவரையும் எடைபோட்டுத்தான் பார்க்கிறார். அதேவேளையில் மாற்றுசாதியினருடன் ஒப்பிடும்போது அவர் தன் சாதியினரை கண்மூடித்தனமாக நம்புகிறார். சமுதாயத்தின் அடிப்படை கட்டமைப்பான திருமணம் சாதி அடிப்படையிலேயே நடைபெறுகிறது. குடும்ப விழாக்கள் முற்கொண்டு குழந்தை பிறப்பு, காதணி விழா, பூப்புனித நீராட்டு, இறப்பு என சமூக விழாக்கள் அனைத்தும்சாதிக்கட்டமைப்புக்குள்தான் நடைபெறுகிறது. எனவே இதுபோன்ற ஒரு வலுவான கட்டமைப்பை ஒழிப்பது என்பது இயலாத காரியம், மாறாக இது நல்ல ஒரு அமைப்பே என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

உண்மைதான் சாதி சமூகத்தின் ஆணிவேராக இருந்து சமூகத்திற்கான ஒரு அடிப்படை அமைப்பாக இருந்து வருகிறது. இதனை ஒழிப்பது என்பது இயலாத காரியமே. அதேவேளையில் இதில் உள்ள குறைபாடுகளை களைய முயற்சி செய்தால் அது தவறு இல்லையே? உதாரணமாக இதே சாதிஅமைப்புதான் காதல் திருமணங்களை எதிர்க்கிறது. காதல் திருமணங்களை எதிர்ப்பது என்பது மனித இனத்திற்கு எதிரான செயல் அல்லவா?

பொருளாதார கட்டமைப்பு

அதேபோல சாதி நிதியுதவியிலும் ஒரு உதவிகரமான அமைப்பு என்று கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக குடும்ப விழாக்களில் அளிக்கப்படும் மொய்-அன்பளிப்பு நிதி உதவியை கூறலாம். அதே போல ஒருவருக்கு நெருக்கடி ஏற்படும்போது, ஒருவர் தன் தொழிலில் நஷ்டத்தை அடைந்து தோல்வியை சந்திக்கும்போது, அவரது உறவினர்கள் அவனுக்கு ஊக்கமளித்து வேண்டிய நிதி உதவியை செய்கின்றனர். வியாபாரத்தில் வளர்ச்சி பெற உதவுகின்றனர். மார்வாடி சாதியினர் தங்களது சாதி நபர் ஒருவர் தொழிலில் பலமுறை தோல்விபெற்றாலும் மீண்டும் மீண்டும் பொருளுதவி செய்து அவரை கைதூக்கி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் மற்ற பிரச்சனைகள் வந்தாலும் உடனே ஓடிவருவது ஒருவரின் சாதிசனம்தான் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில் நொடித்துப்போன ஒருவனை கைவிடுவதும் இந்த சாதிதான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பணம் இல்லாதவனை சமமாக நடத்தாததும் இந்த சாதிதான். பொருள் இருந்தால்சாதிசனம் தன்னால் வரும் என்பார்களே?

அரசியல் சக்தி
சாதி அமைப்புக்கு மக்களிடையே உள்ள நம்பிக்கைதான் சாதி அரசியல், வாக்கு வங்கி அரசியலுக்கு வழிவகுத்துள்ளது. ஒரு சாதி வாக்கு என்பது மொத்தமாக கிடைக்கும் வாக்கு என்றே கருதப்படுகிறது. இதனை சரியாக புரிந்து வைத்துள்ள அரசியல் கட்சிகள் சாதிகளிடையே பிரிவினையை வளர்த்து அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. இந்த அரசியல் கட்சிகள் சாதிகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக சாதிகளிடையே பகைமையை வளர்த்து வருகின்றன. இந்த நிலையில் சாதிகள் ஒன்றின் மீது ஒன்று நம்பிக்கை இல்லாத நிலையிலேயே இருந்து வருகின்றன. அதேபோல சாதிகளால் தனிப்பட்ட முறையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பதும் உண்மையே. சாதி ஆதரவு இல்லாமல் ஆட்சியை பிடிப்பதும் என்பதும் முடியாது என்பதும் உண்மையாகவே தெரிகிறது. எனவேதான் நாளுக்குநாள் சாதி அரசியலும் சாதி கட்சிகளும் பெருகி வருகின்றன.


சாதிச் சமநிலை
இந்தியாவில் நிலவும் தீண்டாமை சாதியை அடிப்படையாக கொண்டது. இதனால் தீண்டாமையை ஒழிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இருந்தாலும் சாதி மட்டும் ஒழிந்தபாடில்லை. இதற்கு இன்னொரு காரணம் சாதிகளை மேம்படுத்த பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் என்ற அடிப்படையில் சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது ஆகும்.

இட ஒதுக்கீடு வழங்க ஒருவரின் சாதியை அறிந்து கொள்வது அவசியம் என்ற நிலையில் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படும்போதே சாதி கேட்கப்படுகிறது. இது அவர்கள் பெறும் கல்விச சான்றிதழிலும் குறிக்கப்படுகிறது. இது தொழுவத்தில் கன்றுகளை அடையாளம் காண சூட்டுக்கோலால் அடையாளம் இடுவதைப்போல உள்ளது. சான்றிதழில் சாதியை குறிப்பிடுவதை நிறுத்திவிட்டால் சாதி மறைந்துவிடும் என்றும், ஆனால் சான்றிதழில் சாதி குறிப்பிடுவதை நிறுத்திவிட்டால் மட்டும் சாதி மறைந்து விடாது என்று பலரும் வாதம் செய்தனர். இது உண்மைதான்.

ஆனால் சான்றிதழில் சாதி குறிப்பிடுவது நிறுத்தப்பட்டால் அதன் ஆணிவேரை அறுப்பது போன்றதாகும். அதேவேளையில் இட ஒதுக்கீட்டை எப்படி அளிப்பது என்ற பற்றிய கேள்வியும் எழுகிறது. இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்போது அது அனைத்து தாழ்ந்த நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் உதவும்.  

இட ஒதுக்கீட்டு முறையின் தோல்வி

நாடு விடுதலை பெற்று 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த இந்த 65 ஆண்டுகள் நீண்ட காலமாகும். இந்த காலத்தை வைத்துப் பார்த்தால் நம்நாட்டில் உள்ள சாதி அடிப்படையான இட ஒதுக்கீட்டுக் கொள்கை தோல்வி பெற்றுவிட்டது என்றே கூறவேண்டும். ஏனெனில் ஒதுக்கீடு வழங்கப்படும் தலித் மக்களின் வாழ்க்கையில் பெரிதும் முன்னேற்றம் ஏற்பட்டுவிடவில்லை. இன்னும் பல சாதிகள் தங்களை ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகின்றன. இவ்வாறு அண்மையில் போராடியசாதியினர்தான் ராஜஸ்தானை சேர்ந்த குஜ்ஜார் சாதியினர்.

இவர்களது கோரிக்கை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏன் சாதிகளின் பட்டியல் குறையாமல் அதிகரிக்கிறது என்று கேட்டனர். மேலும் சாதிகள் குறையாதபட்சத்தில் இட ஒதுக்கீட்டால் பயனில்லை என்றுதானே அர்த்தம் என்று அவர்கள் கேட்டனர். ஆனால் அரசாங்க வழக்கறிஞர்களால் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை.

எனவே சாதி அடிப்படையான இட ஒதுக்கீட்டை விட்டு விட்டு சாதிகளை முன்னேற்ற சரியான  பொருளாதார அடிப்படையான  இட ஒதுக்கீட்டு கொள்கையை உருவாக்க வேண்டும். மேலும் சாதி அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார குழுக்களை அமைக்க வேண்டும். இந்த குழுக்கள் மாற்றுச் சாதி குழுக்களுடன் இணைந்து தொழில் தொடர்புகள், வியாபார வாய்ப்புகள் போன்றவற்றை உருவாக்கித் தரவேண்டும். பொருளாதார முன்னேற்றமே சாதிமுன்னேற்றத்தை தருவதாக அமையும். ஆனால் இதனை செய்ய சாதி அமைப்புகளோ, கட்சிகளோ, அரசாங்கமோ செய்யத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.           

இட ஒதுக்கீட்டு முறையை நம்பியே ஏராளமான படித்த தலித் இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை வீணாக்கிக் கொள்கின்றனர் அவர்கள் மத்தியில் வர்த்தகத்தில் ஈடுபடுவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தரவேண்டும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து விட்டாலே ஓரளவு சாதிச் சமநிலை அடைந்து விட்டது என்று கூறலாம்.

சாதி வன்முறை
எல்லாச் சாதிகளிலும் பண்பாளர்களும் சில்லறைகளும் உள்ளன. இந்த சில்லறைகள்தான் தங்களது சாதிவெறியை ஊட்டி அதனை வளர்த்து வருபவர்கள். சாதி அரசியல் நடத்துபவர்களுக்கும் இவர்களே தேவை. எதுவும் சொன்னால் தாங்கள் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் பண்பாளர்கள் இவர்களை செய்வதை கண்டு கொள்வதில்லை. இதுவே சில்லறைகளுக்கு ஊக்கமாக அமைகிறது. இது இன்று பள்ளி கல்லூரி மாணவர்களிடமும் பரவியுள்ளது என்பது மிகவும் கொடுமையான விஷயம். இதனை போக்கசாதி பொருளாதாரக் குழுவை அமைப்பது போல சாதி நல்லிணக்க குழுக்களை அமைக்க வேண்டும். இந்தக் குழு பிரச்சனை ஏற்படும் பகுதிகளில் உருவாகும் சிறு பிரச்சனைகளை கண்டறிந்து உடனடியாக அவற்றை போக்க வேண்டும்.

உதாரணமாக குருபூஜை விஷயத்தில் தேவர் மற்றும் தலித் மக்கள் ஏற்படும் வன்முறை சில்லறைகள் காரணமாகவே ஏற்படுகிறது. இரு தரப்பினரும் தாங்கள் செல்லும் வழிகளில் உள்ள மாற்றுச் சாதியினரை ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். சாதி நல்லிணக்கக் குழு இருந்தால் வழியில் உள்ள கிராமங்களை கண்காணித்து பிரச்சனைகளை போக்கிவிடலாம். நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒருவருக் கொருவர் உதவி செய்யலாம். உதாரணமாக மும்பையில வாழும் சீக்கியர் இந்துக்களின் பண்டிகை காலத்தில் சாலையில் ஊர்வலமாக செல்பவர்களுக்கு குளிர்பானம் வழங்குவதை குறிப்பிடலாம். இதனைசாதிச் சங்கங்கள்சாதிக் கட்சிகள், அரசாங்கம் செயல்படுத்த முன்வரலாம். இதனை ஒரு நீண்டகால திட்டமாக செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

சாதி வலிமையை ஆற்றலாக மாற்றலாம்
சாதி பிரச்சனை தீர்க்க முடியாதது போல தோன்றினாலும் முயற்சி செய்தால் காலப்போக்கில் இதனை போக்கிவிடலாம். அதற்கு தேவை சாதி ஒழிப்பு அல்ல. சாதியின் சக்தியை ஆற்றலாக மாற்றுவதாகும். காட்டாற்று வெள்ளத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பது போல சாதியின் சக்தியை ஆக்கப்பூர்வமான ஆற்றலாக மாற்றிவிடலாம். அவ்வாறு மாற்றப்படும் பட்சத்தில் நிச்சயம் சாதி வெறி தணிந்து அது உதவிகரமான அமைப்பாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.    

கடுமையான நடவடிக்கைகள்
சாதியை ஒழிக்க வேண்டும் என்ற துணிச்சலான முடிவை அரசாங்கம் எடுத்தால் சில கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். சாதியை தக்க வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு தனியான கட்டணச் சான்றிதழ் மற்றும் சாதி வரிசாதி திருமண வரி, கூடுதல் வரிகள் விதித்தல் போன்றவற்றை விதிக்கலாம். சாதிகளை தக்க வைத்துள்ளவர்களிடம் வேலை, வர்த்தகம், அனுமதி போன்ற அனைத்து நடவடிக்கைகளிலும் பின்தள்ளப்படுவது. இது காலப்போக்கில் சாதி வெறியை குறைப்பதாக அமையலாம். இருந்தாலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தும்.

Saturday, April 28, 2012

கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

துரைசிங்கம் புஸ்பகலா 
மண்கும்பான் யாழ்ப்பாணம்






உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. 


அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது. "இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்" அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும். தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள். தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். 


கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை. காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை. ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை. கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள். 


ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது. லெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க 'தவளை நடவடிக்கை' யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம். 'நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா' என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது. 'பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை' என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. 


எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது. கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். 


அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள். எல்லாம் தயார். கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள். 


அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள். இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன். என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள். 1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? 


எல்லோருக்குமே பரபரப்பு. தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது. ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர். 'ரைட், கட்டளைக் கப்பல் அவுட்' என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர். சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். 


ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி 'எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே' என்ற எண்ணமே மேலோங்கியது. அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள். ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள். தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது. இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.


Courtesy - தமிழர் நலன் விரும்பி

Thursday, April 26, 2012

தமிழ் ஈழத்துக்கான முதல் குரல்



தந்தை செல்வா தனது நாடாளுமன்றப் பதவியைவிட்டு விலகியதையொட்டி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காட்சி
தந்தை செல்வா தனது நாடாளுமன்றப் பதவியைவிட்டு விலகியதையொட்டி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காட்சி (காங்கேசன்துறை) இலங்கையில் 1918-இல் “இலங்கை தேசிய காங்கிரஸ்’ எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து வைத்த சர்.பொன்னம்பலம் அருணாசலம், பின்னாளில் அதில் சிங்களவரின் ஆதிக்க வெறியை எதிர்த்து, “தமிழ் லீக்’ (1924) என்னும் அமைப்பைக் கண்டார். இதன் நோக்கம் தமிழ் இனத்தின் தனித்துவம் காக்க “தனிநாடு’ வேண்டும் என்பதாகும்.
பின்னர் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் அமைந்த ஆணைக்குழுவின் முன் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை ஒரே குரலில் எடுத்துக்கூற “இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்’ (1944) நிறுவப்பட்டது. அதன் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம். அவர் தனது வாதங்களை ஆதாரத்துடன் எடுத்து வைத்த போதிலும் சோல்பரிக் குழுவினர் சிங்களவரின் கோரிக்கைக்கே இணங்கினர்.
பின்னர் ஏற்பட்ட சுதந்திர அரசில் பங்கேற்பது குறித்தும், இந்திய-பாகிஸ்தானியர் பிரஜா உரிமைச் சட்டத்தை ஆதரிப்பது தொடர்பாகவும் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949-இல் மலர்ந்தது. தந்தை செல்வா தலைமையில் இக்கட்சி தமிழர்களின் சமவாழ்வு மற்றும் உரிமைகளுக்காகப் போராடியும் கேட்காமல் 1972-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி புதிய சிங்கள புத்தக் குடியரசு அமைந்தது. இதன் மூலம் தமிழரின் பாரம்பரியத் தாயகத்தை இழப்பதற்கான சிங்கள அரசு ஏற்பட்டதும், தமிழ் மண்ணில் சிங்களர் குடியேற்றம் நிகழ்ந்தது. தனி ஆட்சி முறையில் தமிழர்களின் சமநிலை உரிமையும்-மண்பாதுகாப்பும் பறிக்கப்படும் என்பதைக் கண்டுபிடிக்க தமிழர் அமைப்புகளுக்கு மேலும் 24 ஆண்டுகள் பிடித்தன.
இந்நிலையில் 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 3-இல் தந்தை செல்வா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறினார். அப்போது அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது.
பெரியாருடன், தந்தை செல்வா
“இந்நாட்டில், சென்ற 24 ஆண்டுகளாக (1948-1972) நடந்தவற்றை மனதில் கொண்டு தமிழர்கள் இங்கு ஓர் அடிமை இனமாக -அழிவதா அல்லது விடுதலை பெற்ற மக்களாக வாழ்வதா என்ற தமது வருங்காலத்தை முடிவு செய்யும் உரிமை அவர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கை. விடுதலை பெற்ற மக்களாக வாழ வேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்பேன். இந்தக் கொள்கையில் அரசாங்கமே என்னோடு போட்டியிடட்டும். நான் தோல்வியடைந்தால் என் கொள்கையை விட்டுவிடுகிறேன். அரசாங்கம் தோல்வியடைந்தால் தனது கொள்கையையோ, அரசின் திட்டத்தையோ தமிழர்கள் ஆதரிப்பதாக மேற்கொண்டும் கூறக்கூடாது.’ (கு.வே.கி. ஆசான் எழுதிய ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் -1948-1966).
செல்வா பதவி விலகியதால் காலியான காங்கேயன்துறை இடைத்தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் நடந்த தேர்தலில் தந்தை செல்வாவே காங்கேயன்துறை வேட்பாளராக நின்றார். அரசு ஆதரவு கம்யூனிஸ்ட் வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மீண்டும் நாடாளுமன்றத்தில் 1976, பிப்ரவரி 4-இல் செல்வா பேசியதாவது:
“இலங்கையில் ஓர் ஆளப்படும் இனமாக வாழும் நிலையைத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அடிமைத்தனத்திற்கு எதிராகப் புரட்சியில் இறங்குவார்கள். எங்கள் இனம் அழிவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு ஒரு தனித் தமிழ்நாட்டை இங்கு நிறுவியே தீருவோம். தமிழ் மக்களின் குரலாக நின்றே இந்த அவையில் இதைக் கூறுகின்றேன்.’ (ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் 1948-1996 கு.வே.கி.ஆசான்).
இதனைத் தொடர்ந்து காங்கேயன்துறை, உடுவில், மூதூர், வவுனியா, திருகோணமலை, கோப்பாய், சாவகச்சேரி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, ஊர்க்காவல்துறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய 12 தொகுதிகளின் நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஈழ விடுதலைக்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தனர். அத்தீர்மானத்தின் கடைசி வரி இவ்வாறு அமைந்திருந்தது. அது வருமாறு:
“காங்கேயன்துறை இடைத்தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை, விடுதலை பெற்ற அரசுரிமை உடைய, மதச்சார்பற்ற, சமனிய நாடான தமிழ் ஈழத்தை அமைப்பதற்குரிய செயலுரிமையாக ஏற்றுக் கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது.’
இந்திய பிரதமர் நேரு மற்றும் இந்திரா காந்தியோடு தந்தை செல்வா அவர்கள்
1976 மே 22-இல் சிங்களவர் குடியரசு நாள் கொண்டாட்டத்தை வெகுவிமரிசையாகக் கொண்டாடியபோது, தமிழர் பகுதிகளில் விடுதலை கோரும் அறிக்கையை அ.அமிர்தலிங்கம், வ.ந.நவரத்தினம், க.பொ.இரத்தினம், க.துரைரத்தினம் ஆகிய தமிழர் தலைவர்கள் விநியோகம் செய்தனர். அரசு இவர்களைக் கைது செய்து அரசுத் துரோகக் குற்றச்சாட்டினைச் சுமத்தியது.
இத்தலைவர்கள் மீது மேல்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு (பழ்ண்ஹப் ஹற் ஆஹழ்) என்ற சிறப்பு நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களான தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், மு.திருச்செல்வம், வி.எஸ்.ஏ.புள்ளைநாயகம் முதலானோர் குற்றம்சாட்டப்பட்டோர் சார்பில் வாதாடியதையொட்டி, நால்வரும் (1976 டிசம்பர் 10-ம் தேதி) விடுதலை பெற்றனர். பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
மலையகத் தமிழர் அமைப்புகளையும் ஒன்றிணைத்து “தமிழர் விடுதலைக் கூட்டணி’ (பமகஊ) 1976-இல் அமையப் பெற்றது. 1977 ஏப்ரல் 26-இல் ஈழத் தந்தை செல்வநாயகம் மறைந்தார். அந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் ஈழவிடுதலையை முன்வைத்து “தமிழர் விடுதலைக் கூட்டணி’யினர் போட்டியிட்டனர். தமிழர் பகுதியில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றனர்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி (யு.என்.பி.) 140 இடங்களையும் கடந்த நாடாளுமன்றத்தில் 116 இடங்களைப் பெற்றிருந்த ஸ்ரீமாவோ கட்சி எட்டே இடங்களையும்தான் பெறமுடிந்தது. இதன்மூலம் முக்கிய எதிர்க்கட்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணி ஆயிற்று.
சிங்கள மேலாதிக்கத்தில் நாட்டம் கொண்ட இனவெறியர்களுக்குத் தமிழரின் கட்சி, முக்கிய எதிர்க்கட்சியானது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. நாடெங்கும் இனக்கலவரத்தைத் தூண்டிவிட ஸ்ரீமாவோ கட்சி முயன்றது. இலங்கைக் காவல்துறையில் 17 ஆயிரம் காவல்துறையினர் இருந்தனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் ஸ்ரீமாவோ ஆட்சியில் நியமிக்கப்பட்ட இனவெறியர் ஆவர். இவர்களே இனக்கலவரத்துக்கு மூலகாரணம் என்று கருதப்படுகிறது.
யாழ் மருத்துவமனையில் (1977 ஆகஸ்ட் 12-13) புற்றுநோய்ப் பிரிவு ஏற்படுத்த நிதி திரட்டும் விழாவொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கையில், சீருடை அணியாத காவல்துறையினர் கூட்டத்தினரிடையே புகுந்து முறைகேடாக நடந்தனர். பொதுமக்களுக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் போலிசார் இருவர் காயமடைந்தனர்.
இதனைச் சாக்கிட்டு “யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கு ஆபத்து’ என வதந்தி, நாடு முழுவதும் பரப்பப்பட்டு கடைவீதிகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைத்தனர். எல்லா இடங்களிலும் (1977 ஆகஸ்டு 17) தமிழர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.
அதற்குப் பிறகு இன்றுவரை தொடர்ந்து நடந்துவரும் அடக்கு முறைகளும், ரத்தக் கிளரிக்கும் பிள்ளையார் சுழி போட்ட சம்பவம் தமிழர்கள்மீது தொடுக்கப்பட்ட இந்தக் தாக்குதல்தான்..

யார் இந்த மாவோ போராளிகள்? எதற்கு இந்த போராட்டம் ? இவர்களுக்கு என்ன பலம் இருக்கிறது?

யார் இந்த மாவோ போராளிகள்? எதற்காக இந்த போராட்டம்? இவர்களுக்கு என்ன பலம் இருக்கிறது ? "மண்ணை குடைந்து வெட்டி எடுக்கும் தங்கம் யாருக்கு? மலையை குடைந்து வெட்டி எடுக்கும் தாது யாருக்கு? இந்த மண்ணோடு வாழ்வோம்! மண் இல்லை என்றால் சாவோம்! " - " பச்சை வேட்டை" பாடல் இரண்டு வருடம் முன், மத்திய அரசு கூறியது: "நீங்கள் ஒரு நாள் ஆயுதங்களை கீழே போட்டால், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்" , அதற்கு மாவோயிஸ்டுகள் கூறிய பதில் : "நாங்கள் ஒரு வாரம் ஆயுதங்களை கீழே போட தயார்; நீங்கள் ஒரு வாரம் ஆயுதங்களை கீழே போட தயாரா?" மத்திய அரசு மௌனம் சாதித்தது. ஏனென்றால், மத்திய அரசின் குரல்வளையை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரு முதலாளிகள்,தண்டகாரண்யா மலையை குடைந்து எடுக்கும் தனிமங்கள் மூலமாக வரப்போகும் கொள்ளை லாபத்தை விரைவில் காண பேராவலுடன் இருக்கின்றார்கள்.

 இந்திய அரசாங்கத்துக்கு மக்கள் முக்கியம் இல்லை; தனிமம் நிறைந்த மலையை குடைந்து சுரங்கம் தோண்டும் பெருமுதலாளிகள் போடும் பிச்சைதான் முக்கியம். அதை எதிர்த்து நிற்கும் மாவோயிஸ்ட், பழங்குடியினர் என்றென்றும் அரசின் எதிரியே! தண்டகாரண்யா மலை, காடுகளை அழித்து சுரங்கம் தோண்ட ரவுடிகளையும், ரத்தம்குடிப்பவரையும், காவல்துறையையும், இராணுவத்தையும் அனுப்பி அங்குள்ள பழங்குடியினரை அப்புறப்படுத்த எத்த்னை லட்சம் இராணுவ வீரனின் உயிரை கொடுக்கவும், பழங்குடியினர், மாவோயிஸ்டுகள் உயிரை வாங்கவும் அரசு தயாராக இருக்கின்றது. பழங்குடியினரின் இருப்பிடத்தை, அராஜகமாக தட்டிப்பறிக்கும் இந்திய அரசு, இந்திய இராணுவம், உலக முதலாளிகள் பழங்குடியினரின் எதிரிகளே! இந்திய அரசு தண்டகாரண்யா பகுதியில் காடு மலைகளை அழித்து சுரங்கம் தோண்டுவதற்காக பழங்குடியினரில் வீடுகளுக்கு தீ வைத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி முகாம்களுக்கு அனுப்ப ஆரம்பிக்கும்வரை, அந்த பகுதியில் வெறும் 5,000 முதல் 10,000 மாவோயிஸ்டுகள்தான் இருந்தார்கள். இந்திய அரசின் இராணுவ கொடுங்கோளர்களை , அட்டகாசங்களை பார்த்தபிறகு, பழங்குடியினர் தானாகவே முன்வந்து பலர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தனர். இப்போது மாவோயிஸ்ட் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்திய இராணுவம் நுழைய முடியாத அந்த காடுகளுக்கும் அவர்கள் விவசாயம் செய்கின்றார்கள்; சிறுவர்கள் கல்வி கற்கின்றார்கள்; நடனம், பாட்டு என்ற கலைக்குழு இயங்குகின்றது; அடிப்படை தேவையிலான மருத்துவ வசதி கிடைக்கின்றது; இவற்றோடு ஒவ்வொரு நொடியும் இந்திய இராணுவத்தை எதிர்க்கும் துணிவுகொண்ட படை வீரர்கள் பயிற்சி பெறுகின்றார்கள்.

 சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ஒரு மனிதகுல போராட்டத்தை பற்றி உயர்வாக எழுத தோன்றவில்லையென்றாலும் பரவாயில்லை; போராட்டங்களை கொச்சை படுத்தாமல் இருந்தால் நல்லது. அவர்கள் எப்படி, போராடும் மக்கள் "எந்த வழியில் போராட வேண்டும்" என்று வகுப்பெடுக்கும் அன்பர்கள், போராட்ட களத்தை ஒருமுறையேனும் சென்றுபார்த்து உணர்ந்து எழுதினால், வாசகர்களாகிய எங்களுக்கு தெளிவான உண்மை புரியும். பசப்பல் வார்த்தைகள் போட்டு எதையோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதும் சிலரை வரலாறு தோண்டி எடுத்து தூக்கில்போடும். "மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வருவது நல்லது" என்று எழுதும் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள்... "இந்திய குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தும், இந்திய இராணுவத்தை மக்கள் மத்தியில் இருந்து திரும்ப பெறுவது பற்றி வலியுறுத்தி எழுதும் துணிவு ஏன் பெறவில்லை?" ஊடகங்கள் திட்டமிட்டே மாவோயிஸ்டுகள் மீதான வெறுப்பை மக்கள் மனதில் வளர்த்து வருவது இயல்பானது. அவைகளுக்கு பண முதலாளியின் எச்சில் சோற்றின்மீது அலாதி பிரியம். ஆனால், சமூக ஆர்வலர்கள், பேச்சாளர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று தன்னை பறைசாற்றிக்கொள்பவர்கள் கூட "ஒரு இந்திய நில, இன அழிப்பை" கண்டும் காணாமல் இருப்பது வேதனை. அப்படியே எழுதினாலும் அரசின் பக்கம் சற்று தேன் தொட்டு எழுதுவது எதனாலோ? "மாவோயிஸ்டுகள் கோரிக்கை நியாயமானது; ஆனால், அவர்கள் ஆயுத பாதை ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று குறிப்பிடாமல் எழுதுவதில்லை. தன் வீட்டை கொளுத்தி, தாயை மிதித்து, தந்தையை கொலை செய்து, தங்கையை வன்புணர்ச்சி செய்து, தன்னை ஒன்றும் செய்யாமல் மறந்து விட்டு செல்லும் மனித மிருகங்கள் சென்ற பிறகு, ஓ வென்று கதறி அழுது, உற்றார் உறவினர் முன் சோகம் காட்டி, பின்னொரு நாளில் "கலர்புல் எதிர்கால வாழ்க்கை" கனவு காணும் நடுத்தர, மேல்தட்டு மக்கள் இல்லை பழங்குடியினர்."உயிர் போனாலும் பரவாயில்லை என்று வில்லேந்தி, ஆய்தமேந்தி, போராடும் உணர்வாளர்கள். நிலத்தடி நீரை பாக்கெட் போட்டு விற்றாலும், பாட்டிலில் விற்றாலும், நஞ்சுப்பொருள் கலந்து "பெப்சி, கோக்" ஆக விற்றாலும், ஏன் குழாய் வழியாக அளந்து விற்றாலும், காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நம் போன்று மானமற்றவர்கள் இல்லை அவர்கள். "இது எங்கள் தண்ணீர், நதி, குளம்" என்று உரக்கக்கூறும் சாதாரண மனிதர்கள்; டிவி சீரியலிலும், சினிமாவிலும் மயக்கம் கொண்டு கதாநாயகன், கதாநாயகி கனவு கண்டு வாழ்க்கையை வீணக்கும் வீணர்கள் இல்லை இவர்கள்; மலையின், காட்டின் அழகை ரசிக்கும் பிள்ளை உள்ளம் கொண்ட குழந்தைகள் அவர்கள். இப்படிப்பட்ட நல்லுள்ளம் படைத்த மனிதநேயத்தை காத்து நிற்கும் மக்களை உயர்வாக எழும் "பேனா மை" இல்லையா எழுத்தாளர்களிடம். ஆளும் கட்சி எம் எல் ஏ வை கடத்தியபோது மத்திய அரசின் பிரதிநிதிகள் கூற்று : "நமக்கு ஒரு எம். எல். ஏ வின் உயிர் முக்கியமில்லை; ஆனால், மாவோயிஸ்டுகளுக்கு அவர்கள் தோழர்கள் விடுதலை முக்கியம்; ஆகையால், இந்த "டீல் ஈக்வல் " இல்லை. " என்று வெளிப்படையாக ஊடகங்களில் சொல்லியது. மாவோயிஸ்டுகள் மக்கள் நீதிமன்றம் மூலமாக விசாரித்து அவரை நிபந்தனையோடு விடுதலை செய்தது. இப்படிப்பட்ட அரசின் அலட்சியபோக்கை கண்டிக்கும் எழுத்து ஏன் எழுத்தாளர்களுக்கு வரவில்லை? இப்போது மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட, தமிழகத்தை சேர்ந்த அதிகாரியின் விடுதலையை ஆதரிக்கும் தமிழர்கள், அவர் உயிர் காக்க ஆர்பாட்டமோ, போராட்டமோ நடத்த திட்டமிட்டிருக்கின்றார்கள். ஊடகங்கள் அவரின் வீட்டையும், ஊரையும், உறவையும் சுற்றி வந்து உணர்வலையை தூண்ட முயற்சிக்கின்றது. சாதாரண மக்களுக்கு ஒன்று தெரியவில்லை, "அந்த அதிகாரி உயிர் மத்திய அரசின் கையில் அல்லது மாவோயிஸ்டுகளின் மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருக்கின்றது" என்பது. உண்மையறிந்த பத்திரிக்கையாளர்கள், பேச்சாளர்கள் நாக்கு என்ன வறண்டுவிட்டதா, மாவோயிஸ்டுகளின் நேர்மை பற்றி பேசும் போது. கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த அதிகாரியின் விடுதலையை ஆதரிக்கும் தமிழர்கள், "இந்திய அரசால் வீடு கொளுத்தப்பட்டு, ஊர் உறவின்றி காட்டில் திரியும் பழங்குடியினர்" விடுதலையையும் சேர்த்தே ஆதரிக்க வேண்டும். இந்த இரண்டு விடுதலையும் பெரும்பாலான இந்திய மக்கள் ஆதரிக்காதவரை, இந்திய அரசு அசைந்து கொடுக்காது; கடத்தப்படும் தனிமனிதர்களுக்கு ஆதரவாக பேசுவதில் சுகம் காணும் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் தெரிந்து கொள்க! "நீங்கள் மறைமுகமாக வாசகர் மனதில், ஒரு மக்கள் போராட்டத்தை எதிர்க்கும் நஞ்சை விதைக்கின்றீர்கள்!" சமூக அவலங்களை சந்து பொந்திலெல்லாம் நுழைந்து செய்தி திரட்டி எழுதும் கடமை பத்திரிக்கையாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்து, எழுதினால் உண்மை நிலையை எழுத வேண்டும்; அல்லது எழுதாமல் ஒதுங்கிவிடவேண்டும். அரைகுறையான தகவல்களை வாசகர்களாகிய எங்களை குழப்புகின்றது. என்பதை புரிந்து எழுதுங்கள்! "நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை நம் எதிரிகளே தீர்மானிக்கின்றார்கள்" - மாவோ நன்றி : ஆனந்தி தங்கம் http://www.newsalai.com/2012/04/blog-post_408.html#.T5mHT4qeTKQ.facebook

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...