Tuesday, May 30, 2017

போஸின் வெற்றியும் காந்தியின் தோல்வியும்


1935-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சீர்திருத்தத்தை மாகாணங்களில் ஏற்று நடத்திய காங்கிரஸ்காரர்கள் மத்திய அமைப்பில் சமஸ்டியை ஏற்று நடத்த ரகசியமாகத் திட்டமிட்டனர். இதை அனுமதித்தால் வெள்ளை ஏகாதிபத்தியத்துடன் நேரடிப் போராட்டம் நடத்துவதற்கான வாய்ப்பு காலவரையறையின்றி தள்ளிப் போடப்படும் என்பதை உணர்ந்தார் சுபாஷ் சந்திர போஸ்.

ஆகவே போஸ் இதை எதிர்த்து பகிரங்கமாகக் கிளர்ச்சி செய்தார்திரிபுராவில் காங்கிரஸ் மகாசபை கூடுவதாக இருந்தது. சமஸ்டியை எதிர்ப்பது, நாட்டை பகிரங்க பேராட்டத்திற்குத் தயார் செய்வது ஆகிய குறிக்கோள்களை முன்வைத்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார் போஸ்.

காந்தியடிகளின் ஆதரவோடு பட்டாபி சீதாராமையா சுபாஷை எதிர்த்துப் போட்டியிட்டார். இருதரப்பிலும் காரசாரமான அறிக்கைகள் வெளிவந்தன.

பதவி ஆசையால் சுபாஷ் பாபு போட்டியிடுகிறார்என்று வல்லபாய் பட்டேல் அறிக்கை வெளியிட்டார்.  அந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், “கூடிய விரைவில் உலகப்போர் தோன்றப் போகிறது. அந்த போரில் வெள்ளை அரசுக்கும், காங்கிரஸ் வலதுசாரிகளுக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்படப் போகிறது. நான் தலைவராக வந்தால் அந்த ஒப்பந்தத்திற்கு தடையாக இருப்பேன் என்று எண்ணி என்னை எதிர்க்கிறார்கள்என்று அறிக்கை தந்தார் சுபாஷ்.

என்னைப் பதவி ஆசையால் போட்டியிடுகிறேன் என்று சொல்லும் வல்லபாய் பட்டேலுக்கு சவால் விடுகிறேன். நான் போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறேன். ஆச்சார்யா நரேந்திரதேவ் போன்ற ஓர் இடதுசாரியை தலைவராக்க வல்லபாய் பட்டேல் ஒத்துக்கொள்வாரா?” என்றும் அந்த அறிக்கையில் சுபாஷ் கேள்வி எழுப்பினார்.

சுபாஷின் அறிக்கைக்குப் பதிலாக, பட்டேல் புதிய அறிக்கை வெளியிட முடியவில்லை. ராஜாஜி சுபாஷ் பாபுவைஓட்டைப் படகுஎன்றார். ஆச்சார்யா கிருபாளனிபதவி வெறி பிடித்தவர் சுபாஷ்என்றார். இவ்வளவு கடுமையான போட்டிக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சுபாஷ் பாபுவும் பட்டாபி சீதாராமையாவும் போட்டியிட்டனர்.

பட்டாபி சீதாராமையாவை நிறுத்துவதற்கு முன்பு அபுல்கலாம் ஆசாத்தை நிறுத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் காந்தியடிகள் தென் மாநிலத்தை (ஆந்திரா) சேர்ந்த பட்டாபி சீதாராமையாவை நிறுத்துவதே பொருத்தமாக இருக்கும் என்று கருதியதால்அபுல்கலாம் ஆசாத், பட்டாபி சீதாராமையாவுக்கு ஆதராவாக போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

காந்தியடிகளின் ஆதரவுடனும் ஆசியுடனும் ஹரிபுரியில் தலைவராக சுபாஷ் பாபு தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே அவர் காந்தியடிகளின் அகிம்சை பாதைக்கு (அதாவது வெள்ளையர்களிடம் பேரம்பேசி சுதந்திரம் பெறுவது) ஒத்து வருவார் என்று காங்கிரஸ் வலதுசாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் சுபாஷ் அந்தப் பாதைக்கு ஒத்து வராமல் வெள்ளையர்களை எதிர்த்து நேரடிப் போராட்டத்திற்கு இந்திய மக்களையும், காங்கிரசையும் தயாரிக்கிற வேலையில் ஈடுபட்டு தீவிரப்பாதையில் சென்றார். எனவே சுபாஷ் பாபு மீண்டும் தலைவராக வரக்கூடாது என்று காந்திய காங்கிரஸ் வலதுசாரித் தலைவர்கள் கச்சை கட்டிக் கொண்டு பட்டாபி சீதாராமையாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினர்.

காந்தியடிகள் அனைத்து தேர்தல் வேலைகளையும் நேரடியாகவே பார்த்தார்.



அது இந்தியாவே காங்கிரஸ். காங்கிரஸே காந்தியடிகள் என்றிருந்த காலம். காங்கிரஸில் இடதுசாரிகள் வலிமையான பலம் பெறாதிருந்த காலம்.

தலைவர் தேர்தலில் போட்டியிடும் சுபாஷ் பாபு வெற்றிபெற்றால் தங்களுக்கு ஆபத்து என்று வெள்ளையர் அஞ்சியிருந்த நேரம். இப்படிப்பட்ட நிலையில் இளையபாரதத்தின் இணையற்ற தலைவரான சுபாஷ் பாபு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் வெள்ளையரை எதிர்க்கும் மிகப்பெரிய சக்தியாக இருந்தார்.

தென்னிந்தியாவில் பட்டாபி சீதாராமையாவுக்கு நிறைய ஆதரவு கிடைக்கும் என்று காந்தியடிகள் எதிர்பார்த்தார். ஒவ்வொரு மாகாணத்திலும் தனித்தனியாக தேர்தல் நடைபெற்றது. முதன்முதலில் தமிழ்நாட்டில் பிரதிநிதிகள் கூட்டம் சென்னையில் காலை 9 மணிக்குக் கூடியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாகாணமாக தேர்தல் நடைபெற்றது.

காந்தியடிகளுக்கு ஆதரவான தமிழ்நாட்டில் பட்டாபி சீதாராமையாவுக்கு பெருவாரியான வெற்றி கிடைக்கும். அதைத் தொடர்ந்து மற்ற மாகாணங்களும் பட்டாபி சீதாராமையாவை ஆதரிக்கும் என காந்திய காங்கிரஸ் வலதுசாரிகள் நம்பினார்கள். அதன் காரணமாகவே அவர்கள் முதலில் தமிழ்நாட்டில் தேர்தலை நடத்தினார்கள்.

ஆனால் நடந்தது நேர் விரோதமானது. சுபாஷ் பாபுவுக்கு 110 வாக்குகளும், பட்டாபி சீதாராமையாவுக்கு 100 வாக்குகளும் கிடைத்தன. சுபாஷ் பாபு தமிழ்நாட்டில் பத்து வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றிக்கு மூலகாரணம் தன்னலமற்ற தலைவர் சீனிவாச யங்காரும், தேவரும் அவர்களுக்குத் துணையாக இருந்த ஜீவானந்தம் போன்றவர்கள்தான். பட்டாபி சீதாராமையாவுக்கு ராஜாஜியும் அவரது கோஷ்டியினரும் தீவிரமாக வேலை செய்தனர். அப்படி இருந்தும் மிதவாதத்தை எதிர்த்து முதல் வெற்றி பெற்ற தமிழகத்தை நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளும் சுபாஷ் பாபுவும் பாராட்டினார்கள்.

தமிழகத்தைத் தொடர்ந்து பெரும்பாலான மாகாணங்களில் பெரும்பான்மையான வாக்குகள் சுபாஷ் பாபுவுக்கே கிடைத்தன. தேர்தல் முடிவுகள் அன்று இரவு 2 மணிக்கு முழுவதுமாக வெளியிடப்பட்டன.

சுபாஷ் பாபு திரிபுரா காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் பரம விரோதியான சுபாஷ் பாபு தலைவராக வெற்றி பெற்றது வெள்ளை ஆட்சியாளர்களுக்கு பேரிடியாக இருந்தது.

பட்டாபியின் தோல்வி என் தோல்விஎன்று காந்தியடிகள் அறிக்கை விட்டார். அதுமட்டுமல்ல கடவுளின் அவதாரமாக கருதப்பட்ட மகாத்மா காந்தி காங்கிரஸில் பிளவை உண்டாக்கும் வகையில், “நான் ஒரு திட்டவட்டமான கொள்கையைப் பின்பற்றுபவன். என்னுடைய கொள்கையைப் பின்பற்றக் கூடியவர்கள், காங்கிரஸ் கட்சியிலே மைனாரிட்டியாக போய்விட்டார்கள் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. என்னைப் பின்பற்றக் கூடிய மைனாரிட்டியினர், காங்கிரஸிலிருக்கும் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். வெற்றி பெற்ற மெஜாரிட்டியினருக்கு இடைஞ்சல் இல்லாமல் வெளியேறும்படி வேண்டுகிறேன்” என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

இது காந்தி வெளியிட்ட காங்கிரஸில் பிளவை உண்டாக்கிய அறிக்கையாகும். காந்தியடிகளின் இந்த அறிக்கைக்குப் பின்னர், காங்கிரஸ் செயற்குழுவில் இருந்த கீழ்க்கண்டவர்கள் ராஜினாமா செய்தனர்.

1. சர்தார் வல்லபாய் படேல், 2. மவுலானா அபுல்கலாம் ஆசாத், 3. பாபு ராஜேந்திர பிரசாத், 4. புலாபாய் தேசாய், 5. சரோஜினி நாயுடு, 6. ஜே.பி. கிருபாளினி, 7. கான் அப்துல் கபார்கான், 8. பட்டாபி சீதாராமையா, 9. ஹரி கிருஷ்ண மகதப், 10. ஜெயராம்தாஸ் தௌலத்ராம், 11. ஜம்னாலால் பஜாஜ், 12. பண்டித் கோவிந்த் வல்லபந்த்.

மேலே கண்ட 12 பேரும் ராஜினாமா செய்து விட்டனர். ஜவஹர்லால் நேரு ராஜினாமா செய்யவில்லை. ஆனால்புதிய செயற்குழுவில் தான் அங்கம் வகிக்க விரும்பவில்லைஎன்று சுபாஷ் பாபுவுக்கு கடிதம் எழுதிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இந்த நிலையில் செயற்குழுவில் சுபாஷ் பாபு, அவரது அண்ணன் சரத் பாபு ஆகிய இருவர் மட்டுமே மிஞ்சினர்.

இந்த நிலையில் இனம்புரியாத நோயால் தாக்கப்பட்டு, 103 டிகிரி ஜுரத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தங்கள் தலைவர் சுபாஷ் பாபு குணமாக வேண்டும் என்று நாடே பிரார்த்தனை செய்தது.

இஷ்ட தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து பிரசாதங்களை தேச பக்தர்கள் சுபாஷ் பாபுவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அவரவர் தங்களுக்குத் தோன்றிய மருந்துகளையும், தயாத்துக்களையும் அனுப்பினர். அவர்களுடைய அன்பு மழையில் சுபாஷ் பாபு நனைந்து கொண்டிருக்கிற வேளையில், காந்திய காங்கிரஸ் வலதுசாரிகள், “சுபாஷூக்கு உடல்நலம் சரியில்லை என்று சொல்வது வெறும் ஏமாற்று வேலைஎன்று நையாண்டி பேசினர்.

வெள்ளையரோடு ஒத்துழையாமைப் போராட்டம் நடத்த வேண்டிய காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் தலைவர் சுபாஷ் பாபுவுடன் ஒத்துழையாமைப் போராட்டத்தை நடத்தினர்.

திரிபுரா காங்கிரஸ்

இந்த நிலையில் வரலாற்றுப் புகழ் பெற்ற  திரிபுரா காங்கிரஸ் 1937 மார்ச் 11-ம் தேதி கூடியது.

103 டிகிரி காய்ச்சலில் படுத்த படுக்கையாக இருந்த சுபாஷ் பாபு, அன்னை பிரபாவதி தேவியார், சகோதரர்கள், அவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்கள் அனைவருமே தடுத்தும் கேட்காமல், “செத்தாலும் காங்கிரஸ் மேடையிலேயே சாவேனே ஒழிய வெள்ளையர்களோடு பேரம்பேசத் துடிக்கும் வலதுசாரிகளின் கையை ஓங்க விட மாட்டேன்என்று கூறிவிட்டு ரயில் மூலம் திரிபுராவிற்கு புறப்பட்டார்.

அன்னை பிரபாவதி தேவியாரும், அண்ணன் சரத் போசும், டாக்டர் போசும் சுபாஷூடன் சென்றனர். 52வது காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் என்பதால், 52 யானைகள் பூட்டிய ரதத்தில் சுபாஷ் பாபுவை உட்கார வைத்து ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டு இருந்தனர் வரவேற்புக் குழுவினர்.

ஆனால் 103 டிகிரி காய்ச்சலில் படுத்திருந்த சுபாஷ் பாபுவுக்கு பதிலாக திருஉருவப் படமே அந்த அலங்கார ரதத்தில் பவனி வந்தது.

திரிபுரா காங்கிரஸ் கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து ராஜாஜிஎஸ். சீனிவாச ஐயங்கார், சத்திய மூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர், காமராஜ், ஜீவானந்தம் போன்ற பலர் சென்றிருந்தனர்.

103 டிகிரி காய்ச்சலோடு சுபாஷ் பாபு படுத்த படுக்கையாக ஸ்டெச்சரில் வைத்து மேடைக்குக் கொண்டு வரப்பட்டார். அவரது தலைமை உரையை அவரது அண்ணன் சரத் போஸ் படித்தார்.

பண்டித கோவிந்த வல்லபந்த் விஷய ஆலோசனை கூட்டத்தில், “ராஜினாமா செய்த 12 செயற்குழு உறுப்பினர்களுக்குப் பதிலாக, மகாத்மா காந்தி சொல்லும் நபர்களைத்தான் காங்கிரஸ் தலைவர் சுபாஷ் பாபு நியமிக்க வேண்டும்என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

தலைவர்தான் செயற்குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விதி இருக்கும்போது, காந்தியடிகள் சொல்லும் நபர்களைத்தான் செயற்குழு உறுப்பினர்களாக சுபாஷ் பாபு நியமிக்க வேண்டும் என்ற தீர்மானம், சுபாஷ் பாபு மீது மறைமுகமாக நம்பிக்கை இல்லை என்று சொல்வதற்கு ஒப்பானது.

இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை தலைவர் சுபாஷ் 103 டிகிரி காய்ச்சலில் படுத்த படுக்கையாக இருக்கும் நேரத்தில் மனிதாபிமானம், ஈவு, இரக்கம் துளிகூட இல்லாமல், காந்தியடிகளின் பரமசீடர் பண்டித பந்த் கொண்டு வந்தார்.

அந்தத் தீர்மானம் மீது காங்கிரஸ் மகாசபையில் வாக்களிக்க விடப்பட்ட வேளையில் சுபாஷ் பாபு கூட்டத்திற்கு தலைமை வகிக்கவில்லை. உடல் நிலை மோசமானதால், வழக்கம்போல அபுல் கலாம் ஆசாத்தை தலைமை வகிக்கச் சொல்லி விட்டு சுபாஷ் பாபு சென்று விட்டார்.

ஆசாத் தலைமையில் பண்டித பந்தின் தீர்மானம் வாக்குக்கு விடப்பட்டது. காந்திய வலதுசாரிகள் திட்டமிட்டு ஆட்களைத் திரட்டி வந்திருந்ததாலும், சோஷலிஸ்ட் குழுவான ஜெயபிரகாஷ் நாராயணன் கோஷ்டியினரும், கம்யூனிஸ்ட் குழுவினரும் நேருவின் பேச்சைக் கேட்டு நடுநிலை வகித்த காரணத்தால் பண்டித பந்தின் தீர்மானம் நிறைவேறியது.

காந்தி நிறுத்திய பட்டாபி சீதாராமையாவைத் தேற்கடித்து வெற்றி கண்ட சுபாஷ் பாபுவை, தலைவராக செயல்பட விடக் கூடாது என்று காந்திய காங்கிரஸ் வலதுசாரிகள் தொடர்ந்து வேலை செய்து, அதனை திரிபுராவில் பண்டித பந்தின் தீர்மானத்தின் மூலம் நிறைவேற்றிக் களிப்படைந்தனர்.

சுபாஷ் பாபு உடல்நிலை மிகவும் மோசமானதால் அங்கிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டார். இடையில் கட்டாக்கில் தங்கி சிலகாலம் சிகிச்சைகள் பெற்ற பின்னர் கொல்கத்தா சென்றார். திரிபுராவில் காந்திய காங்கிரஸ் வலதுசாரிகள் செய்த அரசியல் அநியாயத்தைக் கணடு தேவர் திருமகன் உள்ளம் குமுறினார். எஸ். சீனிவாச ஐயங்கார் மிகவும் வேதனைப்பட்டார்.

சுபாஷின் ராஜினாமா

திரிபுரா காங்கிரஸின் தீர்மானப்படி சுபாஷ் பாபு காந்தியடிகளுக்கு செயற்குழு உறுப்பினர்கள் குறித்து கடிதம் எழுதினார். அதற்கு காந்தியடிகள், “காங்கிரஸ் விதிப்படி, செயற்குழு உறுப்பினர்களாக நீங்கள் யாரை வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம். நான் யாரையும் பரிந்துரைக்க முடியாதுஎன்று கூறி மறுத்து விட்டார்.

தானே செயற்குழு உறுப்பினர்களை நியமித்தால் அது திரிபுரா காங்கிரஸ் தீர்மானத்திற்கு எதிரானதாக அமையும். தீர்மானப்படி காந்தியடிகளைக் கேட்டால் அவர் அடியோடு மறுத்து விட்டார். இந்த நிலையில் சுபாஷ் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு போஸ் தள்ளப்பட்டார்.  

தலைவர் பதவியில்  செயல்பட விடக்கூடாது என்று காந்திய காங்கிரஸ் வலதுசாரிகள் செய்த சதி விளையாடியது. 1939-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொல்கத்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தை கூட்டினார் சுபாஷ் சந்திர போஸ். பிரதிநிதிகள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது.

செயற்குழுவை அமைக்க விடாமல் காந்திய காங்கிரஸ் வலதுசாரிகளுள் போடும் முட்டுக் கட்டைகளைக் கண்டு சுபாஷ் பாபுவின் ஆதரவாளர்களும், வங்காள காங்கிரஸ்காரர்களும் கடுங்கோபம் கெண்டிருந்தனர்.

காங்கிரஸ் வலதுசாரித் தலைவர்கள் எழுந்தாலே ஒரே கூச்சல் எழுந்தது. வலதுசாரிகள் யாரையும் பேச  விடாமல் ஒரே சத்தமும், இரைச்சலும் எழுப்பப்பட்டது.

இறுதியில் சுபாஷ் பாபுவே எழுந்து, “விருந்தாளிகளாக வந்திருக்கும் காங்கிரஸ் தலைவர்களை கண்ணியக் குறைவாக நடத்தினால், பேசினால் அது என்னை அவமதித்ததாகும்என்று சொல்லி கூட்டத்தை அமைதிப்படுத்தினார். பின்னர் தனது ராஜினாமா குறித்த அறிக்கையைப் படித்தார்.

சுபாஷ் சந்திர போஸ் வாசித்த ராஜினாமா அறிக்கையின் சாரம்

திரிபுரா காங்கிரஸின் புதிய செயற்குழு அமைப்பது பற்றிய தீர்மானப்படி, காந்தியடிகளின் பரிந்துரைப்பதுபடி அவரது நம்பிக்கைக்கு உரியவர்களை நியமனம் செய்ய காந்தியடிகளை கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை வேண்டியும் பயன் இல்லை”. அவர் “நீங்களே உங்கள் இஷ்டப்படி நியமனம் செய்யுங்கள்என்று சொல்லிவிட்டார்.

அப்படிச் செய்தால் அது திரிபுரா காங்கிரஸ் தீர்மானத்திற்கு எதிராக நடந்தாக என் மீது குற்றம் சாட்ட வழிவகுக்கும். தீர்மானப்படி செயற்குழு உறுப்பினர்களை நியமிக்க காந்தியடிகள் ஒத்துழைப்புத் தர அடியோடு மறுத்து விட்டார்.

இந்த நிலையில் நான் எதுவும் செய்ய முடியாததால் தலைவர் பதவியில் நீடிப்பது எனக்கு நல்லதாகப் படவில்லை. எனவே எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.”

(கூடாது, கூடாது என்று பெரும் சப்தம் எழுந்தது.)

வேறு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்து இந்தச் சபையை தொடர்ந்து நடத்தும்படி நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்என்று சுபாஷ் அறிக்கையை வாசித்து முடித்ததும் பலர் தேம்பித் தேம்பி அழுதனர். இளைஞர்கள் பலர் காந்தியடிகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இவ்வளவு பிரளயத்திலும் காங்கிரஸ் வலதுசாரித் தலைவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தாங்கள் எதிர்பார்த்த திட்டம் நிறைவேறியது என்பதைப் போல மிகவும் மகிழ்ச்சியாக ராஜேந்திர பிரசாத்தை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

அவர் ஏற்கனவே ராஜினாமா செய்த பழைய செயற்குழு உறுப்பினர்களை மீண்டும் நியமித்தார். நேரு இந்தக்குழுவில் சேர விரும்ப வில்லை. ஆனாலும் அவரை பின்னால் சரிக்கட்டிக் கொள்ளலாம் என்று விட்டனர்.

இவ்வளவு அக்கிரமங்களையும் கண்டும் நேரு பாலுக்கும் காவலாக பூனைக்கும் தோழனாக நடந்து கொண்டார். அதனால்தான் சுபாஷ், “நேருவுக்கு இடதுசாரி இதயம், வலதுசாரி மூளைஎன்று சொன்னார்.

சுபாஷ் சந்திர போஸ் ராஜினாமா செய்த செய்தி கேட்டு நாடே கொந்தளித்தது. நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடந்தன. “காங்கிரஸில் நாலணா உறுப்பினராகக் கூட இல்லாத காந்தி காங்கிரஸை தனது இரும்புப் பிடிக்குள் வைத்துக் கொண்டார். அவர், முழுச் சுதந்திரம் பெற வெள்ளையரோடு இறுதிப் போர் தொடுக்க ஆறுமாத நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று சொன்ன சுபாஷ் பாபு தன்னுடைய (வெள்ளையரோடு பேரம் பேசும்) பாதைக்கு  ஒத்து வரமாட்டார் என்று கருதியே, சுபாஷ் தலைவர் பதவியிலிருந்து தனாகவே ராஜினாமா செய்ய நிர்பந்தங்களை ஏற்படுத்தி அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டார் காந்திஎன்று தீவிரவாதிகள் குற்றம் சாட்டினர்.

அந்த நேரத்தில் பல்வேறு கூட்டங்களில், பல்வேறு பகுதிகளில் தேவர் காங்கிரஸ் வலதுசாரிகளை கடுமையாகக் தாக்கிப் பேசினார்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் வெள்ளையர்களோடு ஒத்துப் போகவும் தன்னைக்கட்டு செய்து கொள்ளவும் தயங்காதவர்தான் மகாத்மா காந்தி. உள்ளொன்றை வைத்துப் புறமொன்றை பேசத் தெரியாத வெள்ளை ஆத்மாவான சுபாஷ் பாபுவுக்கு எதிராக, அவரது  தலைமையைப் பறிக்க எத்தனை கபட நாடகங்களை ஆடினார் காந்தி என்பது அவர் கூறும் அவரது அந்தராத்மாவுக்கே தெரியும்.

தேசப்பிரிவினையைக் கடுமையாக எதிர்க்கும் காந்தி, நாளை தேசப்பிரிவினைக்கும் ஒத்துக் கொள்வார். அந்தப் பிரிவினையின் விளைவாலேயே அவருக்கு இயற்கை மரணம் இல்லாமல் போகலாம்” என்று அன்றே தீர்க்க தரிசனமாக சொன்னார் சீனிவாச ஐயங்கார்.

சீனிவாச ஐயங்காரின் கருத்தை பலமுறை மேடைகளில் தேவர் பேசியதை நானே கேட்டிருக்கிறேன்.

இப்படி நாடு முழுவதும் சுபாஷ் பாபுவின் ராஜினாமா பற்றியும் காந்தியின் திருவிளையாடல்கள் பற்றியும் பேசித் தீர்த்தது.

கவி ரவீந்திரநாத் தாகூர் சுபாஷ் பாபுவின் ராஜினாமா பற்றி “ஆத்திரமூட்டும் சூழ்நிலைக்கு மத்தியிலும் சுபாஷ் காட்டிய கண்ணியமும் பெருந்தன்மையும் என்னைக் கவர்ந்தது” என்று கூறினார்.

வங்காள காங்கிரஸ் தலைவர் சுபாஷ் பாபு

சுபாஷ் பாபு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததும், வங்காள காங்கிரஸ்காரர்கள் கூடி, வங்காள மாநில காங்கிரஸ் தலைவராக சுபாஷ் பாபுவை தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்களின் முகத்தில் அசடு வழியச் செய்தனர்.

வங்க மாநிலத் தலைவராக சுபாஷ் பாபு தேர்ந்தெடுக்கப்பட்டதும், காங்கிரஸ் கமிட்டியின் பணிகள் விறுவிறுப்பாக புதிய உற்சாகத்தோடு நடைபெற்றன.

இப்போது நீண்டகாலமாக அலிப்பூர், டம்டம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 80 பேர் தாங்கள் விடுதலை ஆகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து சிறையில் உண்ணா விரதம் இருந்தனர்.

வங்க காங்கிரஸ் தலைவரான சுபாஷ் பாபு சிறைச் சாலைகளுக்குச் சென்று, உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதிகளைச் சந்தித்து, அவர்களது விடுதலைக்காக வங்க மாநில காங்கிரஸ் தீவிரமாக கிளர்ச்சி நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அவசியம் ஏற்பட்டால் நேரடி நடவடிக்கையில் இறங்கவும் தயாராக இருப்பதாகவும் வாக்குறுதி அளித்து உண்ணா விரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். உண்ணாவிரதம் நின்றது.

ஜூலை மாதம் 9-ம் தேதியை வங்க அரசியல் கைதிகள் விடுதலை தினமாகக் கொண்டாட வேண்டுமென்று சுபாஷ் பாபு ஓர் அறிக்கை வெளியிட்டார். இந்தியா முழுவதும் கொண்டாடும்படி கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் மேலிடத்திற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியோ, காங்கிரஸ்காரர்களோ அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை கேட்காமல் சத்தியாகிரகம், போராட்டம் முதலியவற்றை நடத்தக் கூடாது என்று ஜூன் மாதம் பம்பாயில் கூடிய செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத், சுபாஷ் பாபுவுக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டார்.

பம்பாயில் இந்த தீர்மானம் நிறைவேறியபோதே இது மாநில காங்கிரஸின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று சுபாஷ் பாபு கண்டித்திருந்தார்.

ராஜேந்திர பிரசாத் விளக்கம் கேட்டு எழுதிய கடிதத்திற்கு சுபாஷ் பாபு, “அறிக்கை விடுவதும், கண்டன நாள் அனுசரிப்பதும் மாநில காங்கிரஸ் கமிட்டியின் அன்றாட அலுவல்களைச் சேர்ந்தது. அந்த அன்றாட அலுவல்களுக்கெல்லாம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது” என்று பதில் எழுதினார்.

அந்தக் கடிதத்தில் மேலும், “வங்க அரசியல் கைதிகளை விடுவிக்காத வெள்ளை அரசாங்கத்தை கண்டிப்பாதால் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு என்ன நஷ்டம்?” என்று சூடாகவே கேட்டிருந்தார்.

ஜூலை 9-ம் தேதி திட்டமிட்டபடி வங்காளம் முழுவதுமாக கண்டன தினம் வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் மகத்தான முறையில் எழுச்சியுடன் நடைபெற்றன.

சுபாஷ் மீது அகில இந்திய காங்கிரஸ் எடுத்த நடவடிக்கை

ஆகஸ்டு 9-ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு வார்தாவில் (காந்தியடிகளின் ஆசிரமம் உள்ள இடம்) கூடி, சுபாஷ் பாபு காங்கிரஸ் தலைவரின் கட்டளையை மீறி விட்டார் என்று ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தது.

எனவே வங்க மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் சுபாஷ் பாபு நீக்கப்பட்டார். “மூன்று ஆண்டுகளுக்கு காங்கிரஸ் உறுப்பினராக இருக்கக் கூடாது” என்று வல்லபாய் படேல் கொண்டு வந்த ஒழுங்கு நடவடிக்கை தீர்மானம் நிறைவேறியது.

மனிதருள் மாணிக்கம் நேருவும் அந்த செயற்குழுவில் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டிருந்தார். இருந்தும் தீர்மானம் நிறைவேறி விட்டது.

சுபாஷ் பாபு மீது நடவடிக்கை எடுத்ததால் வங்க மாநில காங்கிரஸ் கமிட்டியிலிருந்த அனைவருமே ராஜினாமா செய்தனர். தொலைந்தார் தொல்லை தரும் மனிதர் என்று காந்தியவாதிகள் பெருமூச்சு விட்டனர்.

- ஏ.ஆர். பெருமாள், முடிசூடா மன்னன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,
பக்கம் 86-96

---------------------------

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...