Sunday, January 19, 2020

குடியரசுத் தலைவர்கள் ரப்பர் ஸ்டாம்ப்கள் ஆக்கப்பட்ட கதை



அரசியல் சட்டம் படைக்கப்பட்ட தருணத்தில் பண்டிட் நேரு இந்திய பிரதமராக விளங்கினார். அரசியலமைப்பு சட்ட வரை குழுவில் உறுப்பினராக இருந்தார். மத்திய அரசியல் சட்ட குழுவுக்கு தலைவராகவும் பணிபுரிந்தார். அரசியலமைப்பு அவையில் அவரது செல்வாக்கு சிகரமாக இருந்தது. குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்படும் அதிகாரம் நேருவின் தலைமைக்கு செல்வாக்குக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கும் என்ற அச்சத்தில் குடியரசுத் தலைவருக்கு அரசியல் அமைப்பு அவை அதிகாரம் வழங்கவில்லை. குடியரசுத் தலைவர் பிரதமர் சவாரி செய்யும் அழகிய அரேபிய குதிரை ஆக்கப்பட்டார்.

“டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் பிரதமராக இருந்து பண்டிட் நேரு குடியரசுத் தலைவராக விளங்கி இருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்” என்று கே.எம்.முன்ஷி வெளிப்படையாக கூறியிருக்கிறார். எனவே குடியரசுத் தலைவர் - பிரதமர் தலைமையில் உள்ள அமைச்சரவை ஆகியவற்றுக்கு இடையில் உள்ள அதிகாரத்தை அப்போது இருந்த தலைவர்களின் செல்வாக்கின் அடிப்படையில் வரையறை செய்து விட்டனர். கொள்கையின் வழியில் நிர்ணயம் செய்யப்படவில்லை.

அரசியலமைப்பு அவையில் தலைவராக பாபு ராஜேந்திர பிரசாத் விளங்கியபோது குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்று விரும்பினார். நாடாளுமன்ற ஜனநாயகம் பிரதமரின் சர்வாதிகாரத்திற்கு இடமளிக்கக்கூடாது என்று அவர் எண்ணினார். அவையில் அவரே நேரடியாக டாக்டர் அம்பேத்கரிடம் விளக்கம் கேட்டார். டாக்டர் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் தனக்கு நெருக்கடியை உண்டாக்குவார் என்று கருதிய பண்டிட் நேரு பாபு ராஜேந்திர பிரசாத்தை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கேட்டார். வல்லபாய் பட்டேலுக்கு ஒரு கடிதம் எழுதி ராஜேந்திர பிரசாத்தை ஆதரிக்க வேண்டாம் என்றும் வற்புறுத்தினார். நேரு விரும்பியது நடக்கவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். அவரை வல்லபாய் பட்டேல் ஆதரித்தார். பிரசாத் குடியரசுத் தலைவரானார்.

பண்டிட் நேரு எதிர்பார்த்ததுபோலவே குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தமக்குள்ள அதிகாரம் பற்றிய பிரச்சினையை எழுப்பினார். 1951 ஆம் ஆண்டு அதிகாரம் பற்றிய பிரச்சினை எழுப்பினார் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் “சட்ட முன்வடிவு ஒப்புதல் அளிப்பது குடியரசுத் தலைவரின் தன்னிச்சையான அதிகாரத்திற்கு உட்பட்டது குடியரசுத் தலைவர் அமைச்சர்களை நீக்கலாம் பொதுத்தேர்தலுக்கு ஆணையிடலாம் பாதுகாப்பு படைகளை தலைமை தளபதி என்ற முறையில் தளபதிகளை அனுப்பலாம் பாதுகாப்பு தொடர்புடைய விவரங்களை தளபதிகளையும் பெறலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரசாத்தின் மடல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சி. ஷீதல்வாட் அவர்களிடம் குடியரசுத் தலைவர் கடிதத்தில் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து பிரதமர் நேரு கருத்து கேட்டார்.

“குடியரசுத் தலைவர் தமது பணிகளை செய்ய பிரதமரின் தலைமையில் உள்ள அமைச்சரவையில் துணைசெய்ய வேண்டும் ஆலோசனை அளிக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. பிரிட்டிஷ் அரசியல் சட்டப்படி அதன் வழக்கப்படும் குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” என்று சி. ஷீதல்வாட் கருத்து கூறியதுடன் “குடியரசுத் தலைவர் அரசியல் சட்டப்படி உள்ள தலைமை என்ற முறையில் அரசுக்கு எதிராகவும் அமைச்சர்களுக்கு நெருக்கடி ஏற்படும் விதத்திலும் பேசுவதை தவிர்க்க வேண்டும்” என்றும் கூறினார்.

பிரதமர் நேருவுக்கும் குடியரசுத்தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட ஆதிக்கப் போட்டி நீங்கவில்லை. பிரசாத்தை மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்காதபடி தடுத்திட நேரு முயற்சி செய்தார். முடியவில்லை. இரண்டாவது முறையாக பிரசாத் குடியரசுத் தலைவர் ஆனார். இருவருக்கும் இடையில் மோதல் தொடர்ந்தது. பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணமேனன் நியமனம் செய்த சில அதிகாரிகளின் பணிகள் குறித்து பிரசாத்துக்கு திருப்தியில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினார். தலைமை தளபதி என்ற முறையில் தமக்கு அதிகாரம் இருப்பதாகவும் வாதிட்டார்.

இந்திய சட்ட நிறுவனத்தின் கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றபோது பிரதமர் முன்னிலையில் பிரசாத் அதிகாரம் பற்றி பேசினார்.

“குடியரசு தலைவர் அமைச்சரவை ஆலோசனைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் எந்த பிரிவும் இல்லை” என்று கூறியதுடன் “இந்திய குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அவரை கண்டன தீர்மானத்தின் மூலம் நீக்கலாம். எனவே குடியரசுத் தலைவரை இங்கிலாந்து மன்னருடன் ஒப்பிடுவது சரியல்ல” என்று சுட்டிக்காட்டிய அவர் நமது பிரச்சினைகள் நிலைமைகளை பிரிட்டிஷ் முறையுடன் ஒப்பிடக் கூடாது” என்று பேசினார். மோதல் தீவிரமடைந்தது நாடாளுமன்றத்திலும் இது குறித்து பிரச்சினை எழுந்தது இதனால் இருவருக்கும் இடையில் கசப்பு வெறுப்பு அதிகமானது.

பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிரசாத் பாட்னாவில் காலமானார். அவரது இறுதி சடங்கு கூட பண்டிட் நேரு செல்லாது ராஜஸ்தானில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றார். அதுமட்டுமல்ல இறுதி அஞ்சலி செலுத்த சென்ற குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனை போகவேண்டாம் என்று தடுத்தார். நேருவின் பேச்சினை பொருட்படுத்தாது டாக்டர் ராதாகிருஷ்ணன் பிரசாத்தின் இறுதிச் சடங்கில் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

குடியரசுத் தலைவரின் அதிகாரம் தொடர்பாக பிரசாத் எழுப்பிய கேள்வி ஆழமானது, ஆய்வுக்குரியது. அரசியல் சட்டம் குடியரசுத் தலைவருக்கு சாதகமாகவே அமைந்து இருந்தது.
1976 ஆம் ஆண்டு 42 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் கீழ் பிரிவு 741 (1) செலுத்தப்படும் வரை நடுநிலையாளர்கள் பிரசாத்தின் நிலையை ஆதரித்தனர். அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது குடியரசுத் தலைவரின் கடமை அல்ல அமைச்சரவையின் ஆலோசனையை எதிர்த்தும் செயல்படலாம் என்று கே.சந்தானம் கூறியிருக்கிறார்.

பி.என். ராவ் அவர்களும் “அமைச்சரவையின் ஆலோசனைப்படி குடியரசுத்தலைவர் நடக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. எந்த குறிப்பிட்ட பிரச்சனையிலும் அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக அவர் செயல்பட்டால் அது குறித்து நீதிமன்றம் கேட்க முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதன்காரணமாக பிரதமராக வருபவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். இந்த முயற்சியில் நேருவால் விரும்பிய வெற்றியை பெற முடியவில்லை. ஆனால் அவரது மகள் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். டாக்டர் ஜாகிர் உசேன், வி. வி. கிரி, பக்ருதீன் அலி அகமது ஆகியோர் பிரதமர் பயன்படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகள் ஆக விளங்கினர்.

தமக்கு வேண்டிய வரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தால் மட்டும் பிரதமருக்கு நிரந்தர பாதுகாப்பு அமைந்திடாது. அரசியல் சட்டம் திருத்தப்பட்டு தான் பிரதமரின் அதிகாரத்திற்கு அமையும் என்ற உறுதியான எண்ணத்துடன் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பயன்படுத்தி பிரிவு 74 (1)-ல் ஒன்றில் திருத்தம் செய்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இந்த திருத்தம் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது அமைச்சரவை சர்வாதிகாரமாக மாற இடமளிப்பது என்று பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது பிரிவு 74 (1)-ல் மீண்டும் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. ஜனதா அரசு நிறைவேற்றிய 44 வது திருத்தத்தின்படி அமைச்சரவையின் முடிவை மீண்டும் பரிசீலிக்க குடியரசுத் தலைவர் கேட்கலாம். அவ்வாறு அவர் கேட்ட பின்னர் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஏற்ப குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும். ஜனதா அரசு நிறைவேற்றிய திருத்தத்தால் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. குடியரசுத் தலைவருக்கு மீண்டும் பரிசீலிக்க கேட்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் அமைச்சரவையின் முடிவே இறுதியானது. குடியரசுத்தலைவர் அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்ற கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்ப குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டு விட்டதால், அரசியல் சட்டத்தின் 78 வது பிரிவின்படி குடியரசுத் தலைவர், மத்திய அரசின் நிர்வாகம் பற்றிய தகவல் கேட்கும் தருணத்தில் குடியரசுத்தலைவர் கேட்கும் எல்லா விவரங்களையும் அமைச்சரவை கொடுக்க முடியாது என்று பிரதமர் ராஜீவ் காந்தி வாதிட்டார். இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி தக்கார் கமிஷனின் அறிக்கையை குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் பலமுறை கேட்டும் ராஜீவ்காந்தி கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். இது அரசியலமைப்புச் சட்டத்தினை மீறும் செயல் என்று பத்திரிக்கை நிருபர்கள் சுட்டிக்காட்டிய போது “நான் நூற்றுக்கணக்கான மரபுகளை மீறி இருக்கிறேன்” என்று அலட்சியமாக பதிலளித்தார். பிரதமர் ராஜீவ் காந்தியின் பதில் நாடாளுமன்றத்தில் பெரிய பரபரப்பினை ஏற்படுத்தியது. குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் உள்ள ரகசிய கடிதங்கள் பற்றி அவை விவாதிக்கக் கூடாது என்று மாநிலங்களவையின் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தீர்ப்பளித்து ராஜீவ் காந்தியை காப்பாற்றினார்.

அமைச்சரவையின் முடிவு, ஆலோசனைக்கு எதிராக குடியரசுத் தலைவர் எதையும் நிர்வாகத்தில் செய்ய முடியாது என்ற நிலை உண்மையான நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு உறுதுணை புரிந்திடாது.
-       
-இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், ஆலடி அருணா

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...