Thursday, September 28, 2017

சந்நியாசமா? சம்சாரமா?


ஹரித்துவாரில் ஒரு பெருந்துறவி நீண்ட காலமாக சுத்த சந்நியாச நிலைமையிலே வாழ்ந்து வந்தார். ஒருநாள் அதிகாலையில் அவர் குளிக்க செல்லும்போது இரண்டு உருவங்களைப் பார்க்கிறார். அந்த உருவங்கள் அவர் குளிப்பதற்கு முன்பாக வந்து குளிக்கக் கூடிய நபர்களாகத் தெரியவில்லை.

அந்த உருவங்கள் மனித உருவங்களா அல்லது வேறு எதுவாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறார். அருகில் சென்று பார்க்கும்போது அவை மனித உருவங்கள்தான் என்பது தெரிந்தன. கால்கள் தண்ணீரில் படுகின்றன. நடந்து செல்லும் ஓசை கேட்கிறது. அது ஒரு வயதான கிழவனும் இளவயதுப் பெண்ணும் என்பதை உணர்கிறார். அவர்கள் குளிப்பதற்காகச் செல்லவில்லை. தற்கொலை செய்துகொள்ளச் செல்கிறார்கள் என்பதையும் உணர்ந்துகொள்கிறார். உடனே அவர்களை அழைத்து நிறுத்துகிறார்.

அப்போது அந்த வயோதிகர் சொல்கிறார். “நாங்கள் நீண்ட காலமாக முயற்சி செய்து, இந்தக் காரியத்தைச் செய்வதற்காக இன்று முடிவு கட்டி வந்தோம், நீர் சண்டாள வடிவில் வந்து நிறுத்தப் போகிறாயேஎன்று சொல்லி வருத்தப்பட்டார். அதற்கு அந்த சந்நியாசி, “உங்களுக்கு இருக்கின்ற ஆபத்தை நீக்குவேன். இந்த கங்கையின் சாட்சியாக நான் சத்தியம் பண்ணித் தருகிறேன். நடந்ததை நீங்கள் சொல்லுங்கள்என்று கேட்டார்.

அந்த முதியவர், “ஐயா, நான் வயதான பிராமணன், இந்தக் குழந்தை என்னுடைய மகள் பிள்ளை பேத்தி. இந்தக் குழந்தையும் நானும்தான் வாழ்கிறோம். மற்றவர்கள் எல்லாரும் காலமாகி விட்டார்கள். நான் ரொம்ப ஏழை. பிச்சை எடுத்து சாப்பிடும் நிலையில் இருக்கிறேன். எனக்கு நேத்திரம் கெட்டுப்போகுமோ என்ற அளவிலே நீரிழிவு நோய் உள்ளது. நானும் குருடாயாகப் போய், வயது கடந்த போன பிறகு இந்தப் பெண் அனாதரவாக இருந்தால், இதற்கு ஒரு மானபங்கம் ஏற்பட்டால், குடும்பத்திற்கு இழிவு ஏற்பட்டு விடும் என்று நாங்கள் இருவரும் தற்கொலை செய்வதற்கு வந்தோம். இதை நீங்கள் வந்து தடுத்து விட்டீர்கள்என்று சொன்னார்.

இந்த சந்நியாசி ஒரு பிராமண சந்நியாசி. காமத்தின் வயப்பட்டு கெட்டவர் அல்ல. என்னுடைய வாழ்க்கையை விட இவ்விரண்டு பேரையும் காப்பாற்றுகிறேன் என்று கங்கை சாட்சியாக சத்தியம் செய்கிறார். அதுவும் தவிர காப்பாற்றுகிற ஜீவகாருண்யம் மிகப் பெரியது என்று கண்டு, அவர்களுடைய கோத்திரத்தைக் கேட்கிறார். அந்தப் பெரியவர் வேறு கோத்திரமாக சொல்கிறார். கங்கை நீரை அள்ளி மூன்று தடவை தன் கையிலே தாரை வார்க்கச் சொல்லி , அந்தப் பெண்ணை பாணி கிரஹணமாக ஏற்றார்.
அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்தான். தான் படித்திருந்த சான்றிதழை வைத்து சில காலம் வாத்தியாராக பணிபுரிந்தார். ஒரு குழந்தை உருவான பின்னர் அந்தப் பெண்ணும் இறந்துவிட்டாள். அந்தக் கிழவரும் இறந்து விட்டார். அந்தக் குழந்தையை படிக்க வைத்து ஒரு வசதியான இடத்திலே திருமணம் செய்து கொடுத்து விட்டு மீண்டும் சந்நியாசி ஆனார்.

முற்றும் துறந்த முனிவரை குடும்பத்திற்குக் கொண்டு வருவதும் ஒரு சக்திதான். கையில் எடுத்த திருமாங்கல்யத்தை வைக்கச் சொல்லி, சந்நியாசி ஆக்குவதும் அதே சக்திதான். அந்த நிலைமையில் மனிதன் தன்னுடைய கெட்டிக்காரத்தனத்தால் இல்லறத்துக்குப் போகிறான், துறவறத்துக்குப் போகிறான் என்று நினைப்பது மிகத் தவறு.

அவர்களுடைய பலாபலன் எதுவோ? அவரவருடைய வாழ்க்கை எதுவோ? நியதி எதுவோ? அவர்கள் சிருஷ்டியில் என்ன முறையில் அவர்களை அவர்கள் பக்குவப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தன்மை இருக்கிறதோ அதைப் பொறுத்துதான் வாழ்க்கை கிடைக்கும். இரண்டும் இரண்டு விதமான மார்க்கம்.

சந்நியாசிக்கு வேண்டியது வைராக்கியம். வைராக்கியம் எங்கே தவறுகிறதோ அப்பொழுது துறவறம் தவறிப்போகும். கணவன் மனைவி ஒற்றுமை என்று தவறுகிறதோ அன்றைக்கு இல்லறம் பாழாகும். வைராக்கியம் இல்லாத சந்நியாசம் துராக்கரமாகும். ஒத்து வாழாத குடும்பம் காம வாழ்க்கையாகும். அம்மாதிரியான நிலைமையில் நடைபெறுகின்ற பெரும் காரியங்களுக்கு எல்லாம் எப்படியெப்படி பக்குவப்படுத்துவது என்பதைக் கண்டு கொடுத்த பராசக்தியின் கிருபையைத்தான் நாம் கொண்டாடுகிறோம். காண்கிறோம், வணங்குகிறோம்.

- முத்துராமலிங்கத் தேவர்




1 comment:

the poles "colonelpaaganesanvsm.blogspot.com" said...

அன்புடையீர்
தங்களது பதிவு பார்க்க நேரிட்டது.
மனித வாழ்க்கை ஒரு அற்புதமான பரிசு என்றும் இந்தப்பரிசின்
மதிப்பை உணராமல் மக்கள் வாழ்ந்து மடிகிறார்கள் என்ற கொள்கையோடு
நான் செயலாற்றி வருகிறேன்.
எனது இ மெயில்;pavadai.ganesan@gmail.com
site;pavadaiganesan.com
பார்வையிட்டு தொடர்பு கொள்ளுங்கள்.

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...