Monday, October 2, 2017

சுதந்திர பெற்ற காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தகிடுதித்தங்கள்




முன்னுரை

1952 ஆண்டு நடந்த தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அருப்புக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தேர்தலிலும் ஒருசேர போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலுமே வெற்றி பெற்றார். பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது.

அப்போது தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி இடைத் தேர்தலில் வெற்றி பெற அத்தனை தந்திரங்களையும் பயன்படுத்தினார். மேலும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், அருப்புக்கோட்டை தொகுதி மக்களே, இந்தத் தொகுதியில் காங்கிரஸ் ஜெயித்தால் நான் வேண்டுமென்று அர்த்தம். நான் வேண்டுமென்றால் காங்கிரஸ்க்கு ஓட்டுப்போடுங்கள் என்று சவால் விடுத்தார். ஆனால் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சியின் வேட்பாளரான எம்.டி. ராமசாமி வெற்றி பெற்றார்.

எங்கே எதிர்க்கட்சிகள் தன்னை ராஜினாமா செய்யக் கோருவார்களோ என்று அஞ்சிய ராஜாஜி தனது அரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ள சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரினார். அந்த விவாதத்தின்போது பேசிய தேவர் கீழ்க்கண்டவாறு பேசினார்:-

காங்கிரஸின் யோக்கியப் பொறுப்பற்ற நடத்தை

கனம் சபாநாயகர் அவர்களே,

நான் இந்த தீர்மானத்திற்கு எதிராக நான் பேச வேண்டிய  அவசியம் ஏற்பட்டிருப்பதைக் காண்கிறபோது நான் ஒருபுறத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றொரு புறத்திலோ துக்கப்படுகிறேன்.

ஏன் துக்கப்படுகிறேன் என்று கேட்டால் பழைய காங்கிரஸ்காரனாகிய நான், இந்திய நாட்டுக்கு விடுதலை கிடைக் வேண்டுமென்ற ஒரே எண்ணத்தோடு காங்கிரஸ் மகாசபை செய்யச் சொன்ன தியாகங்களில் எல்லாம் பங்கு கொண்டவன்.


அந்த காங்கிரஸ் மகாசபையினிடத்தில் இன்று காங்கிரஸ்காரர்கள் எவ்வளவு பக்தி காட்டுகின்றார்களோ, அதைவிட அதிகமான மரியாதை என்னுடைய மனச்சாட்சி சொல்கிறபடி வைத்திருக்கிற நான், அந்த காங்கிரஸ் மகாசபை மீது நம்பிக்கைத் தீர்மானத்தைக் கோரும்போது அதற்கு எதிராக 1952-ம் வருடத்திலே ஓட்டு அளிக்க வேண்டியிருக்கிறதே என்ற ஒரு காரணத்திற்காகத்தான்.

என்றாலும் காங்கிரஸ் மகாசபையானது என்ன நல்ல காரியங்களை செய்திருந்தபோதிலும் கூட 1937-ல் இருந்த காங்கிரஸ் வேறு, அதன் கொள்கைத் திட்டம் வேறு. 1952-ம் வருடத்திலே காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் செய்யும் காரியங்கள் வேறு.

1937-லே என்னை தேர்தலில் நிற்கும்படி, நான் அட்ஹாக் கமிடிக்கு மனுப் போடாவிட்டாலும் கூட, நீதான் தேர்தலில் நிற்க வேண்டும் என்று வற்புறுத்திய காங்கிரஸ் மகாசபை வேறு.
இன்று காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுடைய நடத்தை வேறு.

நாட்டினுடைய மக்கள் நலனைக் கருதியே அகிம்சா தர்மத்தில் பாடுபட வேண்டுமென்று உபதேசித்த காங்கிரஸ் மகாசபை வேறு. இன்று பலாத்காரத்தில் மறைமுகமாக, கபடமாக இறங்கி மக்களுக்கு இழைத்துக் கொண்டிருக்கும் தீமைகள் வேறு.

சென்ற ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியினால் மக்கள் அடைந்த துன்பங்கள் நஷ்டங்கள் வேறு. காங்கிரஸ் கட்சியால் தேர்தலில் நிற்கத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றால், ஒவ்வொரு மெம்பரையும் பொறுக்கி எடுத்த காலம் வேறு.

ஆனால் எந்தெந்த இடத்தில் தங்களுக்குச் சாதகமான ஆட்கள் இருக்கிறார்கள், எந்தெந்த இடத்தில் முனிசிபல் சேர்மனாகவோ, ஜில்லா போர்டு பிரசிடென்டாகவோ வரக்கூடும் என்ற சுயநலத்தோடு ஒருவர் மற்றொருவரால் நன்மை அடைய வேண்டும் என்ற கருத்தோடு, காங்கிரஸ் துரோகிகளையும், காங்காணிகளையும், ராஜாக்களையும், சர்களையும் மெம்பராக நிற்க வைக்கப் பொறுக்கியெடுக்கும் இன்றைய காங்கிரஸின் யோக்கியப் பொறுப்பற்ற நடத்தை வேறு.

பொதுமக்களை காங்கிரஸ்காரர்கள் நினைப்பதுபோல ஏமாற்றுவது சுலபமான காரியமல்ல. பொதுமக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் செய்யும் காரியத்தில் நன்மை தீயையை உணர்ந்து அந்தக் காரியத்தைச் செய்யக் கூடிய ஆற்றல் அவர்களுக்கு அதிகரித்து விட்டது.

அதனால் காங்கிரஸ் கமிட்டிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களையும் கூட, அவர்கள் சீர்தூக்கிப் பார்த்தே ஓட்டுப் போடுகிறார்கள்.

அப்படி அவர்கள் யோக்கியப் பொறுப்பற்ற, காங்கிரஸ்காரனல்லாத ஆனால் 52-ம் வருசத்திலே காங்கிரஸ் கமிட்டியால் காங்கிரஸ்காரன் என்றுசீல்குத்தி தேர்தலுக்கு நிற்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு நபருக்கு எதிராக ஓட்டுப்போட்டு அவர்களைத் தோற்கடித்து விட்டால், உடனே ஜனங்கள் செய்தது மகாத்மா காந்திக்கு துரோகம் என்று கூக்குரலிடுகிறார்கள்.

அவருக்கு எதிராக ஓட்டுப்போட்ட, ஜனங்கள், உத்தமர் ஜவஹர்லால் நேருவுக்கு துரோகம் செய்து விட்டதாக ஓலமிடுகிறார்கள்.

தேர்தலிலே ஒரு யோக்கியப் பொறுப்பற்ற நபர் பணத்தைக் கொடுத்து காங்கிரஸ் முத்திரையைக் குத்திக் கொண்டு தேர்தலிலே நின்று தோற்றுப் போய்விட்டால், அது மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட தோல்வி, ஜவகர்லால் நேருவுக்கு ஏற்பட்ட தோல்வி என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு வெட்கமில்லையா என்று அந்தப்பக்கம் உள்ளவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்.

இது மிகவும் இழிவான, அவமானகரமான செய்கை என்பதை அந்தப் பக்கத்தில் இருப்பவர்கள் உணராமல் இருக்க முடியாது அவர்களுக்கு உண்மையிலேயே ஆச்சாரியார் சொல்கிற மனச்சாட்சி இருக்குமேயானால், அதற்கு அடுத்தாற்போல் மற்றொரு விவரத்திற்கு வரவேண்டும். எப்படி இருந்தாலும் நாங்கள் கவர்மெண்ட் நடத்த வேண்டும்.

நாங்கள் சென்ற காலத்தில் எவ்வளவோ சிறிய சிறிய குற்றங்களை எல்லாம் செய்திருந்த போதிலும் வருங்காலத்தில் எவ்வளவோ பெரிய பெரிய நன்மைகளை எல்லாம் செய்யத் திட்டம் போட்டிருப்பதால், நாங்கள்தான் மீண்டும் சர்க்காரை நடத்த வேண்டும் என்று சொல்வது மிகவும் புத்திசாலித்தனமான வாதம்.

ஆனால் மற்றவர்களால் சர்க்காரை நடத்த முடியாது என்று சொல்வதே, மற்றவர்களுக்குப் பேசத் தெரியாது, வாதாடத் தெரியாது என்று சொல்லுவதோ, அறிவுக்குத் பொருந்தியதாகாது.

ஆண்டவன் அருளால் நான் ஊமையும் அல்ல, நான் நன்றாகப்  பேசுவேன். ஆங்கிலத்திலும் பேசுவேன், தமிழிலும் பேசுவேன்.

நான் ஏன் பேசவில்லை?
ஆனால் 1937-ம் வருஷத்திலிருந்து கனம் ராஜகோபாலச்சாரியாரை மாகாணப் பிரதமராகக் கொண்ட (முதல்வராக) காங்கிரஸ் மந்திரிசபை பதவியிலிருந்த காலம் வரையிலும், நான் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. ஒரு கேள்வி கூட கேட்டது கிடையாது. ஏன்? அதன் காரணத்தை யாரும் ஆராயவில்லை.

ஆனால் இன்று காங்கிரஸ் நண்பர்கள் என்னைப் பற்றி இழிவாக தேர்தலிலே பிரச்சாரிக்கிறபோது, முத்துராமலிங்கத் தேவரை ஒன்றும் பெரிய ஆளாக எண்ணிவிட வேண்டாம், சட்டசபையில் ஒழுங்காக நாலு வார்த்தை கூடப் பேசத் தெரியாது.

மேடையில் வேண்டுமானால் சண்டபிரசண்டமாக பேசுவாரே தவிர சட்டசபையிலே வாயையை திறக்கத் தெரியாது. அவரைத் தேர்ந்தெடுத்து என்ன செய்வது என்பதாகவெல்லாம் பேசிய விஷயங்கள் எனக்குத் தெரியாததல்ல.

ஆனால் எந்த நிலையிலே சட்டசபையிலே பேசாமல் இருந்தேன்? பேசத் தெரியாதவனா? பேசுவதைப் புரிந்துகொண்டு பதில் சொல்லத் தெரியாதவனா? அப்போது ஏன் பேசாமலிருந்தேன் என்பதை யாராவது யோசித்துப் பேசினீர்களா என்பதை கவனிக்க வேண்டும்.

நான் ஏன் பேசாமல் இருந்தேன்? அகிம்சா மூர்த்தியாகிய காந்தியின் பிரதம சீடராகிய ஸ்ரீமான் ராஜகோபாலச்சாரியார் மாகாணப் பிரதமராக இருக்கும்போது அவருக்குப் பிடித்தமான நண்பரைப் பற்றி எதுவும் கேள்வி கேட்கவோ, மறுத்துப் பேசவோ உரிமை மெம்பர்களுக்குக் கிடையாது என்பது எல்லாருக்கும் தெரியும்.

1936, 1937-லே நடந்த தேர்தலிலே காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரச்சாரம் செய்வதற்கு ஆள் கிடையாது. ராமநாதபுரம் ஜில்லா சர் அண்ணாமலை செட்டியாரும் அவருடைய திருக்குமாரரான முத்தையா செட்டியாரும் உள்ள தொகுதியிலே, அவர்களுடைய படைபலம், பணபலம், ஆங்கிலத் துரைத்தனதின் சினேக பலம் இவ்வளவையும் கொண்டு, அவர் அந்தப் பகுதியிலேயே அவருக்கு எதிராக காங்கிரஸ் பிரச்சாரத்திற்கு வருபவர்களை எல்லாம் ஒரு ஆட்டு ஆட்டி வைத்துக் கொண்டிருந்தார்.

அதையும் மீறி, அவர் செல்வாக்கை மீறி பிரச்சாரத்திற்குச் சென்ற காங்கிரஸ்காரர்கள் ராஜா சர் அண்ணாமலை செட்டியாருக்கு எதிராக பேசுகிறபோது, போலீஸ்காரர்களால் இழுத்துத் தள்ளப்பட்டு அவமானம் செய்யப்பட்டார்கள்.

அந்தப் போலீஸ்காரர்களின் அக்கிரமமான செய்கைக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று எங்கள் உள்ளம் குமுறியது.

அந்த பிராந்தியத்தின், அப்பொழுது டில்லி சட்டசபை மெம்பராயிருந்த கனம் சத்திய மூர்த்தி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்குப் போனபொழுது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கையில் ரிவால்வாருடன் வந்து, “நீங்கள் பேசினால் கலகம் ஏற்படும் ஆகையால் பேசக் கூடாதுஎன்று தடுத்து மேடையை விட்டு இறங்கச் செய்தார். அந்த அளவுக்குப் போலீஸ் பலாத்காரம் தலை விரித்தாடியது.

பிரஜா உரிமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. அப்பொழுது நான் அங்கு சென்று ஒவ்வொரு இடங்களிலும் போலீஸ் மிரட்டலை மீறி பிரசங்கம் புரிந்து காங்கிரஸை இயங்கச் செய்ய வேண்டியதாய் இருந்தது.

அன்று ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தொகுதியிலே தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு ஆள் இல்லாத நிலைமை இருந்தது.

அந்த நேரத்தில் என் உயிரையும் மதிக்காமல் அந்த இடத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்றபோது போலீசாரால் காங்கிரஸ்காரர்கள் அவமானம் செய்யப்பட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்டேன்.

அதனால்தான் கனம் ராஜாஜியைப் பிரதமராகக் கொண்ட காங்கிரஸ் மந்திரி சபை சென்னை மாகானத்தில் ஏற்பட்ட உடனேயே அந்தத் தொகுதியில் போலீசாரால் காங்கிரஸ்காரர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை விசாரிக்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் நான் ஒரு கேள்வி எழுதி அனுப்பினேன்.

அந்தக் கேள்வி முதலில் பார்ட்டிக்கு அனுப்பப்பட வேண்டும். பார்ட்டியினுடைய அனுமதியின் பேரில்தான் அந்தக் கேள்வி அசெம்பிளி செகரெட்டரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

என்னென்ன விதங்களிலெல்லாம் மெம்பர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்? கட்டுப்பாடு இருக்க வேண்டுமென்பது வாஸ்தவம்தான்.

கட்டுப்பாடு இல்லாவிட்டால் எந்தப் பார்ட்டியும் வெற்றிகரமாக இயங்க முடியாது. ஆனால் கட்சியின் தன்மானத்தை காக்க கட்சிக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க வேண்டுமென்ற துடிப்போடு கொண்டு வரப்பட்ட நியாயமான ஒரு கேள்வி தலைவர் ராஜாஜிக்கு வேண்டிய ஒரு நபரைப் பற்றியது என்ற காரணத்திற்காக கட்சியின் கௌரவத்தை மறந்து, கட்சியின் நலனை மறந்து அதை வரவிட முடியாதபடி கட்டுப்படுத்தி வைப்பதென்றால் அது மிக அவமானகரமானதாகும்.

நான் அனுப்பிய கேள்வியும் அப்படித்தான் ஆயிற்று. அதிலிருந்து நான் எதுவும் பேசுவதில்லை என்று தீர்மானித்தேன்.

சட்டசபையின் தலைவருக்கு, கட்சியின் தலைவருக்கு நானும் காங்கிரஸ் சட்டசபை மெம்பர் என்ற முறையில் காங்கிரஸுக்கு விரோதமாக போலீசாரின் உதவியைக் கொண்ட ராஜா சர். அண்ணாமலை செட்டியார் செய்த அக்கிரமங்களை விசாரிக்க வேண்டுமென்று நான் அனுப்பிய கேள்வியை இந்த மகாபுருஷர் ஸ்ரீமான் ராஜகோபாலச்சாரியார், தானே கடவுளின் அவதாரம் என்று சொல்ல நாவு நடுங்காத அவதார புருஷர், தனக்கு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் வேண்டியவர் என்ற காரணத்திற்காக அந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது என்று தடுத்து விட்டார்.

மானம்போன காங்கிரஸ் சபையின் அங்கத்தினர் என்ற அவமானச் சீட்டைத் தாங்கிக் கொண்டு, நான் அன்று முதல் மந்திரிசபை கலைகிற வரையில் பேசுவதில்லை என்று தீர்மானித்து விட்டேன். அப்படியே பேசாமலும் இருந்தேன். இதுவும் இந்த மகானுபாவரின் அடக்குமுறையினால்தான்.

தன்மானம் போன காங்கிரஸின் மானம் கப்பலேறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வருஷம் மௌனம் சாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

அன்று எதிர்தரப்புக்குப் போகலாம் என்றால், அன்றோ, எதிர்தரப்பு அரசியலே கிடையாது.

தியாகிகளின் மண்டைகளை உடைத்த காங்கிரஸ்

அந்த நிலைமை இருக்கின்றனபோதுதான், அதற்குப் பின்னால் காங்கிரஸ் கொள்கைக்குத் துரோகம் செய்துவிட்டு வெள்ளையனோடு கூடிக் குலாவி பேசப் போகும் சமஷ்டித் திட்டம்.

இந்தத் திட்டம் முறிந்த பின்னர்தான் அதற்குப் புறம்பாக பல விஷயங்களை ஒப்புக்கொள்ள அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். அப்போதுதான் ராஜினாமா செய்துவிட்டு வெளியே வரவேண்டும் என்பதுதான் ஒரு தீர்மானம் மாகாண காங்கிரஸ் கமிட்டியில் நிறைவேறியது.

சி.ஆர். தாஸ் காலத்தில் இதே ராஜகோபாலச்சாரியார் முதலில் தேர்தலுக்கு யாரும் நிற்கக் கூடாது என்று சொன்னார். சட்டசபைக்குப் போக வேண்டும் என்று யாரும் விரும்பக் கூடாது என்று. அது ஒரு மாயவலை. விபச்சாரம் செய்யும் விடுதியைப் போன்றது, பாபகரமானது என்பதாகவெல்லாம் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஆனால் சி.ஆர்.-ரும், புதுக்கோட்டை சத்தியமூர்த்தி ஐயருமாக தேர்தலுக்கு நிற்க வேண்டும் என்று தீர்மானம் செய்தவுடன் என் பிராந்தியத்திலே தேர்தலுக்கு என்னைத் தவிர வேறு ஆள் நிற்க முடியாது என்று சொல்லி எனக்குத் தேர்தலில் நிற்க டெபாசிட் கட்டுவதற்காக காங்கிரஸ் கமிட்டியிடமிருந்து ரூ. 250 தந்தி மணியார்டரில் அனுப்பப்பட்டது. அட்ஹாக் கமிட்டியை நான் கேட்கவில்லை.

தேர்தலில் போட்டியிடுகிறபோது காங்கிரஸ் மக்களிடம் என்ன சொல்லி ஓட்டு வாங்கிற்று என்பதை எல்லாருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் சொல்கிறேன்.

"We are not going to work the Constitution. We are to wreck it. So please vote for us. That was the Congress election manifesto in 1937."

நாங்கள் கான்ஸ்டிடியூஷன்படி வேலை செய்யப் போகவில்லை. அதை உடைக்கவே போகிறோம். ஆகையால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று  1937-லே ஒவ்வொரு வாக்காளர்களிடமும் காங்கிரஸ் சென்று ஓட்டுக் கேட்டது.

பிரிட்டிஷாரோடு ஒத்துழைக்கப் போகிறோம் என்று ஓட்டுக் கேட்கவில்லை. ஆனால் ஓட்டுப் பெற்று வெற்றி பெற்று உள்ளே வந்தவுடன் நடந்தது என்ன?

பதவிக்கு வந்தவுடன் கான்ஸ்டிடியூஷனை உடைக்கப் போகிறார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் உடைத்தார்களா? இல்லை.

காங்கிரஸ் சர்க்கார் பதவிக்கு வரவேண்டுமென்று தன் உயிர் உடல், பொருள் யாவையும் தியாகம் செய்த உறுப்பினர்களின் மண்டைகளைத்தான் உடைத்தார்கள். கை, கால்களைத்தான் உடைத்தார்கள்.

கடவுள் அவதாரம் தான் என்று சொல்லிக் கொள்கிற கிருபா கடாட்சம் மிக்கவரான நமது ஸ்ரீமான் ராஜகோபாலாச்சரியாரின் தலைமையில் நடந்த காருண்யமிக்க காங்கிரஸ் சர்க்கார் அவ்வாறு செய்வது மிகவும் தவறு. அநியாயமானது என்று குறுக்கிட்டு கேட்ட காலத்தில் எனக்கு கிடைத்தது சிறைச்சாலை. தன்மானம் மிக்க காங்கிரஸ்காரர்களின் செய்கையா இது?

கான்ஸ்டிடியூஷனை உடைத்து குற்றத்திருத்த சட்டத்தின் ஏடுகளை சட்டப் புத்தகத்திலிருந்து கிழித்தெரியப் போகிறோம் என்று மக்களிடையே ஓட்டுக் கேட்ட காங்கிரஸ் கட்சி ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் தலைமையின் கீழ் மந்திரி சபை அமைத்தபோது, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததை விட கோரமான அளவில் குரூரமான வகையில் அதே குற்றத்திருத்தச் சட்டத்தின் விதியையும் மீறிய அளவில் தேசத்திற்கு தியாகம் செய்த தேசபக்தர்கள் மீது பாட்லிவாலாவின் தடையை உபயோகித்தார்.

இந்தக் கருணாமூர்த்தி, அகிம்சா தர்மவாதி, அவதார புருஷரான ஸ்ரீமான் ராஜகோபாலச்சாரியார், அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான இந்த மகானுபாவர், அரசாங்க தலைவரானவுடன், தேசபக்தர்களின் தலையை உடைத்து, அடக்குமுறைகளை முன்பிருந்ததைக் காட்டிலும்  அதிகமாகக் கையாண்டார்.

தேசபக்தர்களை சிறைச்சாலைகளில் தள்ளினார். தாங்களே நிரந்தரமாக பதவியில் இருக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் இப்படி வெறித்தனமான அடக்குமுறைகளைப் பிரயோகித்தார் இந்த அவதார புருஷர்.

பதவிக்கு வரும்முன் அடக்குமுறைகளை எதிர்த்தவர்கள், பதவிக்கு வந்தவுடன் அதே அடக்குமுறைகளைக் கையாண்டார்களே? தாங்கள் நிரந்தரமாக பதவியில் இருக்கப் போகிறோம் என்ற எண்ணத்தாலா?

அவர்களும் இரண்டொரு வருஷத்தில் ராஜினாமா செய்து, எங்களைத் தள்ளிய சிறைக்கேதான் வரவேண்டும் என்று நினைத்திருப்பார்களா?

இந்தியர்களின் பணி வெள்ளையர்களுக்கு

கருப்பன், கருப்பன் என்று வெள்ளையனால் நிந்திக்கப்பட்ட, உதாசீனம் செய்யப்பட்ட இந்திய மக்கள் தங்கள் மந்திரி சபை அமைத்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

யார் தம்மை நிந்தித்தானோ, அந்த வெள்ளையனுக்கே கால் வருடியாகவோ, அவன் ஆணைக்கு அடிபணிந்து கொண்டா பதவி வகிப்பது?

வெள்ளையனுக்கு விரோதமாக பேசி ஓட்டு வாங்கி வந்த இந்த காங்கிரஸ் கட்சி என்ன செய்தது? வெள்ளையனை விரோதித்துக் கொண்டதா? இல்லை.

பீகாரிலும் மற்ற இடங்களிலும் அவர்களுக்கு உத்தியோகம் கொடுத்து, அவன் கட்டளைக்கு அடிபணிந்தது. இந்தியனுக்கு கொடுக்க வேண்டிய உத்தியோகத்தை வெள்ளையனுக்கு கொடுத்தது பீகாரில்.

அப்பொழுதாவது மந்திரி சபை ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் மீண்டும் காங்கிரஸிற்கு அவமானத்தை உண்டு பண்ணினார்கள்.

அந்த நிலைமை உண்டு பண்ணப்பட்ட பின்னர்தான் சமஷ்டியை ஒத்துக்கொள்வது என்ற எண்ணத்தோடு காங்கிரஸ்காரர்கள் ரகசியமாக ஒரு திட்டம் போட்டு வேலை செய்தார்கள்.

அந்த சமயத்தில் காங்கிரஸ் ராஷ்டிரபதி (தலைவர்) தேர்தல் வந்தது. அந்த ராஷ்டிரபதி தேர்தலில் சுபாஷ் சந்திர போஸ் போட்டியிட்டார். அவருக்கு எதிராக பட்டாபி சீத்தாரமையாவை அவர்களது சார்பிலே நிறுத்தி வைத்தார்கள்.

அப்பொழுது என்ன நடந்தது? இப்போது அருப்புக்கோட்டையில் தேர்தல் நடக்கிற காலத்தில் ஆச்சார்யார் போன்ற வயது முதிர்ந்தவர்கள், அறிவுமிக்கவர்கள், அனுபவம் மிக்கவர்கள் என்ன நினைத்தார்கள்? கடைசியில் எப்படி ஏமாந்து போனார்களோ அதுபோலத்தான் அன்று காந்தி அடிகள் அவர்களும் பட்டாபி சீத்தாராமையா ஜெயித்து விடுவார் என்று எண்ணினார்.

உண்மையில் என்ன நடக்கும் என்று அவர்கள் புரிந்துகொள்ளாமல், ஆனால் புரிந்து கொண்டவர்களைப் போலத்தான் நடித்தார்கள். காந்தி அடிகள் தனக்கு நிச்சயமாகத் தோல்வி வரும் என்று தெரிந்துகொள்ளவே இல்லை.

அவர்களும் தேர்தலுக்கு வேலை செய்தார்கள், நாங்களும் தேர்தலுக்கு வேலை செய்தோம். உண்மையில் யாருக்கு வெற்றி கிடைத்தது? இப்பொழுது அருப்புக் கோட்டையில் நடந்தது போலத்தான் அப்பொழுதும் சுபாஷ் பாபுவால் பட்டாபி சீத்தாராமையா தோற்கடிக்கப்பட்டார்.

அருப்புக்கோட்டையில் தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப்போனவுடன் எப்படி இந்த மகானுபாவர் தமக்கு எதிராக எல்லாரும் ஓட்டளித்ததாக எடுத்துக் கொண்டு, இந்த நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தாரோ, அதைப்போலவே மகாத்மா காந்தி அவர்கள் பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று கூறினார் .

வெள்ளையனை எதிர்ப்பவர்களை எதிர்க்கவேண்டும்

சுபாஷ்பாபு ராஷ்டிரபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே ஆங்கிலேயருக்கு ஆறுமாத நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று கோரினார்.

"We should give this six month notice.
What is the sanction bound it?" என்பதாக காங்கிரஸ்காரர்கள் குமுறினார்கள். 6 மாதத்திற்குள் என்ன நடந்து விடும் என்றார்கள். ஆனால் நடந்தது என்ன? வந்தது உலக யுத்தம். தங்களுடைய கொள்கைகளை மறந்து, குறிக்கோளை மறந்து பிரிட்டிஷாரோடு தொடர்பு கொள்ளக் கூடாது, வெள்ளையனுக்கு கால் வருடிகளாக வாழக் கூடாது என்று அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த எங்களை காங்கிரஸிலிருந்தே வெளியேற்றி விடத் தீர்மானம் செய்தார்கள்.
வெள்ளையனை எதிர்த்துப் போராட வேண்டும் என்று சொல்லி வந்த காங்கிரஸ், வெள்ளையனை எதிர்ப்பவர்களை எதிர்க்கவேண்டும் என்று தீர்மானம் செய்தது.

உலகம் இவர்களைக் கண்டு நகையாடத் தக்க முறையில் வெள்ளையனுக்கு எதிராக யார் என்ன சொல்கிறார்களோ அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தது.

இது எப்படி இருக்கிறது என்றால் தாய்க்குத் தன் குழந்தையிடத்தில் அதிக அபிமானம் உண்டு என்பது எல்லாருக்கும் தெரியும்.

தாயைக் காட்டிலும் குழந்தையை நேசிக்கக் கூடியவர்கள் வேறு யாருமே கிடையாது. இருந்தாலும் கூட கற்பை இழந்த தாய், தன் காமத்தைத் தணித்துக் கொள்வதற்காக பிற ஆடவனோடு சேரும் தாய், தன் கள்ள உறவுக்கு விரோதமாகத் தன் குழந்தை இருக்கிறது என்று அறிந்து கொண்டாளேயானால் அந்தக் குழந்தையிடம் அவளுக்கு அபிமானம் குறையும்.

அது மாத்திரமல்ல. தனது விபச்சார நடத்தைக்கு விரோதமாக இருக்கிற தன் குழந்தையையே கொல்ல ஒரு நாளும் கூசமாட்டாள்.

இதைப்போல வெள்ளைக்காரனோடு தவறான உறவு கொண்ட இந்தக் காங்கிரஸானது, காங்கிரஸுக்காகவே உழைத்த எங்களை, காங்கிரஸின் கொள்கைத் திட்டங்களை நடைமுறையில் கொண்டு வரவேண்டும் என்று பாடுபட்ட எங்களை, கட்சியை விட்டே வெளியேற்றியது.

தனிநபர் சத்தியாகிரகம் என்ற கேலிக் கூத்து

பிறகு சுபாஷ் பேரிலும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார்கள். அந்தளவுக்கு நிலைமை வந்தது. அந்த நிலைமை வந்ததோடு நிற்கவில்லை. பின்னால் என்ன நடந்தது? அரசியல் போராட்டமாக தனிநபர் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த தனிநபர் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே அதில் சேர்ந்து கொண்டு போராட முன்வருபவர்கள் காந்தி அடிகளிடம் நற்சாட்சி பத்திரம் பெற்றுக் கொண்டுதான் அகிம்சா முறையில் அதில் ஈடுபட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

தனிநபர் சத்தியாகிரகம் என்பது என்ன? மக்களைத் தாங்கள் ஏதோ சுதந்திரத்திற்காக பாடுபட்டுக் கொண்டே இருப்பது போல ஏமாற்றுவதற்கே நடத்தப்பட்ட நாடகமே தவிர வேறொன்றுமில்லை.

மதில் மேல் பூனைபோல அந்தப் பக்கமும் இன்றி, இந்தப் பக்கமும் இன்றி அதாவது வெள்ளையனையும் தாக்கிப் பேசாமல் அரசியல் கபட நாடகம் ஆடினார்கள்.

காங்கிரஸ்காரர்கள் என்று இப்போது இருக்கிற காங்கிரஸ்காரர்களும், அவர்களுடைய கொள்கைகளுக்கும் எவ்வளவு வேற்றுமை உண்டோ அவ்வளவு வேற்றுமை அந்தக் காலத்திலேயே காங்கிரஸ்காரர்கள் சொல்வதற்கும், நடந்துகொள்வதற்கும் இருந்தது.

வெள்ளையனுக்கு விரோதமாக எதுவும் சொல்வது கிடையாது. சத்தியாகிரகத்தில் இன்னதுதான் பேச வேண்டும் என்று எழுதிக் கொடுத்து விடுவார்கள். அதை அவர்கள் அப்படியே படிக்க வேண்டுமே தவிர வேறு ஒன்றயும் சேர்த்துப் பேசக் கூடாது.

ஒருவன் சத்தியாகிரகம் செய்யப்போகிறான் என்றால் அதை அவன் முன்பே போலீசுக்குச் சொல்வான். உறவினன் ஒருவன் மாலையை வைத்துக் கொண்டிருப்பான். போலீஸ்காரன் வாரண்டை வைத்துக் கொண்டிருப்பான்.

இவன் எழுதி வைத்திருப்பதைப் படித்த உடன் போலீஸ்காரன், இம்மாதிரி நீங்கள் பேசியது தப்பு, உங்கள் பேரில் நான் வாரண்டு கொண்டு வந்திருக்கிறேன். உங்களை கைது செய்கிறேன் என்றுடன் வாருங்கள் என்பான். உடனே அவனது உறவினர் போய்விட்டு வாருங்கள் என்று மாலையைப் போடுவார். இவர் போலீஸ் லாரியில் ஏறி உட்கார்ந்துகொள்வார். இப்படியாக ஒரு கேலிக்கூத்தான ஒரு நாடகமாகவே நடந்தது.

பிறகு போலீஸ் பார்த்து இது என்ன வெறும் கேலிக் கூத்து நாடகமாய்ப் போய் விட்டதே என்று நினைத்து அப்புறம் ஒருவரையும் கைது செய்வதில்லை.

இந்த இயக்கத்தின் முக்கியமானவர்களை மட்டும் கைது செய்துவிட்டு மற்ற காங்கிரஸ்காரர்களை சும்மா விட்டு வந்தார்கள். கைது செய்யப்படாமல் வெளியில் விடப்பட்டிருக்கும் சத்தியாகிரக கோஷ்டி எல்லாரும் மந்திரிகள் உட்பட மாகாண எம்.எல்.-கள் உட்பட, மாகாண கமிட்டி அங்கத்தினர்கள், தலைவர்கள் உட்பட, எல்லாரும் கால்நடையாக டெல்லிக்கு வரவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

காங்கிரஸின் மானம் இன்று பறிபோகவில்லை. அன்றே அந்த முடிவு ஏற்பட்டவுடனேயே பறிபோய்விட்டது. ஐயோ டெல்லிக்கு எப்படி நடந்து போவது என்று அலறித் அடித்துக் கொண்டு ஓடிப் போலீஸ்காரன் காலில் விழுந்து, ஐயா தயவுசெய்து என்னைக் கைது செய்யுங்கள். இல்லாவிட்டால் நான் டெல்லிக்கு நடந்து போகும்படி தண்டனை கிடைத்து விடும். நீங்கள்தான் கருணை செய்ய வேண்டும் என்று கெஞ்சி 200, 500, 750 ரூபாய் என்று பணத்தைக் கொடுத்து கைது செய்யும்படி செய்து கொண்டார்கள். மானம், தன்மானம், மதிப்பு எல்லாவற்றையும் காற்றிலே பறக்கவிட்ட காந்தி சிஷ்யர்கள் அன்று அரசியல் தலைவர்களாக இல்லை.

அரசியல் நாடக அரங்கில் நானும் ஒரு நடிகன் என்று பெயர் வாங்க வியாபாரி ஆகிவிட்டனர். தங்களை கைது செய்ய போலீசாரிடம் பேரம் செய்துகொண்டு காலம் கடத்தினார்கள்.

இன்று காங்கிரஸ் பெஞ்சியிலே உட்கார்ந்திருக்கிற அநேக காங்கிரஸ்காரர்களுக்கு இந்த விவரங்கள் ஒன்றும் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் அன்று அவர்கள் எல்லாரும் காங்கிரஸின் பரம விரோதிகளாக பிரிட்டிஷ்காரர்களின் கங்காணிகளாக காலந்தள்ளியவர்கள்தான், இன்று காங்கிரஸிலே காங்கிரஸ் முத்திரை குத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

அதை யாராவது காங்கிரஸ்காரர்கள் ஆட்சேபித்தால், நபர்களும் பெயரும் நடந்த விபரமும் புள்ளி விவரங்களுடன் ஒப்பிவிக்கத் தயார். மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ்ந்தால் அது அவன் மார்பிலேதான் விழும் என்பதைப் போல அவைகள் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லும்போது நானும் இன்று வெட்கப்படுவதோடு அவமானத்தோடு தலை குனியத்தான் வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லாமலிருக்க முடியவில்லை.

அப்பொழுது அரசியல் தியாகம் ஒரு வியாபாரமாக மாறி விட்டது. எப்படி இப்பொழுது கோவாப்ரேடிவ் சொசையிட்டிகளில் டைரக்டராகவும், காரியதரிசிகளாகவும், தங்கள் சுயநலத்தை உத்தேசித்து, சுரண்டி சம்பாதிக்கலாமே என்று போட்டி போட்டுக் கொண்டு தியாகிகள் வருகிறார்களோ, அதைப்போலத்தான் அன்றும் அந்த அரசியல் வியாபார நாடகத்திற்குப் பங்கு கொள்ள எல்லாரும் முன்வந்தார்கள்.

அப்போது நான் வேலூர் சிறைச்சாலையில் இருந்தேன். தனிப்பட்டோர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக அப்போது ஆச்சாரியார் கைது செய்யப்பட்டு, அவரும் அந்த வேலூர் சிறைச்சாலைக்கு வந்தார்.

அவர்களை உள்ளே அழைத்து வரும்பொழுது நான் குளித்துக் கொண்டு நின்றேன். அவர் அப்பொழுது என்ன தேவர்வாள் சௌக்கியமா? என்றார். எங்கள் இருவருக்கும் எத்தனையோ அபிப்ராய பேதம் இருந்தாலும் பரஸ்பரம் சிநேகிதர்கள் போலத்தான் பேசிக் கொள்வோம். என்றும் அப்படியே இருக்க  வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதனால் அவர் என்னை சௌக்கியமா என்று விசாரித்தபோது நானும் அவரை வரவேற்று நீங்களும் இங்கேதான் வரவேண்டுமா என்று கேட்டேன். தனக்கு அதிகாரம் என்றும் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஆச்சாரியார் அவமானப்பட்டு ஒன்றும் பேசாது சென்றார்.

பதவிக்காக செய்த துரோகம்

அதற்குப் பிறகு என்ன நடந்தது? உண்மையான சுதந்திரம் இவர்களுக்குக் கிடைத்ததா? ஆங்கிலேயர்களை நேருக்கு நேராக எதிர்க்கும் திறமை, துணிவு இந்த நபர்கள் யாருக்காவது வந்ததா? இந்தியர்கள் கோழைகள், போராடத் திறமையற்றவர்கள், பிரயோஜனமற்றவர்கள் என்கிற அளவுக்கு ஆங்கிலேயர்கள் இவர்களை இழிவுபடுத்தக் கூடிய நிலையில்தான் இருந்தார்கள்.

"Very many political leaders are not leaders.
They are nothing but dealers."

இங்கே இருக்கிற அரசியல்வாதிகள் எல்லாரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறி விட்டார்கள் என்று இழிவுபடுத்தக் கூடிய நிலையில் அவர்கள் நடத்தை மாறிவிட்டது. இந்த நிலைமையில் இவர்கள் வந்துவிட்ட பிறகு இவர்களை யாரும் மதிக்க முடியாது போயிற்று.

அதற்குமேல் இரண்டாவது உலகயுத்தம் வேகமாக நடந்து கொண்டிருக்கும் காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக எப்போதும் சவால் விட்டுக் கொண்டிருந்த சுபாஷ்பாபு கடைசியாக விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேசத்தை விட்டு மாயமாக மறைந்து ஐரோப்பா சென்றார்.

ஐரோப்பாவில் இந்திய வீரர்களை திரட்டி சிறிய அளவில் ஒரு இந்திய விடுதலை ராணுவத்தை அமைத்தார். பிறகு அங்கிருந்து ரகசியமாகச் சென்று ஜப்பானை அணுகினார்.

ஜப்பான் அந்த நேரத்தில் சிங்கப்பூர், மலேயா, பர்மா போன்ற பிரதேசங்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து கைப்பற்றி, கிழக்கு முனையிலே வெள்ளையனுக்கு எதிராக யுத்தத்தை வேகமாக நடத்திக் கொண்டிருந்தது.

சுபாஷ்பாபு பர்மா போர்முனையில் இந்திய தேசிய ராணுவத்தை ஒன்று திரட்டி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இந்திய தலைநகரான டில்லியை நோக்கி படையோடு முன்னேறினார்.

இந்தியர்களாகிய கருப்பர்கள் கோழைகள், சண்டை போடத் தெரியாதவர்கள் என்றெல்லாம் மிக இழிவாக இந்தியாவைப் பற்றி எண்ணியிருந்த வைஸ்ராய் வேவல், இம்பால் போர் முனையில் கருப்பர்கள் எப்படி சண்டை போடுகிறார்கள் என்பதைக் காண விமானம் மூலம் அங்கே செல்கிறான். சென்ற இடத்தில் குண்டுகளால் தாக்கப்பட்டு வேவலுக்கு இரண்டு விலா எலும்புகள் ஒடிகின்றன. உடனே சொல்லிக் கொள்ளாமல் உயிருக்கு மன்றாடிக் கொண்டு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறான்.

சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று பூரண குணம் பெற்று டில்லியை அடைகிறான்.

ஆனால் அவன் உள்ளத்திலே ஏற்பட்ட பயம், ஆயுதத் தளவாட உதவியின்றி இந்தியர்கள் இவ்வளவு கோரமாக யுத்தம் செய்தால் இவர்களால் பிரிட்டனுக்கும், இங்குள்ள பிரிட்டிஷ் மக்களுக்கும் என்ன ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று வேவலுக்கு உள்ளம் உதறல் எடுக்கிறது.

உடனே காங்கிரஸ்காரர்களை சமரச பேச்சுக்காக சிம்லாவுக்கு அழைக்கிறான். காங்கிரஸை எதிர்த்து மக்களிடம் காங்கிரஸுக்கு எதிராக போராடுவேன் என்று சொல்லி ஓட்டு வாங்கி வந்த ஸ்ரீமான் மாணிக்கவேலர் இன்று எப்படி வாக்காளர்களுக்குத் துரோகம் செய்து காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்துகொண்டாரோ, அதைப்போலத்தான் வெள்ளையனுக்கு விரோதி என்று சொல்லிக் கொண்டிருந்த கொள்கையை காற்றில் பறக்க விட்டுவிட்டு காங்கிரஸ்காரர்கள் சிம்லாவிலே வேவல் மாநாட்டிலே கலந்து டீபார்ட்டி சாப்பிடுகிறார்கள்.

பலாத்காரத்தின் விரோதிகள் அகிம்சா தர்மத்தின் கர்த்தாவாகிய காந்தியடிகள் உட்பட இந்தக் காங்கிரஸ்காரர்கள் சிம்லா மாநாட்டிலே முடிவு செய்தது என்ன?

பர்மா - இம்பால் கிழக்கு முனையிலே ஜப்பான் ஒரே கடுமையாகத் தாக்குவதாகவும் இந்தத் தாக்குதலைத் தடுக்க இந்திய ராணுவத்தைக் கொண்டே போராட பரிபூரண உதவியைத் தர இந்தியத் தலைவர்கள் தயாராய் இருப்பதாகவும், அதற்குப் பிச்சையாக வைஸ்ராய் எக்ஸிக்யூடிவ் கவுன்சில் மெம்பர் பதவி கொடுப்பதாகவும் ஒப்பந்தம் ஆனது.

மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு மக்களுக்குத் துரோகம் விளைவித்த மந்திரி கனம் மாணிக்கவேலரைப் போலவே, அன்று காங்கிரஸ்காரர்கள் தேச மக்களையும், காங்கிரஸ் கொள்கைகளையும் மறந்து தேசத் துரோகிகளாகி  விட்டனர்.

சுதந்திரத்திற்காகப் போராடிய சபை, சுதந்திரத்தைப் பெறப்போகிறோம் என்ற சபை, அவர்கள் அளித்த வாக்குறுதியை நம்பி திருப்பூர்க் குமரன் போன்ற இளம் வாலிபர்களும், பெண்மணிகளும் தங்கள் உயிர்களைத் தூக்குமேடையில் பலியிடும்படி செய்த இந்த காங்கிரஸ் சபை, வைஸ்ராய், எக்ஸிக்யூடிவ் கவுன்சில் மெம்பர் பதவிக்காக மானத்தை விட்டு, மரியாதை இழந்து அரசியல் வாழ்விலே பல்டியடித்து பெருமைக்கும், புகழுக்கும் இழுக்கைத் தேடிக்கொண்டது.

கிழக்கு முனையிலே போராடியது, இந்திய நாட்டுக்கு விடுதலையைத் தேடித்தருவதற்கு அல்லும், பகலும் கஷ்டப்பட்டு பெரும் தியாகங்கள் செய்தவர் சுபாஷ்பாபுவா அல்லது ஜப்பானியர்களா என்பது இவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? தெரிந்தே அன்று தேசத்தைக் காட்டிக் கொடுத்து சுபாஷ்பாபுவுக்கு எதிராக செய்த துரோகக் கையெழுத்து சிம்லாவில் இடப்பட்டது.

இதை விடவா நாட்டில் உற்பத்தி பண்ண வேண்டிய குழப்பம் பாக்கி இருக்கிறது? நீங்கள் செய்த துரோகம் ஆண்டவனுக்குத் தெரியாதா? உண்மையில் உங்களுக்கு ஆண்டவனிடத்தில் பக்தி இருக்குமானால் நான் வயதில் சிறியவனாக இருக்கலாம். அறிவிலும் உங்களைக் காட்டிலும் அதிகம் இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்த துரோகத்தை உணராமலேயே இருக்கிறீர்களா என்று கேட்கிறேன்?

அதிகாரம் மாறிக்கொண்டே இருக்கும்

ஜப்பானையும், ஜெர்மனியையும் சென்ற மகாயுத்தத்திலே அழித்த அமெரிக்கன் தாம்தான் சுகமாக வாழப்போகிறோம் என்று நினைத்தான். ஆனால் இன்றைக்கு அவதிப்படுகிறான். கொரியாவைக் கண்டு நடுங்குகிறான். உலகில் நானேதான் வாழவேண்டும் என்று எண்ணியவர்கள் எவரும் ஒருநாளும் அவர்கள் எண்ணியது போல் சௌக்கியமா வாழ்ந்ததில்லை. இது சரித்திரம் கூறும் உண்மை.

இன்று அமெரிக்காவோடு, கொரிய யுத்தத்தில் இறங்கினால் இவ்வளவு நாளாகப் பெருமையுடன் வாழ்ந்த பிரிட்டனோ, அணுகுண்டுத் தாக்குதலினால் அழிந்து போனாலும் போகக் கூடும் என்பதை நான் அல்ல, இங்கிலாந்து தேசத்தில் தொழிற்கட்சி மெம்பர் ஒருவன் பேசுகிறான்.

ஏழு வருடங்களுக்கு முன்னால் இந்தியாவையும், இதுபோன்ற நாடுகளையும் தாங்களே ஆண்டு கொண்டிருக்கப் போகிறோம் என்று கனவு கண்ட ஆங்கிலேயன், இன்று யுத்த பீதி கொண்டு அழிந்து விடுவோமோ என்று அலறுகிறான் என்றால், அப்புறமுள்ள காங்கிரஸ்காரர்களே, சிறப்பாக இந்தக் காங்கிரஸ்காரர்களுடைய கட்சித் தலைமை வகிக்கக் கூடிய ஸ்ரீமான் ஆச்சார்யார் அவர்களே,

இந்த உலகில் நீங்கள்தான் வாழலாம், வாழமுடியும், வாழ வேண்டும். நீங்கள் அரசாட்சி பண்ண வந்தவர்கள் என்று எண்ணி விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்தரப்பாளர்கள் எல்லாரும் அழிந்து போய் விடவேண்டும். அவர்களை அழித்து விட வேண்டும் என்பதாக நினைக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தேசம் இன்று சுதந்திரம் அடைந்துவிட்டது. சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்கள் நாங்கள்தான் என்று சொல்கிறீர்கள். அப்படியா? தயவுசெய்து அம்மாதிரி சொல்லாதீர்கள்.

சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்களில் நாங்களும் ஒருவர் என்று சொல்லிக் கொள்ளுங்கள். அதை ஒத்துக் கொள்கிறோம்.

சுதந்திரப் போராட்டத்தில் பெயர் ஊர் தெரியாத ஆயிரக்கணக்கான வாலிபர்களும், ஸ்த்ரீகளும் ஈடுபடவில்லையா? தூக்கு மேடையில் பலர் உயிரை விடவில்லையா?

அகிம்சையால் மாத்திரம் சுதந்திரம் வாங்கிவிட்டீர்களா? உங்களுடைய போராட்டத்தில் பலாத்காரம் சம்பந்தப்படவில்லையா?

இன்று எதிர்க்கட்சியில் இருக்கிற எங்களில் பலர் அந்த சுதந்திரப் போராட்டத்திற்கு உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து போராட முன்வரவில்லையா? நாங்கள் சிந்திய ரத்தமும், ஆயிரக்கணக்கான இந்நாட்டு வாலிபர்கள் கொட்டிய ரத்தமும் இன்று நீங்கள் முதல் மந்திரியாக வருவதற்கு உதவவில்லையா?

மனச்சாட்சி உங்களுக்கு இருக்குமானால் அதைத் தொட்டு யோசித்துப் பார்க்கக் கூடாதா? இன்று நீங்கள் முதல் மந்திரிகளாவதற்கு, அன்று நாங்கள் சுதந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு மறியல் செய்து, மாணவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறி சிறைக்குச் செல்லவில்லையா? இவ்வளவையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கக் கூடாதா? கிடைத்ததுதான் சுதந்திரமா?

இந்தப் பக்கத்தில் இருந்து ஸ்ரீமான் மாணிக்கவேலர், அந்தப்பக்கத்தில் சேர்ந்தபின், அவர் கடவுள் தன்மையை அடைந்து விட்டாரா? உங்கள் பக்கத்தில் உள்ள கடவுள், உங்களுக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம் என்ற காரணத்திற்காக எங்கள் பக்கம் வரமாட்டேன் என்கிறாரா?
உங்களுடைய தியாகம் எங்கள் பக்கத்தில் இருப்பவர்களுடைய தியாகத்தைக் காட்டிலும் அவ்வளவு சிறந்ததாகுமா? நீடூழிக்காலம் நீங்கள் பதவியில் இருப்பீர்கள் என்ற எண்ணத்தில் நீங்கள் செய்து வரும் அக்கிரமங்களுக்கு ஒரு எல்லைதான் இல்லையா?

நீங்கள் நினைக்கிற, சொல்லுகிற உண்மைக் கடவுள் எல்லா இடங்களிலும் என்ன சொல்லி இருக்கிறார்? அதற்கு அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது என்பதற்காக தப்பு செய்யக் கூடாது. அதிகாரத்தை வைத்துத் தப்பு செய்தவனை முன்னுக்கு வந்தது கிடையாது, வருவதும் கிடையாது என்பதை ஞாபகமூட்டிக் கொள்ள வேண்டும். நீங்கள் ரொம்பவும் கடவுள் பக்தி உள்ளவர்கள் போலவும், பாக்கி இருப்பவர்களுக்கு எல்லாம் கடவுள் பக்தி இல்லை என்பது போலவும் சொல்லுகிறீர்களே? அது சரியா? அது பொருந்துமா? அடக்கமாக இருக்க வேண்டுமல்லவா?   

பாகிஸ்தான் என்ற பரமபாதகம்

தேசத்தில் பாகிஸ்தான் என்ற பரமபாதகமான ஒரு நாட்டுப் பிரிவினை உண்டு பண்ணும்படி சொன்னது தாங்கள் அல்லவா? பாகிஸ்தான் என்றால் ஜின்னாவுக்கு என்னவென்று தெரியுமா? பாகிஸ்தானை கொடுத்து விட்டால், இதனால் நமக்குத் தொல்லை இருக்காது என்று நீங்கள்தானே சொன்னீர்கள்?

பாகிஸ்தானை கொடுத்த பிறகாவது இன்று அதனால் தொல்லை இல்லாமல் இருக்கிறீர்களா? காஷ்மீரில் இன்று நடக்கும் காரியங்கள் என்ன?

இரண்டாவதாக பாகிஸ்தான் கொடுக்கப்படுமேயானால், அந்தப் பாகிஸ்தானின் பொருளாதாரம் அழிந்து விடும் என்று சொன்னீர்களே? அது என்ன ஆயிற்று? அவர்கள் ஏமாந்தார்களா?

உங்களுடைய பணத்தின் மதிப்பைக் குறைத்துக் கொள்ளும்படி செய்தீர்களே தவிர அவர்கள் குறைத்துக் கொண்டார்களா? அவர்கள் கணக்குப்படி உங்கள் ஸ்டெர்லிங் நிதியைக் கைப்பற்றி விடவில்லையா? உங்களுடைய பொருளாதாரம் என்னவாயிற்று?

மூன்றாவதாக பாகிஸ்தான் கொடுத்தவுடனேயே அந்தப் பிராந்திய இந்துமக்கள் அந்தப் பிராந்தியத்திலேயே வசிப்பார்கள், பாகிஸ்தான் பிரஜை ஆகிவிடுவார்கள் என்று சொன்னீர்களே? பாகிஸ்தான் கிடைத்த உடனே ஒன்றரைக் கோடி இந்து மக்களை அடித்து விரட்டவில்லையா?

பாகிஸ்தானைப் பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் என்னவாயிற்று? பாகிஸ்தானை நிலைப்படுத்திக் கொண்டு விட்டான். அவன் பொருளாதாரத்தை உங்களிடமிருந்து அவமானகரமாக தங்களுடைய ஸ்டெர்லிங்கை குறைத்துக் கொள்ளாமல் உங்களிடமிருந்து அதிகாரத்தோடு வாங்கினான்.

நீங்கள் பணத்தைக் கொடுத்து விட்டு ஏமாந்து நின்றீர்கள் அல்லவா? காந்தி அடிகளுடைய தவறான மரணத்திற்கு தங்கள் கொடுத்த பாகிஸ்தான் யோசனை அல்லவா காரணம்? ஆச்சாரியாரே, உங்கள் அறிவு அப்போது எப்படி ஆயிற்று? நீங்கள் யாரை ஏமாற்றப் பார்த்தீர்கள்?

அவர்கள் உங்களிடம் ஏமாந்தார்களா? அல்லது நீங்கள் ஏமாந்தீர்களா? கொஞ்சம் சொல்லுங்களேன், அரசியலுக்கு அறிவு மட்டும் இருந்தால் போதுமா?

Politics certainly need brain, Sir, but shoulder   and head also must combine, without shoulder, if the head is to proceed there will be quixoctic programmes which will end in disaster. To work politics, a man must be in a position even to lay down his life at any place and in any moment. Then only he will have some peace. By mere intrique a man will not succeed and the country that follows also will go wrong with him.

அந்த நிலைமையிலே இவர்கள் சுதந்திரம் வாங்கிய பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நிலைமை என்ன? பாகிஸ்தானில் மாட்டிக் கொண்ட ஒன்றரைக் கோடி மக்களின் கதி என்னவாயிற்று? அவர்கள் நடுச்சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே? சொத்தை இழந்து, வாழ்க்கை நிலை இழந்து, மனைவி மக்களை இழந்து அலறித் துடித்தார்களே? அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களை பாகிஸ்தானிற்கு ஓடு என்று ஆர்ச்சார்யா கோஷ்டி விரட்ட முடிந்ததா? நாட்டில் ஏற்பட்ட பற்பல தொழிலாளி பிரச்சனையில் ஒன்றையாவது வெற்றிகரமாக இவர்களால் தீர்த்து வைக்க முடிந்ததா?

புண்ணாக்கை தின்னச் சொன்ன புத்தியற்ற மந்திரிகள்

150 வருஷங்கள் அட்டைபோல ஒட்டிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நம் செல்வத்தைச் சுரண்டினார்கள் என்றாலும் உங்களுடைய ஐந்து வருட ஆட்சியிலே ஒவ்வொரு இந்திய நாட்டின் குடும்பச் செல்வத்தையுமே, சுரண்டி விட்டீர்களே? இல்லையா?

என்றைக்குமே இல்லாத தரித்திரம் உங்கள் ஆட்சியில் நாட்டைப் பற்றிக் கொண்டதே? இல்லையா? பிரிட்டிஷ் ஆட்சியிலே இங்கு வாழும் மக்கள் ஒவ்வொருவருக்கும் 18 அவுன்ஸ் ரேஷன் கொடுத்தார்கள் என்றால் உங்கள் ஆட்சியிலே கல்லும் மண்ணும் சேர்த்து 6 அவுன்ஸ் அரிசி போட்டீர்களே? இல்லையா?

சில இடங்களில் அந்த 6 அவுன்ஸ் அரிசி போடக் கூட வகையின்றி புண்ணாக்கை தின்னுங்கள் என்று புத்தி சொல்லவில்லையா? சொந்தப் புத்தியற்ற மந்திரிகள்.

இப்போது கனம் ராஜகோபாலச்சாரியார் ரேஷனை எடுத்து விட்டார்கள் என்றால் எல்லாரையும் போல நானும் சந்தோஷந்தான் படுகிறேன்.

ஆனால் அதேசமயம் எப்போது ரேஷனை எடுக்க வேண்டும் என்றபதை, தனக்கே எல்லாம் தெரியும், தானே சாணக்கியத்தில் வல்லுநர், தான் செய்யக் கூடிய காரியங்களில் தவறே இருக்காது, என்றெல்லாம் எண்ணி இறுமாப்புக் கொள்ளும் மகானுபாவர் ஸ்ரீமான் ராஜகோபாலச்சாரியர் யோசிக்க மறந்து விட்டார் என்று எண்ணும்போதுதான், இந்த ரேஷனை இப்போது எடுத்தது சரியாகாது என்று சொல்கிறேன்.

அறுவடை முடிந்ததும் எங்கு பார்த்தாலும் தீவிர கொள்முதல் நடந்து பிறகு கிராமங்களில் கொஞ்சம் கூட அரிசி இல்லாமல் மக்கள், விவசாயிகள் எல்லாரும் ரேஷன் கடைகளைத் தங்களுக்கு தினப்படி வேண்டிய அரிசிக்கு பார்த்துக் கொண்டிருக்கும்போது சர்க்கார் ரேஷனை ரத்து செய்து விட்டு உங்கள் இஷ்டம்போல் வெளியில் தானியத்தை வாங்கிச் சாப்பிடுங்கள் என்று சொன்னால் இது மக்களுக்குச் செய்த அனுகூலமா? அல்லது மக்களுக்குச் செய்துகொண்டிருந்த பொறுப்பைக் கை கழுவிவிட்டு எக்கேடு கெட்டாவது, மக்கள் போகட்டுமென்ற எண்ணத்துடன் மக்களுக்குச் செய்த துரோகமா? என்றுதான் கேட்கிறேன்.

அறுவடை காலத்திலே நீங்கள் ரேஷனை எடுத்தீர்களேயானால், மக்கள் தங்களுக்கு வேண்டிய தானியத்தை மலிவாக வாங்கிக் கொள்ள முடியும்.

அதை விட்டு, கொள்முதல் ஆன பிறகு நடவே ஆகாமல் மறுமகசூல் வருவதற்கு இன்னும் ஐந்தாறு மாதங்கள் இருக்கும்போது இடையே ரேஷனை எடுத்தது நன்மையைச் செய்யாது. அதை விட அதிகத் தீமையையே மக்களுக்குச் செய்யும் என்பது ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாருக்கு தெரியாதா? தெரிந்தும் செய்தார் என்றால் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு ஆச்சாரியார் செய்த துரோகமே இது.

கடைசியாக அருப்புக்கோட்டைத் தேர்தலை எடுத்துக் கொள்ளுங்கள். அருப்புக்கோட்டைத் தேர்தலில் நிச்சயமாக எனக்கு ஜெயம் கிடைக்கும் என்பது தெரியும்.

ஆனால் நான் கர்வம்கொள்ளவில்லை. நான்தான் அவ்விடத்திலே ஜெயிப்பேன் என்று சவால் விடவில்லை. என்னுடைய தொகுதியில் எனக்கு நிச்சயம் வெற்றி கிடைக்குமென்ற நம்பிக்கையுள்ள நான், எந்த அறிக்கையும் விடாமல் அமைதியாக இருந்தபோது, கனம் ஸ்ரீமான் ராஜகோபாலச்சாரியார் என்ன சொல்கிறார்?

அருப்புக்கோட்டை தொகுதி மக்களே, இந்தத் தொகுதியில் காங்கிரஸ் ஜெயித்தால் நான் வேண்டுமென்று அர்த்தம். நான் வேண்டுமென்றால் காங்கிரஸ்க்கு ஓட்டுப்போடுங்கள் என்று சவால் விடுக்கிறார்.

நான் வேண்டுமென்றால் காங்கிரஸ்க்கு ஓட்டுப்போடுங்கள் என்றால், காங்கிரஸ்க்கு ஓட்டுப் போடாவிட்டால் நான் வேண்டாமென்று அர்த்தம் என்பதுதானே பொருள். காங்கிரஸ் தோற்றுப்போனால், தான் பதவியில் இருக்கப் போவதில்லை என்றுதானே பொருள்.

கனம் ராஜகோபாலச்சாரியாரே, அருப்புக்கோட்டை மக்கள் காங்கிரஸ் நபர் வேண்டாமென்று உங்களுக்கு எதிராக, நீங்கள் வேண்டாம் என்று ஓட்டுக் கொடுத்து விட்டார்களே?

சொன்ன வார்த்தையைச் சொன்னபடி செய்யும் உண்மை சத்தியசந்தர் நான் என்று நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டியது அல்லவா தன்மானமுள்ளவரது கடமை?

ஆனால் நீங்கள் ராஜினாமா செய்யத்தான் பிரியப்படுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது. ஆனால் அதைக் கேட்ட நான் சந்தோஷப்படுகிறேன்.

ஆனால் உங்கள் சகாக்கள்தான் உங்களை ராஜினாமா செய்யக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள் என்று அறிகிறேன். அப்படி ஆனால் உங்களுடைய சகாக்களுக்காக நீங்கள் சொன்ன வார்த்தையை கடைப்பிடிக்காதவராக ஆவீர்கள் என்று உங்களுக்கு புகழ்மாலை கொடுக்கும் அன்பர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

தொகுதியிலே தோற்கடிக்கப்பட்ட நீர் ஒழுக்கமுள்ளவர் போல் இப்போது நம்பிக்கை தீர்மானத்தை எங்களிடமா கோருவது? மக்கள் கொடுத்திருக்கும் தீர்ப்புக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ சொல்லும் கோர்ட்டா இது?

As for as my knowledge of democracy goes, if anything untoward happens in the Legislature, the proper course is to appeal to electrote outside and get their verdict. Here is a wonderful democracy coming in the through our Hon. Chief Minister.

He wants to make the legislature an appellate court when he had a knoch out in a general constituency. Is this democracy? Is there any answer to this from any side of the House? It cannot be democracy. It is nothing but democracy if I am not wrong.

அப்படி தேர்தலிலே தோற்றுப்போய் விட்டு சபையிலே நம்பிக்கை கோருவது விசித்திரமாக அல்லவா இருக்கிறது?

இது மாதிரி எங்காவது நடந்தது உண்டா? ஆச்சாரியார் அவர்களே, உங்களுக்குச் சட்டங்கள் தடுமாறுகின்றனவா? யோக்கியதை பொறுப்பு  உருக்குலைந்து விட்டதா? அரசியல் சட்டம் கண்களில் படாமல் போய்விட்டதா?

எடுத்ததற்கெல்லாம் ஆண்டவனைக் கூப்பிடுவீர்களே, அந்த ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் உங்களை அனாதரவாக்கிவிட்டு விட்டானா? எதிர்த்து ஓட்டுப்போட்ட மக்கள் எல்லாரும் பிற்பட்ட இனத்தவர்கள். ஆனால் உங்களை ஆதரிக்கும் ஜனங்கள் எல்லாரும் சிறந்து விளங்குகிற ..எஸ் படித்த உத்தமர்களா?

இது மானமுள்ளவர்கள் பேசக் கூடியதா? உங்கள் குமாரசாமி ராஜா நின்ற இடம் முனிசிபல் எல்லைக்குட்பட்ட ராஜ்யம்தானே? அங்கே அவர் தோற்றுப்போவானேன்? காங்கிரஸ்க்கு மக்களிடம் தொடர்பு இல்லை என்பதுதானே தோல்விக்கு உண்மையான காரணம்?

அவதார புருஷரான உங்களுக்குத் தெரியவில்லையா? இன்னும் அங்காரத்தை விடவில்லையா? Egoism is the greatest enemy of any man and all the more so to a man who talks philosophy.

நீர் உண்மையான ஆண்டவனின் பிரதிநிதியாக இருந்தால் அல்லவா தெரியும்? எதிர்க்கட்சியை நசுக்க நீங்கள் ஆண்டவன் பூஜை செய்கிறீர்கள். அதை மக்கள் உணராமலிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தீர்களானால் மறுபடியும் ஆண்டவன் உங்கள் மூளையை மழுக்கி விட்டார் என்றே நயமாகச் சொல்லிவிடலாம். நீங்கள் உண்மையில் உண்மை நிலையை, நாட்டின் எதார்த்த நிலவரத்தை உணர்ந்தீர்களானால் கூட்டு மந்திரி சபையை அமைத்திருப்பீர்கள்.

அப்படி நீங்கள் அமைக்கத் தவறியதோடு காங்கிரஸ் துரோகிகளையும், பரம விரோதிகளையும் சேர்த்துக்கொண்டு மந்திரி சபை அமைத்ததோடு, இந்த மந்திரிசபை காங்கிரஸ் மந்திரி சபைதான் என்று டமாரம் போடுவதால்தான் நான் இந்த மந்திரி சபையை எதிர்க்கிறேன்.

கடவுள் பெயரைச் சொல்லி எங்களை நீங்கள் நசுக்கப் பார்த்தீர்களானால், ஆனானப்பட்ட சர்ச்சிலாலேயே கூட நசுக்கப்பட முடியாதவர்களான எங்களை, ஆச்சார்யார் அவர்களே நீங்கள் ஒரு நாளும் நசுக்க முடியாது.

அப்படி நினைத்தீர்களானால் பிறர்க்கு இன்னல் விளைவிக்க முயல்பவர்கள் ஆண்டவனாலும் காப்பற்றப்பட மாட்டார்கள், காப்பாற்றப்பட்டது கிடையாது.

நீங்களும் உங்கள் மந்திரி சபையும் காப்பாற்றப்பட மாட்டீர்கள் என்பதை இனிமேலாவது உணர்ந்து கொள்ளுங்கள். (hear hear)

ஆகையால் நாங்கள் உங்கள் மந்திரி சபைக்கு விரோதியே தவிர, மக்களுக்கு விரோதியல்ல. இந்த மந்திரி சபைக்கு விரோதமாக ஓட்டுப்போடுவதன் காரணமாக நான் கம்யூனிஸ்டோ என்று யாரும் எண்ணிவிட வேண்டாம்.

The present position of India is neither independant nor dependant. It is an adjustment. The Britishers know that there will be a third world war and they are in need of Asiatic soldiers. So Lord Mountbatten came forward with a plan to give the so-called independence to India. But what is actually given is only Dominion Status. To call it a Republic is a first rate of lie. The Pakistanis and Ceylonese know that they have Dominion Status and not Republic and say so. To call our Constitution a Republic Constitution is neither forward nor backward but awkward, Sir.

The Communist principle each according to his capacity and each according his need is a principle which I cannot accept. I do not stand for that principle. I want the gradation of society. "Each according to his capacity and each according to his ability."

As regards God, I belong to the Ramakrisha Mission and like swami Vivekananda I am not a atheist. I want the oriental cult of religion spread instead of the accidental cult of Atom Bomb.

The position of India is at stake. Asia has come up. In the First World War, Britain and the Americans had their victory. Yet it has created a Russia. In the Second World War they have their so called victory. It has created China. In the Third World War they hope they are going to have victory and the Congress people hobnobbing with them in the name of the so-called neutrality. But it is going to create a new India take it from me. When the time comes you all will know where you are and whether God is on your side or on the other sied. Please feel for the country. Please feel for the Asiatic nations, for the non-whites. Make me serve a National purpose and Anti-white policy, the build up of a sound economy in the State. I am throughly for a clean and good government. No government can cover it's weaknesses by audacity. Power politics is wrong. With these words, I oppose the motion. In the name of the very same God which you possess and with the very same heart of which he is the custodian, I appeal to every Member to vote as per his wish.
**********************************




No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...