Saturday, July 1, 2017

முருகன் ஆண்பிள்ளை - கிருஷ்ணன் பெண் பிள்ளை


அந்நாளில் அந்நியர் ஆதிக்கத்தை அகற்றுதல், வெள்ளைக்காரனை வெளியேற்றுதல்
போன்ற உணர்வு மேலோங்கி நின்றதால் காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு கட்சிகள்
எதுவும் மக்களிடம் எடுபடவில்லை என்றே சொல்லலாம். அகவே அரசியல் கட்சிகளின்
மோதல், தகராறு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், இந்து மதத்திற்குள்ளேயே
சிவமதம் பெரியதா? வைஷ்ணவ மதம் பெரியதா? விபூதியா? நாமமா? சிவமதம்
சிறந்தது. இல்லை இல்லை வைஷ்ணவ மதமே வழிபாட்டுக்குரியது. முருகனுடைய
பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். கிருஷ்ணனுடைய கீர்த்தி அளவிட
முடியாதது.

இன்னும் கடுமையான விவாதங்களில் ஒருவரை ஒருவர் திட்டிப் பேசுவது, அடிபிடி
சண்டை என மோதிக் கொள்வது, இவர்கள் சிலைகளை அவர்கள் கடத்துவது, அவர்களின்
சிலைகளை இவர்கள் தூக்கிப்போவது. இப்படியெல்லாம் மோதல்கள் நடைபெற்று வந்த
காலம் அது.

தேவர் மகனோ தீவிர முருக பக்தர். இவர் பேசப் போவதோ நாமதாரிகளுக்குச்
சொந்தமான திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், அதுவும் “‘கிருஷ்ணன்
பிறந்தார்என்ற தலைப்பில். தேவர் மகன் கொடுத்த தலைப்பை விட்டு துளியும்
மாறிப் பேசமாட்டார். இன்று அவர் கிருஷ்ணாவதாரத்தின் பெருமைகளை மட்டுமே
பேசி நம்மைப் பூரிப்பில் ஆழ்த்துவார்என்று அசைக்க முடியாத
நம்பிக்கையோடும் அமர்ந்திருக்கின்றனர் அங்குள்ள ஆழ்வார் பக்தர்கள்.

தேவர் பேசத் தொடங்கினார். கிருஷ்ண பகவானைப் பற்றி அதுவரை எவரும்
எடுத்துச் சொல்லாத பெருமைகளையெல்லாம் அவருக்கே உரிய பாணியில், அழகுத்
தமிழில் அருமையாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். நீண்ட நேரம் கை
தட்டி ஆனந்தக் கண்ணீர் விட்டு ரசித்துக் கொண்டிருந்தனர் ஆழ்வார்
பக்தர்கள்.

இறுதியில், ‘அவ்வளவு பெருமைக்குரிய கிருஷ்ணனோ, பெண் பிள்ளை, என் முருகனோ
ஆண் பிள்ளைஎன்றார். அவ்வளதான். குனிந்து தலையாட்டி ரசித்துக்
கொண்டிருந்தவர்கள், திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தனர். இவ்வளவு
அருமையாகப் பேசிக் கொண்டிருந்த தேவர் மகன், முடிவில் என் முருகன்தான் ஆண்
பிள்ளை, கிருஷ்ணன் பெண் பிள்ளை என்று சொல்லி விட்டாரே என்று அதிர்ந்து
போனவர்கள் சங்கடத்தில் நெளிந்தார்கள். ஒரே சோக அமைதி.

உடனே தேவர் தொடர்ந்தார், ‘நான் ஏதோ தவறாகச் சொல்லிவிட்டதாக எண்ணி
நீங்களெல்லாம் சங்கடப்படுவதாக உணர்கிறேன். கிருஷ்ணன் தேவகி வயிற்றுப்
பிள்ளை என்பதால், அவரைப் பெண் பிள்ளை என்றேன். முருகன், சிவனுடைய
நெற்றிக் கண்ணில் தோன்றியதால் அவரை ஆண் பிள்ளை என்றேன். சரிதானே?’
என்றார்.

கூடியிருந்தோர் அத்தனைபேரும் கரஒலி எழுப்பி, தங்கள் பெருமகிழ்ச்சியைத்
தெரிவித்தனர். அந்நாளில் மட்டுமல்ல, பின்னாளிலும் தேவர் பெருந்தகையின்
பேச்சாற்றல் வியந்து போற்றப்பட்டு வந்தது.

- "நான் வந்த பாதை" நூலில் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன்

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...