Monday, June 19, 2017

சமுதாயம் மாறுமா?


நேற்று முன்தினம் என் உறவினரின் இழவுக்குச் சென்றிருந்த நான் ஒரு உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போது அவர் கேட்ட கேள்வி....

நீங்கள் முகநூலில் சமுதாயம் குறித்து அதிகம் எழுதுகிறீர்கள். ஆனால் உண்மையில் நம் சமுதாயம் படு வேகமான சீரழிவைச் சந்தித்துக் கொண்டு வருகிறது. பெற்ற குழந்தைகளால் தாய் தந்தையரை பேணி பாதுகாக்க முடியவில்லை. அவர்களை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். ஒரே தாய்க்குப் பிறந்த அண்ணன் தம்பிகளால் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இப்படி இருக்கும்போது சமுதாய மாறும் என்று நம்புகிறீர்களா?


எனது பதில்...

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. நமது சமுதாயம் என்றில்லாமல் எல்லாச் சமுதாயத்திலும் ஏறக்குறைய இந்த நிலைதான் உள்ளது. இதற்கு காரணம் சுயநலம் என்று ஒற்றை வரியில் சொல்ல மாட்டேன். ஆனால் அதுவும் ஒரு காரணமாக உள்ளது.
இணக்கமான போக்கு, அமைதியை விரும்புதல், ஒற்றுமையை விரும்புதல், அண்ணன்-தம்பி என்ற உறவுமுறை ஆகியவை ஒரு தரப்பினரை மட்டும் சார்ந்தது அல்ல. கருத்து வேறுபாடு ஏற்படக் கூடிய அண்ணன், தம்பி ஆகிய இருவருமே ஒற்றுமையை விரும்ப வேண்டும். ஒருவர் மட்டும் ஒற்றுமையை விரும்பி மற்றவர் அதை விரும்பாவிட்டால் அங்கு ஒற்றுமை ஏற்படாது.
அதேபோல தாய் - தந்தையரும் சில தவறுகளைச் செய்கின்றனர். அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட மகன்களைக் கொண்ட தாய் -தந்தையர் ஒரு மகன் மீது பாசத்தையும், ஒரு மகன் மீது அலட்சியப் போக்கையும், வெறுப்பையும் காட்டுபவர்களாக இருக்கிறார்கள். இது அவர்களின் சொத்து பகிர்விலும் எதிரொலிப்பதாக உள்ளது. சொத்துப் பிரச்சனை சண்டைச் சச்சரவு உயிர்ப்பலி வரை கொண்டு செல்கிறது. தாய்- தந்தையர் தங்கள் பிள்ளைகள் அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும்.

அதேபோல சொத்துக்களை தாய்-தந்தையரின் இறப்புக்குப் பிறகு பகிர்வோம் என்ற ஒரு முட்டாள்தனமான நம்பிக்கையும் பலரிடமும் நிலவுகிறது. இந்த நிலைப்பாடும் மாற வேண்டும். ஓரிரு சொத்தைத் தவிர மற்ற சொத்துக்களை பெற்றோர் உயிரோடு இருக்கும்போது சரியாக பகிர்ந்து கொடுத்து விட வேண்டும். அவர்களின் இறப்புக்குப் பின் பிரிக்க வேண்டிய சொத்துக்களை முன்கூட்டியே பிரித்து உயில் மூலமாக எழுதி விட வேண்டும். இவ்வாறு செய்தால் சொத்து மூலமாக ஏற்படும் அண்ணன் - தம்பி மோதல்கள் குறைந்து விடும்.

அடுத்தபடியாக உள்ள பிரச்சனை தனிக் குடும்பங்கள். ஏற்கனவே கூட்டுக் குடும்பங்களை இழந்து விட்ட நாம் தனிக்குடும்பங்கள் மேலும் குறுகி குழப்பமான குடும்பகளாக மாறி வருவதை காண்கிறோம். அண்ணன்-தம்பி மோதல்கள்தான் இதற்கு காரணமாகின்றன. தனிநபர்களிடையே ஏற்படும் நம்பிக்கை மற்றும் முயற்சியே இந்த நிலையை மாற்ற முடியும். இதற்கு சமுதாய அமைப்புகள் பெரிதும் உதவலாம். ஆனால் சமுதாய அமைப்புகளும் வெகு சில இடங்களில்தான் சிறப்பாக அமைந்துள்ளன. தனிநபர்கள்தான் இந்த அமைப்புகளையும் சரி செய்ய முடியும். சிறந்த லட்சியங்களையும், உயர்ந்த குறிக்கோள்களையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தனிநபர்களின் இடைவிடாத கூட்டு முயற்சியே இவற்றை சாதிக்க முடியும்.

அடுத்த நிலையில் வருபவர்கள் பெரும்புள்ளிகள், பிரமுகர்கள், ஆன்மீகத் தலைவர்கள். ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்புள்ளிகள், ஏதாவது ஒரு துறையில் சிறப்பாக இருக்கலாம். ஆனால் அவர்களால் முழுமையாக சமுதாயப் பொறுப்புகளை ஏற்க முடியாது அல்லது அவர்களுக்கு வழிகாட்டியாக மாற முடியாது.

உதாரணமாக ஒரு பெரும்புள்ளி ஒரு கல்வி நிலையத்தை அல்லது தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரலாம். ஆனால் அவரால் ஒரு சிறந்த சமூக தலைவராக அல்லது வழிகாட்டியாக இல்லாமலிருக்கலாம். அதேபோல அரசியல் பிரமுகர்கள் சிறந்த அரசியல் தலைவர்களாக இருந்தாலும் அவர்களால் சமூக பொறுப்பை ஏற்க முடியாமலிருக்கலாம். அதிலும் திராவிடக் கட்சிகளில் இருக்கும் பிரமுகர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவர்கள் தங்களை சாதிவெறியர்கள் என்று சொல்லி விடுவார்கள் என்ற அச்சாத்தாலேயே அவர்கள் தங்களது சமூக அக்கறையை வெளிப்படுத்தக் கூட மாட்டார்கள்.

அதேபோல ஆன்மீகத் தலைவர்கள் தான் சார்ந்த சமுதாயத்தவருக்காக பாடுபட வேண்டும். அப்போதுதான் அவர்களின் ஆன்மீகப் பணி முழுமையடையும். அவர்களால்தான் வேறுபாடின்றி வழிகாட்ட முடியும். மேற்கூறிய அத்தனை காரணிகளும் அல்லது குறைந்தபட்ச காரணிகள் ஒன்று சேர்ந்து முயற்சிக்கும்போதுதான் ஒரு சமுதாயம் மேம்படும். சமூக மாற்றம் ஏற்படும். பொறுமையும் விடாமுயற்சியும் வெற்றி தரும். (எனது உறவினரிடம் இத்தனை விரிவாக பேசவில்லை, இதையே சுருக்கமாக பேசினேன்)

-------------------------------------------------------

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...