Monday, July 10, 2017

மறு கன்னத்திலும் அடித்தால்....?



அப்போது மதுரை மாவட்டம் பெரியகுளத்தில் தங்கி, அந்தப் பகுதியில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி வந்தார் எனது தந்தையார். எங்கள் குடும்பமே அங்கேதான் இருந்தது. ஆக அதே ஊரிலேயே எனது படிப்பைத் தொடர்ந்திருக்க முடியும். நான் சரியாக கவனம் செலுத்தி, நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக, என் தந்தையார் பெரியகுளத்திலிருந்து பதினாறாவது மைலில் இருக்கிற ‘வத்தலக்குண்டு’ என்ற ஊரில் ஏ.எம்.சி.சி. என்ற உயர்நிலைப் பள்ளியில், என்னை ஆறாவது வகுப்பில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

அது அமெரிக்க உதவியுடன், நடத்தப்படும் ஒரு கிறிஸ்தவப் பள்ளியாகும். அங்கேயே சாப்பாடு, தங்குவதற்கு வசதி எல்லாம் உண்டு. வாரம் ஒருமுறை, நடுப்பகல் உணவுக்குப் பிறகு என் தந்தையார் வந்து, என்னைப் பெரியகுளம் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். பிறகு திங்கட்கிழமை காலையில் பஸ் ஏற்றி வத்தலக்குண்டு பள்ளிக்கு அனுப்பி வைப்பார். அப்போதே, படிப்பதை அப்படியே மனப்பாடம் செய்து, ஒப்புவித்து விடுவேன். படிப்பில் கெட்டிக்காரன் எனப்பெயர் பெற்றேன்.


ஒருசமயம் எங்கள் வகுப்பு வாத்தியாரம்மா பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, ஏசுநாதர், “ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தைக் காட்டு” எனச் சொல்லி இருக்கிறார் என்றார். உடனே நான் எழுந்து, “அந்தக் கன்னத்திலும் அடித்து விட்டால் என்ன செய்வது?” எனக் கேட்டு விட்டேன். உடனே அந்தம்ம்மாவுக்குக் கடுமையான கோபம் வந்து, “டேய், பெஞ்சு மேலே ஏறி நில்லு” என்றார். ஆங்கிலத்தில் முழுமையாகத் திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு எனது மாணவ நண்பர்கள் என்னை கண்டித்தார்கள். என்ன ஆகப் போகிறதோ எனப் பயந்தனர். நானுந்தான்.

அந்தப் பள்ளி நிர்வாகியின் பெயர் ‘மார்டின் துரை’. அவர் ஒரு வெள்ளைக்காரர். யாராவது மாணவர்கள் பெரிய தவறு செய்து விட்டால் ரிப்போர்ட் அவருக்குப் போய்விடும். சனிக்கிழமைதோறும் மதியம் ஒரு மணியளவில், அந்த மாணவனை அழைத்து விசாரித்து, தகுந்த தண்டனை வழங்குவார். அந்தச் சனிக்கிழமை, என் தந்தையார் வந்து, விஷயத்தைக் கேள்விப்பட்டு என்னைக் கண்டபடி திட்டினார். “நீ செய்த இந்தப் பெரிய குற்றத்துக்குப் பள்ளியிலிருந்து அறவே நீக்கப்படப் போகிறாய். பிறகு கிராமத்துக்குப் போய் நமது மாடுகளைத்தான் நீ மேய்க்கப் போகிறார்” என்று திட்டினார்.

பள்ளி நிர்வாகியின் விசாரணைக்காகக் காத்திருந்தோம். மார்ட்டின் துரை தன் ஆசனத்தில் வந்து அமர்ந்தவுடன் நான்தான் முதலில் விசாரணைக்கு அழைக்கப்பட்டேன். ‘ரொம்ப கோபமாய் இருப்பார் போலத் தெரிகிறது. வாடா” என்று அழைத்துக் கொண்டு என் தந்தையும் கூடவே வந்தார். ஒரு நீதிபதியின் முன் கடுமையான குற்றத்தைச் செய்தவன் போல, தீர்ப்பை எதிர்நோக்கி கை கட்டி காத்திருந்தேன். என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த வாத்தியாரம்மாவும் அங்கே இருந்தார்.

துரை அவர்கள் என்னை உற்று நோக்கி யோசித்த பிறகு என் அப்பாவை நோக்கி “சார், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று ஏசு சொன்னார். ஆனால், அந்தக் கன்னத்திலும் அடித்து விட்டால் என்ன செய்வது என்று உங்கள் பையன் கேட்டிருக்கிறான். நான் அறிந்த வரை யாரும் கேட்டறியாத கேள்வி இது. ராஜேந்திரன் புத்திசாலி. அவனது கேள்விக்கு டீச்சர் பதில் சொல்லியிருக்க வேண்டும். அப்படி மறு கன்னத்தைக் காட்டினால், அடித்தவன் மறுபடியும் அடிக்க மாட்டான். அடிபட்டவனிடம் இரக்கம் காட்டுவான். ஏற்கனவே அடித்ததற்காக வருந்தித் திருந்துவான் என எண்ணியே அவ்விதம் சொன்னார் ஏசு பெருமான். அவர் மற்றவர்களை நம்பினார். ஆனால் அவரே ஏமாற்றப்பட்டார். வெறிகொண்ட கூட்டத்தினர் அந்தப் புனிதரையே, கட்டி இழுத்துக் கொண்டு போய்ச் சித்ரவதை செய்து சிலுவையில் அடித்தனர். அந்தப் பாவிகளையும் திருத்த வேண்டும். மனித இனம் நல்வழியில் ஈடுபட வேண்டும் என எண்ணினார் ஏசு என்று டீச்சர் விளக்கம் தந்திருக்க வேண்டும். அவ்வாறு சொல்லியிருந்தால் இளம் மாணவர்கள் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் அறிந்துகொள்ளத் துடிக்கிற ஆர்வமுள்ள உங்கள் மகன் ராஜேந்திரன் எதிர்காலத்தில் மற்றவர்களால் பாராட்டப்படக் கூடிய அளவுக்கு வநர்ந்து நல்ல புகழ் பெறுவான்” என நேர்மறையாக என்னை வாழ்த்தி அனுப்பினார். எனது படிப்புத் தொடர்ந்தது.


- நான் வந்த பாதை நூலில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். 

Saturday, July 1, 2017

முருகன் ஆண்பிள்ளை - கிருஷ்ணன் பெண் பிள்ளை


அந்நாளில் அந்நியர் ஆதிக்கத்தை அகற்றுதல், வெள்ளைக்காரனை வெளியேற்றுதல்
போன்ற உணர்வு மேலோங்கி நின்றதால் காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு கட்சிகள்
எதுவும் மக்களிடம் எடுபடவில்லை என்றே சொல்லலாம். அகவே அரசியல் கட்சிகளின்
மோதல், தகராறு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், இந்து மதத்திற்குள்ளேயே
சிவமதம் பெரியதா? வைஷ்ணவ மதம் பெரியதா? விபூதியா? நாமமா? சிவமதம்
சிறந்தது. இல்லை இல்லை வைஷ்ணவ மதமே வழிபாட்டுக்குரியது. முருகனுடைய
பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். கிருஷ்ணனுடைய கீர்த்தி அளவிட
முடியாதது.

இன்னும் கடுமையான விவாதங்களில் ஒருவரை ஒருவர் திட்டிப் பேசுவது, அடிபிடி
சண்டை என மோதிக் கொள்வது, இவர்கள் சிலைகளை அவர்கள் கடத்துவது, அவர்களின்
சிலைகளை இவர்கள் தூக்கிப்போவது. இப்படியெல்லாம் மோதல்கள் நடைபெற்று வந்த
காலம் அது.

தேவர் மகனோ தீவிர முருக பக்தர். இவர் பேசப் போவதோ நாமதாரிகளுக்குச்
சொந்தமான திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், அதுவும் “‘கிருஷ்ணன்
பிறந்தார்” என்ற தலைப்பில். தேவர் மகன் கொடுத்த தலைப்பை விட்டு துளியும்
மாறிப் பேசமாட்டார். ‘இன்று அவர் கிருஷ்ணாவதாரத்தின் பெருமைகளை மட்டுமே
பேசி நம்மைப் பூரிப்பில் ஆழ்த்துவார்’ என்று அசைக்க முடியாத
நம்பிக்கையோடும் அமர்ந்திருக்கின்றனர் அங்குள்ள ஆழ்வார் பக்தர்கள்.

தேவர் பேசத் தொடங்கினார். கிருஷ்ண பகவானைப் பற்றி அதுவரை எவரும்
எடுத்துச் சொல்லாத பெருமைகளையெல்லாம் அவருக்கே உரிய பாணியில், அழகுத்
தமிழில் அருமையாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். நீண்ட நேரம் கை
தட்டி ஆனந்தக் கண்ணீர் விட்டு ரசித்துக் கொண்டிருந்தனர் ஆழ்வார்
பக்தர்கள்.

இறுதியில், ‘அவ்வளவு பெருமைக்குரிய கிருஷ்ணனோ, பெண் பிள்ளை, என் முருகனோ
ஆண் பிள்ளை’ என்றார். அவ்வளதான். குனிந்து தலையாட்டி ரசித்துக்
கொண்டிருந்தவர்கள், திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தனர். இவ்வளவு
அருமையாகப் பேசிக் கொண்டிருந்த தேவர் மகன், முடிவில் என் முருகன்தான் ஆண்
பிள்ளை, கிருஷ்ணன் பெண் பிள்ளை என்று சொல்லி விட்டாரே என்று அதிர்ந்து
போனவர்கள் சங்கடத்தில் நெளிந்தார்கள். ஒரே சோக அமைதி.

உடனே தேவர் தொடர்ந்தார், ‘நான் ஏதோ தவறாகச் சொல்லிவிட்டதாக எண்ணி
நீங்களெல்லாம் சங்கடப்படுவதாக உணர்கிறேன். கிருஷ்ணன் தேவகி வயிற்றுப்
பிள்ளை என்பதால், அவரைப் பெண் பிள்ளை என்றேன். முருகன், சிவனுடைய
நெற்றிக் கண்ணில் தோன்றியதால் அவரை ஆண் பிள்ளை என்றேன். சரிதானே?’
என்றார்.

கூடியிருந்தோர் அத்தனைபேரும் கரஒலி எழுப்பி, தங்கள் பெருமகிழ்ச்சியைத்
தெரிவித்தனர். அந்நாளில் மட்டுமல்ல, பின்னாளிலும் தேவர் பெருந்தகையின்
பேச்சாற்றல் வியந்து போற்றப்பட்டு வந்தது.

- "நான் வந்த பாதை" நூலில் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன்

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...