Thursday, December 5, 2019

நாட்டார் {கோனாடு}

"நாட்டார்" பதிவின் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை பகுதியின் கோனாட்டில் நாட்டவர்கள் செயல்பாடுகள் பற்றி தற்போது காண்போம்.

மாறவர்மன் சுந்தரபாண்டியனின் குடுமியான் மலைக் கல்வெட்டில் IPS: 266,
[ ".... கோனாடான கடலடையாதி லங்கைகொண்ட சோழ வளநாட்டு நாட்டோமும்..." ]
கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாட்டின் நாட்டவரும், திருநலக்குன்றமுடைய நாயனார் கோயிற் தானத்தாரும் காரையூர் வேளானுக்கு கோயிலின் தேவதானமாக உள்ள நிலத்தை விற்பனை செய்து அதை மீண்டும் கோயிலுக்கே திருத்தோப்பாக மாற்றி வழங்கிய செய்தியை அறியமுடிகிறது. இதற்கு ஒப்புதல் அளித்த நபர்களாக,

1.நம்பு செய்வான்.
2.கருணாலைய பிள்ளையான் ஆன திருமந் பொழிய நின்றான்.
3.உதையன் நம்பியாண்டாரான வளவதரையன்
4.செருந்திவனப் பெருமாள்
5.அன்பாண்டார்
6.திருமுனைப்பாடி நம்பி
7.எதிரிலிச் சோழ பட்டன்
8.கோயிற் கணக்கு பெரியநாட்டுப் பிரியன்
9.நாட்டுக் கணக்கு குன்றிசூழ்நாட்டு வேளான்
10. கைக்கோளர் கணக்கு குடுக்கும் தியாகி
11.கோயிலின் அனுஸாரம் பிக்ஷை மடத்து நல்லதறியும் பெருமாள். - முதலானோர் குறிப்பிடப்படுகின்றனர்.

இவர்களுள் நம்பி ,பட்டன், கோயிற்கணக்கு, மடாதிபதி ஆகிய நால்வரைத் தவிர எஞ்சியோரை நாட்டாராகவே கருத முடிகிறது. மூன்றாம் ராஜராஜனின் குமாரமங்கலம் கல்வெட்டில் IPS: 196,
[ "....கோனாடான கடலடையாத இலங்கைகொண்ட சோழவளநாட்டு நாடும் நகரம் அகர பிரமதேயம ளோமும்..." ]

நாட்டாரும், நகரத்தாரும், அகரப் பிரமதேயங்களில் வாழும் நபர்களும் கூடிய நிகழ்வு சுட்டப்படுகின்றது. திருவாணைக்காத் திருப்பதியிலுள்ள மடத்திற்கும் ஜீயர் ஒருவருக்கும்
[ "... திருவாணைக்காத்திரு(ப்ப)திய் அ (கிலா)ண்ட நாயகி திருமடத்து எழுந்தருளி இரு க்கும் ஜியர்....." ]
நிலக்கொடை வழங்கிய தகவலைக் கூறும் இக்கல்வெட்டின் இறுதிப்பகுதி சிதைந்து காணப்படுவதால் ஒப்பமிட்டவருள் நாட்டுவேளான் எனக் கூறப்படும் ஒரு நபரை மட்டுமே அறியமுடிகிறது.
வீரபாண்டியனின் குடுமியான்மலைக் கல்வெட்டு IPS: 601 திருநலக்குன்றத்தில் உள்ள சிகாநாதசுவாமி சிவாலயத்தில் பிராமணர்களால் நடந்த திருட்டை விசாரிப்பதற்காகக் கூடிய கோனாட்டு நாடுகள், நகரங்கள், கிராமங்கள், கோயிற் தானத்தார் அடங்கிய கூட்டத்தைக் குறிப்பிடுகிறது.

[ "... கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழவளநாட்டு நாடுகள் நகரங்கள் கிராமங்களோம் உடையார் திருநலக்குன்றமுடைய நாயனார் கோயிற் காங்கேயராயன் திருமண் டபத்து நிறைவற நிறைந்து குறைவறக்கூடி எங்களில் அமைந்து பிடி பாடு இட்டபடியாவது..." ]
[ "...இப்படி இக்கோயிற் சிவப்பிராமணரில் கள்ளரானவர்களை மாற்கத்து கத்துக்கு கடவார்

சிவத்துரோகிகளைச் செய்யும் முறைமைகளிலே செய்யவுநிலை யிட்டு...." ]
கோயிற் கணக்கர் இருவர், நம்பி, பட்டன் முதலான ஆலயப் பிரதிநிதிகளுடன் கீழ்கண்டவர்களும் ஒப்பமிட்டுள்ளனர்.

1.புன்னங்குடி குன்றன் தேவனான தென்னவதரையன்,
2.பரம்பையூர் நம்புசெய்வான், 3.சிகாநல்லூர் வளவதரையன், 4.காரையூர்ச் செங்கதிர்ச் சோழ மூவேந்த வேளான்,
5.அண்ணல் வாயில் வளவன் பல்லவதரையன்,
6.புதுவூர்ப் பெரியதேவன்
7.கீழ்தணியத்து வீரசோழ வேளான்
8.சுந்தரசோழபுரத்துத் தென் கோனாட்டு வேளான்
9.கீழ்மணநல்லூர் இராசேந்திர வேளான்
10. வெம்பனூர் ஈசானதேவன்
11.மீநெல்வேலி பொற்காரி சூரியதேவன்
12.திருநலக்குன்றத்து அன்பாண்டான்
13.குலோத்துங்கப் பல்லவதரையன்
14.கச்சிராயன்
15.விஞ்சத்தரையன்
16.பெருமாள் உடையான்
17.குடுக்குந் தியாகி வேளான்
18.ஆளவந்தான் திருவொத்த சாமமழகியான் .

வேளாண் குடியிருப்பின் {ஊர்கள்} பிரதிநிதிகளே இங்கே நாட்டாராகச் செயல்பட்டுள்ளனர் என்பதை இங்கு தெளிவாக அறியமுடிகிறது. வேளான் அந்தஸ்து பெற்றவர்களும், அரையர் அந்தஸ்து பெற்றவர்களும் இங்கு ஏறக்குறைய சம அளவில் இடம் பெற்றுள்ளனர்.

அடுத்ததாக ஒரு குடுமியான் மலைக் கல்வெட்டு IPS: 367 கோனாட்டு நாட்டாரின் தன்மையை நாம் அறிந்து கொள்ள உதவுகிறது. திருநலக்குன்றத்து நாயனார் திருக்கற்றளியைப் புதுப்பிக்க நிதியில்லாத காரணத்தினால் கோயிலின் தேவதான நிலத்தை விற்பதாகக் கொண்ட முடிவினைக் கூறும் இந்த கல்வெட்டில் 41 நபர்கள் ஒப்பமிட்டுள்ளனர். இவர்களில் ஆலயத்தின் தேவகன்மிகள், கணக்கர், வயிராகி, கைக்கோளன்,பட்டன், நம்பி,கோயிற் பண்டிதன், உள்ளிட்ட நபர்கள் தவிர்த்து மீதமுள்ள நபர்களில் 14 அரையர்களும், 9 வேளான்களும் , 2 மாராயன்களும் வருகின்றனர். இங்கு வேளான்களை விட அரையர்களே அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர்.

[ "... இந்நாயநார் திரு க்கற்றளி ஜீணிக்கையில் ஜீணோத்தாரம்பண்ண வேறு உடலில்லாமையால் இதுக்கு உடலாக நாட்டுத்தேவதான இந்நாயனார் திரு நாமத்துக்கா ணி இலுப்பைக்குடிக்குளமும் வயலிலும் விற்பதான..." ]
14வது நூற்றாண்டிற்குரிய கூடலூர்க் கல்வெட்டில்{ IPS: 447 } ஒப்பமிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாவிட்டாலும் வரி நிர்வாகத்தில் நாட்டாரின் பங்கு எத்தகையது என்பதை அக் கல்வெட்டு உணர்த்துகிறது.

[ "..... எங்கள் நாட்டு இல்லநூரில் இருகூற்றுக்குக் கடவ இல்லனூர் கிழவன் கீழ்மணநல்லூ ரில் பெரியதேவரை புணையிட்டு இவர் கடமையிறாமல் ஓடிப்போகையில் இப்பெரியதேவரை நாங்கள் நாடாக அழைத்து நீரு புணைப்படியே இறுக்கவேணும் என்று புரட்டாதி மாதவரை கடமை இவரைப் பூட்டுகையில் இப்படி புணைபட்ட நான் இறுக்கப்பாத்தால் எனக்கு ஆற்றாது என் காணியான கீ ழ்மணநல்லூர்க்காணியும் போகட்டுப்பெமித்தளை என்று சொல்லி எங்கள் முன்பாக இவர் புணை கழித்துப்போகையாலும்...." ]
அதாவது,.. கோனாட்டு இல்லனூருக்கு அரசுக்கான வரியில் இரண்டு பங்கைச் செலுத்த வேண்டிய இல்லனூர்க் கிழவனானவன் கீழ்மணநல்லூர் பெரியதேவரை புணையாக {ஜாமீன்} வைத்து விட்டு வரியைத் தராமல் ஓடிப்போகிறான். இந்த சிக்கலைத் தீர்க்க எண்ணி தென்கோனாட்டு நாடும், நகரமும், கிராமங்களும் கூடிப் பெரியதேவரை அழைத்துக் கேட்கின்றனர். அவர் இந்த வரியைத் தன்னாலும் செலுத்த முடியாது என்று கூறி தனது கீழ்மணநல்லூர் காணியை எடுத்துக்கொண்டு இந்த கைது நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறதை ஏற்று அவரை விடுவிக்கின்றனர். இது பத்தாமல் போக அதேபோல இன்னொரு பங்கைச் செலுத்த இல்லனூர்க் கிழவனால் பனணயமாக வைக்கப்பட்ட பிள்ளான் சொக்கனாரையும் அழைத்துக் கேட்க, அவர் தன்னாலும் அந்த வரியைச் செலுத்த இயலாது என்று கூறி தனது காணியையும் விற்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறித் தன்னை விடுவித்துக்கொள்கிறார். இறுதியாக இல்லநூரை ஏலத்தில் விட்டு வரியைச் செலுத்த முனையும் நாட்டார்கள் மதுரைக் கைக்கோளனான மாளுவச்சக்கரவர்த்திக்கு விற்கின்றனர்.
கோனாட்டுப்பகுதியில் அரையர்களே வலுவான ஆதிக்கத்தைச் செலுத்தினர் என்பதற்கு எடுத்துக்காட்டாக 13ம் நூற்றாண்டிற்குரிய குடுமியான்மலைக் கல்வெட்டு IPS 565. படம் பிடித்துக் காட்டுகிறது.

[ ".... கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாட்டு இரண்டுகரைனாட்டு னாட்டவர்ரோம் இன்னாட்டு கூடலூர்னாட்டு பனையூர் குளமங்கலத்தரை . . ர்கள்ளுக்கு . . . தரம் பண்ணிக்குடுத்த பரிசாவது இவர்களுக்கு நாட்டரசுங்கட்டி இவர் . . தின்கலம் சிற்றூர் ஐங்கலனெல்லும் பெற்றுச்சிலந்திவனபெருமாள் சிபாதம்...." ]
கோனாட்டின் இரண்டு கரை நாட்டவர்கள் கூடலூர் நாட்டு பனையூர்-குளமங்கலத்து அரையர்களுக்கு நாட்டரசு அளித்து காவற் பொறுப்பையும் தருகின்றனர். இதற்கு காணிக்கையாக ஒவ்வொரு ஊரவரும் நெல் அளக்க ஒப்புக்கொள்ளப்படுகிறது. மேலும் திருநலக்குன்றமுடைய நாயனார் கோயிலில் முன் ஒடுக்கும் {முதல் மரியாதை} அரையர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்பகுதியில் "மறவ அரையர்கள்" வலுவான நிலையில் காணப்பட்டதற்குச் சான்றாகத் தென்கோனாட்டுக் கூடலூர் நாட்டுச் செவ்வலூர் உள்ளிட்ட வடபற்று நாட்டவரால் பூவாலைக்குடி சிவாலயத்தில் நிறுவப்பட்ட "மறமாணிக்கன் சந்தி" ஐக் குறிப்பிடலாம். {IPS:444} மறமாணிக்கம் என்பது மறவர் இனத்தாரின் விருதுப் பெயராகும். அவர்களை அண்டி வாழ்ந்த கைவினைஞர், இடையர் மக்கள், ஆகியோருக்கும் மறமாணிக்கக் கொல்லன், மறமாணிக்கத் தட்டான், மறமாணிக்கக் கோன் என அறியப்பட்டனர். அடுத்த பதிவில் கானாட்டு நாட்டவரின் செயல்பாடுகள் எத்தகையவை என்பதைக் காண்போம்.

Reference..
1. IPS:266, 196, 601, 367, 447, 565, 444.
2. புதுக்கோட்டை 1600 வரை.
{ பக்: 335-337 }
Thanks to
AHRC பண்டைய வரலாற்றாய்வு மையம்.
{கல்வெட்டுத் தகவல்கள்}
நன்றி!
அன்பன்: கி.ச.முனிராஜ்வாணாதிராயன்.









நாட்டார்

நாட்டார்           {The beginning}
•-•-•-•-•-•-•
கல்வெட்டுகளில் நாட்டார் எனப்படுவோர் நாடாக வகைப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகளின் முக்கிய அவையினர் ஆவார்கள். இவர்கள் ஆளும் வர்க்கங்களில் ஒருவராகத் திகழ்ந்தனர்.

பொதுவாக ஆய்வாளர்களிடையே நாட்டாரை முதன்மைப்படுத்துவதற்கு மாறாக, நாடு எனும் நிர்வாகப்பிரிவை முன்னிலைப்படுத்தும் போக்கே அதிகம் காணப்படுகிறது. ஆனால் இத்தகைய செயல்களை வருங்காலங்களில் மாற்றி நாட்டார்களையே முன்னிலைப் படுத்தவேண்டும் என்பதே நமது வேண்டுகோள் ஆகும். நாட்டார்களைப் பற்றிய உண்மையான செய்திகளை வெளிக்கொண்டு வர உதவும் சுப்பராயலு மற்றும் ஹைய்ஸ்மன் ஆகியோரது ஆய்வுகள் இந்தப் பதிவிற்குப் பயன்படுகின்றன. தொடக்கத்தில் நாடு என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் இயல்பாகவே  அமைநத வேளாண் குடியிருப்புகளின் தொகுப்பாகும். இதுவே காலப்போக்கில் நிர்வாகப் பிரிவாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் வேளாண் குடியிருப்புகளின் தொகுப்பாக அமைந்த நாடானது ஒரு சமூக இனக்குழுவினர் {Kinship group} மட்டும் வாழும் நிலப்பரப்பாக ஒருமித்த இயல்பைக் கொண்டிருந்தது. ஆனால் பிரமதாயங்களின் தோற்றம், ஆக்கிரமிப்பு ஆகியவை காரணமாக நாட்பட நாடானது தனது ஒருமித்த இயல்பை இழந்து பன்முகத் தனமை கொண்டதாக மாற்றமுற்றதாக திரு.சுப்பராயலு அவர்கள் கூறுவார்.

{ political Geography of the chola country, chennai: Tamilnadu state Department of Archaeology} & { 'The pulankurichi inscriptions' ; A side light cola officialdom; The sale Deeds in cola inscriptions; 'The Cola state ' In Rajagopal 2001}

- எனவே நாட்டிலுள்ள அனைத்து வெள்ளான் வகைக் குடியிருப்புகளின் பிரதிநிதிகளே தொடக்கத்தில் நாட்டாராகச் செயல்பட்ட நிலையில் ஒத்த இயல்பு கொண்ட நாட்டார் அவை இனக்குழுவின் அவையாகவே {Tribal assembly} செயல்பட்டது எனக் கருதலாம்.
நாட்டாரின் பணிகள்
~~~~~~~~~~~~~~
நாட்டாரின் செயல்பாடுகளை மூன்று காலப்பிரிவுகளில் பகுத்து ஆய்வு செய்துள்ள சுப்பராயலு 6,10ம் நூற்றாண்டுகளில் நாட்டவராகச் செயல்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் கூறப்படவில்லை எனவும், நாட்டார் அமைப்பில் பன்முகத் தன்மை தோன்றிய பின்னரே , அதாவது 11ம் நூற்றாண்டிற்குப் பிந்தைய காலத்திலேயே நாட்டாராகச் செயல்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் கூறப்படுகிறது எனக் குறிப்பிடுகிறார். சோழரின் அதிகாரத்தை மையப்படுத்தும் போக்கு காரணமாக 12, 13ம் நூற்றாண்டுகளில் நாட்டாரின் செயல்பாடு சோழ மண்டலத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது. 13ம் நூற்றாண்டிற்குரிய பாண்டியரின் கல்வெட்டுகளிலேயே நாட்டாரின் செயல்பாடுகள் மீண்டும் கூறப்படுகின்றன. 

புதுக்கோட்டைப் பகுதி மற்றும் சோழ மண்டலத்தின் நான்கு வருவாய் வட்டங்கள் அடங்கிய நிலப்பரப்பில் காணப்படும் கல்வெட்டுகளை ஆய்வு செய்துள்ள ஹைய்ஸ்மன் அவர்கள் நாட்டாரின் செயல்பாடு குறித்து பின்வருமாறு கூறுகிறார்..

"பதிப்பிக்கப்பட்டுள்ள சுமார் 2400 கல்வெட்டுகளில், 49 கல்வெட்டுகள் நாட்டார் செயல்பாடு பற்றி கூறுகிறது. இவற்றுள் கி.பி.985 வரையில் 13 கல்வெட்டுகளிலும், கிபி. 985- முதல்- 1178 வரை 5 கல்வெட்டுகளிலும், அதன் பின்னர் 17 கல்வெட்டுகளிலும் நாட்டார்களின் செயல்பாடுகள் சொல்லப்படுகின்றன. சோழரின் அதிகாரக் குவிப்பு காரணமாக கி.பி.985 -1178 வரையான காலங்களில் நாட்டாரின் செயல்பாடுகள் குறைந்து காணப்படுகிறது. புதுக்கோட்டை பகுதியில் அதிக அளவில் 21 கல்வெட்டுகளில் நாட்டார் செயல்பாடுகள்  காணப்படுகிறது. சோழ மண்டலத்தில் அரசின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கவனித்த வரி நிர்வாகம் மற்றும் பொதுப்பிரச்சனைகளைத் தீர்த்தல் ஆகிய பணிகளைப் புதுக்கோட்டை பகுதியில் நாட்டாரே ஆற்றியுள்ளனர். ஆகையால் இப்பகுதியில் அரசு அலுவலர்களின் தேவையானது நாட்டார்களால் குறைந்து காணப்படுகிறது" 

-ஹைய்ஸ்மனின் இந்த கருத்து சோழரின் ஆட்சிக்காலத்தில் மற்ற பகுதிகளை விட புதுக்கோட்டை பகுதியில் நாட்டார்கள் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்ததை அறிவிக்கிறது.
ஆகவே நாம் நாட்டார்கள் பற்றி புதுக்கோட்டை பகுதி கல்வெட்டுகள் என்ன கூறுகின்றன என்பதைப் பற்றியும், கானாடு- கோனாடு -தென்கவிர்நாடு நாட்டார்களைப் பற்றியும் இனி விரிவாகக் காண்போம்.
 புதுக்கோட்டை பகுதியில் நாடு தொடர்பான முதல் குறிப்பு கி.பி.500க்குரிய பூலாங்குறிச்சி கல்வெட்டுகளில் கூறப்படும் ஒல்லையூர் கூற்றம், கூடலூர் நாடு ஆகிய பெயர்களாகும். இதனையடுத்து தந்திவர்மனின் மலையடிப்பட்டிக் கல்வெட்டில் {I.P.S.18} கீழ் செங்கிளி நாட்டவர் வழங்கிய அறக்கொடையைத் தெரிவிக்கிறது.

[ " ....... கீழ் செங்கிளி நாட்டு நாட்டா.......நாட்டார்க்கு செய்த "  ]
12ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில், சுமார் 10 கல்வெட்டுகளில் நாட்டார் குறித்த செய்திகள் கூறப்படுகின்றன. ஆனால் , நாட்டவராகப் பணியாற்றிய தனிநபர்கள் பற்றிய விபரங்களை இக் கல்வெட்டுகள் கூறவில்லை. 

மூன்றாம் குலோத்துங்கனின் திருவப்பூர் கல்வெட்டில் {IPS.155} நாட்டாரின் செயல்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும்  நாட்டின் பிரதிநிதிகளாக தனிநபர்கள் கூறப்படுகின்றனர்.
[ " ..... ஜயசிங்க குலகால வளனாட்டுத் தென்கவிர் நாட்டு நாடாய் இசைந்த நாட்டோம்..." ]

 -இவ்விதம் நாட்டார் அவையின் உறுப்பினர்களைக் குறிப்பிடும் நடைமுறை 15ம் நூற்றாண்டு வரைத் தொடர்ந்து காணப்படுகிறது. வேளாண் குடியிருப்புகளே நாடாவதால் இக் குடியிருப்பின் பிரதிநிதிகளான 'ஊரவர்' தானே நாட்டாராகவும் செயல்பட்டிருப்பர்? சோழமண்டலத்தில் "ஊர்க்கு சமைந்த ஊரவர் " என நாட்டார் கூறப்படுவது {Dr.சுப்பராயலு/ political Geography of the chola country, chennai: Tamilnadu state Department of Archaeology} இதைத் தெளிவு படுத்தும். புதுகைப் பகுதிகளிலும் இத்தகைய குறிப்புகள் கிடைக்கின்றன.  {IPS. 546}

 [ "...... செயசிங்க குலகால வளநாட்டு வடசிறுவாயின்னாட்டுக்கு சமைந்த நாஞ்சில் ஊற்கு சமைந்த ஊரோமும் பெருஞ்செவூர் ஊற்கு சமைந்த ஊரோமும் விரைக் குடிக்கு சமைந்த ஊரோமும் கணையக்குடி ஊற்கு சமைந்த ஊரோமும் இவ்வனைவோம் எங்களில் இசைந்து...."]

- எனும் குறிப்பு இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும். பூவாலைக்குடிச் சிவாலயத்தில் 'மறமாணிக்கன் சந்தி' நிறுவப்பட்டதைக் கூறும் கல்வெட்டிலும் {IPS.444} இதே போன்ற குறிப்பு, கூடலூர்நாட்டின் செவ்வலூர் உள்ளிட்ட வடபற்று நாட்டவர்கள் ஊரவராகவும் செயல்பட்டதை விளக்குகிறது.
["....தெ ன்கோனாட்டுக் கூடலூ ர் நாட்டு செவ்வலூர் உள்ளிட்ட வடபற் று நாட்டவரோம் கூளிபிறை செம்பூதி மதியாணி அரசர்மிகாமன்நிலை இவ்வூர்க ளில் ஊராயிசைந்த ஊரவர்கள்]
- எனவே நாட்டின்கண் அமைந்துள்ள குடியிருப்புகளின் பிரதிநிதிகளான ஊரவரே நாட்டாராகவும் செயல்பட்டனர் என்பது தெளிவு. இனி அடுத்த பதிவில் புதுக்கோட்டை பகுதியின் கானாடு-கோனாடு ஆகிய பிரிவுகளில் நாட்டார்களின் பணிகளைப் பார்ப்போம்.
தொடரும்..
Reference..
1. political Geography of the chola country, chennai: Tamilnadu state Department of Archaeology
2.'The pulankurichi inscriptions' ; A side light cola officialdom; The sale Deeds in cola inscriptions; 'The Cola state ' In Rajagopal 2001
3.IPS: 18, - 155, - 546, - 444.
4. புதுக்கோட்டை 1600 வரை , முனைவர். மாணிக்கம். பக்:333 -335.
Thanks to
கல்வெட்டு தகவல்கள் அளித்தவர்கள்.
AHRC பண்டைய வரலாற்றாய்வு மையம்.
நன்றி.
அன்பன். கி.ச.முனிராஜ்வாணாதிராயன்.





Sunday, December 1, 2019

தொண்டைமானின் மெய்க்காவலர்கள் வலையர் சமூகம்


தொண்டைமான் அரசர்கள் வேட்டைக்கு செல்லும் போது வேட்டை சமூகமான வலையர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர். மற்றும் அரசரின் வனப்பகுதிகளையும் பாதுகாத்துள்ளனர்.
அதன் மூலமாக பல நிலங்களை, அரசரிடமிருந்து இனாமாக பெற்றுள்ளனர்.
ஆரம்ப காலத்தில் இருந்தே அரசருடன் நல்ல உறவு முறையில் வலையர் சமூகம் இருந்துள்ளது.
இன்றும் புதுக்கோட்டையில் பல கோவில்களில் தொண்டைமான் அரசரால் காவலுக்கு வைக்கப்பட்ட வலையர்கள் இன்றும் கோவில் காவல் பணியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி

The Hollow Crown 👑 by Nicolas B. Dirks
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு




நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...